Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“இப்போதுதான் எனக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது.”

“இப்போதுதான் எனக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது.”
  • பிறந்த வருடம்: 1981

  • தாய்நாடு: அமெரிக்கா

  • முன்பு: ஊதாரி மகன்

கடந்த காலம்:

வடமேற்கு வெர்ஜினியாவில் உள்ள ஓஹாயோ நதிக்கரையை ஒட்டியுள்ள மௌன்ட்ஸ்வில் தான் என்னுடைய சொந்த ஊர். நாங்கள் மொத்தம் நான்கு பிள்ளைகள், எனக்கு ஒரு அண்ணன் ஒரு தங்கை ஒரு தம்பி. அதனால், எங்கள் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். ‘என் அப்பா-அம்மா கடின உழைப்பாளிகள், நேர்மையாக வாழ்பவர்கள், எல்லோரையும் நேசிப்பவர்கள். எங்களிடம் பணம் கொட்டிக்கிடக்கவில்லை, இருந்தாலும் எங்களுக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை, திருப்தியாக வாழ்ந்தோம். என் பெற்றோர் யெகோவாவின் சாட்சிகள் என்பதால் எங்களுக்கு அன்பு-பாசத்தோடு சேர்த்து பைபிள் நெறிகளையும் ஊட்டி வளர்த்தார்கள்.

நான் டீன்-ஏஜ் பருவத்தைத் தொட்டபோதே என் அப்பா-அம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்த விஷயங்களை அசட்டை செய்ய ஆரம்பித்தேன். ‘பைபிள் சொல்கிறபடி வாழ்ந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியுமா என்ன?’ என்று ஒரு சந்தேகம் வந்தது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரப் பறவையாக வாழ்ந்தால்தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று வாதாடினேன். மெல்ல மெல்ல கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்வதை நிறுத்தினேன். என் அண்ணனும் தங்கையும்கூட என்னைப் போலவே கீழ்ப்படியாமல் போனார்கள். எங்களை நல்வழிக்குக் கொண்டுவர என் பெற்றோர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அவர்கள் பேச்சை நாங்கள் துளியும் கேட்கவில்லை.

நான் எந்தளவு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அந்தளவு அடிமையாகத்தான் ஆனேன். ஒருநாள் நான் ஸ்கூல்விட்டு வீடு திரும்பும்போது என் ஃபிரெண்டு ஒரு சிகரெட் கொடுத்தான். அன்றிலிருந்து நான் சிகரெட்டுக்கு அடிமை ஆனேன், பிறகு போதை மருந்துக்கு அடிமை ஆனேன், அதன்பின் மதுபானத்திற்கு அடிமை ஆனேன். போதாக்குறைக்கு ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன். வருடங்கள் செல்லச் செல்ல அதிக வீரியமுள்ள போதை மருந்துகளை எடுத்தேன். ஒருகட்டத்தில், போதை மருந்து இல்லாமல் இருக்க முடியாத நிலை வந்தபோது போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டேன். அதன்மூலம் இன்னும் அதிக போதை மருந்துகளைப் பயன்படுத்தினேன்.

நான் செய்வது தவறு என என் மனசாட்சி என்னை உறுத்த ஆரம்பித்தது. நான் எந்தளவு அதை அசட்டை செய்தேனோ அந்தளவு அது என் தவறைக் குத்திக்காட்டியது. அதேசமயம், என்னால் இனிமேல் திருந்தி வாழ முடியாது என்று நினைத்து நம்பிக்கை இழந்தேன். பார்ட்டிகளிலும் இசை கச்சேரிகளிலும் என்னைச் சுற்றி எவ்வளவு பேர் இருந்தாலும் எனக்கென்று யாருமே இல்லாததுபோல் உணர்ந்தேன். மன அழுத்தத்தில் தவித்தேன். அடிக்கடி என் அம்மா-அப்பா ஞாபகம் வரும், ‘அவர்கள் எவ்வளவு நல்லவர்கள், அவர்கள் மனதை நோகடித்துவிட்டேனே’ என்று நினைத்து நொந்துகொண்டேன்.

பைபிள் என்னை மாற்றிய விதம்:

இனிமேலும் நான் திருந்த மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் என் பெற்றோர் அப்படி நினைக்கவில்லை. 2000-ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டுக்கு என்னை அழைத்தார்கள். வேண்டா வெறுப்பாகப் போனேன். என் அண்ணனும் தங்கையும் அங்கே வந்ததைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அங்கே சென்றதும் எனக்கு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. ஆமாம், ஒரு வருடத்திற்கு முன்பு அதே இடத்தில் நடந்த ஒரு ராக் இசை கச்சேரிக்கு நான் வந்திருந்தேன். அதற்கும் இதற்கும் இருந்த வித்தியாசம்தான் என் மனதைத் தொட்டது. அந்த இசை கச்சேரியில், மன்றம் எங்கும் குப்பையும் கூளமுமாக இருந்தது, சிகரெட் புகை நிறைந்திருந்தது. அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கடுகடுவென்று இருந்தார்கள். அங்கு இசைத்த இசையும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இந்த மாநாட்டில் எல்லாமே தலைகீழாக இருந்தது. எல்லோரும் சிரித்த முகத்தோடு சந்தோஷமாக இருந்தார்கள். பல வருடமாக என்னைப் பார்க்காதவர்கள்கூட என்னிடம் அன்பாகப் பேசிப் பழகினார்கள். அந்த இடம் பளிங்கு மாதிரி சுத்தமாக இருந்தது. அங்கே கேட்ட விஷயங்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இவ்வளவு அருமையான பைபிள் சத்தியத்தை இத்தனை நாளாக அசட்டை செய்துவிட்டேனே என்று வருத்தப்பட்டேன்.—ஏசாயா 48:17, 18.

“போதைப் பொருள் வியாபாரத்தை அடியோடு விட பைபிள்தான் என்னைத் தூண்டியது. நல்ல குடிமகனாக மாறியிருக்கிறேன்”

மாநாட்டிற்குப் பிறகு நான் மீண்டும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த மாநாடு, என் அண்ணன் தங்கையின் மனதையும் தொட்டது. அவர்களும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். எங்கள் மூவருக்கும் தனித்தனியாக பைபிள் படிப்பு நடத்தப்பட்டது.

எனக்கு ரொம்ப பிடித்த பைபிள் வசனம் யாக்கோபு 4:8: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” நான் கடவுளிடம் நெருங்கி வர வேண்டும் என்றால், சுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதற்கு நிறைய மாற்றம் செய்ய வேண்டும், முக்கியமாக சிகரெட், போதைப் பொருள், குடிவெறி எல்லாம் நிறுத்த வேண்டும்.—2 கொரிந்தியர் 7:1.

என்னுடைய பழைய சகவாசத்தை எல்லாம் விட்டேன். யெகோவாவை நேசிப்பவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொண்டேன். எனக்கு பைபிள் படிப்பு நடத்திய ஒரு கிறிஸ்தவ மூப்பர் ரொம்ப உதவியாக இருந்தார். தவறாமல் ‘ஃபோன்’ செய்வார். அடிக்கடி என்னை வந்து பார்ப்பார். இன்றுவரை அவர் என்னுடைய உயிர்த் தோழன்.

நான், என் அண்ணன், தங்கை மூவரும் 2001-ல் கடவுளுக்கு எங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தோம். அப்போது என் பெற்றோரும் என் தம்பியும் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மீண்டும் நாங்கள் குடும்பமாக யெகோவாவை வழிபட ஆரம்பித்தோம்.

நான் பெற்ற பலன்கள்:

பைபிள் நெறிகள் எல்லாம் நம்மை ரொம்பவே கட்டுப்படுத்துகிறது என முன்பெல்லாம் நினைத்தேன். ஆனால், அவை நம்மைப் பாதுகாக்கும் கவசம் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். போதைப் பொருள் வியாபாரத்தை அடியோடு விட அதுதான் என்னைத் தூண்டியது. நல்ல குடிமகனாக மாறியிருக்கிறேன்.

இப்போது நான் யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய குடும்பத்தின் பாகமாக இருக்கிறேன். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், வழிபாட்டில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். (யோவான் 13:34, 35) யெகோவாவை வணங்கும் ஒரு அருமையான மனைவி எனக்குக் கிடைத்திருக்கிறாள். அவள் பெயர் ஏட்ரியென். அவளை நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். நாங்கள் ஒன்றுசேர்ந்து படைப்பாளரை வணங்குவதில் அதிக மகிழ்ச்சி காண்கிறோம்.

என்னுடைய சுயநல ஆசைகளைத் திருப்தி செய்வதற்குப் பதிலாக முழுநேரமாக கடவுளுக்கு ஊழியம் செய்கிறேன். கடவுளுடைய வார்த்தையான பைபிளிலிருந்து எப்படி நன்மையடைவது என்று மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதில் அலாதி ஆனந்தம் அடைகிறேன். பைபிள் என்னைத் தலைகீழாக மாற்றியது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போதுதான் எனக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. ▪ (w13-E 01/01)