Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு . . .

சண்டைகளைத் தீர்ப்பது எப்படி?

சண்டைகளைத் தீர்ப்பது எப்படி?

அவர்: “கல்யாணத்திற்குப் பிறகு நானும் என் மனைவியும் என் அப்பா அம்மாவுடன் இருந்தோம். ஒரு நாள் என் தம்பியுடைய கேர்ல் ஃபிரெண்ட், அவளை வீடுவரைக்கும் காரில் விட முடியுமா என்று கேட்டாள். நானும் அதற்கு ஒத்துக்கொண்டேன், கூடவே என் சின்ன பையனையும் அழைத்துக்கொண்டு போனேன். ஆனால், நான் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது என் மனைவி பயங்கர கோபமாக இருந்தாள். என்னைக் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தாள். நானும் அவளைத் திட்டினேன். நான் பெண்கள் பின்னாடி சுற்றுகிறவன் என்று எல்லாருக்கு முன்பாகவும் என்னை அசிங்கமாகத் திட்டினாள். அதைக் கேட்டு எனக்கு கோபம் தலைக்கேறியது, வாய்க்கு வந்தபடி கத்தினேன். அதைக் கேட்டு அவள் இன்னும் கோபமடைந்தாள்.”

அவள்: “எங்கள் மகனுக்கு உடம்பு சரியில்லை. அந்தச் சமயத்தில் எங்களுக்கு பணக்கஷ்டம் வேறு இருந்தது. இப்படியிருக்க, என் கணவர் அவருடைய தம்பியின் கேர்ல் ஃபிரெண்டுக்காக எங்கள் மகனை அழைத்துச் சென்றதைப் பார்த்தபோது எனக்கு ஒருபக்கம் எரிச்சலாகவும் இன்னொரு பக்கம் மகனை நினைத்து கவலையாகவும் இருந்தது. அதனால், அவர் வீட்டுக்கு வந்தபோது என் கவலைகளையெல்லாம் கோபமாகக் கொட்டித் தீர்த்தேன். அது பயங்கரமான சண்டையாக வெடித்தது. நாங்கள் ஒருவரையொருவர் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டோம். அதற்குப் பிறகு நிம்மதியே இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.”

கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்பதற்காக அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பதில்லை என்றாகிவிடுமா? இல்லவே இல்லை! ஏனென்றால், மேலே பார்த்த தம்பதியினர் ஒருவரையொருவர் மனதார நேசிக்கிறார்கள். இருந்தாலும், மிகப் பொருத்தமான ஜோடிகள் மத்தியிலும் சில சமயங்களில் சண்டைகள் எழ வாய்ப்பிருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.

சண்டைகள் வர காரணம் என்ன? இந்தச் சண்டைகளால் உங்கள் மணவாழ்வு முறிந்துபோகாமல் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? திருமணத்தை கடவுள் ஏற்படுத்தி வைத்திருப்பதால், இந்த விஷயத்தில் அவருடைய வார்த்தையாகிய பைபிள் என்ன சொல்கிறது என்பதை ஆராய்வது நியாயமாக இருக்கும்.—ஆதியாகமம் 2:21, 22; 2 தீமோத்தேயு 3:16, 17.

சண்டைக்கான காரணங்களைப் புரிந்துகொள்ளுதல்

பெரும்பாலான தம்பதிகள், ஒருவரையொருவர் அன்புடனும் கனிவுடனும் நடத்தவே விரும்புகிறார்கள். என்றாலும், “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறோம் என்று பைபிள் சொல்லும் இந்த உண்மையை அனைவரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். (ரோமர் 3:23) இதனால், கருத்து வேறுபாடுகள் ஏற்படுகையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நமக்குக் கடினமாக இருக்கலாம். அந்தக் கருத்து வேறுபாடு ஒரு வாக்குவாதமாக வெடிக்கும்போது, சிலர் தங்கள் உணர்ச்சிகளை எவ்வளவுதான் கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாமல் போய்விடலாம்; அந்தச் சமயத்தில் அவர்கள் கத்தி கூச்சல் போட்டு, கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டலாம். (ரோமர் 7:21; எபேசியர் 4:31) சண்டை வருவதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்கலாம்?

கணவன் மனைவி இருவரும், ஒரேவிதமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும், இது நபருக்கு நபர் வேறுபடும். மெசீகோ a சொல்கிறார்: “எங்களுக்கு கல்யாணமான புதிதில் நான் கவனித்தது என்னவென்றால், ஒரு விஷயத்தைக் கலந்துபேசும் விதத்தில் நாங்கள் இருவரும் இரு துருவங்களாக இருந்தோம். உதாரணத்திற்கு, ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால், என்ன நடந்தது என்று மட்டுமல்ல அது ஏன் அப்படி நடந்தது, எதற்கு அப்படி நடந்தது என்று எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்க விரும்புவேன். என் கணவருக்கோ இப்படி நீட்டி முழக்கி பேசுவதெல்லாம் பிடிக்காது, என்ன நடந்தது என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புவார்.”

மெசீகோ மட்டுமில்லை அநேக தம்பதியினர் இதுபோன்ற பிரச்சினையை எதிர்ப்படுகிறார்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்படுகையில், ஒருவர் விஷயத்தை விளக்கமாகக் கலந்துபேச விரும்பலாம், இன்னொருவரோ வாக்குவாதத்தைத் தவிர்ப்பதற்காக அதைப்பற்றி பேச விரும்பாதிருக்கலாம். சில சமயங்களில், ஒருவர் ஒரு விஷயத்தை ஒரே பிடியாய் பிடித்துக்கொண்டிருக்கலாம், மற்றவரோ அதிலிருந்து விடுபெற துடியாய் துடித்துக்கொண்டிருக்கலாம். இதுபோன்ற பிரச்சினை உங்களுடைய மணவாழ்வில் தலைதூக்கியிருக்கிறதா? ஒரு விஷயத்தைக் குறித்து, உங்களில் ஒருவர் எப்போதும் பேச விரும்புகிறவராகவும் இன்னொருவர் எப்போதும் பேச விரும்பாதவராகவும் இருக்கிறீர்களா?

குடும்பத்தில் சண்டை வருவதற்கான மற்றொரு காரணத்தை இப்போது கவனிக்கலாம். கணவனும் மனைவியும் வளர்ந்துவந்த சூழல் வேறுபடலாம். அதனால், தங்களுக்குள் எப்படிப் பேசிக்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து அவர்கள் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கலாம். கல்யாணமாகி ஐந்து வருடங்களான ஜஸ்டன் சொல்வதாவது: “எங்கள் வீட்டில் எல்லாருமே அமைதியாக இருப்பார்கள், ரொம்ப பேச மாட்டார்கள். அதனால், மனம்திறந்து வெளிப்படையாகப் பேசுவதென்றால் எனக்கு கொஞ்சம் கஷ்டம்தான். இது என் மனைவிக்கு எரிச்சலாக இருக்கும். ஏனென்றால், அவளுடைய வீட்டிலோ எல்லாருமே வெளிப்படியாகப் பேசுபவர்கள்; அதனால், தன் மனதில் இருப்பதை எனக்குச் சொல்வதில் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.”

ஏன் சண்டைகளைத் தீர்க்க வேண்டும்?

ஒரு கணவனும் மனைவியும் ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்று பலமுறை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளலாம்; அவர்கள் திருப்தியான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்கலாம்; பணத்திற்கும் பஞ்சமில்லாதிருக்கலாம். ஆனால், வெற்றிகரமான மணவாழ்வு இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாறாக, சண்டைகள் வரும்போது கணவனும் மனைவியும் அவற்றை எப்படித் திறமையாகத் தீர்க்கிறார்கள் என்பதைப் பொருத்தே அது அமைந்திருக்கிறது.

அதோடு, ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்கையில், எந்தவொரு மனிதனுமல்ல மாறாக கடவுளே அவர்களை இணைத்து வைக்கிறார் என்று இயேசு கூறினார். (மத்தேயு 19:4-6) எனவே, கணவனும் மனைவியும் மணவாழ்வில் வெற்றி காண்கையில் அது கடவுளுக்கு கணம் சேர்க்கிறது. மறுபட்சத்தில், ஒரு கணவன், தன் மனைவியிடம் அன்புடனும் கரிசனையுடன் நடந்துகொள்ள தவறினால், அவனுடைய ஜெபங்களை யெகோவா தேவன் கேட்காமல் போக வாய்ப்பிருக்கிறது. (1 பேதுரு 3:7) அதேசமயம், ஒரு மனைவி தன் கணவனை அவமதித்தால், அது யெகோவாவையே அவமதிப்பதுபோல் இருக்கிறது. ஏனென்றால், யெகோவாதான் கணவனை குடும்பத்தின் தலையாக நியமித்திருக்கிறார்.—1 கொரிந்தியர் 11:3.

வெற்றிக்கான வழிகள்—மனதை புண்படுத்தும் விதத்தில் பேசுவதைத் தவிருங்கள்

நீங்கள் பேசும் விதமும் வளர்ந்துவந்த சூழலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் பைபிள் நியமங்களைப் பின்பற்றி, சண்டைகளை நல்லபடியாகத் தீர்க்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால், மனதை புண்படுத்தும் விதத்தில் பேசுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். பின்வரும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:

‘பதிலடி கொடுக்கும் பழக்கத்தை நான் தவிர்க்க முயலுகிறேனா?

“மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்” என்று ஞானமான ஒரு பழமொழி சொல்கிறது. (நீதிமொழிகள் 30:33) இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். குடும்பத்தின் வரவுசெலவுகளைக் கணக்கிடுகையில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு சிறிய கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. (“கிரெடிட் கார்டில் பொருள்களை வாங்குவதைக் நாம் குறைக்க வேண்டும்” என்று ஒருவர் சொல்லலாம்). இந்தச் சிறிய கருத்துவேறுபாடு ஒரு பெரிய சொற்போராக உருவெடுக்கலாம். ஒருவரையொருவர் தாக்கிப்பேச ஆரம்பிக்கலாம். (“உங்களுக்கு கொஞ்சம்கூட பொறுப்பே இல்லை” என்று ஒருவர் சொல்லலாம்). இப்படி மட்டம் தட்டி பேசுவதன்மூலம் உங்கள் துணை உங்களுடைய ‘மூக்கைப் பிசைந்தால்,’ நீங்களும் பதிலுக்கு அவருடைய மூக்கைப் ‘பிசைய’ துடிக்கலாம். ஆனால், இப்படிச் செய்வது கோபத்தைக் கிளறி சண்டையை பெரிதாக்குமே தவிர குறைக்காது.

“பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாவும் நெருப்புத்தான்” என்று பைபிள் எழுத்தாளரான யாக்கோபு எச்சரித்தார். (யாக்கோபு 3:5, 6) திருமணமானவர்கள், தங்கள் நாவைக் கட்டுப்படுத்த தவறினால், சிறிய வாக்குவாதம்கூட பெரிய சண்டையில் போய் முடிந்துவிடலாம். திருமண வாழ்வில் இப்படி அடிக்கடிக் கனல் தெறிக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டால், அன்பு தழைக்க வழியில்லாமல் போகுமே.

பதிலடி கொடுப்பதற்கு மாறாக, நீங்கள் ஏன் இயேசு செய்ததைப் போல் செய்யக்கூடாது. “அவர் வையப்படும்போது (அதாவது, தூஷிக்கப்படும்போது) பதில் வையவில்லை (அதாவது, தூஷிக்கவில்லை). (1 பேதுரு 2:23) சண்டையின் சீற்றத்தைக் குறைப்பதற்கு சுலபமான வழி: உங்கள் துணை அப்படிக் கோபப்படுவதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்; பிறகு, சண்டை உருவாவதற்கு நீங்கள் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேளுங்கள்.

இப்படிச் செய்துபாருங்கள்: அடுத்த முறை உங்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டால் இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் கணவன் (அல்லது, மனைவி) அப்படிக் கோபப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறதென்றால் அவர் (அல்லது, அவள்) சொல்வது சரியென்று நான் ஒத்துக்கொண்டால்தான் என்ன? அப்படிச் செய்தால் நான் என்ன குறைந்தா போய்விடுவேன்? இந்தச் சண்டை வருவதற்கு நான் எந்த விதத்தில் காரணமாக இருந்திருக்கிறேன்? நான் ஏன் என் தவறுகளை ஒத்துக்கொள்ள தயங்குகிறேன்?’

‘என் துணையின் உணர்ச்சிகளை அற்பமாக எண்ணுகிறேனா?’

‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும்’ இருக்கும்படி கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுகிறது. (1 பேதுரு 3:8) இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம்; அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, உங்கள் துணையின் மனதை அல்லது உணர்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு, ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து உங்களைவிட உங்கள் துணை அதிகமாகக் கவலைப்பட்டால், “இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, இதற்கு போய் இப்படிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் எப்படி” என்று சொல்ல உங்களுக்கு வாய் வரலாம். உங்கள் துணை, பிரச்சினையை எதார்த்தமாகப் பார்ப்பதற்காக நீங்கள் அவ்வாறு சொல்ல நினைக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட வார்த்தைகள் யாருக்குமே ஆறுதலை அளிக்காது. எனவே, கணவன் மனைவி இருவருமே தாங்கள் நேசிக்கும் நபர் தங்களைப் புரிந்துகொண்டு, அனுதாபம் காட்டுகிறார் என்று உணர வேண்டும்.

அளவுக்குமீறிய பெருமையும்கூட, ஒரு நபரை தன் துணையின் உணர்ச்சிகளை அலட்சியமாகக் கருதும்படிச் செய்துவிடலாம். அப்படிப்பட்ட ஒரு நபர், எப்போதும் மற்றவர்களைத் தாழ்த்துவதன் மூலம் தன்னை உயர்த்திப் பேச முயற்சி செய்வார். அவர், மற்றவர்களைக் கிண்டலடித்து அவர்களுக்குப் பட்ட பெயர் சூட்டி, எல்லார் முன்பாகவும் அவர்களைத் தரக்குறைவாகப் பேசுவார். உதாரணத்திற்கு, இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களையும் வேதபாரகர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். யாராவது ஒருவர், தங்களுடைய கருத்துக்கு எதிர்மறையாக எதாவது சொல்லிவிட்டால், அவர் ஒரு பரிசேயனாக இருந்தாலும் சரி, அவரை நக்கலாகவும் கிண்டலாகவும் பேசுவார்கள். (யோவான் 7:45-52) ஆனால், இயேசு அவர்களைப் போல் இல்லை. மற்றவர்கள் தம்மிடம் வந்து அவர்களுடைய வேதனைகளைச் சொன்னபோது அவர்களுக்காக அனுதாபப்பட்டார்.—மத்தேயு 20:29-34; மாற்கு 5:25-34.

உங்கள் துணை, தன் உணர்ச்சிகளை உங்களிடம் தெரிவிக்கையில் நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். அவர்மீது உங்களுக்கு அனுதாபம் இருக்கிறது என்பதை உங்களுடைய வார்த்தைகளில், நீங்கள் பேசும் தோரணையில், உங்களுடைய முக பாவனையில் காட்டுகிறீர்களா? அல்லது, அவருடைய உணர்ச்சிகளை நீங்கள் அவமதிப்பதுபோல் வெடுக்கென்று ஏதாவது சொல்லிவிடுகிறீர்களா?

இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் துணையிடம் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதைப் பின்வரும் வாரங்களில் கவனியுங்கள். உங்களிடம் அவர் பேசுகையில் அதில் உங்களுக்கு உடன்பாடே இல்லாததுபோல் நடந்துகொண்டால் அல்லது அவரைத் தரக்குறைவாகப் பேசினால் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள்.

‘என் துணை எப்போதும் சுயநலமாக நடந்துகொள்கிறார் என்று நான் நினைக்கிறேனா?

“யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?” என்றான் சாத்தான். (யோபு 1:9, 10) இப்படிச் சொல்வதன்மூலம், உண்மையுள்ள மனிதனான யோபு, தவறான உள்நோக்கத்துடன் கடவுளைச் சேவித்தான் என்று அவன் குற்றம் சாட்டினான்.

மணவாழ்வில், கணவனும் மனைவியும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவர்களும் மற்றவரின் உள்நோக்கத்தை சந்தேகிக்கும் நபர்களாய் மாறிவிடலாம். உதாரணத்திற்கு, உங்கள் துணை உங்களுக்கு எதாவது நல்லது செய்கையில், ‘ஏதோ காரியமாகத்தான் அவர் இவ்வாறு செய்கிறார்’ அல்லது ‘ஏதோ தவறு செய்திருக்கிறார், அதை மறைப்பதற்காகத்தான் இதையெல்லாம் செய்கிறார்’ என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? உங்கள் துணை எதாவது தவறு செய்கையில், அவர் சுயநலவாதி, அக்கறையற்றவர் என்று முடிவு கட்டிவிடுகிறீர்களா? ‘இதற்கு முன்புகூட அவர் இப்படித்தான் செய்தார், நிச்சயமாக இதை என்னால் மன்னிக்கவே முடியாது’ என்று நினைக்கிறீர்களா?

இப்படிச் செய்துபாருங்கள்: உங்கள் துணை உங்களுக்காகச் செய்திருக்கும் நல்ல காரியங்களை ஒரு பேப்பரில் எழுதுங்கள். அவரிடம் உள்ள என்ன நல்ல எண்ணங்கள் அப்படிச் செய்ய அவரைத் தூண்டியிருக்கலாம் என்பதையும் அதில் எழுதுங்கள்.

“அன்பு . . . தீங்கு நினையாது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 13:4, 5) உண்மையான அன்பு, பரிபூரணத்தை எதிர்பார்க்காது. அதேசமயம், தவறையும் மனதில் வைத்துக்கொள்ளாது. “அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும் (அதாவது, நம்பும்)” என்றும் அப்போஸ்தலன் பவுல் கூறினார். (1 கொரிந்தியர் 13:7) உண்மையான அன்பு எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்பிவிடாது. ஆனால், அதற்கென்று எதையும் நம்பாமலும் இருந்துவிடாது. அது நேர்மையானது, யாரையும் சந்தேகிக்காது. இப்படிப்பட்ட அன்பையே வளர்த்துக்கொள்ளும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. இந்த அன்பு இருந்தால் நாம் ஒருவரையொருவர் தாராளமாக மன்னிப்போம். மற்றவர்களுடைய உள்நோக்கத்தைச் சந்தேகிக்காமல் அவர்கள் நல்லெண்ணத்துடன்தான் அப்படிச் செய்கிறார்கள் என்று நினைக்க மனமுள்ளவராய் இருப்போம். (சங்கீதம் 86:5; எபேசியர் 4:32) கணவனும் மனைவியும் இப்படிப்பட்ட அன்பை வளர்த்துக்கொள்கையில், அவர்களுடைய திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். (w08 2/1)

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் . . .

  • இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட தம்பதி என்ன தவறுகளைச் செய்தார்கள்?

  • என் திருமண வாழ்வில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நான் என்ன செய்யலாம்?

  • இந்தக் கட்டுரையில் சிந்தித்தபடி முக்கியமாக என்னென்ன அம்சங்களில் என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது?

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.