Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | கணவன்-மனைவிக்காக...

மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்

மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்

சவால்

உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இப்போதுதான் சண்டை நடந்து முடிந்தது. “நான் ஒன்னும் சண்டைய ஆரம்பிக்கலயே நான் எதுக்கு மன்னிப்பு கேக்கணும்” என்று நீங்கள் யோசிக்கிறீர்கள்.

பிரச்சினையை அப்படியே விட்டுவிடலாம் என்று நினைக்கிறீர்கள், இருந்தாலும் உங்களுக்கு கோபம் குறையவில்லை. ஒருபக்கம் மன்னிப்பு கேட்கலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறது. ஆனால், அதை சொல்வதற்கு வாய் வரவில்லை.

இது ஏன் கஷ்டம்?

பெருமை. நமக்கு அளவுக்கு அதிகமாக பெருமை இருந்தால், நம்முடைய தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கும். சார்ல்ஸ் * என்பவர் சொல்கிறார்: “சில நேரத்துல என் மனைவிகிட்ட ‘என்னை மன்னிச்சிடு’னு சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். என் ‘ஈகோ’ அதுக்கு இடம் கொடுக்காது.”

யோசிக்கும் விதம். “யார் தப்பு செய்றாங்களோ அவங்கதான் முதல்ல மன்னிப்பு கேட்கணும், அதுதான் நியாயம்” என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். ஜில் என்ற மனைவி சொல்கிறார்: “தப்பெல்லாம் என்மேல இருந்துச்சுனா மன்னிப்பு கேட்கிறது எனக்கு கஷ்டமாவே இருக்காது. ஆனா எங்க ரெண்டு பேர்மேலயும் தப்பு இருந்துச்சுனா, அப்போ மன்னிப்பு கேக்குறது ரொம்ப கஷ்டம். ‘ரெண்டு பேர்மேலயும் தப்பு இருக்கே, நான் ஏன் முதல்ல மன்னிப்பு கேக்கணும்’னு யோசிப்பேன்.”

அதுவும் உங்கள் துணையே பிரச்சினைக்கு முழு காரணம் என்று நீங்கள் நினைத்தால், அவர்தான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இதைப் பற்றி ஜோசப் என்ற கணவர் சொல்கிறார்: “உங்க மேல எந்த தப்பும் இல்லன்னா ஏன் மன்னிப்பு கேக்கணும். மன்னிப்பு கேட்டா உங்க மேலதான் தப்பு இருக்குனு நீங்களே ஒத்துக்குற மாதிரி ஆயிடும்.”

வளர்ந்த விதம். ஒருவேளை நீங்கள் வளர்ந்த சூழல் அதற்கு காரணமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மன்னிப்பு கேட்கும் பழக்கம் யாருக்கும் இல்லாமல் இருக்கலாம். சின்ன வயதிலிருந்தே இந்த பழக்கம் உங்களுக்கு இல்லாததால் இப்போது மன்னிப்பு கேட்பது கஷ்டமாக இருக்கலாம்.

என்ன செய்யலாம்

பிரச்சினை என்ற நெருப்பை மன்னிப்பு என்ற தண்ணீரால் அணையுங்கள்

துணையின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள். யாராவது உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் மனமே கரைந்துவிடும் இல்லையா? அப்படியென்றால் உங்கள் துணையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டால் அவரும் அப்படித்தானே உணர்வார்? உங்கள்மீது தப்பு இல்லை என்றாலும் உங்கள் துணையின் மனம் புண்பட்டதற்காக, அல்லது நீங்கள் தெரியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கலாமே? அப்படி கேட்டால் அவருடைய காயம் நிச்சயம் ஆறும்.—பைபிள் ஆலோசனை: லூக்கா 6:31.

திருமண பந்தத்தைப் பலப்படுத்துங்கள். மன்னிப்பு கேட்பதை தோல்வி என்று நினைக்காதீர்கள், உங்கள் திருமண வாழ்க்கையை பலப்படுத்தும் வெற்றிப் படியாக நினைத்துக்கொள்ளுங்கள். கோபமாகவே இருக்கும் ஒருவரை சாந்தப்படுத்துவது, ‘வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதை விடக் கடினமானது’ என்று நீதிமொழிகள் 18:19 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. தன்மீது எந்த தப்பும் இல்லை என்று இருவரும் நியாயப்படுத்தும்போது, மன்னிப்பு கேட்பது ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் மன்னிப்பு கேட்டால் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும். இப்படி செய்யும்போது, உங்கள் சுய கௌரவத்தைவிட உங்கள் திருமண பந்தத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.—பைபிள் ஆலோசனை: பிலிப்பியர் 2:3.

உடனே மன்னிப்பு கேளுங்கள். பிரச்சினைக்கு நீங்கள் முக்கிய காரணமாக இல்லாதபோது மன்னிப்பு கேட்பது கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்காக நீங்கள் கோபமாக நடந்துகொண்டால் அது நியாயமாக இருக்காது. ‘போகப் போக எல்லாம் சரியாயிடும்’ என்று நினைத்து மன்னிப்பு கேட்காமல் இருந்துவிடாதீர்கள். நீங்கள் உடனே மன்னிப்பு கேட்கும்போது உங்கள் துணையின் மனம் மாறலாம், அவரும் மன்னிப்பு கேட்கலாம். அடிக்கடி மன்னிப்பு கேட்டு பழகுங்கள். அப்போது மன்னிப்பு கேட்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும்.—பைபிள் ஆலோசனை: மத்தேயு 5:25.

மனதார மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் நடந்துகொண்ட விதத்தை நியாயப்படுத்துவது வேறு, மன்னிப்பு கேட்பது வேறு. சிலசமயம் கொஞ்சம் கேலியாக, “ரொம்ப சாரி, ஆனா இந்த விஷயத்தை நீங்க இவ்ளோ பெரிசா எடுத்துக்குவீங்கனு நினைக்கல” என்று சொல்லாதீர்கள். உங்கள் பங்கில் இருக்கும் தவறை ஒத்துக்கொள்ளுங்கள்; உங்கள் கணவரின்/மனைவியின் கோபம் நியாயமாக இல்லை என்று நீங்கள் நினைத்தாலும், அவருடைய மனம் புண்பட்டதற்காக மன்னிப்பு கேளுங்கள்.

எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். அதனால் நீங்களும் தவறு செய்வீர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். சிலசமயம் பிரச்சினையின் ஒரு கோணத்தை மட்டுமே பார்த்துவிட்டு உங்கள்மீது எந்த தவறும் இல்லை என்று நீங்கள் முடிவுகட்டிவிடலாம். அதனால்தான் பைபிள் இப்படி சொல்கிறது: “இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும் வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும்.” (நீதிமொழிகள் 18:17, ஈஸி டு ரீட் வர்ஷன்) நீங்கள் தவறு செய்வீர்கள் என்றும் உங்களிடத்தில் குறைகள் இருக்கிறது என்றும் நீங்கள் புரிந்துகொண்டால், மன்னிப்பு கேட்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும். ▪ (g15-E 09)

^ பாரா. 7 இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.