Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | மணவாழ்வு

வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி

வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி

சவால்

நீங்களும் உங்கள் துணையும் எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறீர்களா? கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு காலடியையும் பயந்துபயந்து வைப்பதுபோல் வாக்குவாதம் வெடித்துவிடுமோ என்று பயந்துபயந்து பேசுகிறீர்களா?

கவலைப்படாதீர்கள், இப்படிப்பட்ட சூழலை உங்களால் மாற்ற முடியும். ஆனால், அதற்குமுன் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஏன் இந்தளவு வாக்குவாதம் வெடிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

வாக்குவாதம் ஏன்?

மனஸ்தாபங்கள்.

ஜில்லியான் a சொல்கிறாள்: “சிலசமயம் நான் என் கணவர்கிட்ட ஏதாவது சொல்லுவேன். ஆனா நான் எப்படிச் சொல்லணும்னு நினைச்சிருப்பேனோ அப்படிச் சொல்லியிருக்க மாட்டேன். சிலசமயம், அவர்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லிட்டதா அவ்வளவு உறுதியா நினைச்சிட்டிருப்பேன், ஆனா அத அவர்கிட்ட சொல்லியே இருக்க மாட்டேன்!”

கருத்துவேறுபாடுகள்.

நீங்களும் உங்கள் துணையும் என்னதான் பொருத்தமான ஜோடியாக இருந்தாலும், சில விஷயங்களில் உங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும்தான். ஏன்? ஏனென்றால், இந்த உலகத்தில் எந்த இரு நபர்களும் அச்சு அசலாக ஒன்றுபோல் இருப்பதில்லை. இது திருமண வாழ்வில் சுவாரஸ்யத்தைக் கூட்டலாம் அல்லது பிரச்சினையைக் கூட்டலாம். ஆனால், நிறையத் திருமணங்களில் இது பிரச்சினையைத்தான் கூட்டுகிறது.

கெட்ட முன்மாதிரிகள்.

ரேச்சல் சொல்கிறாள்: “என் அப்பா அம்மா எதுக்கெடுத்தாலும் சண்டை போடுவாங்க. ஒருத்தரையொருத்தர் பயங்கரமா திட்டிப்பாங்க. அதனால, கல்யாணம் ஆன பிறகு நானும் அம்மா மாதிரியே என் கணவரைத் திட்டுவேன். மரியாதை கொடுத்துப் பேசவே எனக்குத் தெரியாமபோச்சு.”

புதைந்துள்ள வருத்தங்கள்.

பெரும்பாலும், சின்ன விஷயம் பெரிய சண்டையில் முடிவடையும். ஆனால் உண்மையில் அந்தச் சண்டைக்குப் பின்னால் வேறொரு காரணம் இருக்கும். உதாரணத்திற்கு, “நீ/நீங்க எப்பவும் லேட்டுதான்!” என்று சொன்னதுமே வாக்குவாதம் வெடிக்கலாம். இதற்குக் காரணம், காலதாமதமாக வந்தது அல்ல, ஆனால் மணத்துணை தன்னிடம் கனிவாக நடந்துகொள்ளவில்லை என்பதுதான்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி, அடிக்கடி வாக்குவாதம் செய்வது உங்கள் உடல்நலத்திற்கு உலைவைக்கும், விவாகரத்திற்கு விதைவிதைக்கும். அப்படியென்றால், வாக்குவாதத்திற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது?

நீங்கள் என்ன செய்யலாம்?

வாக்குவாத நெருப்பை அணைப்பதற்கு ஒரு வழி, அதை எரியச் செய்கிற எரிபொருள் எதுவெனக் கண்டுபிடிப்பதாகும். உங்களிடையே அமைதி திரும்பிய பிறகு பின்வரும் பயிற்சியை இருவருமாகச் செய்துபாருங்கள்.

1. இருவரும் தனித்தனியாக ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். எந்தப் பிரச்சினையைப் பற்றி வாக்குவாதம் செய்தீர்கள் என்று எழுதிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஒரு கணவர் இப்படி எழுதலாம்: “ஒரு நாள் முழுக்க நீ உன் நண்பர்களோடு நேரம் செலவிட்டாய், ஆனால் எங்கிருக்கிறாய் என்று என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.” ஒரு மனைவி இப்படி எழுதலாம்: “நான் என் நண்பர்களோடு நேரம் செலவிட்டது உங்களுக்குப் பிடிக்கவில்லை, அதனால்தான் என்மீது எரிந்துவிழுந்தீர்கள்.”

2. இருவரும் திறந்த மனதுடன் இந்தக் கேள்விகளைச் சிந்தித்துப் பாருங்கள்: இது உண்மையிலேயே அவ்வளவு பெரிய பிரச்சினையா? இதைப் பெரிதுபடுத்தாமல் விட்டிருக்கலாமோ? சில சமயம், சமாதானத்தைக் காப்பதற்காக உங்களுக்குள் கருத்துவேறுபாடு இருப்பதை ஆமோதித்து, பிரச்சினையை அன்பினால் மூடிவிடுங்கள்.பைபிள் நியதி: நீதிமொழிகள் 17:9.

இது ஒரு சின்ன பிரச்சினைதான் என்ற முடிவுக்கு நீங்கள் இருவரும் வந்தால் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதைப் பற்றிப் பேசாமல் இருங்கள்.—பைபிள் நியதி: கொலோசெயர் 3:13, 14.

ஆனால் உங்களுக்கு அல்லது உங்கள் இருவருக்கும் இது ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரிந்தால் அடுத்த பயிற்சியைச் செய்யுங்கள்.

3. வாக்குவாதத்தின்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்று எழுதுங்கள். உங்கள் துணையையும் அதேபோல் எழுத சொல்லுங்கள். உதாரணத்திற்கு, கணவர் இப்படி எழுதலாம்: “என்னோடு இருப்பதைவிட உன் நண்பர்களோடு இருக்க நீ விரும்புவதுபோல் எனக்குத் தோன்றியது.” மனைவி இப்படி எழுதலாம்: “சின்னச் சின்ன விஷயத்தையும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். என்னை ஒரு சிறு பிள்ளை போல் நீங்கள் நடத்துவதாக எனக்குத் தோன்றியது.”

4. நீங்கள் எழுதிய பேப்பரை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளுங்கள், அதை வாசியுங்கள். வாக்குவாதத்தின்போது உங்கள் துணையின் மனதில் என்ன வருத்தம் புதைந்திருந்தது? இந்தப் பிரச்சினையை வாக்குவாதம் செய்யாமல் இருவரும் எப்படித் தீர்த்திருக்கலாம் என்று கலந்துபேசுங்கள்.பைபிள் நியதி: நீதிமொழிகள் 29:11.

5. இந்தப் பயிற்சியிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைக் கலந்துபேசுங்கள். எதிர்காலத்தில் வாக்குவாதம் வெடித்தால் அதைத் தீர்ப்பதற்கும், தவிர்ப்பதற்கும் இந்த விஷயங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் கலந்துபேசுங்கள். ◼ (g13-E 02)

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.