Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனமுவந்த சேவை மகிழ்ச்சி தரும் வேலை நார்வேயில்

மனமுவந்த சேவை மகிழ்ச்சி தரும் வேலை நார்வேயில்

ஒருசில வருடங்களுக்குமுன், நார்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பெர்கனில் ரோவால்டு-எல்சபெத் தம்பதியர் மிக வசதியாக வாழ்ந்துவந்தார்கள். அப்போது அவர்கள் 50 வயதை நெருங்கியிருந்தார்கள். அவர்களுடைய மகள் இசபெல், மகன் ஃபேபியன். குடும்பமாக சபைக் காரியங்களில் உற்சாகமாய் ஈடுபட்டுவந்தார்கள். ரோவால்டு ஒரு மூப்பராக இருந்தார், எல்சபெத் பயனியராக ஊழியம் செய்துவந்தார். இசபெலும் ஃபேபியனும்கூட சுறுசுறுப்பான பிரஸ்தாபிகளாக இருந்தார்கள்.

செப்டம்பர் 2009-ல் அவர்கள் அதுவரை செய்யாத ஒரு காரியத்தைச் செய்யத் தீர்மானித்தார்கள். ஓர் ஒதுக்குப்புறப் பகுதிக்குச் சென்று ஒரு வாரம் முழுக்க ஊழியம் செய்யத் தீர்மானித்தார்கள். எனவே, 18 வயது மகன் ஃபேபியனோடு ரோவால்டு-எல்சபெத் தம்பதியர் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே ஃபின்மார்க் மாகாணத்திலுள்ள நார்ட்கின் தீபகற்பத்திற்குப் பயணம் செய்தார்கள். அவர்களைப் போலவே அங்கு வந்திருந்த மற்ற சகோதர, சகோதரிகளோடு சேர்ந்து ஒதுக்குப்புற கிராமமான கோல்ஃபியோர்டில் ஊழியம் செய்தார்கள். “அந்த வாரத்தின் ஆரம்பத்தில் எனக்கு ரொம்பவே திருப்தியாக இருந்தது—ஒதுக்குப்புறப் பகுதியில் ஒரு வாரம் முழுக்க ஊழியம் செய்வதை நினைத்து!” என்கிறார் ரோவால்டு. ஆனால், அதே வாரத்தில் திடீரென்று அவருக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஏன்? என்ன நடந்தது?

ஓர் எதிர்பாரா கேள்வி

“ஃபின்மார்க்கில் பயனியராக இருக்கும் மார்யோ என்னிடம் வந்து, ‘23 பிரஸ்தாபிகள் உள்ள லாக்ஸெல்வ் என்ற ஊருக்குக் குடிமாறிச் சென்று ஊழியம் செய்ய முடியுமா?’ என்று திடுதிப்பென்று ஒரு கேள்வியைக் கேட்டார்” என்கிறார் ரோவால்டு. அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஆடிப்போய்விட்டார். “தேவை அதிகமுள்ள இடத்திற்குச் சென்று சேவை செய்வது பற்றி எல்சபெத்தும் நானும் ஏற்கெனவே யோசித்திருந்தோம், ஆனால் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்த பிறகு செய்யலாம் என்று நினைத்திருந்தோம்” எனச் சொல்கிறார். அந்த ஒதுக்குப்புறப் பகுதியில் இருந்த சில நாட்களுக்குள்ளேயே மக்களுக்கு இருந்த ஆன்மீகப் பசியை அவர் கண்டார். அவர்களுக்கு அந்தச் சமயத்தில்தான் உதவி தேவை, பிற்பாடு அல்ல என்பதை உணர்ந்துகொண்டார். “மார்யோ கேட்ட கேள்வி என் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது, எத்தனையோ நாட்களுக்குத் தூக்கமே வரவில்லை” என்கிறார் ரோவால்டு. பிற்பாடு அவரையும் அவர் குடும்பத்தாரையும் கோல்ஃபியோர்டு கிராமத்திற்குத் தெற்கே சுமார் 240 கிலோமீட்டர் (150 மைல்) தூரத்தில் உள்ள லாக்ஸெல்வ் என்ற இடத்திற்கு மார்யோ அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் சிறிய சபையை அவர்களே நேரில் பார்த்தால் நன்றாய் இருக்குமென நினைத்து அங்கு அழைத்துச் சென்றார்.

லாக்ஸெல்வ் சபையிலிருந்த இரண்டு மூப்பர்களில் ஒருவரான ஆண்டிரியாஸ், அங்குள்ள பிராந்தியத்தையும் ராஜ்ய மன்றத்தையும் அவர்களுக்குச் சுற்றிக் காட்டினார். சபையார் அவர்களை அன்புடன் வரவேற்றுப் பேசினார்கள். பிரசங்க வேலையில் உதவி செய்வதற்காக ரோவால்டு குடும்பத்தார் குடிமாறி வந்தால் தங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்குமென்றும் அவர்களிடம் சொன்னார்கள். ரோவால்டுக்கும் ஃபேபியனுக்கும் வேலை கிடைப்பதற்குக்கூட ஆண்டிரியாஸ் ஏற்பாடு செய்துவிட்டாராம்! புன்சிரிப்புடன் அதை அவரே சொன்னார். இப்போது ரோவால்டு குடும்பத்தார் என்ன முடிவெடுப்பார்கள்?

என்ன முடிவெடுப்பது?

“எனக்குப் போகவே பிடிக்கவில்லை” என்றுதான் ஃபேபியன் முதலில் சொன்னான். சபையில் இருக்கும் தன் நெருங்கிய நண்பர்களை விட்டுவிட்டு அந்தச் சிறிய ஊருக்குப் போவதில் அவனுக்குத் துளிகூட இஷ்டமில்லை. அதுமட்டுமல்ல, எலெக்ட்ரீஷியன் ஆவதற்கான பயிற்சியும் அப்போது முடிந்திருக்கவில்லை. இசபெல்லைக் கேட்டபோதோ (அப்போது அவளுக்கு 21 வயது), “அது என் நீண்ட நாள் கனவு!” என்று உற்சாகத்தோடு சொன்னாள். ஆனால் அதன்பின், “‘அது நல்ல ஐடியாதானா? என் நண்பர்களை நான் “மிஸ்” பண்ணுவேனா? எனக்குப் பழக்கமான, சௌகரியமான இந்தச் சபையிலேயே இருந்துவிடலாமா?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்” என்கிறாள் இசபெல். எல்சபெத் என்ன நினைத்தார்? “எங்கள் குடும்பத்திற்கு யெகோவா கொடுத்த நியமிப்பாக அதைக் கருதினேன். ஆனால், அப்போதுதான் புதுப்பிக்கப்பட்ட எங்கள் வீட்டையும், கடந்த 25 வருடங்களாக அதில் நாங்கள் சேர்த்து வைத்த பொருள்களையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்” என்று அவர் சொல்கிறார்.

எல்சபெத்தும் இசபெலும்

ஒதுக்குப்புறப் பகுதியில் அந்த வாரம் முழுக்க ஊழியம் செய்துவிட்டு ரோவால்டும் அவர் குடும்பத்தாரும் பெர்கனுக்குத் திரும்பினார்கள். ஆனாலும், சுமார் 2,100 கிலோமீட்டர் (1,300 மைல்) தூரத்திலுள்ள லாக்ஸெல்வ் சபையைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைப் பற்றிய நினைவுகள் அவர்கள் நெஞ்சைவிட்டு நீங்கவே இல்லை. எல்சபெத் சொல்கிறார்: “ஓயாமல் யெகோவாவிடம் ஜெபித்தேன். அங்கு சந்தித்த நண்பர்களோடு அனுபவங்களையும் ஃபோட்டோக்களையும் பகிர்ந்துகொண்டோம், நட்பைத் தொடர்ந்தோம்.” ரோவால்டு சொல்கிறார்: “குடிமாறிச் செல்லும் எண்ணம் என் மனதில் பதிவதற்குக் கொஞ்சக் காலம் பிடித்தது. அப்படிச் செல்வது நடைமுறைக்கு ஒத்துவருமா? அன்றாடச் செலவுக்கு என்ன செய்வது? என்றெல்லாம் நான் யோசித்துப் பார்க்க வேண்டியிருந்தது. யெகோவாவிடம் ரொம்பவே ஜெபம் செய்தேன். என் குடும்பத்தாரிடமும், அனுபவமுள்ள சகோதரர்களிடமும் மனம்விட்டுப் பேசினேன்.” ஃபேபியன் என்ன சொல்கிறான்? “குடிமாறிப் போகாதிருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை யோசிக்க யோசிக்கப் புரிந்துகொண்டேன். அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்தேன், போக வேண்டுமென்ற ஆசை மெல்ல மெல்ல என் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது.” இசபெல் என்ன செய்தாள்? குடிமாறிப் போவதற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் விதத்தில் பெர்கனிலேயே பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தாள், தனிப்பட்ட பைபிள் படிப்பிலும் அதிக நேரம் செலவிட்டாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு, தான் தயாராகிவிட்டதாக உணர்ந்தாள்.

தங்கள் குறிக்கோளை அடைய...

தேவை அதிகமுள்ள இடத்திற்குக் குடிமாறிச் செல்ல வேண்டுமென்ற ஆசை அதிகரித்தபோது அதற்கான படிகளை அவர்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். ரோவால்டு கைநிறைய சம்பளத்தோடு சந்தோஷமாக வேலை செய்துவந்தபோதிலும், ஒரு வருட லீவு கேட்டார். அவருடைய முதலாளிக்கோ அவரை விடவே மனம் இருக்கவில்லை; அதனால், இரண்டு வாரம் வேலை, ஆறு வாரம் லீவு என்ற அடிப்படையில் பகுதி நேரமாவது வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டார். “சம்பளம் ரொம்பவே குறைந்துபோனது; ஆனால், போதுமானதாக இருந்தது” என்கிறார் ரோவால்டு.

எல்சபெத் சொல்கிறார்: “என் கணவர் என்னிடம், லாக்ஸெல்வில் ஒரு வீட்டைப் பார்க்கும்படியும், பெர்கனில் இருக்கும் வீட்டை வாடகைக்கு விட ஏற்பாடு செய்யும்படியும் சொன்னார். அதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைப்பட்டது; ஆனாலும் நல்லபடியாகச் செய்து முடித்தோம். கொஞ்ச நாள் கழித்து, பிள்ளைகளுக்கும் பகுதிநேர வேலை கிடைத்தது. அதனால் உணவு, போக்குவரத்து செலவைச் சமாளிக்க முடிந்தது.”

இசபெல் சொல்கிறாள்: “நாங்கள் குடிமாறிச் சென்ற ஊர் மிகச் சிறியதாக இருந்ததால், வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நம்பிக்கையே விட்டுப்போனது.” அதனால், சின்னச் சின்ன பகுதிநேர வேலைகளைச் செய்தாள்—அதுவும் முதல் வருடத்தில் மட்டும் ஒன்பது முறை வேலையை மாற்ற வேண்டியிருந்தது! ஃபேபியன் தன் கதையைச் சொல்கிறான்: “எலெக்ட்ரீஷியனாக என் படிப்பை முடிப்பதற்கு, பயிற்சிப் பள்ளிக்கும் நான் செல்ல வேண்டியிருந்தது. லாக்ஸெல்வுக்கு வந்தபின் என் பயிற்சியைத் தொடர்ந்தேன். பரீட்சையில் பாஸ் செய்த பிற்பாடு, எலெக்ட்ரீஷியனாகப் பகுதிநேர வேலை கிடைத்தது.”

ஊழியத்தை அதிகரித்த மற்றவர்கள்

மாரெல்யெஸும் கெசியாவும் நார்வேயில் சமி பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சாட்சி கொடுக்கிறார்கள்

மாரெல்யெஸ்-கெசியா தம்பதியரும் தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்ய விரும்பினார்கள். மாரெல்யெஸ் (29 வயது) இவ்வாறு சொல்கிறார்: “பயனியர் ஊழியத்தைப் பற்றி மாநாட்டில் கொடுக்கப்பட்ட பேச்சுகளும் பேட்டிகளும் ஊழியத்தில் அதிகம் செய்ய வேண்டுமென்ற ஆசையை என் மனதில் பெருக்கெடுக்கச் செய்தன.” கெசியாவிற்கோ (26 வயது) குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வது படுகஷ்டமாக இருந்தது. “என் நண்பர்களையும் சொந்தபந்தங்களையும் விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே எனக்கு நடுக்கத்தைத் தந்தது” என்கிறார் அவர். வீட்டை அடமானமாக வைத்து வாங்கியிருந்த கடனை அடைப்பதற்காக மாரெல்யெஸ் முழுநேர வேலை செய்தார். “மாற்றங்களைச் செய்ய உதவும்படி ஜெபம் செய்ததால்தான்... யெகோவாவின் உதவி கிடைத்ததால்தான்... எங்களால் குடிமாறிச் செல்ல முடிந்தது” என்று அவர் சொல்கிறார். முதலாவதாக, பைபிளைப் படிப்பதில் அவர்கள் அதிக நேரம் செலவிட்டார்கள். பிற்பாடு தங்கள் வீட்டை விற்றார்கள், வேலையை விட்டார்கள். 2011 ஆகஸ்ட் மாதத்தில் வட நார்வேயில் உள்ள ஆல்ட்டா என்ற நகருக்குக் குடிமாறிச் சென்றார்கள். தற்போது அங்கு பயனியர் ஊழியம் செய்துவருகிறார்கள். செலவுகளைக் கவனித்துக்கொள்ள மாரெல்யெஸ் அக்கௌண்டன்ட்டாக வேலை பார்க்கிறார்; கெசியா ஒரு கடையில் வேலை பார்க்கிறார்.

தேவை அதிகமுள்ள இடங்களுக்குக் குடிமாறிச் சென்றவர்களின் அனுபவங்களை இயர்புக்கில் படித்தது, நட்-லிஸ்பெத் தம்பதியரின் (35-37 வயது) மனதைத் தொட்டது. “அயல் நாட்டில் சேவை செய்வதற்கான எண்ணத்தை அந்த அனுபவங்கள் எங்களுக்குள் விதைத்தன. ஆனால், என்னைப் போன்ற சாதாரண ஆட்களால் இதைச் செய்ய முடியுமா என்று ஆரம்பத்தில் தயங்கினேன்” என்று லிஸ்பெத் சொல்கிறார். இருந்தாலும், தங்கள் குறிக்கோளை அடைய அவர்கள் முயற்சி செய்தார்கள். “எங்களுடைய வீட்டை விற்றோம்; செலவைக் குறைக்க, அம்மாவின் வீட்டுக்கே குடிபோனோம். பிற்பாடு, அயல்நாட்டு ஊழியத்திற்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காக பெர்கனில் இருந்த ஆங்கில சபைக்குப் போக ஆரம்பித்தோம். அச்சமயத்தில், லிஸ்பெத்தின் அம்மாவோடு ஒரு வருடம் தங்கியிருந்தோம்” என்கிறார் நட். சீக்கிரத்திலேயே இன்னொரு பெரிய மாற்றத்திற்கு நட்–லிஸ்பெத் தம்பதியர் தயாரானார்கள். அங்கிருந்து உகாண்டாவிற்குக் குடிமாறிப் போனார்கள். வருடத்தில் இரண்டு மாதம் நார்வேக்கு வந்து வேலை செய்துவிட்டுத் திரும்பப் போகிறார்கள். இப்படிக் கிடைக்கிற பணம், உகாண்டாவில் முழுநேர ஊழியம் செய்ய அவர்களுக்கு உதவுகிறது.

‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்’

“குடும்பமாக . . . எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்திருக்கிறது.”—ரோவால்டு

மனமுவந்து சேவை செய்யும் இவர்கள் என்னென்ன நன்மைகளைப் பெற்றார்கள்? “பெர்கனில் செலவிட்டதைவிட இப்போது இந்த ஒதுக்குப்புறப் பகுதியில் குடும்பமாக அதிக நேரத்தை எங்களால் செலவிட முடிகிறது. எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்திருக்கிறது. எங்கள் பிள்ளைகளுடைய ஆன்மீக முன்னேற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது” என்று சொல்லும் ரோவால்டு, “இப்போதெல்லாம் பொருள் சேர்ப்பது பற்றி நாங்கள் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. நாங்கள் நினைத்த அளவுக்கு அது எங்களுக்கு முக்கியமில்லை” என்றும் சொல்கிறார்.

எல்சபெத் வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஏன்? லாக்ஸெல்வ் சபைப் பிராந்தியத்தில் காரஸ்யோக் கிராமமும் இருக்கிறது; இங்கு வட நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமி என்ற பழங்குடி மக்கள் பெரும்பாலோர் வசிக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் சத்தியத்தைக் குறித்துப் பேச வேண்டும் என்பதற்காக சமி மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சியெடுத்தார். இப்போது அவரால் அந்த மொழியில் ஓரளவு பேச முடிகிறது. ஊழியத்தில் அவர் மகிழ்ச்சி காண்கிறாரா? “நான் ஆறு பைபிள் படிப்புகளை நடத்துகிறேன்; இங்கு கிடைக்கிற சந்தோஷம் எனக்கு வேறு எங்கேயும் கிடைக்காது” என்கிறார் கண்கள் மலர.

ஃபேபியன் இப்போது ஒரு பயனியர், உதவி ஊழியர். ‘எங்கள் புதிய சபையிலுள்ள பருவவயதுப் பிள்ளைகள் மூன்று பேர் ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கு நானும் இசபெலும் உதவி செய்தோம்’ என்று ஃபேபியன் சொல்கிறான். அந்த மூன்று பேரும் இப்போது ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள். அவர்களில் இரண்டு பேர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டார்கள், 2012 மார்ச் மாதத்தில் துணைப்பயனியர் ஊழியமும் செய்தார்கள். சத்தியத்தை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்ற அம்மூவரில் ஒருத்தி, தன்னை மீண்டும் ‘சரியான வழிக்குக் கொண்டுவந்ததற்காக’ ஃபேபியனுக்கும் இசபெலுக்கும் மனமார நன்றி தெரிவித்தாள். “அவள் இதை என்னிடம் சொன்னபோது நான் அப்படியே நெகிழ்ந்துபோனேன். ஒருவருக்கு உதவி செய்வது எவ்வளவு சந்தோஷம்!” என்கிறான் ஃபேபியன். “‘யெகோவா எவ்வளவு நல்லவர்’ என்பதை இந்த நியமிப்பில் என்னால் ருசித்துப் பார்க்க முடிகிறது” என்கிறாள் இசபெல். (சங். 34:8) “இங்கு சேவை செய்வது ரொம்பவும் ஜாலியாக இருக்கிறது” என்றும் அவள் சொல்கிறாள்.

மாரெல்யெஸ்-கெசியா தம்பதியர், இப்போது எளிமையான, ஆனால் வளமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் புதிதாகச் சென்ற ஆல்ட்டா சபையில் தற்போது 41 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். “எங்கள் வாழ்க்கையில் நாங்கள் இந்தளவு மாற்றங்களைச் செய்திருப்பதை யோசித்துப் பார்க்கும்போது எங்களுக்கே உற்சாகமாயிருக்கிறது. இங்கே பயனியர்களாகச் சேவை செய்ய முடிந்ததற்காக யெகோவாவுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். இதைவிட திருப்தியான வேலை வேறு எதுவுமே இல்லை” என்கிறார் மாரெல்யெஸ். “யெகோவாமீது இன்னும் முழுமையாக நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொண்டேன்; இதுவரை எங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் அவர் பார்த்துவந்திருக்கிறார். சொந்தபந்தங்களைவிட்டுப் பிரிந்து வெகுதூரத்தில் இருப்பது, அவர்களோடு ஒன்றுசேர்ந்திருக்கும் தருணங்களை இன்னும் அதிகமாக அனுபவிக்க எனக்கு உதவுகிறது. இங்கு வந்து சேவை செய்யத் தீர்மானித்ததற்காக நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை” என்கிறார் கெசியா.

உகாண்டாவிலுள்ள ஒரு குடும்பத்தோடு நட்–லிஸ்பெத் தம்பதியர் படிப்பு நடத்துகிறார்கள்

உகாண்டாவிலிருக்கும் நட்-லிஸ்பெத் தம்பதி என்ன சொல்கிறார்கள்? நட் சொல்கிறார்: “புதிய சூழல்... புதிய கலாச்சாரம்... இதெல்லாம் பழக்கப்பட கொஞ்ச நாள் பிடித்தது. தண்ணீர்த் தட்டுப்பாடு, மின்சாரப் பிரச்சினை, வயிற்றுக் கோளாறு போன்றவை இப்போதும் அவ்வப்போது தலைகாட்டுகின்றன, ஆனால் பைபிள் படிப்புகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.” லிஸ்பெத் சொல்கிறார்: “எங்கள் வீட்டிலிருந்து அரை மணிநேர தூரத்தில், ஊழியம் செய்யப்படாத இடங்கள் நிறையவே இருக்கின்றன. அங்கு போகும்போது ஆட்கள் பைபிளை வாசித்துக்கொண்டிருப்பதைப் பார்ப்போம், பைபிளைக் கற்றுக்கொடுக்கும்படி அவர்கள் கேட்பார்கள். அப்படிப்பட்ட மனத்தாழ்மையுள்ள ஆட்களுக்கு பைபிளைக் கற்றுத்தரும்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடிணையே இல்லை!”

தாம் ஆரம்பித்து வைத்த பிரசங்க வேலை, உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் செய்யப்படுவதை நம் தலைவரான இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷப்படுவார்! “எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்” என்ற அவருடைய கட்டளைக்கு மனமுவந்து கீழ்ப்படிகிற அனைவருமே மட்டில்லா மகிழ்ச்சி காண்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை!—மத். 28:19, 20.