Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அலிஸா

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள் துருக்கியில்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள் துருக்கியில்

‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ சொல்வதற்கு, முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் கடினமாக உழைத்தார்கள். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் அதைச் சொன்னார்கள். (மத். 24:14) சிலர் மற்ற நாடுகளுக்கும் போனார்கள். உதாரணத்துக்கு, இன்று துருக்கி என்று அழைக்கப்படுகிற பகுதிக்கு அப்போஸ்தலன் பவுல் போனார். தன் மிஷனரி பயணங்களின்போது, அவர் அங்கே பெரியளவில் ஊழியம் செய்தார். * சுமார் 2,000 வருஷங்களுக்குப் பிறகு, அதாவது 2014-ல், துருக்கியில் மறுபடியும் விசேஷ ஊழியம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஊழியம் ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது? யாரெல்லாம் அதில் கலந்துகொண்டார்கள்?

“என்ன நடக்குது?”

துருக்கியில் 2,800-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். ஆனால், அதன் மக்கள் தொகையோ சுமார் 8,00,00,000! அதாவது, ஒரு பிரஸ்தாபி கிட்டத்தட்ட 28,000 ஆட்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த பிரஸ்தாபிகளால் கொஞ்சம் பேருக்குத்தான் பிரசங்கிக்க முடிந்திருந்தது. ஒரு சிறிய காலப்பகுதிக்குள், எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் பிரசங்கிக்க வேண்டும் என்பதற்காகத்தான் விசேஷ ஊழியம் ஏற்பாடு செய்யப்பட்டது. துருக்கி மொழி தெரிந்த சுமார் 550 பிரஸ்தாபிகள், மற்ற நாடுகளிலிருந்து துருக்கிக்கு வந்து, அங்கிருந்த சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்தார்கள். அதன் பலன் என்ன?

பெரியளவில் சாட்சி கொடுக்கப்பட்டது. இஸ்தான்புல்லில் இருக்கிற ஒரு சபையிலிருந்து இப்படிக் கடிதம் வந்தது: “மக்கள் எங்களைப் பார்த்தபோது, ‘இங்க ஏதாவது விசேஷ மாநாடு நடக்குதா? எங்க பார்த்தாலும் யெகோவாவின் சாட்சிகளா இருக்கீங்களே!’ என்று கேட்டார்கள்.” இஜ்மிர் என்ற நகரத்தில் இருக்கிற ஒரு சபையிலிருந்து இப்படிக் கடிதம் வந்தது: “டாக்ஸி ஸ்டாண்டில் வேலை செய்யும் ஒருவர் உள்ளூர் மூப்பரிடம் வந்து, ‘இங்க என்ன நடக்குது? உங்க வேலைய இன்னும் தீவிரமா செய்ய ஆரம்பிச்சிட்டீங்க போல?’ என்று கேட்டார்.” இந்த விசேஷ ஊழியத்தை எல்லாரும் கவனித்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

ஸ்டீஃபன்

வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த சகோதர சகோதரிகள், ரொம்ப சந்தோஷமாக ஊழியம் செய்தார்கள். டென்மார்க்கைச் சேர்ந்த ஸ்டீஃபன், இப்படிச் சொன்னார்: “ஒவ்வொரு நாளும், யெகோவாவ பத்தி கேள்விப்படாத மக்கள்கிட்ட என்னால பிரசங்கிக்க முடிஞ்சது. யெகோவாவோட பேர நான் எல்லாருக்கும் தெரியப்படுத்துன மாதிரி உணர்ந்தேன்.” பிரான்சைச் சேர்ந்த ஜீன்-டேவிட் இப்படி எழுதினார்: “ஒரு தெருவில் மட்டும் நாங்கள் பல மணிநேரம் பிரசங்கித்தோம். அது ரொம்ப அருமையாக இருந்தது. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியவில்லை. எல்லா வீடுகளிலும் எங்களால் பேச முடிந்தது. அதுமட்டுமல்ல, நம்முடைய வீடியோ ஒன்றையும் காட்டினோம், பிரசுரங்களையும் தந்தோம்.”

ஜீன்-டேவிட் (நடுவில்)

550 பிரஸ்தாபிகள், வெறும் 2 வாரங்களிலேயே சுமார் 60,000 பிரசுரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்! விசேஷ ஊழியம் ஒரு பெரிய சாட்சியாக அமைந்தது.

ஊழியத்தின் மேல் இருந்த வைராக்கியம் அதிகமானது. இந்த விசேஷ ஊழியம், உள்ளூர் சகோதரர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. முழுநேர ஊழியம் செய்வதைப் பற்றி நிறைய பேர் யோசிக்க ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால், விசேஷ ஊழியம் முடிந்த 12 மாதங்களுக்குள் புதிதாக 82 பேர் பயனியர்களாக ஆனார்கள். இது 24% அதிகரிப்பு!

ஷெரன்

ஊழியம் செய்துவிட்டு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிய பிறகும்கூட, தாங்கள் ஏற்கனவே செய்துவந்த ஊழியத்தை இந்த விசேஷ ஊழியம் எப்படிப் பாதித்தது என்பதைப் பற்றி அந்தச் சகோதர சகோதரிகள் சொல்கிறார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த ஷெரன் என்ற சகோதரி இப்படி எழுதினார்: “துருக்கியில் இருந்த சகோதரர்கள் ரொம்ப சுலபமாக சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிறார்கள். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு நான் ரொம்பவே தயங்குவேன். ஆனால், இப்போது நானும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிறேன். விசேஷ ஊழிய ஏற்பாட்டுக்கும், உள்ளூர் சகோதரர்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் செய்த ஜெபங்களுக்குப் பதில் கிடைத்திருக்கிறது. முன்பு செய்ய முடியாததை என்னால் செய்ய முடிந்தது. ரயில் சுரங்கப்பாதையில்கூட நான் ஊழியம் செய்தேன்; நிறைய துண்டுப்பிரதிகளையும் கொடுத்தேன். முன்பு போல, இப்போது எனக்கு அந்தளவு தயக்கம் இல்லை.”

ஜோஹன்னெஸ்

“ஊழியத்துக்குப் பிரயோஜனமா இருக்குற நிறைய பாடங்களை நான் கத்துக்கிட்டேன்” என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்னெஸ் சொல்கிறார். “சத்தியத்தை பத்தி எத்தனை பேருக்கு சொல்ல முடியுமோ அத்தனை பேருக்கும் சொல்லணும்னு துருக்கியில இருந்த சகோதரர்கள் விரும்புனாங்க. சாட்சி கொடுக்குறதுக்கு கிடைச்ச எல்லா சந்தர்ப்பத்தையும் அவங்க பயன்படுத்திக்கிட்டாங்க. ஜெர்மனிக்கு திரும்பி வந்ததுக்கு அப்புறம், நானும் அதே மாதிரி செய்யணும்னு முடிவு செஞ்சேன். இப்போ, முன்னவிட நிறைய பேருக்கு சாட்சி கொடுக்குறேன்” என்று அவர் சொல்கிறார்.

ஜானெப்

“நான் இன்னும் நல்லா ஊழியம் செய்றதுக்கு இந்த விசேஷ ஊழியம் எனக்கு உதவுச்சு. இன்னும் தைரியமா இருக்கவும், யெகோவா மேல அதிகமா நம்பிக்கை வைக்கவும் அது எனக்கு உதவுச்சு” என்று பிரான்சைச் சேர்ந்த ஜானெப் சொல்கிறார்.

பிரஸ்தாபிகளுக்குள் இருந்த நட்பு பலமானது. வித்தியாசமான நாடுகளிலிருந்து வந்திருந்த சகோதரர்கள் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருந்தது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. “சகோதரர்களோட உபசரிக்குற குணத்தை எங்களால ‘ருசிக்க’ முடிஞ்சது” என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஜீன்-டேவிட் சொல்கிறார். “எங்கள நண்பர்கள மாதிரியும் குடும்பத்துல ஒருத்தர மாதிரியும் அவங்க நடத்துனாங்க. அவங்களோட வீடுகள்ல எங்கள தங்க வைச்சாங்க. நமக்கு உலகம் முழுவதும் சகோதரர்கள் இருக்காங்கனு எனக்கு தெரியும்; அதை பத்தி நம்ம பிரசுரங்கள்ல நிறைய தடவ படிச்சிருக்கேன். ஆனா, இப்போ நானே அதை நேர்ல பார்க்குறேன். யெகோவாவோட மக்கள்ல ஒருத்தரா இருக்குறத நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. இந்த அருமையான பாக்கியத்துக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்றேன்!” என்றும் அவர் சொல்கிறார்.

க்ளார் (நடுவில்)

“டென்மார்க், பிரான்சு, ஜெர்மனி, துருக்கினு நாங்க எந்த நாட்டை சேர்ந்தவங்களா இருந்தாலும், நாங்க எல்லாரும் ஒரே குடும்பம் மாதிரி இருந்தோம். ஒரு பெரிய ரப்பர வைச்சு நாட்டு எல்லைகளையெல்லாம் கடவுள் அழிச்சுட்ட மாதிரி இருந்துச்சு” என்கிறார் பிரான்சைச் சேர்ந்த க்ளார்.

ஸ்டெஃபானி (நடுவில்)

பிரான்சைச் சேர்ந்த ஸ்டெஃபானி இப்படிச் சொன்னார்: “கலாச்சாரமோ மொழியோ நம்மள ஒண்ணா இணைக்கிறது கிடையாது. யெகோவாமேல நாம எல்லாரும் வைச்சிருக்கிற அன்புதான் நம்மள ஒண்ணா இணைக்குது. இந்த உண்மைய இந்த விசேஷ ஊழியத்திலிருந்து நாங்க தெரிஞ்சிக்கிட்டோம்.”

நீண்ட கால பலன்கள்

வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த நிறைய பேர், துருக்கியில் செய்யப்பட வேண்டிய பிரமாண்டமான வேலைக்கு உதவுவதற்காக துருக்கிக்கு குடிமாறிப் போவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள். நிறைய பேர், ஏற்கனவே அங்கே குடிமாறிப் போய்விட்டார்கள். தேவை அதிகமுள்ள இடத்துக்குக் குடிமாறிய இவர்களை நாம் பாராட்ட வேண்டும்.

உதாரணத்துக்கு, 25 பிரஸ்தாபிகள் அடங்கிய ஒதுக்குப்புறமான ஒரு தொகுதியில், பல வருஷங்கள்வரை ஒரே ஒரு மூப்பர்தான் இருந்தார். ஆனால், அங்கே ஊழியம் செய்வதற்காக, 2015-ல், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்திலிருந்து 6 பேர் குடிமாறி வந்தார்கள். அப்போது, அங்கிருந்த பிரஸ்தாபிகளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை!

ஊழியம் செய்வதற்காக துருக்கிக்குக் குடிமாறி வந்தவர்கள், கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, துருக்கியில் தாங்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வது, சில சமயங்களில் சவாலாக இருக்கும் என்பது உண்மைதான்! ஆனால், அப்படிச் செய்வதால் நிறைய பலன்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி சிலர் என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்.

ஃபெட்ரிக்கோ

“பொருள் வசதிகள் நிறைய இருந்தா, அதுக்கே முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். அப்படி நிறைய இல்லாததுனால, என்னால ஃப்ரீயா இருக்க முடியுது. மிக முக்கியமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர முடியுது” என்று 40-களில் இருக்கிற திருமணமான ஃபெட்ரிக்கோ சொல்கிறார். இவர் ஸ்பெயினிலிருந்து குடிமாறி வந்திருக்கிறார். இந்தச் சேவையை செய்யும்படி இவர் மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவாரா? “நிச்சயமா உற்சாகப்படுத்துவேன்” என்று அவர் சொல்கிறார். “மக்களுக்கு யெகோவாவ பத்தி சொல்லணுங்கிற எண்ணத்தோட வெளிநாட்டுக்கு போறப்போ, நீங்க உங்களை யெகோவாவோட கையில ஒப்படைக்கிறீங்கனு அர்த்தம். இதுக்கு முன்னாடி இருந்ததைவிட இப்போ யெகோவா உங்க மேல ரொம்ப அக்கறையா இருக்காருங்குறத உங்களால உணர முடியும்” என்றும் அவர் சொல்கிறார்.

ரூடி

“தேவை அதிகம் இருக்குற இடத்துல சேவை செய்றதுனால நான் ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கேன். ஏன்னா, சத்தியத்தை பத்தி கேள்விப்படாத நிறைய பேர்கிட்ட அதை பத்தி சொல்ல முடியுது” என்று 50-களில் இருக்கிற திருமணமான ரூடி என்ற சகோதரர் சொல்கிறார். இவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர். “சத்தியத்த ஏத்துக்குறப்போ மக்கள் ரொம்ப சந்தோஷப்படுறாங்க. அதை பார்த்து நானும் ரொம்ப சந்தோஷப்படுறேன்” என்று அவர் சொல்கிறார்.

ஸாஷா

திருமணமான ஸாஷா என்ற சகோதரர், 40-களில் இருக்கிறார். ஜெர்மனியிலிருந்து குடிமாறி வந்திருக்கும் இவர் இப்படிச் சொல்கிறார்: “ஒவ்வொரு தடவையும் ஊழியத்துக்கு போறப்போ, முதல் முறையா சத்தியத்த பத்தி கேள்விப்படுற மக்கள நான் பார்க்குறேன். அந்த மாதிரியான ஆட்கள்கிட்ட யெகோவாவ பத்தி சொல்றப்போ எனக்கு ரொம்ப திருப்தியா இருக்கு.”

அட்ஸூகோ

திருமணமான அட்ஸூகோ என்ற சகோதரி, 30-களில் இருக்கிறார். ஜப்பானைச் சேர்ந்த இவர் இப்படிச் சொல்கிறார்: “இதுக்கு முன்னாடியெல்லாம், அர்மகெதோன் சீக்கிரம் வரணும்னு நினைப்பேன். ஆனா, துருக்கிக்கு குடிமாறி வந்ததுக்கு அப்புறம், அப்படி நினைக்கிறதில்ல. யெகோவா பொறுமையோடு இருக்குறதுக்காக ரொம்ப நன்றி சொல்றேன். ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா எப்படி வழிநடத்துறார்னு பார்க்க பார்க்க, அவர்கிட்ட நெருங்கி போகணுங்கிற ஆசை இன்னும் அதிகமாகுது.”

திருமணமான அலிஸா என்ற சகோதரி, 30 வயதைக் கடந்தவர். ரஷ்யாவைச் சேர்ந்த இவர், இப்படிச் சொல்கிறார்: “இந்த மாதிரியான ஒரு ஊழியம் செய்றது மூலமா யெகோவாவுக்கு சேவை செய்றதுனால, அவர் எவ்வளவு நல்லவருங்கிறத என்னால ருசிச்சு பார்க்க முடிஞ்சிருக்கு.” (சங். 34:8) “யெகோவா என்னோட அப்பா மட்டும் இல்ல, என்னோட நெருங்கிய நண்பரும்கூட. வித்தியாசமான சூழ்நிலைகளை சந்திக்கிறப்போ அவர பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சிக்க முடியுது. என் வாழ்க்கை முழுதும் இப்போ சந்தோஷமான தருணங்களாலும், சுவாரஸ்யமான அனுபவங்களாலும், அளவில்லாத ஆசீர்வாதங்களாலும் நிறைஞ்சிருக்கு!” என்றும் சொல்கிறார்.

“வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள்”

துருக்கியில் நடந்த விசேஷ ஊழியத்தின் மூலம், நிறைய பேர் நல்ல செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், இதுவரை ஊழியம் செய்யப்படாத பகுதிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. இதுவரை யெகோவாவைப் பற்றி கேள்விப்படாத மக்களை, துருக்கிக்குக் குடிமாறி வந்திருக்கும் பிரஸ்தாபிகள் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு இடத்தில் ஊழியம் செய்ய நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், “வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன” என்று நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். (யோவா. 4:35) இந்த உலகத்தில் ‘அறுவடைக்குத் தயாராக இருக்கிற’ ஒரு பகுதிக்குப் போய் உங்களால் உதவ முடியுமா? அப்படியென்றால், அந்த இலக்கை அடைவதற்கான படிகளை இப்போதே எடுக்க ஆரம்பியுங்கள். நல்ல செய்தி, “பூமியின் எல்லைகள் வரை” பரவுவதற்கு நீங்கள் அதிகமாக உதவும்போது, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.—அப். 1:8.

^ பாரா. 2 “அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்” என்ற சிற்றேட்டில் பக். 32-33-ஐப் பாருங்கள்.