Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—மடகாஸ்கரில்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—மடகாஸ்கரில்

“நிறைய பயனியர்கள் தேவப்பட்ட இடங்கள்ல என்னோட ஃப்ரெண்ட்ஸ் சேவ செஞ்சாங்க. அவங்களோட அனுபவங்கள கேட்டப்போ, அந்த சந்தோஷம் எனக்கும் கிடைக்காதான்னு ஏங்குனேன்” என்று பயனியராக இருக்கும் 27 வயது சில்வியானா சொல்கிறார். “ஆனா, வேற இடத்துக்கு போய் சேவ செய்ய என்னால முடியுமான்னு நினைச்சு பயந்தேன்” என்றும் அவர் சொல்கிறார்.

சில்வியானாவைப் போலவே நீங்களும் யோசிக்கிறீர்களா? தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் சேவை செய்ய நீங்களும் ஆசைப்படலாம்; ஆனால், உங்களால் அதைச் செய்ய முடியுமா என்று யோசிக்கலாம். அப்படியென்றால், நம்பிக்கையோடு இருங்கள்! ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள், யெகோவாவின் உதவியோடு எல்லா தடைகளையும் தாண்டி தங்கள் ஊழியத்தை விரிவாக்கியிருக்கிறார்கள்! அவர்களில் சிலருக்கு யெகோவா எப்படி உதவினார் என்று பார்க்கலாம். அதற்கு, உலகத்திலேயே நான்காவது பெரிய தீவான மடகாஸ்கருக்குப் போகலாம், வாருங்கள்!

ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்தத் தீவில் வாழ்கிற நிறையப் பேர் பைபிளுக்கு மதிப்புக் காட்டுகிறார்கள். இங்கே, ஊழியத்தில் நல்ல பலன் கிடைக்கிறது. கடந்த பத்து வருஷங்களில், 70-க்கும் அதிகமான பிரஸ்தாபிகளும் பயனியர்களும் இங்கே சேவை செய்வதற்காக வந்திருக்கிறார்கள்; பக்திவைராக்கியமுள்ள இவர்கள் 11 நாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள். * அதோடு, பரந்துவிரிந்த இந்தத் தீவு முழுவதிலும் நல்ல செய்தியை அறிவிப்பதற்காக உள்ளூரில் இருக்கும் பிரஸ்தாபிகளும் வேறு பகுதிகளுக்குக் குடிமாறியிருக்கிறார்கள். சிலரை இப்போது சந்திக்கலாமா?

பயத்தையும் சோர்வையும் சமாளித்தார்கள்

பரின், லூயி

லூயி, பரின் தம்பதி 30 வயதைத் தாண்டியவர்கள். அவர்கள் பிரான்சிலிருந்து மடகாஸ்கருக்குக் குடிமாறி வந்திருக்கிறார்கள். வெளிநாட்டுக்குப் போய் ஊழியம் செய்ய வேண்டுமென்று அவர்கள் பல வருஷங்களாக நினைத்துக்­கொண்டிருந்தார்கள். ஆனால், சகோதரி பரின் தயங்கிக்கொண்டே இருந்தார். “முன்னபின்ன தெரியாத ஒரு இடத்துக்குப் போக பயமா இருந்துச்சு. எங்க குடும்பத்தயும், சபையயும், வீட்டயும், பழக்கமான இடங்களயும், வழக்கமா செய்ற வேலைகளயும் விட்டுட்டு போக தயக்கமா இருந்துச்சு. உண்மைய சொல்லணும்னா, என்னோட கவலைகள்தான் பெரிய தடையா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். 2012-ல், பரின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு தீர்மானம் எடுத்தார். அவரும் லூயியும் மடகாஸ்கருக்குக் குடிமாறினார்கள். அந்தத் தீர்மானத்தைப் பற்றி இப்போது பரின் என்ன நினைக்கிறார்? “யெகோவா எங்கள எப்படியெல்லாம் வழிநடத்துனாருன்னு பார்த்தப்போ என்னோட விசுவாசம் அதிகமாச்சு” என்று அவர் சொல்கிறார். “நாங்க மடகாஸ்கருக்கு போனதுக்கு அப்புறம் நடந்த முதல் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு, எங்ககூட பைபிள படிச்ச பத்து பேரு வந்திருந்தாங்க!” என்று லூயி சொல்கிறார்.

பிரச்சினைகள் வந்தபோது, தங்களுடைய சேவையைத் தொடர்ந்து செய்ய அந்தத் தம்பதிக்கு எது உதவியது? சகித்திருப்பதற்குப் பலம் தரும்படி அவர்கள் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார்கள். (பிலி. 4:13) “யெகோவா எங்க ஜெபத்த கேட்டு, ‘தேவசமாதானத்தை’ கொடுத்தாரு. எங்களோட சேவையில கிடைச்ச சந்தோஷத்த நினைச்சு பார்க்க முடிஞ்சுது. அதுமட்டுமில்ல, எங்க சேவைய விட்டுடாம இருக்க சொல்லி எங்க நாட்டுல இருந்த ஃப்ரெண்ட்ஸ் எங்களுக்கு ஈமெயிலும் கடிதங்களும் அனுப்பி உற்சாகப்படுத்துனாங்க” என்று லூயி சொல்கிறார்.—பிலி. 4:6, 7; 2 கொ. 4:7.

லூயி, பரின் தம்பதி காட்டிய சகிப்புத்தன்மைக்காக யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். “அக்டோபர் 2014-ல்ல, பிரான்சுல நடந்த கிறிஸ்தவ தம்பதிகளுக்கான பைபிள் பள்ளியில * நாங்க கலந்துக்கிட்டோம். யெகோவா எங்களுக்கு கொடுத்த அந்த பரிச எங்களால மறக்கவே முடியாது” என்று லூயி சொல்கிறார். அந்தப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, மறுபடியும் மடகாஸ்கருக்கு நியமிக்கப்பட்டபோது அந்தத் தம்பதி பூரித்துப்போனார்கள்.

“நாங்க உங்கள நினைச்சு பெருமைப்படுவோம்!”

நாடீனா, டீடியே

டீடியே, நாடீனா தம்பதி 2010-ல் பிரான்சிலிருந்து மடகாஸ்கருக்குக் குடிமாறி வந்தார்கள். அப்போது அவர்கள் 50 வயதைத் தாண்டியிருந்தார்கள். “இள வயசுல நாங்க பயனியர் செஞ்சோம். அதுக்கு அப்புறம் மூணு பிள்ளைங்கள வளர்த்தோம். அவங்க பெரிசானதுக்கு அப்புறம், வெளிநாட்டுல ஊழியம் செய்றத பத்தி யோசிச்சோம்” என்று டீடியே சொல்கிறார். “பிள்ளைங்களவிட்டு பிரியணுமேன்னு நினைச்சுதான் தயங்குனேன். ஆனா அவங்க எங்ககிட்ட, ‘நீங்க வெளிநாட்டுக்கு போய் ஊழியம் செஞ்சா, நாங்க உங்கள நினைச்சு பெருமைப்படுவோம்’னு சொன்னாங்க. அத கேட்டதுக்கு அப்புறம்தான் குடிமாறிப்போக முடிவு செஞ்சோம். இப்போ அவங்களவிட்டு தூரமா இருந்தாலும், அடிக்கடி அவங்ககூட பேச முடியறதுனால சந்தோஷமா இருக்கு” என்று நாடீனா சொல்கிறார்.

மலகாஸி மொழியைக் கற்றுக்கொள்வது இந்தத் தம்பதிக்கு ஒரு சவாலாக இருந்தது. “நாங்க ஒண்ணும் 20 வயசு வாலிபர்கள் இல்லையே!” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் சகோதரி நாடீனா. மொழிப் பிரச்சினையை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? முதலில், பிரெஞ்சு சபைக்கு அவர்கள் போனார்கள். உள்ளூர் மொழியை ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு அவர்கள் மலகாஸி சபைக்கு மாறினார்கள். நாடீனா இப்படிச் சொல்கிறார்: “ஊழியத்துல நாங்க பார்க்கற நிறைய பேர் பைபிள படிக்க ரொம்ப ஆசப்படுறாங்க. நாங்க போய் அவங்கள பார்க்கறதுக்காக எங்களுக்கு அடிக்கடி நன்றி சொல்றாங்க. முதல்ல, இது ஏதோ கனவு மாதிரி இருந்துச்சு. இங்க பயனியர் செய்ய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. காலையில கண்ணு முழிச்சதுமே, ‘ஆஹா... இன்னைக்கு ஊழியத்துக்கு போகப்போறேன்!’னு நினைச்சு சந்தோஷப்படுவேன்.”

மலகாஸி மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி சகோதரர் டீடியே சிரித்துக்கொண்டே இப்படிச் சொல்கிறார்: “நான் கூட்டத்துல ஒரு பகுதிய நடத்திட்டு இருந்தேன். ஆனா, சகோதர சகோதரிகள் சொன்ன பதில் எதுவுமே எனக்கு புரியல. சும்மா, ‘நன்றி’ன்னு மட்டும் சொன்னேன். ஒரு தடவ, ஒரு சகோதரி சொன்ன பதிலுக்கு நான் நன்றி சொன்னப்போ, அவங்களுக்கு பின்னால உட்கார்ந்துட்டு இருந்தவங்க, அந்த பதில் தப்புன்னு எனக்கு ஜாடை காட்டுனாங்க. உடனே, நான் இன்னொரு சகோதரர கேட்டேன். அவரு சரியான பதில சொன்னாருன்னுதான் நினைக்கிறேன்.”

சந்தோஷமாகப் புறப்பட்டு வந்தார்

2005-ல் நடந்த மாநாட்டில், ட்டைரீ, நாடியா தம்பதி “கடவுளைக் கனப்படுத்தும் இலக்குகளை நாடுங்கள்” என்ற நாடகத்தைப் பார்த்தார்கள். தீமோத்தேயுவைப் பற்றிய அந்த நாடகம் அவர்களுடைய மனதைத் தொட்டது. தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையையும் அதிகமாக்கியது. சகோதரர் ட்டைரீ இப்படிச் சொல்கிறார்: “நாடகம் முடிஞ்சு எல்லாரும் கைதட்டிட்டு இருந்தப்போ, நான் என் மனைவிகிட்ட, ‘நாம எங்க போகப்போறோம்?’னு கேட்டேன். அவளும் அத பத்திதான் யோசிச்சுட்டு இருந்ததா சொன்னா.” சீக்கிரத்திலேயே, அந்தக் குறிக்கோளை அடைய அவர்கள் முயற்சி எடுக்க ஆரம்பித்தார்கள். “எங்களோட பொருள்கள கொஞ்சம் கொஞ்சமா குறைச்சோம். கடைசியில நாலு சூட்கேஸ் அளவுக்குத்தான் வச்சிருந்தோம்!” என்று சகோதரி நாடியா சொல்கிறார்.

இடது கோடி: நாடியா, மாரி-மாடலென்; வலது கோடி: ட்டைரீ

அவர்கள் 2006-ல் மடகாஸ்கருக்கு வந்தார்கள். இங்கு ஊழியம் செய்வது ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. “இங்க இருக்கற ஜனங்க ஆர்வம் காட்டறத பார்க்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நாடியா சொல்கிறார்.

ஆனால், ஆறு வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தம்பதிக்கு ஒரு பெரிய பிரச்சினை வந்தது. பிரான்சில் இருந்த நாடியாவின் அம்மா மாரி-மாடலென் கீழே விழுந்து தன்னுடைய கையை முறித்துக்கொண்டார்; அவருடைய தலையிலும் அடிபட்டுவிட்டது. ட்டைரீயும் நாடியாவும், மாரி-மாடலெனின் டாக்டரிடம் கலந்துபேசிவிட்டு, மடகாஸ்கருக்கு வந்து தங்களோடு தங்கும்படி மாரி-மாடலெனைக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது அவருக்கு 80 வயது. இருந்தாலும், சந்தோஷமாகப் புறப்பட்டு வந்தார். வெளிநாட்டில் தங்குவதைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்? “மாற்றத்த சமாளிக்கறது சிலசமயம் கஷ்டமாத்தான் இருக்கு. என்னால நிறைய செய்ய முடியல. இருந்தாலும், சபைக்கு நானும் பிரயோஜனமா இருக்கறதா நினைக்கறேன். என்னோட பிள்ளைங்க இங்க செய்ற ஊழியம் நல்லா பலன் தருது. நான் இங்க வந்ததால அவங்களால இந்த சேவைய தொடர்ந்து செய்ய முடியுது. அத நினைக்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்கிறார்.

“யெகோவாதான் சரியான நேரத்துல உதவி செஞ்சாரு”

டான்ட்ராய் மொழியில் ரின் பேச்சு கொடுக்கிறார்

ரின் என்ற சகோதரருக்கு 22 வயது. மடகாஸ்கரின் கிழக்குப் பகுதியிலுள்ள ஆலட்ச்ச மான்கூரூ என்ற செழுமையான பிரதேசத்தில் அவர் வளர்ந்தார். அவர் பள்ளியில் நன்றாகப் படித்தார். மேல்படிப்பு படிக்க வேண்டுமென்றும் ஆசைப்பட்டார். ஆனால், பைபிளைப் படித்த பிறகு தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டார். “பள்ளி படிப்ப சீக்கிரமாவே முடிக்க நான் முயற்சி செஞ்சேன். பரீட்சையில பாஸ் பண்ணிட்டா பயனியர் செய்ய ஆரம்பிக்கிறேன்னு யெகோவாகிட்ட வாக்கு கொடுத்தேன்” என்று அவர் சொல்கிறார். அவர் பாஸ் ஆன பிறகு, வாக்குக் கொடுத்தபடியே செய்தார். ஒரு பயனியர் சகோதரரோடு போய் தங்கி, பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே பயனியர் செய்ய ஆரம்பித்தார். “என் வாழ்க்கைல இதவிட ஒரு நல்ல முடிவ நான் எடுத்திருக்கவே முடியாது” என்று அவர் சொல்கிறார்.

இருந்தாலும், வாழ்க்கையில் முன்னுக்கு வருவதைப் பற்றி அவர் ஏன் யோசிக்கவில்லை என்பதை அவருடைய குடும்பத்தாரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “என்னோட அப்பா, சித்தப்பா, சின்ன பாட்டி எல்லாரும் என்னை மேல்படிப்பு படிக்க சொன்னாங்க. ஆனா, வேற எதுக்காகவும் பயனியர் சேவைய விட்டுக்கொடுக்க நான் விரும்பல” என்று அவர் சொல்கிறார். கொஞ்ச நாளில், தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் சேவை செய்ய ரின் ஆசைப்பட்டார். அவருக்கு எப்படி அந்த ஆசை வந்தது? “நாங்க தங்கியிருந்த வீட்டுல திருடர்கள் வந்துட்டாங்க. நான் வச்சிருந்த நிறைய சாமான்கள திருடிட்டு போயிட்டாங்க. அப்போதான், ‘பரலோகத்துல பொக்கிஷங்கள’ சேர்த்து வைக்கணும்னு இயேசு சொன்னத யோசிச்சு பார்த்தேன். அதுக்கு அப்புறம், ஆன்மீக பொக்கிஷங்கள சேர்த்து வைக்கறதுக்காக இன்னும் நல்லா உழைக்கணும்னு முடிவு செஞ்சேன்” என்று அவர் சொல்கிறார். (மத். 6:19, 20) மடகாஸ்கரின் தென்கோடியில் இருந்த ஒரு வறட்சியான பகுதிக்கு அவர் குடிமாறிப் போனார். அவர் தங்கியிருந்த பகுதியிலிருந்து அது 1,300 கிலோமீட்டர் (800 மைல்) தூரத்தில் இருந்தது. அங்குதான் ஆன்டன்ட்ராய் மக்கள் குடியிருக்கிறார்கள். அவர் ஏன் அங்கே போக முடிவு செய்தார்?

திருட்டு நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான், ஆன்டன்ட்ராய் இனத்தைச் சேர்ந்த இரண்டு பேரோடு ரின் பைபிள் படிப்பை ஆரம்பித்திருந்தார். அவர்களுடைய மொழியில் சில வார்த்தைகளை அவர் கற்றிருந்தார். இன்னும் நிறைய ஆன்டன்ட்ராய் மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டியிருப்பதைப் பற்றி யோசித்திருந்தார். “டான்ட்ராய் மொழி பேசறவங்களோட பகுதிக்கு குடிமாறி போக உதவி செய்யுங்கன்னு யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன்” என்று அவர் சொல்கிறார்.

ரின் அங்கே குடிமாறிப் போனதுமே ஒரு பிரச்சினையைச் சந்தித்தார். அவருக்கு வேலை கிடைக்கவில்லை. “நீங்க ஏன் இங்க வந்தீங்க? இங்க இருக்கறவங்களே வேல தேடி உங்க ஊருக்குத்தான் போறாங்க” என்று ஒருவர் அவரிடம் சொன்னார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கையில் கிட்டத்தட்ட காசே இல்லாத நிலைமையில், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ரின் ஒரு மண்டல மாநாட்டுக்குப் போனார். மாநாட்டின் கடைசி நாளில், ரின்னுடைய கோட் பாக்கெட்டில் ஒரு சகோதரர் எதையோ திணித்தார். பார்த்தால், பணம்! ஆன்டன்ட்ராய் மக்களுடைய பகுதிக்கு மறுபடியும் போவதற்கும், அங்கே சின்ன அளவில் தயிர் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கும் அந்தப் பணம் போதுமானதாக இருந்தது. “யெகோவாதான் சரியான நேரத்துல உதவி செஞ்சாரு. அவர பத்தி தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைக்காத ஜனங்களுக்கு என்னால தொடர்ந்து உதவி செய்ய முடிஞ்சுது” என்று ரின் சொல்கிறார். சபையிலும் அவர் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. “ஒரு வாரம்விட்டு ஒரு வாரம் நான் பொது பேச்சு கொடுக்க வேண்டியிருந்துச்சு. யெகோவா அவரோட அமைப்பு மூலமா எனக்கு பயிற்சி கொடுத்தாரு” என்று ரின் சொல்கிறார். இன்றும், யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள விரும்பும் நிறைய ஆன்டன்ட்ராய் மக்களுக்கு நல்ல செய்தியை ரின் சொல்லிவருகிறார்.

‘உண்மைக் கடவுள்’ ஆசீர்வதிப்பார்

‘பூமியில் யார் ஆசீர்வாதம் கேட்டாலும், உண்மைக் கடவுளாகிய’ யெகோவா அவர்களை ஆசீர்வதிப்பார் என்று பைபிள் வாக்குறுதி தருகிறது. (ஏசா. 65:16) தடைகளையெல்லாம் தாண்டி நம் ஊழியத்தை விரிவாக்குவதற்கு நாம் கடினமாக உழைக்கும்போது, நிச்சயமாக நமக்கு யெகோவாவின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் பார்த்த சகோதரி சில்வியானாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் சேவை செய்ய தன்னால் முடியுமா என்று நினைத்து அவர் பயந்தார். ஏன்? “என்னோட இடது கால் என்னோட வலது காலவிட கிட்டத்தட்ட மூன்றரை அங்குலம் (9 செ.மீ.) சின்னது. அதனால நான் கொஞ்சம் நொண்டி நொண்டிதான் நடப்பேன், சீக்கிரத்துல களைச்சுப் போயிடுவேன்” என்று அவர் சொல்கிறார்.

டோரடீன் ஞானஸ்நானம் எடுத்த நாளில்; இடது பக்கம் சில்வியானா, வலது பக்கம் சில்வி ஆன்

இருந்தாலும், 2014-ல் சில்வியானா தன்னுடைய சபையில் இருந்த சில்வி ஆன் என்ற ஒரு இளம் பயனியர் சகோதரியோடு சேர்ந்து, ஒரு சின்ன கிராமத்துக்குக் குடிமாறிப் போனார். அது அவர்களுடைய சொந்த ஊரிலிருந்து 85 கிலோமீட்டர் (53 மைல்) தூரத்தில் இருந்தது. தடைகள் மத்தியிலும் சில்வியானாவின் கனவு நனவானது! அவருக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் கிடைத்தது, தெரியுமா? “அங்க போய் ஒரே வருஷத்துல, என்கூட பைபிள படிச்ச டோரடீன், வட்டார மாநாட்டுல ஞானஸ்நானம் எடுத்தாங்க” என்று அவர் சொல்கிறார்.

“உனக்கு உதவி செய்வேன்”

தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்கிற இவர்களுடைய நம்பிக்கையான வார்த்தைகள் காட்டுகிறபடி, தடைகளையெல்லாம் தாண்டி நம் ஊழியத்தை விரிவாக்கும்போது, “நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்” என்று யெகோவா தன் ஊழியர்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதி எவ்வளவு உண்மை என்பதை ருசிப்போம். (ஏசா. 41:10) அப்போது, யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் பலமாகும். நம்முடைய நாட்டிலோ வேறொரு நாட்டிலோ சேவை செய்ய நம்மையே மனப்பூர்வமாக அர்ப்பணிப்பது, புதிய உலகத்தில் கடவுளுடைய வேலைகளைச் செய்ய இப்போதே நம்மைத் தயார்படுத்தும். “தேவை அதிகமுள்ள இடத்துல சேவை செய்யறது எதிர்காலத்துக்காக கிடைக்கிற நல்ல பயிற்சி” என்று முன்பு குறிப்பிடப்பட்ட டீடியே சொல்கிறார். இன்னும் நிறையப் பேர் அந்தப் பயிற்சியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்!

^ பாரா. 4 கனடா, செக் குடியரசு, பிரான்சு, ஜெர்மனி, குவாடலூப், லக்ஸம்பர்க், நியூ கலிடோனியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரசு, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இடங்களிலிருந்து அவர்கள் வந்திருக்கிறார்கள்.

^ பாரா. 8 இப்போது, ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி என்று அழைக்கப்படுகிறது. வெளிநாட்டில் சேவை செய்யும் முழுநேர ஊழியர்களில் தகுதிபெற்றவர்கள், தங்களுடைய சொந்த நாட்டிலோ வேறொரு நாட்டிலோ தங்கள் தாய்மொழியில் நடத்தப்படும் இந்தப் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம்.