Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயர் என்ன?

கடவுளுடைய பெயர் என்ன?

ஒருவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று வைத்துக்கொள்ளுங்கள். முதலில் என்ன செய்வீர்கள்? “உங்க பேர் என்ன?” என்றுதானே கேட்பீர்கள்? கடவுளிடம் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டால் அவர் என்ன சொல்வார்?

“நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்.”​ஏசாயா 42:8.

இந்தப் பெயரை நீங்கள் இப்போதுதான் கேள்விப்படுகிறீர்களா? இருக்கலாம். ஏனென்றால், நிறைய பைபிள்களில் இந்தப் பெயர் இல்லை. சில பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பெயரை ஒருசில தடவை பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்ற இடங்களில் இந்தப் பெயருக்குப் பதிலாக, “கர்த்தர்,” “ஆண்டவர்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், முதன்முதலில் எழுதப்பட்ட பைபிளில் இந்தப் பெயர் 7,000 தடவைக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களை (தமிழில், ய்ஹ்வ்ஹ்) கொண்ட இந்தப் பெயர், தமிழில் ரொம்பக் காலமாகவே “யெகோவா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

முதன்முதலில் எழுதப்பட்ட பைபிளில் கடவுளுடைய பெயர் ஆயிரக்கணக்கான தடவை கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய மொழிபெயர்ப்புகளிலும் அது பயன்படுத்தப்பட்டுள்ளது

சவக் கடல் சுருள்—சங்கீதம் கி.பி. முதல் நூற்றாண்டு, எபிரெயு

டின்டேல் மொழிபெயர்ப்பு 1530, ஆங்கிலம்

ரேனா-வாலேரா மொழிபெயர்ப்பு 1602, ஸ்பானிஷ்

யூனியன் மொழிபெயர்ப்பு 1919, சீன மொழி

கடவுளுடைய பெயர் ஏன் முக்கியம்?

கடவுளுக்கு அது முக்கியம். கடவுளுக்கு யாரும் பெயர் வைக்கவில்லை; அவர்தான் தனக்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தார். “என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர். தலைமுறை தலைமுறையாக இந்தப் பெயரால்தான் ஜனங்கள் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்” என்று அவர் சொன்னார். (யாத்திராகமம் 3:15) சர்வவல்லமையுள்ளவர், தகப்பன், கர்த்தர், கடவுள், ஆண்டவர் போன்ற பல பட்டப்பெயர்கள் கடவுளுக்கு இருப்பதாக பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, ஆபிரகாம், மோசே, தாவீது, இயேசு போன்ற பலருடைய தனிப்பட்ட பெயர்கள்கூட பைபிளில் இருக்கின்றன. ஆனால் இந்த எல்லா பெயர்களையும்விட, யெகோவா என்ற பெயர்தான் அதிக தடவை பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தப் பெயரை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவாவே விரும்புகிறார். பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.”—சங்கீதம் 83:18. *

இயேசுவுக்கு அது முக்கியம். இயேசு தன் சீஷர்களுக்கு ஒரு ஜெபத்தைக் கற்றுக்கொடுத்தார். (அது பரமண்டல ஜெபம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.) அதில், “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று கடவுளிடம் கேட்கும்படி அவர் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9) இயேசு ஜெபம் செய்தபோதுகூட, “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொன்னார். (யோவான் 12:28) இயேசுவைப் பொறுத்தவரை, கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துவதுதான் அவருடைய வாழ்க்கையிலேயே முக்கியமானதாக இருந்தது. அதனால்தான், “இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்” என்று அவரால் கடவுளிடம் சொல்ல முடிந்தது.—யோவான் 17:26.

கடவுளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு அது முக்கியம். கடவுளுடைய பெயருக்கு மதிப்புக் கொடுத்தால்தான் பாதுகாப்பும் மீட்பும் கிடைக்கும் என்று ரொம்பக் காலத்துக்கு முன்பே கடவுளுடைய மக்கள் புரிந்துவைத்திருந்தார்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை. நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.” (நீதிமொழிகள் 18:10) “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.” (யோவேல் 2:32) அதோடு, கடவுளுடைய பெயர், அவருக்குச் சேவை செய்கிறவர்களை மற்ற மக்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் என்று பைபிள் சொல்கிறது. “எல்லா ஜனங்களும் அவரவர் தெய்வத்தின் பெயரில் நடப்பார்கள். ஆனால் நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் பெயரில் என்றென்றும் நடப்போம்” என்று அது சொல்கிறது.—மீகா 4:5, அடிக்குறிப்புகள்; அப்போஸ்தலர் 15:14.

கடவுளுடைய பெயர் எதையெல்லாம் காட்டுகிறது?

கடவுளுடைய பெயர், அவர் விசேஷமானவர் என்பதைக் காட்டுகிறது. “ஆகும்படி செய்கிறவர்” என்பதுதான் யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என நிறைய நிபுணர்கள் சொல்கிறார்கள். யெகோவா தன்னைப் பற்றி மோசேயிடம் சொன்னபோது, “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்றார். (யாத்திராகமம் 3:14) இந்த விதத்தில், தன்னுடைய பெயரின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அவர் உதவினார். அப்படியென்றால், அவர் ஒரு படைப்பாளர் என்பதை மட்டுமல்ல, நினைத்ததைச் செய்து முடிக்க அவர் எப்படி வேண்டுமானாலும் ஆவார் என்பதையும், அவருடைய படைப்புகளை எப்படி வேண்டுமானாலும் ஆக வைப்பார் என்பதையும் அவருடைய பெயர் காட்டுகிறது. கடவுளுக்கு இருக்கும் பட்டப்பெயர்கள் அவருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் சுட்டிக்காட்டலாம்; ஆனால், யெகோவா என்ற பெயர் மட்டும்தான், அவர் எப்படிப்பட்டவர்... அவரால் எப்படிப்பட்டவராக ஆக முடியும்... என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுகிறது.

கடவுளுடைய பெயர், அவருக்கு நம்மேல் அக்கறை இருப்பதைக் காட்டுகிறது. கடவுளுக்குத் தன்னுடைய படைப்புகள்மேல், அதுவும் நம்மேல், எப்போதுமே அக்கறை இருப்பதைக்கூட அவருடைய பெயர் காட்டுகிறது. அதோடு, அவர் தன்னுடைய பெயரை நமக்குச் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, நாம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புவது தெரிகிறது. அதுவும், அவருடைய பெயரைப் பற்றி மனிதர்கள் யோசிப்பதற்கு முன்பே அவர் அதைச் சொல்லிவிட்டார்! அப்படியென்றால், கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் ஏதோவொரு சக்தியாக அல்ல, நம்முடைய நெருங்கிய நண்பராக நாம் அவரை நினைக்க வேண்டும் என்றுதானே அவர் விரும்புகிறார்?—சங்கீதம் 73:28.

கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது, நமக்கு அவர்மேல் அன்பு இருப்பதைக் காட்டுகிறது. இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் ஒருவருடைய நண்பராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். உங்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடும்படி அவரிடம் சொல்கிறீர்கள். ஆனால், அவர் உங்கள் பெயரைப் பயன்படுத்துவதே இல்லை. அப்போது, உங்களுக்கு எப்படி இருக்கும்? அவருக்கு உங்களுடைய நண்பராக இருக்க இஷ்டம் இல்லையோ என்றுதானே நினைப்பீர்கள்? கடவுளுடைய விஷயத்திலும் இதுதான் உண்மை. யெகோவா தன்னுடைய பெயரை மனிதர்களுக்குச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெயரைப் பயன்படுத்தும்படியும் சொல்லியிருக்கிறார். நாம் அதைப் பயன்படுத்தும்போது, அவருடைய நெருங்கிய நண்பராக இருக்க விரும்புவதைக் காட்டுகிறோம். ‘அவருடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களை [அல்லது, ‘அவருடைய பெயரை உயர்வாக மதிக்கிறவர்களை,’ அடிக்குறிப்பு]’ அவர் கவனிக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.—மல்கியா 3:16.

கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முதலில் அவருடைய பெயரைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம்தான். ஆனால், அது மட்டும் போதுமா? அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் எப்படிப்பட்டவர் என்றும் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதையும் தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்!

கடவுளுடைய பெயர் என்ன? கடவுளுடைய பெயர், யெகோவா. அவர் நினைத்ததைச் செய்து முடிப்பவர் என்பதை இந்தப் பெயர் காட்டுகிறது

^ பாரா. 6 தமிழ் O.V. (BSI) பைபிளில் சங்கீதம் 83:17-ஐப் பாருங்கள்.