Skip to content

கடவுளுக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றன?

கடவுளுக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றன?

பைபிள் தரும் பதில்

 கடவுளுக்கு ஒரேவொரு பெயர்தான் இருக்கிறது. அந்தப் பெயர் எபிரெயுவில் יהוה என்று எழுதப்பட்டிருக்கிறது, தமிழில் “யெகோவா” என்று பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. a தன்னுடைய தீர்க்கதரிசியான ஏசாயா மூலம் கடவுள் இப்படிச் சொன்னார்: “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்.” (ஏசாயா 42:8) பூர்வ கால பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் இந்தப் பெயர் சுமார் 7,000 தடவை இருக்கிறது. கடவுளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற எந்த வார்த்தையைவிடவும், சொல்லப்போனால், வேறெந்த நபருடைய பெயரைவிடவும் இந்தப் பெயர்தான் அதிகளவில் இருக்கிறது. b

யெகோவாவுக்கு வேறு பெயர்கள் இருக்கின்றனவா?

 கடவுளுக்கு இருக்கிற ஒரேவொரு பெயரை பைபிள் பயன்படுத்தினாலும், அவருக்கு இருக்கிற சிறப்புப்பெயர்களையும், அவரைப் பற்றி விவரிக்கிற பட்டப் பெயர்களையும் பைபிள் பயன்படுத்துகிறது. சில சிறப்புப்பெயர்களும் பட்டப்பெயர்களும் கீழே இருக்கிற பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒவ்வொரு பெயரும் யெகோவா எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது.

சிறப்புப்பெயர்

பைபிள் வசனம்

அர்த்தம்

அல்லாஹ்

(இல்லை)

“அல்லாஹ்” என்ற வார்த்தை அரபிக் மொழியிலிருந்து வந்தது. இது ஒரு பெயர் அல்ல, இது பட்டப்பெயர். இதன் அர்த்தம் “கடவுள்.” அரபிக் மொழியிலும் மற்ற சில மொழிகளிலும் இருக்கிற பைபிள்களில், “கடவுள்” என்ற வார்த்தைக்குப் பதிலாக “அல்லாஹ்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆல்பாவும் ஒமேகாவும்

வெளிப்படுத்துதல் 1:8; 21:6; 22:13

‘முதலும் கடைசியும், ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறவர்’ என்ற சிறப்புப்பெயர், யெகோவாவுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, சர்வவல்லமையுள்ள கடவுள் யாரும் இல்லை என்பதை அர்த்தப்படுத்துகிறது. (ஏசாயா 43:10) கிரேக்க எழுத்துகளில் ஆல்பா என்பது முதல் எழுத்து, ஒமேகா என்பது கடைசி எழுத்து.

இரட்சகர்

ஏசாயா 45:21 தமிழ் O.V பைபிள்

ஆபத்திலிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாக்கிறவர்.

இருக்கிறவராக இருக்கிறேன்

யாத்திராகமம் 3:14, தமிழ் O.V பைபிள்

தன்னுடைய நோக்கம் நிறைவேறுவதற்கு எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆகிறார். இந்தச் சொற்றொடர், “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (புதிய உலக மொழிபெயர்ப்பு) அடுத்த வசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் யெகோவா என்ற பெயரை விளக்க இந்த விவரிப்பு உதவுகிறது.—யாத்திராகமம் 3:15.

உன்னதப் பேரரசர்

ஆதியாகமம் 15:2

மிக உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர். எபிரெயுவில் அடோனாய்.

உன்னதமான கடவுள்

சங்கீதம் 47:2

மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்.

என்றென்றுமுள்ள ராஜா

வெளிப்படுத்துதல் 15:3

அவருடைய ஆட்சிக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.

எஜமான்

சங்கீதம் 135:5

உரிமைக்காரர் அல்லது தலைவர். எபிரெயுவில் அதோன் மற்றும் அதோனிம்.

கடவுள்

ஆதியாகமம் 1:1

வணக்கத்துக்குரியவர்; பலம் படைத்தவர். ஏலோஹிம் என்று பன்மையில் பயன்படுத்தப்படுகிற எபிரெய வார்த்தை, யெகோவாவின் மாண்பை, மகிமையை அல்லது மகத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.

கற்பாறை

சங்கீதம் 18:2, 46

பாதுகாப்பான அடைக்கலமாகவும் மீட்புத் தருகிறவராகவும் இருக்கிறார்.

குயவர்

ஏசாயா 64:8

ஒரு குயவருக்குக் களிமண்மேல் அதிகாரம் இருப்பது போல, தனிப்பட்ட நபர்களின் மேலும் தேசங்களின் மேலும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது.—ரோமர் 9:20, 21.

சந்தோஷமுள்ள கடவுள்

1 தீமோத்தேயு 1:11

எப்போதும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறவர்.—சங்கீதம் 104:31.

சர்வவல்லமையுள்ளவர்

ஆதியாகமம் 17:1

ஈடிணையில்லாத சக்தி படைத்தவர். எல்-ஷடாய் என்ற எபிரெய வார்த்தை, அதாவது, “சர்வவல்லமையுள்ள கடவுள்” என்ற வார்த்தை, பைபிளில் ஏழு தடவை வருகிறது.

சேனைகளின் கர்த்தர்

ஏசாயா 1:9, தமிழ் O.V பைபிள்; ரோமர் 9:29, தமிழ் O.V பைபிள்

தேவதூதர்கள் அடங்கிய மாபெரும் படைகளுக்குத் தலைவராக இருக்கிறவர்.

தகப்பன்

மத்தேயு 6:9

உயிர் கொடுத்தவர்.

தேவாதி தேவன்

உபாகமம் 10:17

சிலர் வணங்குகிற ‘ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை’ போல் அல்லாமல், யெகோவா உன்னதமான கடவுளாக இருக்கிறார்.—ஏசாயா 2:8.

படைப்பாளர்

ஏசாயா 40:28

எல்லாவற்றையும் உருவாக்கியவர்.

மகத்தான படைப்பாளர்

சங்கீதம் 149:2

எல்லாவற்றையும் உருவாக்கியவர்.—வெளிப்படுத்துதல் 4:11.

மகத்தான போதகர்

ஏசாயா 30:20, 21

பிரயோஜனமான போதனைகளையும் அறிவுரைகளையும் கொடுக்கிறார்.—ஏசாயா 48:17, 18.

மகா உன்னதமானவர்

தானியேல் 7:18, 27

மிக உயர்ந்த பேரரசர்.

மகா பரிசுத்தமானவர்

நீதிமொழிகள் 9:10

வேறு யாரையும்விட மிகவும் பரிசுத்தமானவர், ஒழுக்கநெறிகளில் தூய்மையானவர்.

மீட்பர், விடுவிக்கிறவர்

ஏசாயா 41:14, தமிழ் O.V பைபிள்

இயேசு கிறிஸ்துவின் மீட்பு பலியின் அடிப்படையில், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்களை மீட்கிறார் அல்லது விடுவிக்கிறார்.—யோவான் 3:16.

மேய்ப்பர்

சங்கீதம் 23:1

தன்னை வணங்குகிறவர்களை கவனித்துக்கொள்கிறவர்.

யுகம் யுகமாக வாழ்கிறவர்

தானியேல் 7:9, 13, 22

அவருக்கு ஆரம்பமே இல்லை. வேறு யாரும், வேறு எதுவும் தோன்றுவதற்கு முன்பே என்றென்றும் இருந்திருக்கிறார்.—சங்கீதம் 90:2.

வைராக்கியமுள்ள கர்த்தர்

யாத்திராகமம் 34:14, ஈஸி டு ரீட் வர்ஷன்

வேறு தெய்வங்களை வணங்குவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாதவர். ‘தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்.’—புதிய உலக மொழிபெயர்ப்பு.

ஜெபத்தைக் கேட்கிறவர்

சங்கீதம் 65:2

விசுவாசத்தோடு ஒவ்வொருவரும் செய்கிற ஜெபங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.

எபிரெய வேதாகமத்தில் வரும் இடங்களின் பெயர்கள்

 பைபிளில் சில இடங்களின் பெயர்களோடு கடவுளுடைய பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவை கடவுளுக்கு இருக்கும் வேறு பெயர்கள் கிடையாது.

இடத்தின் பெயர்

பைபிள் வசனம்

அர்த்தம்

யெகோவா-நிசி

யாத்திராகமம் 17:15

”யெகோவா என் கொடிக் கம்பம்.“ பாதுகாப்புக்காகவும் உதவிக்காகவும் மக்கள் யெகோவாவிடம் ஒன்றுகூடி வருவார்கள்.—யாத்திராகமம் 17:13-16.

யெகோவா-யீரே

ஆதியாகமம் 22:13, 14

“யெகோவா கொடுப்பார்.”

யெகோவா-ஷம்மா

எசேக்கியேல் 48:35, அடிக்குறிப்பு

“யெகோவா அங்கே இருக்கிறார்.”

யெகோவா-ஷாலோம்

நியாயாதிபதிகள் 6:23, 24

”யெகோவா சமாதானமானவர்.“

கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்வதும், அதைப் பயன்படுத்துவதும் ஏன் முக்கியம்?

  •   யெகோவா என்ற தன்னுடைய பெயரை கடவுள் ரொம்ப முக்கியமானதாக நினைக்கிறார். அதனால்தான் ஆயிரக்கணக்கான தடவை பைபிளில் பதிவு செய்திருக்கிறார்.—மல்கியா 1:11.

  •   கடவுளுடைய பெயருக்கு இருக்கிற முக்கியத்துவத்தை அவருடைய மகன் இயேசு அடிக்கடி வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு, “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று யெகோவாவிடம் அவர் ஜெபம் செய்தார்.—மத்தேயு 6:9; யோவான் 17:6.

  •   கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொண்டு அதைப் பயன்படுத்துகிறவர்கள் அவரோடு நண்பராக ஆவதற்கான முதல் படியை எடுத்து வைக்கிறார்கள். (சங்கீதம் 9:10; மல்கியா 3:16) அப்படி நண்பராக ஆகும்போது, கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதியிலிருந்து அவர்களால் நன்மையடைய முடியும். அவர் கொடுத்திருக்கிற வாக்குறுதி இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன். அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.”—சங்கீதம் 91:14.

  •   பைபிள் இதை ஆமோதிக்கிறது: ‘பரலோகத்திலும் பூமியிலும் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவை நிறைய இருக்கின்றன. இப்படி நிறைய “கடவுள்களும்” நிறைய “எஜமான்களும்” இருக்கின்றன.’ (1 கொரிந்தியர் 8:5, 6) ஆனாலும், யெகோவா என்ற பெயர் உள்ளவர்தான் ஒரே உண்மையான கடவுள் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது.—சங்கீதம் 83:18.

a “யாவே” என்பதுதான் கடவுளுடைய பெயருக்கான சரியான மொழிபெயர்ப்பு என்று எபிரெய அறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள்.

b “அல்லேலுயா” என்ற வார்த்தை உட்பட கடவுளுடைய பெயரின் சுருக்க வடிவமான “யா” என்ற வார்த்தை பைபிளில் சுமார் 50 தடவை காணப்படுகிறது. “அல்லேலுயா” என்ற வார்த்தையின் அர்த்தம் “‘யா’வைப் புகழுங்கள்.”—வெளிப்படுத்துதல் 19:1.