Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் எப்படிப்பட்டவர்?

கடவுள் எப்படிப்பட்டவர்?

ஒருவருடைய குணங்களைப் பற்றி நாம் எந்தளவுக்குத் தெரிந்துகொள்கிறோமோ, அந்தளவுக்கு அவரைப் புரிந்துகொள்வோம், அவரிடம் இன்னும் நெருக்கமாவோம். அதேபோல், யெகோவாவின் குணங்களைப் பற்றி நாம் எந்தளவுக்குத் தெரிந்துகொள்கிறோமோ, அந்தளவுக்கு அவரைப் பற்றிப் புரிந்துகொண்டு, அவரிடம் நெருக்கமாவோம். கடவுளுக்கு நிறைய அருமையான குணங்கள் இருப்பதாக பைபிள் சொல்கிறது. அவற்றில் நான்கு முக்கியமான குணங்களைப் பற்றிப் பார்க்கலாம். அவை: வல்லமை, ஞானம், நீதி, அன்பு.

கடவுள் வல்லமையுள்ளவர்

“உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள்தான் மகா வல்லமையினாலும் பலத்தினாலும் இந்த வானத்தையும் பூமியையும் படைத்தீர்கள்.” எரேமியா 32:17.

கடவுளுக்கு எவ்வளவு வல்லமை இருக்கிறது என்பதை அவருடைய படைப்புகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, நாம் வெயிலில் நிற்கும்போது சூரியனின் வெப்பத்தை உணருகிறோம், இல்லையா? உண்மையில், சூரிய வெப்பம் படைப்பாளருடைய வல்லமையின் ஒரு எடுத்துக்காட்டு. சூரியனுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது? கொதிக்கிற தண்ணீரின் வெப்பம் 100 டிகிரி என்றால், சூரியனுடைய நடுப்பகுதியின் வெப்பம் அதைவிட கிட்டத்தட்ட 1,50,000 மடங்கு அதிகம்! ஒவ்வொரு விநாடியும் சூரியனிலிருந்து வெளியாகும் ஆற்றல், கோடிக்கணக்கான அணுகுண்டுகள் வெடிக்கும்போது வெளியாகும் ஆற்றலுக்குச் சமம்!

ஆனாலும், இவ்வளவு சக்திபடைத்த சூரியனைவிட பெரிய பெரிய நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன! அதில் ஒரு நட்சத்திரத்தின் (UY Scuti) விட்டம் எவ்வளவு தெரியுமா? விஞ்ஞானிகளுடைய கணக்குப்படி, சூரியனுடைய விட்டத்தைவிட அது கிட்டத்தட்ட 1,700 மடங்கு அதிகம்! சூரியன் இருக்கும் இடத்தில் இந்த நட்சத்திரத்தை வைத்தால், அது வியாழன் (ஜூப்பிட்டர்) கிரகத்தின் சுற்றுப்பாதையையே தாண்டிவிடும்! யெகோவா தன்னுடைய மகா வல்லமையினால் வானத்தையும் பூமியையும் படைத்ததாக பைபிளில் ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று இப்போது நன்றாகப் புரிகிறது, இல்லையா?

கடவுளுடைய வல்லமையால் நமக்குக் கிடைக்கும் பலன்கள். நாம் உயிர்வாழ்வதற்குச் சூரியனும் இந்தப் பூமியிலுள்ள மற்ற அருமையான படைப்புகளும் அவசியம். கடவுளுடைய வல்லமையினால்தான் இவையெல்லாம் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மனிதர்களுக்குத் தனிப்பட்ட விதமாக உதவி செய்யவும் கடவுள் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறார். எப்படி? முதல் நூற்றாண்டில், அற்புதங்களைச் செய்வதற்காக இயேசுவுக்குக் கடவுள் தன் வல்லமையைக் கொடுத்தார். அதனால், “பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள், இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 11:5) இன்றும் கடவுள் மனிதர்களுக்குத் தன் வல்லமையைக் கொடுக்கிறாரா? “சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்” என்றும், “யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்” என்றும் பைபிள் சொல்கிறது. (ஏசாயா 40:29, 31) கடவுள் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ நமக்குக் கொடுத்து, கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சமாளிக்க உதவி செய்கிறார். (2 கொரிந்தியர் 4:7) கடவுள் தன்னுடைய மகா வல்லமையை நமக்காகப் பயன்படுத்துவது எப்பேர்ப்பட்ட விஷயம்! இப்படிப்பட்ட அன்பான கடவுளிடம் நெருங்கிவரத்தானே நீங்கள் ஆசைப்படுவீர்கள்?

கடவுள் ஞானமுள்ளவர்

“யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை! அவை எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறீர்கள்.”சங்கீதம் 104:24.

கடவுளுடைய படைப்புகளைப் பற்றி நாம் எந்தளவுக்குத் தெரிந்துகொள்கிறோமோ, அந்தளவுக்கு அவருடைய ஞானத்தை நினைத்துப் பிரமித்துப்போகிறோம். சொல்லப்போனால், பையோமிமெட்டிக்ஸ் அல்லது பையோமிமிக்ரி என்ற துறையிலுள்ள சில விஞ்ஞானிகள், யெகோவாவின் படைப்புகளிலுள்ள வடிவமைப்புகளைக் காப்பியடித்து சில பொருள்களை உருவாக்குகிறார்கள். கேமராவிலுள்ள லென்சிலிருந்து பெரிய விமானம்வரை எல்லாமே இயற்கையைப் பார்த்து அவர்கள் காப்பியடித்ததுதான்!

மனிதர்களுடைய கண் ஒரு அற்புதமான படைப்பு

கடவுளுடைய ஞானத்துக்கு அற்புதமான ஒரு உதாரணம், மனித உடல். ஒரு குழந்தை உருவாகும் விதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஒரேவொரு செல்தான் உருவாகிறது; மரபணு சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களும் அதில் இருக்கின்றன. அந்த செல், ஒரேவிதமான பல செல்களாகப் பிரிகிறது. ஆனால் குறிப்பிட்ட ஒரு சமயத்தில், அந்த செல்கள் வித்தியாச வித்தியாசமான செல்களாகப் பிரிய ஆரம்பிக்கின்றன. இப்படி, இரத்த செல்கள், நரம்பு செல்கள், எலும்பு செல்கள் என நூற்றுக்கணக்கான செல்கள் உருவாகின்றன. கொஞ்சக் காலத்தில், உடல் உறுப்பு மண்டலங்கள் உருவாகி, இயங்க ஆரம்பிக்கின்றன. ஆரம்பத்திலிருந்த அந்த ஒரு செல் ஒன்பதே மாதங்களில் கோடிக்கணக்கான செல்களைக் கொண்ட ஒரு குழந்தையாக உருவாகிறது. எப்பேர்ப்பட்ட அதிசயம்! “பிரமிக்க வைக்கும் விதத்தில் என்னை அற்புதமாகப் படைத்திருக்கிறீர்கள்! அதனால் உங்களைப் புகழ்கிறேன்” என்று ஒரு பைபிள் எழுத்தாளர் சொன்னதை யார்தான் ஒத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்!—சங்கீதம் 139:14.

கடவுளுடைய ஞானத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள். சந்தோஷமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று நம்மைப் படைத்த கடவுளுக்குத் தெரியும். அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை, அவரால் புரிந்துகொள்ள முடியாத விஷயமே இல்லை. அதனால், நமக்குத் தேவையான ஞானமான ஆலோசனைகளைத் தன்னுடைய புத்தகமான பைபிளில் பதிவு செய்திருக்கிறார். உதாரணத்துக்கு, “ஒருவரை ஒருவர் . . . தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்” என்று அவர் சொல்லியிருக்கிறார். (கொலோசெயர் 3:13) இது உண்மையிலேயே ஞானமான ஆலோசனைதானா? கண்டிப்பாக! ஆராய்ச்சிகள் காட்டுகிறபடி, மற்றவர்களை மன்னிக்கும்போது நம்மால் நன்றாகத் தூங்க முடியும், நம்முடைய ரத்த அழுத்தமும் குறையும். அதோடு, மனச்சோர்வும் மற்ற உடல்நலப் பிரச்சினைகளும் நமக்கு அவ்வளவு சீக்கிரம் வராது. அப்படியென்றால், நமக்கு நல்ல நல்ல ஆலோசனைகளைத் தரும் ஒரு நண்பரைப் போல் கடவுள் இருக்கிறார் என்று சொல்லலாம். (2 தீமோத்தேயு 3:16, 17) அறிவும் அக்கறையும் உள்ள இப்படிப்பட்ட ஒரு நண்பர் வேண்டும் என்றுதானே நீங்கள் ஆசைப்படுவீர்கள்?

கடவுள் நீதியுள்ளவர்

“யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்.”சங்கீதம் 37:28.

கடவுள் எப்போதுமே சரியானதைத்தான் செய்கிறார். சொல்லப்போனால், “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.” (யோபு 34:10) அவர் எப்போதும் நீதியான தீர்ப்புகளைத்தான் கொடுக்கிறார். அதனால்தான், “நீங்கள் மக்களுக்கு நியாயமான தீர்ப்பைக் கொடுப்பீர்கள்” என்று பைபிள் எழுத்தாளர் ஒருவர் யெகோவாவிடம் சொன்னார். (சங்கீதம் 67:4) ‘யெகோவா இதயத்தைப் பார்க்கிறார்.’ அதனால், வெளிவேஷம் போட்டு அவரை ஏமாற்ற யாராலும் முடியாது. உண்மை என்னவென்று அவரால் எப்போதுமே கண்டுபிடிக்க முடியும்; அதனால், அவர் தவறான தீர்ப்புகளைக் கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. (1 சாமுவேல் 16:7) அதுமட்டுமல்ல, இந்த உலகத்தில் நடக்கிற எல்லா அநியாயங்களும் ஊழல்களும் அவருக்குத் தெரியும். அதனால், சீக்கிரத்தில் “பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்” என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—நீதிமொழிகள் 2:22.

அதற்காக, கடவுள் தண்டிப்பதிலேயே குறியாக இருக்கிறார் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. தேவைப்படும்போது அவர் இரக்கமும் காட்டுகிறார். கெட்டவர்கள் உண்மையாக மனம் திருந்தும்போது, அவர்களுக்குக்கூட “இரக்கமும் கரிசனையும்” காட்டுகிறார் என்று பைபிள் சொல்கிறது. இதுதானே உண்மையான நீதி!—சங்கீதம் 103:8; 2 பேதுரு 3:9.

கடவுளுடைய நீதியால் நமக்குக் கிடைக்கும் பலன்கள். “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (அப்போஸ்தலர் 10:34, 35) கடவுள் நீதியுள்ளவராக இருப்பதால்தான் பாரபட்சம் காட்டுவதே இல்லை. அதனால் நமக்கு எவ்வளவு பெரிய நன்மை! நம்முடைய இனமும், நாடும், படிப்பும், அந்தஸ்தும் எதுவாக இருந்தாலும் சரி, நம்மால் அவரை வணங்க முடியும், அவரும் நம்மை அன்போடு ஏற்றுக்கொள்வார்.

கடவுள் பாரபட்சம் காட்டாதவர்; அதனால், இனத்தையோ அந்தஸ்தையோ பார்க்காமல் எல்லாரையும் ஆசீர்வதிக்கிறார்

கடவுளுடைய விருப்பமே, நாம் அவருடைய நீதியைப் பற்றிப் புரிந்துகொண்டு, நன்மை அடைய வேண்டும் என்பதுதான். அதனால், நமக்கு மனசாட்சி என்ற பரிசைக் கொடுத்திருக்கிறார். அது ‘நம் இதயத்தில் எழுதப்பட்டிருக்கும்’ ஒரு சட்டம் என்றும், நாம் செய்வது சரியா தவறா என்பதைப் பற்றி ‘சாட்சி சொல்கிறது’ என்றும் பைபிள் விளக்குகிறது. (ரோமர் 2:15) நமக்கு மனசாட்சி இருப்பதால் என்ன நன்மை? அதைச் சரியாகப் பயிற்றுவித்தால், கெட்ட வழியில் போகாதபடி அது நம்மைப் பாதுகாக்கும். ஒருவேளை, நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால், அந்தத் தவறை நினைத்து வருத்தப்படவும் நம்மைத் திருத்திக்கொள்ளவும்கூட அது நம்மைத் தூண்டும். உண்மையில், கடவுளுடைய நீதியினால் நமக்கு எவ்வளவு பிரயோஜனம்! அவரிடம் நெருங்கிவர அவருடைய நீதி நம்மைத் தூண்டுகிறது, இல்லையா?

கடவுள் அன்புள்ளவர்

“கடவுள் அன்பாகவே இருக்கிறார்.”1 யோவான் 4:8.

கடவுள் வல்லமையையும் ஞானத்தையும் நீதியையும் காட்டுகிறார் என்றாலும், அன்புதான் அவருடைய முக்கியமான குணம் என்று சொல்லலாம். எப்படி? கடவுளுக்கு வல்லமை இருப்பதால் அவரால் எல்லாவற்றையும் செய்ய முடிகிறது; எல்லாவற்றையும் அவர் ஞானத்தோடும் நீதியோடும் செய்கிறார். ஆனால், எல்லாவற்றையும் செய்ய அவரைத் தூண்டுவதே அன்புதான். அதனால்தான், அவர் அன்பாகவே இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.

பரலோகத்திலும் பூமியிலும் புத்திக்கூர்மையுள்ள நபர்களைப் படைக்க வேண்டுமென்ற அவசியம் யெகோவாவுக்கு இருக்கவில்லை; அன்பினால் தூண்டப்பட்டுத்தான் அவர் எல்லாரையும் படைத்தார். அவருடைய அன்பையும் அக்கறையையும் அவர்கள் அனுபவித்து மகிழ வேண்டுமென்று நினைத்தார். அவர் மனிதர்களுக்காகவே இந்தப் பூமியை அழகான வீடாகப் படைத்து, அவர்களை அதில் குடிவைத்தார். அதுமட்டுமல்ல, அவர்கள்மேல் எப்போதும் அன்பு காட்டிவருகிறார். “அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—மத்தேயு 5:45.

அதோடு, “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 5:11) அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரிடம் நெருங்கிவரவும் மனதார முயற்சி செய்கிறவர்கள்மேல் அவர் பாசத்தைக் கொட்டுகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் அக்கறையோடு கவனிக்கிறார். சொல்லப்போனால், ‘அவர் உங்கள்மேல்கூட அக்கறையாக இருக்கிறார்.’—1 பேதுரு 5:7.

கடவுளுடைய அன்பினால் நமக்குக் கிடைக்கும் பலன்கள். சூரியன் மறையும் அழகைப் பார்த்து நாம் ரசிக்கிறோம். மழலையின் சிரிப்பைக் கேட்டு மயங்குகிறோம். குடும்பத்திலுள்ள ஒருவர் காட்டும் பாசத்தில் நெகிழ்ந்துபோகிறோம்! இதெல்லாம் நாம் உயிர்வாழ்வதற்கு அவசியம் இல்லைதான்; ஆனால், இவை நம் வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பதை நம்மால் மறுக்கவே முடியாது!

கடவுளுடைய அன்பினால் நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஆசீர்வாதம், ஜெபம் செய்வதற்கான பாக்கியம். “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. கடவுள் ஒரு அன்பான அப்பாவைப் போல, நம்முடைய மனதிலுள்ள எல்லா கவலைகளையும் தன்னிடம் கொட்டச் சொல்கிறார். அப்போது, ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானத்தை’ தருவதாக வாக்குக் கொடுக்கிறார். எப்பேர்ப்பட்ட சுயநலமில்லாத அன்பு!—பிலிப்பியர் 4:6, 7.

கடவுளுடைய முக்கியமான குணங்களைப் பற்றி நாம் சுருக்கமாகப் பார்த்தோம். கடவுள் எப்படிப்பட்டவர் என்று இப்போது புரிந்துகொண்டீர்கள், இல்லையா? அவரைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவர் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்றெல்லாம் படித்துப் பார்க்க உங்களை அழைக்கிறோம்.

கடவுள் எப்படிப்பட்டவர்? யெகோவாவின் வல்லமைக்கும் ஞானத்துக்கும் நீதிக்கும் நிகரே இல்லை. ஆனாலும், இவை எல்லாவற்றையும்விட நம் மனதைத் தொடுவது அவருடைய அன்புதான்