Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“நான் பயங்கரக் கோபக்காரனாக இருந்தேன்”

“நான் பயங்கரக் கோபக்காரனாக இருந்தேன்”
  • பிறந்த வருஷம்: 1975

  • பிறந்த நாடு: மெக்சிகோ

  • என்னைப் பற்றி: பயங்கரமான கோபக்காரன்; குற்றவாளி

என் கடந்தகால வாழ்க்கை

 சான் ஜான் சன்க்கலாய்டோ என்ற சின்ன நகரத்தில் நான் பிறந்தேன். இது மெக்சிகோவில் உள்ள சியாபாஸ் மாநிலத்தில் இருக்கிறது. எங்கள் குடும்பம் ‘சோல்’ இனத்தைச் சேர்ந்தது; மாயா வம்சத்திலிருந்து தோன்றிய இனம் இது. என்னுடைய அப்பா அம்மாவுக்கு 12 பிள்ளைகள், நான் ஐந்தாவது பிள்ளை. நான் சிறுவனாக இருந்தபோது, நானும் என்கூடப் பிறந்தவர்களும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தோம். ஆனால், என் இளவயதில் பைபிள் ஆலோசனைகளை நான் கடைப்பிடிக்காமலேயே இருந்துவிட்டேன்.

 என்னுடைய 13-வது வயதில் போதைப் பொருள்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்; திருட ஆரம்பித்தேன். அந்தச் சின்ன வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறினேன்; அதன்பிறகு, ஊர் ஊராகச் சுற்றினேன். என்னுடைய 16-வது வயதில், மாரிஹுவானா தோட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன். அங்கே சுமார் ஒரு வருஷத்துக்கு வேலை செய்தேன். பிறகு ஒருநாள், படகில் மாரிஹுவானாவைக் கடத்துவதற்காக அந்தச் சரக்குகளை நாங்கள் ஏற்றிக்கொண்டிருந்தபோது, போதைப் பொருள்களைக் கடத்திய எதிரி கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் எங்களைத் தாக்க ஆரம்பித்தது. எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது. அங்கிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தேன்; ரொம்பத் தூரம் நீந்திக்கொண்டே போனேன். அதற்குப் பிறகு, அமெரிக்காவுக்குத் தப்பியோடினேன்.

 அமெரிக்காவில், போதைப் பொருள் கடத்தும் தொழிலைத் தொடர்ந்தேன்; அதனால், இன்னும் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டேன். திருடியதற்காகவும் கொலை முயற்சி செய்ததற்காகவும் என்னுடைய 19-வது வயதில் சிறையில் அடைக்கப்பட்டேன். அங்கே, ஒரு ரவுடி கும்பலோடு சேர்ந்துகொண்டு, இன்னும் நிறைய அடிதடியில் இறங்கினேன். அதனால் அதிகாரிகள் என்னைக் கடுங்காவல் சிறைக்கு மாற்றினார்கள்; இந்தச் சிறை பென்ஸில்வேனியாவிலுள்ள லூயிஸ்பர்கில் இருக்கிறது.

 லூயிஸ்பர்க் சிறைக்கு வந்த பிறகு, நான் இன்னும் படுமோசமானேன். பழைய ரவுடி கும்பலின் அடையாளத்தை நான் பச்சை குத்தியிருந்ததால், சிறையிலிருந்த அதே கும்பலைச் சேர்ந்த ஆட்களோடு சுலபமாகச் சேர்ந்துகொண்டேன். ஒன்றன்பின் ஒன்றாகப் பலமுறை அடிதடிகளில் ஈடுபட்டு, இன்னும் கொடூரமாக நடந்துகொள்ள ஆரம்பித்தேன். ஒருசமயம், சிறையிலுள்ள ரவுடி கும்பல்களுக்குக் இடையே நடந்த சண்டையில் நானும் இறங்கினேன். பேஸ்பால் கட்டைகளையும், பளுக்கருவிகளையும் வைத்து ஒருவரையொருவர் மூர்க்கத்தனமாக அடித்துக்கொண்டோம். காவலாளிகள் கண்ணீர் புகையைப் பயன்படுத்தி அடிதடியை நிறுத்தினார்கள். அதற்குப் பிறகு, ஆபத்தான கைதிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட தனிச்சிறைக்கு (special management unit) அதிகாரிகள் என்னை மாற்றினார்கள். நான் பயங்கரக் கோபக்காரனாக இருந்தேன்; திமிராகப் பேசினேன். கண்ணில் படுகிறவர்களையெல்லாம் அடித்து நொறுக்கினேன். அதில் அப்படியொரு சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. இப்படியெல்லாம் நடந்துகொள்கிறேனே என்று நினைத்து கடுகளவுகூட நான் கவலைப்பட்டதில்லை.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது

 தனிச்சிறையில் அடைக்கப்பட்டதால் எப்போதும் தனியாகவே இருக்க வேண்டியிருந்தது; அதனால், நேரத்தை ஓட்டுவதற்கு பைபிளை வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு, ஒரு சிறைக் காவலாளி, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைக் கொடுத்தார். a அந்த பைபிள் பிரசுரத்தை வாசிக்க வாசிக்க, சின்ன வயதில் யெகோவாவின் சாட்சிகள் எனக்குக் கற்றுக்கொடுத்த நிறைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன. பிறகு, என்னுடைய மூர்க்கக் குணத்தால் நான் எந்தளவு மோசமான நிலைக்குப் போய்விட்டேன் என்று யோசித்துப் பார்த்தேன். என்னுடைய குடும்பத்தைப் பற்றியும் யோசித்தேன். என் கூடப்பிறந்த இரண்டு சகோதரிகள் யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருந்ததால், ‘பூஞ்சோலை பூமியில அவங்க என்னென்னைக்கும் வாழப்போறாங்க. அப்போ நான்? என்னால முடியாதா?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதற்குப் பிறகுதான், கண்டிப்பாக மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தேன்.

 இருந்தாலும், நான் மாற்றங்கள் செய்ய எனக்கு உதவி தேவை என்பதை உணர்ந்தேன். அதனால், முதலில் யெகோவா தேவனிடம் ஜெபம் செய்தேன்; எனக்கு உதவி செய்யும்படி கெஞ்சினேன். அடுத்ததாக, அமெரிக்காவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதினேன்; எனக்கு பைபிள் படிப்பு எடுக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். கிளை அலுவலகம், என்னைத் தொடர்புகொள்ளும்படி சிறைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சபையைக் கேட்டுக்கொண்டது. அந்தச் சமயத்தில், என் குடும்பத்தாரைத் தவிர வேறு யாரையும் பார்த்துப் பேசுவதற்கு நான் அனுமதிக்கப்படவில்லை; அதனால், அந்தச் சபையிலிருந்து ஒரு சகோதரர் உற்சாகமூட்டுகிற கடிதங்களையும் பைபிள் பிரசுரங்களையும் எனக்கு அனுப்பினார். இதனால், மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற என் ஆசை இன்னும் அதிகமானது.

 அதனால், மிகப் பெரிய ஒரு படியை எடுத்தேன். இந்த ரவுடி கும்பலோடு பல வருஷங்களாக இருந்த என் சகவாசத்தை அடியோடு விட்டுவிட முடிவு செய்தேன். அந்தக் கும்பலின் தலைவரும் தனிச்சிறையில்தான் இருந்தார். அதனால், ஒருசமயம் சிறைக் கைதிகளுக்கான பொழுதுபோக்கு நேரத்தில், அவரிடம்போய் நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆக விரும்புகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர், “நீ நிஜமாதான் சொல்றன்னா, அப்படியே செய். கடவுள் விஷயத்துல நான் தலையிட முடியாது. ஆனா, இந்த கும்பலைவிட்டுப் போக முடிவெடுக்குறதா இருந்தா, அதனோட விளைவுகள நல்லா யோசிச்சுப் பாத்துக்கோ” என்று சொன்னார்.

 அடுத்த இரண்டு வருஷங்களில், என்னுடைய குணாதிசயத்தில் ஏற்பட்ட மாற்றங்களைச் சிறைக் காவலாளிகள் கவனித்தார்கள். அதனால், அவர்கள் என்னிடம் அதிக கரிசனையாக நடந்துகொண்டார்கள். உதாரணத்துக்கு, குளிப்பதற்காக என்னைக் கூட்டிக்கொண்டு போகும்போது கைவிலங்கு போடுவதை விட்டுவிட்டார்கள். ஒரு காவலாளி என்னிடம் வந்து நான் செய்துவருகிற மாற்றங்களைத் தொடர்ந்து செய்யும்படி என்னை உற்சாகப்படுத்தினார். சொல்லப்போனால், சிறையிலிருந்த கடைசி வருஷம், பாதுகாப்புக் கெடுபிடிகள் குறைவாக இருந்த சாட்டிலைட் முகாமுக்கு என்னை மாற்றினார்கள். இது முக்கியச் சிறைக்குப் பக்கத்தில் இருந்தது. 10 வருஷ சிறைவாசத்துக்குப் பிறகு, 2004-ல் விடுதலை செய்யப்பட்டு, சிறைப் பேருந்தில் மெக்சிகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.

 மெக்சிகோவுக்கு வந்த உடனே, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தைக் கண்டுபிடித்தேன். கைதி உடையில்தான் முதல்முதலாகக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்; அதுதான் என்னிடம் இருந்த ஒரேவொரு நல்ல உடை! நான் கைதி உடையில் இருந்தாலும்கூட, யெகோவாவின் சாட்சிகள் என்னை அன்போடு வரவேற்றார்கள். அவர்கள் கரிசனையாக நடந்துகொண்டதைப் பார்த்தபோது, உண்மையான கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பதை நான் உணர்ந்தேன். (யோவான் 13:35) அந்தச் சபை மூப்பர்கள் எனக்கு பைபிள் படிப்பு நடத்த உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். ஒரு வருஷம் கழித்து, 2005 செப்டம்பர் 3-ஆம் தேதி ஞானஸ்நானம் எடுத்தேன்.

 ஜனவரி 2007-ல், முழுநேரமாக ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்; பைபிளை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்காக ஒவ்வொரு மாதமும் 70 மணிநேரம் செலவு செய்தேன். 2011-ல் மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியில் (இப்போது, ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி) பட்டம் பெற்றேன். சபைப் பொறுப்புகளைச் சிறந்த விதத்தில் செய்ய இந்தப் பள்ளி எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.

சமாதானமாக இருக்க மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் இப்போது சந்தோஷம் அடைகிறேன்

 2013-ல், எனக்குத் திருமணமானது. என் மனைவி பெயர் பிலார். என்னுடைய கடந்த காலத்தைப் பற்றி அவளிடம் சொல்லும்போது, ‘நம்பவே முடியலேயே’ என்று கிண்டலாகச் சொல்வாள். என்னுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போக ஒரு நொடிகூட நான் நினைத்துப் பார்த்ததில்லை. பைபிளுக்கு ஆளையே மாற்றும் சக்தி இருக்கிறது என்பதற்கு நான் ஒரு அத்தாட்சி என்பதை நானும் என் மனைவியும் முழுமையாக நம்புகிறோம்.​—ரோமர் 12:2.

எனக்குக் கிடைத்த நன்மைகள்

 ‘வழிதவறிப்போனவர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்குமே நான் வந்தேன்’ என்று லூக்கா 19:10-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் எனக்காகவே சொல்லப்பட்டதுபோல் உணருகிறேன். இப்போது நான் வழிதவறிப் போய்விட்டதுபோல் உணருவதில்லை. மற்றவர்களை அடித்து உதைத்துக் காயப்படுத்துவதுமில்லை. பைபிளால்தான் என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் கிடைத்திருக்கிறது; மற்றவர்களோடு சமாதானமாக நடந்துகொள்ள முடிகிறது; மிக முக்கியமாக, என்னுடைய படைப்பாளரான யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை அனுபவிக்க முடிகிறது.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது அச்சிடப்படுவதில்லை. இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தைத்தான் இப்போது அவர்கள் பைபிள் படிப்பு நடத்துவதற்குப் பயன்படுத்துகிறார்கள்.