Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

கோபம்—என் வாழ்க்கையையே நாசமாக்கியது

கோபம்—என் வாழ்க்கையையே நாசமாக்கியது
  • பிறந்த வருஷம்: 1952

  • பிறந்த நாடு: அமெரிக்கா

  • என்னைப் பற்றி: பயங்கர கோபக்காரனாக இருந்தேன்

என் கடந்த கால வாழ்க்கை

அமெரிக்காவில் இருக்கிற கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸில் நான் வளர்ந்தேன். நாங்கள் இருந்த இடத்தில் ரவுடி கும்பலுக்கும் போதைப்பொருளுக்கும் பஞ்சமே இல்லை. எங்களுடைய அப்பா அம்மாவுக்கு நாங்கள் மொத்தம் ஆறு பிள்ளைகள், நான் இரண்டாவது பையன்.

எங்களுடைய அம்மா எங்களை எவான்ஜிலிக்கல் சர்ச்சுக்கு கூட்டிக்கொண்டு போவார்கள். அங்கே சொல்லிக்கொடுத்த மாதிரிதான் எங்களை வளர்த்தார்கள். ஆனால், என்னுடைய டீனேஜில் நான் இரட்டை வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன். வாரம் முழுவதும் பார்ட்டி, போதைப்பொருள், ஒழுக்கக்கேடான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பேன். ஆனால், வாரக்கடைசியில் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் பாட்டு பாடுகிற குழுவோடு சேர்ந்து பாட்டு பாடுவேன்.

எதற்கெடுத்தாலும் எனக்கு மூக்குக்குமேல் கோபம் வரும். கையில் எது கிடைத்தாலும் அதை எடுத்து அடித்து விடுவேன். சர்ச்சில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவுமே என் மனசுக்குள் போகவில்லை. “பழிவாங்குறது கடவுள்தான்… ஆனா நான்தான் அவரோட அடியாள்!” என்று அடிக்கடி சொல்லுவேன். 1960-களில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, பிளாக் பான்தர்ஸ் என்கிற அரசியல் அமைப்பு மக்களுடைய உரிமைகளுக்காக போராட்டம் செய்துகொண்டிருந்தார்கள். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் மக்களுடைய உரிமைகளுக்காக போராட்டம் செய்கிற மாணவர் சங்கத்தில் நானும் சேர்ந்தேன். நாங்கள் அடிக்கடி போராட்டம் செய்வோம். அப்படி செய்கிற ஒவ்வொரு தடவையும் ஸ்கூலை கொஞ்ச நாட்களுக்கு மூடிவிடுவார்கள்.

வெறுமனே போராட்டம் செய்வது மட்டும் என்னுடைய கோபத்தை குறைக்கவில்லை. அதனால் மற்ற இனத்தை சேர்ந்தவர்களை அடிக்க ஆரம்பித்தேன். ஒருதடவை நானும் என்னுடைய நண்பர்களும் படம் பார்க்க போயிருந்தோம். அந்தப் படத்தில் அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க மக்கள் பட்ட கஷ்டத்தை பற்றி காட்டியிருந்தார்கள். அந்த அநியாயத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பயங்கர கோபம் வந்துவிட்டது. அதனால் தியேட்டருக்கு வந்திருந்த வெள்ளை இன இளைஞர்களை நாங்கள் அடிக்க ஆரம்பித்துவிட்டோம். பிறகு, வெள்ளை இன மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடித்தேடி போய் அடித்தோம்.

என்னுடைய டீனேஜ் முடிவதற்குள்ளேயே நானும் என்னுடைய அண்ணன் தம்பிகளும் ரவுடிகள் ஆகிவிட்டோம். அதனால், எங்களுக்கு போலீஸ் பிரச்சினையும் இருந்தது. என்னுடைய ஒரு தம்பி பெரிய ரவுடி கும்பலில் சேர்ந்துகொண்டான். நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டேன். அதனால், என்னுடைய வாழ்க்கை மோசமாகிக்கொண்டே போனது.

பைபிள் என் வாழ்க்கையையே மாற்றியது

என்னுடைய நண்பனின் அப்பா அம்மா யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள். அவர்கள் என்னை சபைக் கூட்டங்களுக்கு வரும்படி கூப்பிட்டார்கள். நானும் போனேன். அங்கு போனதும் யெகோவாவின் சாட்சிகள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று பார்த்தேன். அங்கு வந்திருந்த எல்லாரும் பைபிள் வைத்திருந்தார்கள். கூட்டத்தில் வசனங்களை சொன்னபோது அதை திறந்து பார்த்தார்கள். சின்ன பிள்ளைகள்கூட சபைக் கூட்டத்தில் பேச்சுகளை கொடுத்தார்கள். கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை அங்குதான் தெரிந்துகொண்டேன். அந்த பெயரைத்தான் அவர்கள் எல்லாரும் பயன்படுத்தினார்கள். அதைப் பார்த்தபோது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. (சங்கீதம் 83:18) சபைக் கூட்டத்தில் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் வந்திருந்தாலும் அவர்கள் எல்லாரும் எந்த இன வித்தியாசமும் இல்லாமல் ஒற்றுமையாக பழகினார்கள்.

ஆரம்பத்தில் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படிக்க எனக்கு இஷ்டமில்லை. ஆனால் அவர்களுடைய கூட்டங்களுக்கு போக எனக்கு பிடித்திருந்தது. ஒருநாள் ராத்திரி என்னுடைய நண்பர்கள் எல்லாரும் ஒரு இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தார்கள். ஆனால், நான் சபைக் கூட்டத்துக்கு போயிருந்தேன். என்னுடைய நண்பர்கள், போன இடத்தில் ஒருவருடைய லெதர் கோட்-ஐ கேட்டு, அவர் தராததால், அவரை அடித்தே கொன்றுவிட்டார்கள். அடுத்த நாள் அவர்கள் கொலை செய்ததைப் பற்றி ரொம்ப பெருமையாக பேசினார்கள். நீதிமன்றத்தில் அதைப் பற்றி விசாரித்தபோதுகூட நக்கலாக பதில் சொன்னார்கள். அதில் நிறைய பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. அவர்களோடு நானும் போயிருந்தால் எனக்கும் அதே நிலைமைதான். அவர்களோடு போகாததை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். என்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். அதனால் பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தேன்.

இன வேறுபாடு பார்ப்பவர்களோடுதான் நான் இதுவரை பழகியிருக்கிறேன். ஆனால் யெகோவாவின் சாட்சிகள், ஒருவரோடு ஒருவர் பழகுவதை பார்த்தபோது நான் அசந்துபோய்விட்டேன். ஒரு சமயம், வெள்ளை இனத்தை சேர்ந்த சாட்சி ஒருவர் வெளிநாட்டுக்கு போனபோது, அவருடைய பிள்ளைகளை கருப்பு இனத்தை சேர்ந்த சாட்சிகளுடைய குடும்பத்தில் விட்டுவிட்டு போயிருந்தார். கருப்பு இனத்தை சேர்ந்த ஒரு பையனுக்கு தங்குவதற்கு இடம் தேவைப்பட்டபோது, வெள்ளை இனத்தை சேர்ந்த ஒரு சாட்சிகளுடைய குடும்பம் அவரை தங்களுடைய வீட்டில் தங்க வைத்துக்கொண்டார்கள். யோவான் 13:35-ல், “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். இயேசு சொன்னபடி யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் வாழ்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். உண்மையான அன்பை காட்டும் சகோதர சகோதரிகளை கண்டுபிடித்துவிட்டேன்.

பைபிளை படித்ததால் என்னுடைய யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று புரிந்துகொண்டேன். அதோடு, மற்றவர்களிடம் கோபப்படாமல் அன்பாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. இதுதான் சிறந்த வாழ்க்கை என்பதை புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். (ரோமர் 12:2) கொஞ்ச கொஞ்சமாக மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தேன். ஜனவரி 1974-ல் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனேன்.

மற்றவர்களிடம் கோபப்படாமல் அன்பாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. இதுதான் சிறந்த வாழ்க்கை என்பதை புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நான் ஞானஸ்நானம் எடுத்த பிறகும் என்னுடைய கோபத்தை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒருசமயம் நான் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு திருடன் என்னுடைய காரில் இருக்கும் ரேடியோவை திருடிக்கொண்டு ஓடினான். அவனை துரத்தி பிடிக்க போனபோது ரேடியோவை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டான். இந்த விஷயத்தை பற்றி மற்ற சகோதர சகோதரிகளிடம் சொன்னபோது, ஒரு மூப்பர் என்னிடம், ”ஸ்டீவென், ஒருவேளை நீங்க அந்த திருடனை பிடிச்சிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?“ என்று கேட்டார். இந்த கேள்வி என்னை யோசிக்க வைத்தது. என்னுடைய கோபத்தை விட்டுவிட்டு உண்மையிலேயே அன்பாக நடக்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.

அக்டோபர் 1974-ல் நான் முழுநேர சேவையை செய்ய ஆரம்பித்தேன். அதனால் ஒவ்வொரு மாதமும் 100 மணிநேரம் பைபிளைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தேன். பிறகு, நியுயார்க் புருக்லினில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் வாலண்டியராக சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 1978-ல் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் அவர்களை கவனித்துக்கொள்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு திரும்பிப் போனேன். இரண்டு வருஷங்களுக்கு பிறகு, என்னுடைய அன்பான மனைவி அரன்டாவை கல்யாணம் செய்துகொண்டேன். அம்மா சாகும்வரை அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ள என் மனைவி எனக்கு ரொம்ப உதவியாக இருந்தாள். அதன்பிறகு, நாங்கள் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டோம். மிஷனரிகளாக பனாமாவில் சேவை செய்தோம்.

ஞானஸ்நானம் எடுத்ததிலிருந்து இதுவரைக்கும் என்னுடைய கோபம் தலைக்கு ஏறும் அளவுக்கு நிறைய சூழ்நிலைகள் வந்திருக்கின்றன. என்னை கோபப்படுத்துகிறவர்களிடம் இருந்து விலகி போவதற்கும், அந்த சூழ்நிலைகளை அன்பாக சமாளிப்பதற்கும் நான் கற்றுக்கொண்டேன். நான் நடந்துகொண்ட விதத்தை பார்த்து மற்றவர்களும் என்னுடைய மனைவியும் என்னை பாராட்டினார்கள். என்னை பார்த்து எனக்கே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இந்த மாற்றத்தை நானாகவே செய்தேன் என்று சொல்லமாட்டேன். இதற்கு காரணம் பைபிள் தான். பைபிளுக்கு ஆளையே மாற்றும் சக்தி இருக்கிறது. இதற்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு ஆதாரம்.—எபிரெயர் 4:12.

எனக்கு கிடைத்த பலன்கள்

பைபிள்தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்திருக்கிறது. கோபப்படாமல் மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது. இப்போது நான் கோபத்தில் அடிதடி செய்வதில்லை, கடவுளைப் பற்றி அன்பாக சொல்லிக் கொடுக்கிறேன். ஸ்கூல் படிக்கும்போது எனக்கு எதிரியாக இருந்த ஒருவருக்கு, பைபிளைப் பற்றி சொல்லிக் கொடுத்தேன். அவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு, கொஞ்சநாள் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக தங்கியிருந்தோம். இப்போதுவரை நானும் அவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டு யெகோவாவின் சாட்சிகளாக ஆவதற்கு இதுவரை கிட்டத்தட்ட 80-க்கும் அதிகமானவர்களுக்கு நானும் என்னுடைய மனைவியும் உதவி செய்திருக்கிறோம்.

என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தந்ததற்காகவும், உண்மையான சந்தோஷத்தையும், உண்மையான நண்பர்களையும் தந்ததற்காகவும் யெகோவாவுக்கு ரொம்ப நன்றி சொல்கிறேன்.