Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | இளைஞர்களுக்காக...

கோபத்தை அடக்க...

கோபத்தை அடக்க...

இது ஏன் கஷ்டம்?

“என் அக்காவை கன்னாபின்னானு கத்திட்டு, கதவை படார்னு சாத்திட்டு போயிட்டேன். அடிச்ச வேகத்தில தாழ்ப்பாள் போய் சுவர்ல பட்டு அந்த இடமே பள்ளமா ஆயிடுச்சு. ஒவ்வொரு தடவை அதை பார்க்கும்போதும், அன்னைக்கு நான் முட்டாள்தனமா நடந்துகிட்டதுதான் ஞாபகத்துக்கு வரும்.”—டயானா. *

“உங்கள மாதிரி மோசமான அப்பாவை நான் பார்த்ததே இல்ல”னு திட்டிட்டு, கதவை டமால்னு சாத்துனேன். அப்போ எங்க அப்பா முகத்தை பார்க்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு. நான் ஏன் அப்படி பேசினேன்னு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்.”—எஸ்தர்.

நீங்களும் இந்த மாதிரி கோபமா பேசியிருக்கீங்களா? உங்களை மாத்திக்க இந்த கட்டுரை உதவி செய்யும்.

சில உண்மைகள்

கோபப்பட்டு கத்துனா நம்ம பெயர் கெட்டுப்போயிடும். 21 வயசு மோனிகா சொல்றதை கேளுங்க: “நான் இப்படித்தான், மத்தவங்கதான் என்னை பொறுத்துக்கணும்னு நினைப்பேன். ஆனா, சிலருக்கு கோபம் வரும்போது எவ்வளவு முட்டாள்தனமா நடந்துக்கிறாங்கனு பார்த்தேன். நான் கோபப்படும்போது மத்தவங்களும் என்னை பார்த்து அப்படித்தானே நினைச்சிருப்பாங்கனு அப்பதான் புரிஞ்சுது.”

பைபிளோட கருத்து: “விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான்.”—(நீதிமொழிகள் 14:17, ஈஸி டூ ரீட் வர்ஷன்)

வெடிக்கப்போற எரிமலையை பார்த்தா எல்லாரும் தூரமா ஓடுற மாதிரி, கோபமா இருக்கிறவங்களை பார்த்தாலே எல்லாரும் தூரமா ஓடிடுவாங்க

ரொம்ப கோபப்பட்டா நம்மகூட யாரும் பழக மாட்டாங்க. “நீங்க கோபப்பட்டு கத்துனா, மத்தவங்க உங்க மேல வைச்சிருக்கிற மதிப்பு மரியாதை போயிடும்”னு 18 வயசு டேனியல் சொல்றார். “நீங்க கோபப்பட்டா உங்களை யாருக்குமே பிடிக்காம போயிடும். உங்களை கண்டாலே ஓடிடுவாங்க”னு 18 வயசு நந்தினி சொல்றாங்க.

பைபிளோட கருத்து: “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.”—(நீதிமொழிகள் 22:24)

கோபத்தை நம்மால அடக்க முடியும். “கோபப்படக் கூடாதுனு நீங்க நினைச்சாலும், உங்களை கோபப்படுத்துற மாதிரி ஏதாவது நடக்கலாம். அந்த மாதிரி சூழ்நிலையை உங்களால தடுக்க முடியாது. ஆனா, நிச்சயமா உங்க கோபத்தை அடக்க முடியும்; கோபத்தில கத்தாம இருக்க முடியும்”னு 15 வயசு சாரா சொல்றாங்க.

பைபிளோட கருத்து: “பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.”—(நீதிமொழிகள் 16:32)

என்ன செய்யணும்?

தீர்மானம் எடுங்க. “நான் அப்படித்தான் நடந்துக்குவேன்”னு சொல்லாம, உங்களை மாத்திக்கங்க. ஒரு தேதியை குறிச்சு வைச்சுக்கிட்டு, அதுக்குள்ள உங்க கோபத்தை அடக்க முயற்சி பண்ணுங்க. உதாரணத்துக்கு, ஆறு மாசத்துக்குள்ள உங்களை மாத்திக்கணும்னு தீர்மானம் எடுங்க. நீங்க எந்தளவு முன்னேறி இருக்கீங்கனு எழுதி வையுங்க. சில சமயத்தில உங்களால கோபத்தை அடக்க முடியாம போயிடலாம். அப்போ, (1) என்ன நடந்தது, (2) கோபத்தில எப்படி நடந்துகிட்டீங்க, (3) எப்படி நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும், ஏன் அப்படி சொல்றீங்க... இதையெல்லாம் எழுதி வையுங்க. ‘எப்படி நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’னு நீங்க எழுதி வைச்சீங்களோ அப்படி நடந்துக்கங்க. டிப்ஸ்: கோபம் வந்தாலும், சில சமயத்தில நீங்க பொறுமையா இருந்திருப்பீங்க. அப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும். அதையும் எழுதி வையுங்க.—பைபிள் ஆலோசனை: கொலோசெயர் 3:8.

யோசிச்சு பேசுங்க. யாராவது உங்களை கோபப்படுத்தினா, சட்டுனு யோசிக்காம எதையாவது பேசிடாதீங்க, நிதானமா பேசுங்க. அந்த சமயத்தில, நல்லா இழுத்து மூச்சு விடுறதுகூட கோபத்தை குறைக்க உதவியா இருக்கும். “எனக்கு கோபம் வரும்போது, நல்லா இழுத்து மூச்சு விடுவேன். அப்போ, என்னோட டென்ஷன் கொஞ்சம் குறையும். அதனால, கோபத்தில படபடனு பேசிட்டு பின்னால வருத்தப்படாம இருக்க முடியுது”னு 15 வயசு தீபக் சொல்றார்.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 21:23.

மத்தவங்களை பத்தியும் யோசிச்சு பாருங்க. ஏதாவது பிரச்சினை வரும்போது உங்களை பத்தி மட்டும் நீங்க யோசிச்சிருக்கலாம். அதனால உங்களுக்கு கோபம் வந்திருக்கலாம். அந்த சமயத்தில, மத்தவங்கள பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. “யாராவது என்கிட்ட கோபப்பட்டு கத்துனாகூட, அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு நான் நினைச்சுக்குவேன். அவங்கள புரிஞ்சு நடந்துக்க இது எனக்கு உதவி செய்யுது”னு ஜெசிகா சொல்றாங்க.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 19:11.

தேவைப்பட்டா, அந்த இடத்திலிருந்து போயிடுங்க. “வாக்குவாதம் ஆரம்பிக்கும் முன், அங்கிருந்து போய் விடு”னு பைபிள் சொல்லுது. (நீதிமொழிகள் 17:14, NW) கோபத்தை கட்டுப்படுத்த முடியாதுனு தெரிஞ்சா அந்த இடத்தை விட்டு போயிடுறதுதான் நல்லது. நடந்ததையே நினைச்சிட்டு இருந்தா, கோபம் இன்னும் அதிகமாதான் ஆகும். அதனால சுறுசுறுப்பா வேற எதையாவது செய்யுங்க. “உடற்பயிற்சி செய்யும்போது என்னோட டென்ஷன் குறையுது, கோபப்படாம இருக்க முடியுது”னு ரம்யா சொல்றாங்க.

பிரச்சினையை பெரிசு பண்ணாதீங்க. ‘நீங்கள் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதீர்கள். உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்’னு பைபிள் சொல்லுது. (சங்கீதம் 4:4) கோபம் வர்றது இயல்புதான். ஆனா, கோபம் வரும்போது எப்படி நடந்துக்கிறீங்க என்பதுதான் முக்கியம். “மத்தவங்க செய்றதை பார்த்து கோபப்பட்டீங்கனா, நீங்க உங்க கட்டுப்பாட்டுல இல்ல; அவங்க கட்டுப்பாட்டுல இருக்கீங்கனு அர்த்தம். அதனால பிரச்சினையை பெரிசு பண்ணாதீங்க”னு ஆனந்த் சொல்றார். அப்படி பெரிசு பண்ணுனா, நீங்க கோபத்தை கட்டுப்படுத்துறதுக்கு பதிலா, கோபம் உங்களை கட்டுப்படுத்திடும். ▪ (g15-E 01)

^ பாரா. 4 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.