Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“வன்முறையைக் கைவிட்டேன்”

“வன்முறையைக் கைவிட்டேன்”
  • பிறந்த வருஷம்: 1956

  • பிறந்த நாடு: கனடா

  • என்னைப் பற்றி: விரக்தி, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை, அடிதடி

என் கடந்த காலம்

 நான் கனடாவில் உள்ள ஆல்பர்ட்டாவில் இருக்கிற கேல்கரி என்ற நகரத்தில் பிறந்தேன். நான் குழந்தையாக இருந்தபோதே என் அப்பாவும் அம்மாவும் விவாகரத்து செய்துவிட்டார்கள். அதனால் நானும் என் அம்மாவும் என்னுடைய தாத்தா-பாட்டி வீட்டுக்கே மாறிப் போய்விட்டோம். அவர்கள் என் மேலும் என் அம்மா மேலும் உயிரையே வைத்திருந்தார்கள். அதனால் நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். இப்போதும் கூட அந்த சந்தோஷமான நாட்களை ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறேன்.

 எனக்கு ஏழு வயது இருந்தபோது என் சந்தோஷம் எல்லாம் காணாமல் போய்விட்டது. என்னுடைய அம்மா, என்னுடைய அப்பாவை திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள். அதனால் நாங்கள் ஐக்கிய மாகாணங்களிலுள்ள மிஸ்சௌரியில் இருக்கிற செயின்ட் லூயிஸ் என்ற இடத்துக்குக் குடிமாறிப் போனோம். போகப் போக என் அப்பா ரொம்ப கொடூரமானவர் என்று எனக்குத் தெரிய வந்தது. ஒரு சமயத்தில், என்னுடைய புதிய ஸ்கூலில் சேர்ந்த முதல் நாளே, மற்ற பசங்கள் என்னை வம்புக்கு இழுத்தார்கள். ஆனால் நான் அமைதியாக வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்தபோது என்னுடைய அப்பாவிடம் இதைப் பற்றி சொன்னேன். இதைக் கேட்டதும் என்னுடைய அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. அந்தப் பசங்கள் என்னை அடித்ததே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு என்னை அடித்து துவைத்துவிட்டார். இதிலிருந்து நான் கற்றுக்கொள்ளக் கூடாத ஒரு பாடத்தை கற்றுக்கொண்டேன். ஏழு வயதிலேயே நான் அடிதடியில் இறங்கிவிட்டேன்!

 என்னுடைய அப்பாவின் முன்கோபத்தை என்னுடைய அம்மாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் எங்கள் வீட்டில் ஒரே அடிதடியும் ரகளையுமாகத்தான் இருக்கும். 11 வயதிலேயே போதை பொருளை எடுத்துக்கொண்டேன், தண்ணி அடிக்கவும் ஆரம்பித்துவிட்டேன். போகப் போக நான் ரொம்ப முரடனாகவே மாறிவிட்டேன். அடிக்கடி தெருவில் போகிற ஆட்களிடம் கூட சண்டை போடவும் ஆரம்பித்துவிட்டேன். என் பள்ளி படிப்பை முடிக்கிற சமயத்தில் நான் முழுக்க முழுக்க ஒரு ரவுடியாவே ஆகிவிட்டேன்.

 எனக்கு 18 வயது ஆனபோது அமெரிக்க கப்பற்படையில் சேர்ந்தேன். முரடனாக இருந்த என்னை கொலைகாரனாக மாற்றும் அளவுக்கு அங்கே பயிற்சி கிடைத்தது. ஐந்து வருஷங்களுக்கு பின்பு அமெரிக்க புலனாய்வு துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசையில் மனோதத்துவம் படிப்பதற்காக ராணுவத்தை விட்டு வந்துவிட்டேன். அமெரிக்காவில் பல்கலைக்கழக படிப்பை படிக்க ஆரம்பித்தேன். பிற்பாடு கனடாவுக்கு போய் என் படிப்பைத் தொடர்ந்தேன்.

 அந்தச் சமயத்தில் நான் ரொம்ப விரக்தியடைந்துவிட்டேன், மனிதர்கள் மேலும், சமுதாயத்தின் மேலும் எனக்கு இருந்த நம்பிக்கையே போய்விட்டது. மனிதர்களுக்கு மற்றவர்கள்மேல் துளி கூட அக்கறை இல்லை… இந்த உலகத்தில் இருக்கிற எதற்குமே அர்த்தம் இல்லை… மனிதர்களுடைய பிரச்சினைக்கு தீர்வே இல்லை… என்றெல்லாம் எனக்கு தோன்ற ஆரம்பித்தது. அதனால் மனிதர்களால் இந்த உலகத்தை மாற்றவோ, நன்றாக்கவோ முடியும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

 ஏன்தான் வாழ்கிறோம் என்றே தெரியாததால் குடி, போதைப்பொருள், பணம், செக்ஸ் இதையெல்லாம் சுற்றி என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். அடுத்து எந்தப் பார்ட்டிக்கு போகலாம், அடுத்து எந்தப் பெண்ணிடம் போகலாம் என்றுதான் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். சும்மாவே அடிதடி என்றால் முதலில் போய் நிற்பேன், எனக்கு ராணுவ பயிற்சி வேறு கிடைத்திருந்தது, இனி சொல்லவா வேண்டும்! எது சரி எது தப்பு எனக்கு நானே முடிவு பண்ணி வைத்திருந்தேன். யாராவது மற்றவர்களை அநியாயமாக நடத்துவதாக தோன்றினால் அவர்களை ஒரு வழி பண்ணிவிடுவேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இப்போது அடிதடி என் இரத்தத்திலேயே கலந்துவிட்டது!

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது

 ஒரு நாள் நானும் என்னுடைய நண்பனும் என்னுடைய வீட்டின் அடித்தளத்தில் மரிஹூவானாவை சட்டவிரோதமாக விற்பதற்காக அதை தயார் செய்துகொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் நாங்கள் இரண்டு பேருமே அளவுக்கு அதிகமாக போதைப்பொருளையும் எடுத்திருந்தோம். அப்போது என்னுடைய நண்பன் என்னிடம், ‘உனக்கு கடவுள்மேல் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டான். அதற்கு நான், “கடவுளைப் பற்றி பேச்சே எடுக்காதே, அவரால் தானே நாம் எல்லாரும் கஷ்டப்படுகிறோம்” என்று சொன்னேன். அடுத்த நாள் ஒரு புது வேலையில் சேர்ந்தேன். அங்கே என் கூட வேலை செய்கிற ஒரு யெகோவாவின் சாட்சி என்னிடம், “இந்த உலகத்தில் இருக்கிற கஷ்டங்களுக்கு எல்லாம் கடவுள்தான் காரணம் என்று நீ நினைக்கிறாயா?” என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்டதும் நான் ஷாக் ஆகிவிட்டேன். ஏனென்றால் நேற்றுதான் இதைப் பற்றி பேசியிருந்தேன். இந்தக் கேள்வி என் ஆர்வத்தை தூண்டியது. அடுத்த ஆறு மாதங்களில் இதைப் பற்றி நாங்கள் நிறைய பேசினோம். வாழ்க்கையைப் பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு அவர் பைபிளில் இருந்து பதிலை காட்டினார்.

 அந்தச் சமயத்தில் நான் என் காதலியோடு ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தேன். பைபிளில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி நான் பேசினாலே அவளுக்கு பிடிக்காது. ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, ‘பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்க யெகோவாவின் சாட்சிகள் நம் வீட்டுக்கு வருவார்கள்’ என்று நான் அவளிடம் சொன்னேன். அடுத்த நாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தால், அவளும் என்னை விட்டு போய்விட்டாள், அதோடு வீட்டில் இருக்கிற எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். நான் வெளியே உட்கார்ந்து ரொம்ப அழுதேன். கடவுளிடம் உதவி கேட்டு கெஞ்சி ஜெபம் செய்தேன். அன்றைக்குத்தான் முதல் தடவையாக யெகோவா என்ற கடவுளுடைய பெயரைச் சொல்லி ஜெபம் செய்தேன்.—சங்கீதம் 83:18.

 இரண்டு நாட்களுக்குப் பின்பு, யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற ஒரு தம்பதி என் வீட்டுக்கு வந்து ஒரு புத்தகத்தில் இருந்து பைபிள் படிப்பை தொடங்கினார்கள். அவர்கள் போன பின்பு, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்  a என்ற அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு ராத்திரியே அதைப் படித்து முடித்துவிட்டேன். யெகோவா தேவனைப் பற்றியும் அவருடைய மகன் இயேசுவைப் பற்றியும் படித்த விஷயங்கள் எல்லாமே என் மனதை தொட்டது. யெகோவா கரிசனையுள்ள கடவுள் என்பதையும், நாம் கஷ்டப்படும் போதெல்லாம் அவரும் கஷ்டப்படுகிறார் என்பதையும் நான் புரிந்துகொண்டேன். (ஏசாயா 63:9) யெகோவா என்மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார் என்பதையும் அவருடைய மகன் எனக்காக தன்னுடைய உயிரையே கொடுத்திருக்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டபோது இரண்டு பேர் மேலும் எனக்கு அன்பு ரொம்ப அதிகமானது. (1 யோவான் 4:10) “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று [கடவுள்] விரும்புகிறார்.” அதனால்தான் இவ்வளவு காலமாக அவர் என்மேல் ரொம்ப பொறுமையாக இருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டேன். (2 பேதுரு 3:9) யெகோவா தன் பக்கமாக என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டேன்.—யோவான் 6:44.

 அந்த வாரத்தில் இருந்தே நான் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். பொதுவாக என்னைப் பார்த்தால் எல்லாரும் பயப்படுவார்கள். என் தலை முடியை நீளமாக வளர்த்திருந்தேன். காதில் கம்மலும் போட்டிருந்தேன். ஆனால் சாட்சிகள் என்னை ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிற ஒரு சொந்தக்காரரைப் போல நடத்தினார்கள். இவர்கள்தான் உண்மை கிறிஸ்தவர்கள் என்று நான் புரிந்துகொண்டேன். என் தாத்தா-பாட்டியின் வீட்டுக்கே திரும்பவும் வந்த மாதிரி எனக்கு இருந்தது. ஆனால், அதை விட சந்தோஷமான இடத்துக்கு வந்துவிட்டேன்.

 சீக்கிரத்திலேயே பைபிளிலிருந்து நான் படித்த விஷயங்கள் என் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்தது. நான் என் முடியை வெட்டிவிட்டேன்…  ஒழுக்கக்கேடான வாழ்க்கையை விட்டுவிட்டேன்… போதைப்பொருள், குடியையும்கூட நிறுத்திவிட்டேன். (1 கொரிந்தியர் 6:9, 10; 11:14) யெகோவாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசை எனக்குள் அதிகமானது. நான் செய்வது ஏதாவது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரிய வந்தால் அந்த தவறை நியாயப்படுத்த சாக்குப்போக்கு தேடவில்லை. அதற்குப் பதிலாக, அதை நினைத்து என்னுடைய மனம் குத்த ஆரம்பித்தது. ‘நான் இனிமேல் இப்படி நடந்துகொள்ளவே மாட்டேன்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதனால், நான் யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் உடனே மாற்றிக்கொண்டேன். யெகோவா சொல்கிற வழியில் நடக்க ஆரம்பித்ததால் என் வாழ்க்கை நல்லபடியாக மாறிவிட்டது. பைபிள் படித்த ஆறே மாதத்தில், அதாவது ஜூலை 29, 1989-ல் நான் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனேன்.

எனக்குக் கிடைத்த பலன்கள்

 பைபிள் என்னுடைய சுபாவத்தை அடியோடு மாற்றிவிட்டது. முன்பெல்லாம் யாராவது என்னிடம் கோபமாக நடந்துகொண்டால் என் வாய் பேசாது, என் கைதான் பேசும். ஆனால், இப்போது “எல்லாரோடும் சமாதானமாக” இருக்க நான் கடினமாக முயற்சி செய்கிறேன். (ரோமர் 12:18) இந்த மாற்றங்களுக்கு எல்லாம் காரணம் நான்தான் என்று நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன். ஆளையே மாற்றுகிற வல்லமை இருக்கிற பைபிளையும், பரிசுத்த சக்தியையும் தந்தவர் அவர்தானே!—கலாத்தியர் 5:22, 23; எபிரெயர் 4:12.

 போதைப்பொருள், அடிதடி, ஒழுக்கக்கேடான விஷயங்களுக்கெல்லாம் அடிமையாக இருந்த நான், இப்போது யெகோவாவை சந்தோஷப்படுத்தவும் அவருக்கு என்னால் முடிந்த மிக சிறந்ததை அவருக்கு கொடுக்கவும் நான் கடினமாக முயற்சி செய்கிறேன். அதனால் மற்றவர்களுக்கு அவரைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறேன். ஞானஸ்நானம் எடுத்து கொஞ்ச வருஷத்துக்கு பின்பு, கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுக்க ஆட்கள் அதிகம் தேவைப்பட்ட ஒரு இடத்துக்குப் போய் ஊழியம் செய்தேன். இவ்வளவு வருஷங்களாக மற்றவர்களுக்குக் கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுத்ததும், அது அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த நல்ல மாற்றத்தைப் பார்த்து என்னுடைய அம்மாவும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகிவிட்டார். அதை விட சந்தோஷம் எனக்கு வேறு என்ன இருக்கிறது!

 1999-ல் எல் சால்வடார் என்ற இடத்தில் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி என இப்போது அழைக்கப்படுகிற பள்ளியில் பட்டம் பெற்றேன். ஊழியத்தை முன்நின்று நடத்த… சபையில் நன்றாக கற்றுக்கொடுக்க… மற்றவர்களை உற்சாகப்படுத்த... இந்தப் பள்ளியில் கிடைத்த பயிற்சி எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது. அதே வருஷத்தில், யுஜினா என்ற ஒரு அன்பான மனைவியும் எனக்கு கிடைத்தாள். இப்போது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து குவாதமாலாவில் முழு நேரமாக ஊழியம் செய்துகொண்டிருக்கிறோம்.

 முன்பெல்லாம் என் வாழ்க்கை விரக்தியால் நிறைந்திருந்தது, இப்போது சந்தோஷத்தால் நிறைந்திருக்கிறது. பைபிள் சொல்கிறபடி நடந்ததால் ஒழுக்கக்கேடான வாழ்க்கை... அடிதடி... இவையெல்லாம் என் வாழ்க்கையை விட்டுப் போய்விட்டது. அதற்கு பதிலாக சந்தோஷம்... சமாதானம்... உண்மையான அன்பு... என்னைத் தேடி வந்துவிட்டது!

a யெகோவாவின் சாட்சிகள் இப்போது பைபிளைப் படிப்பதற்காக இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தை பயன்படுத்துகிறார்கள்.