Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

யோவான் 3:16—“தேவன் . . . இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”

யோவான் 3:16—“தேவன் . . . இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”

 “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.”—யோவான் 3:16, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

யோவான் 3:16-ன் அர்த்தம்

 கடவுள் நம்மை நேசிக்கிறார், நாம் என்றென்றும் வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அதற்காகத் தன்னுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவை இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது முக்கியமான வேலைகளைச் செய்தார். முதலாவதாக, தன்னைப் பின்பற்றியவர்களுக்குத் தன்னுடைய தகப்பனாகிய கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுத்தார். (1 பேதுரு 1:3) அதோடு, மனிதர்களுக்காகத் தன்னுடைய உயிரையே கொடுத்தார். நாம் முடிவில்லாமல் வாழ வேண்டுமென்றால் இயேசுமேல் விசுவாசம் வைக்க வேண்டும்.

 ‘தன்னுடைய ஒரே மகனைத் தந்தார்’ என்ற வார்த்தைகள், கடவுளுடைய அன்பின் ஆழத்தைக் காட்டுகின்றன. a இயேசு, கடவுளுடைய விசேஷ மகனாக இருந்தார். எப்படி? இயேசு மட்டும்தான் கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டார். (கொலோசெயர் 1:17) அவர்தான் “படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிறார். (கொலோசெயர் 1:15) அவர் மூலமாகத்தான் மற்ற தேவதூதர்களும் மற்ற எல்லா படைப்புகளும் படைக்கப்பட்டன. இருந்தாலும், யெகோவா இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இயேசு ‘மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்கும்’ யெகோவா b அவரை அனுப்பினார். (மத்தேயு 20:28) முதல் மனிதனான ஆதாமினால் வந்த பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக இயேசு பல பாடுகள் பட்டு இறந்துபோனார்.—ரோமர் 5:8, 12.

 இயேசுமேல் விசுவாசம் வைப்பது என்றால், அவரை நம்புவதோ, நமக்காக அவர் செய்ததையெல்லாம் ஒத்துக்கொள்வதோ மட்டும் கிடையாது. அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதும், அவரைப் போலவே நடந்துகொள்வதும்கூட அதில் அடங்கும். (மத்தேயு 7:24-27; 1 பேதுரு 2:21) “மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்; ஆனால், மகனுக்குக் கீழ்ப்படியாதவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது” என்று பைபிள் சொல்கிறது.—யோவான் 3:36.

யோவான் 3:16-ன் பின்னணி

 நிக்கொதேமு என்ற யூத மதத் தலைவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார். (யோவான் 3:1, 2) அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் c பற்றியும், ‘மறுபடியும் பிறப்பது’ பற்றியும் சில விவரங்களைச் சொன்னார். (யோவான் 3:3) அவர் எப்படி இறப்பார் என்றுகூட முன்கூட்டியே சொன்னார். “மனிதகுமாரனும் உயர்த்தப்பட [மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட] வேண்டும். அப்போதுதான், அவரை நம்புகிற எல்லாரும் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்” என்று சொன்னார். (யோவான் 3:14, 15) பிறகு, மனிதர்கள்மேல் வைத்திருக்கும் அளவில்லாத அன்பினால்தான், முடிவில்லாமல் வாழும் வாய்ப்பை எல்லாருக்கும் கடவுள் கொடுத்திருக்கிறார் என்று இயேசு வலியுறுத்தினார். கடைசியாக, என்றென்றும் வாழ்வதற்கு நாம் விசுவாசம் காட்ட வேண்டும் என்றும், கடவுளுக்குப் பிடித்த செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.—யோவான் 3:17-21.

a “ஒரே மகன்” என்பதற்கான கிரேக்க வார்த்தையான மோனோயெனிஸ் இப்படியெல்லாம் விளக்கப்பட்டிருக்கிறது: “அலாதியானது, . . . அதன் இனத்தில் அல்லது வகையில் ஒன்றேவொன்று, தனித்தன்மையுள்ளது.”புதிய ஏற்பாடு மற்றும் பிற ஆரம்பகால கிறிஸ்தவ இலக்கியங்களுக்கான கிரேக்க-ஆங்கில அகராதி, பக். 658.

b யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.

c கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும் ஓர் அரசாங்கம். அதனால், அது “பரலோக அரசாங்கம்” என்றுகூட அழைக்கப்படுகிறது. (மத்தேயு 10:7; வெளிப்படுத்துதல் 11:15) அந்த அரசாங்கத்தின் ராஜாவாக கிறிஸ்துவைக் கடவுள் நியமித்திருக்கிறார். பூமி சம்பந்தமாக தான் விரும்புவதையெல்லாம் கடவுள் அந்த அரசாங்கத்தின் மூலம் செய்து முடிப்பார். (தானியேல் 2:44; மத்தேயு 6:10) கூடுதலான விவரங்களுக்கு, “கடவுளுடைய அரசாங்கம் என்பது என்ன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.