Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

மாற்கு 1:15—“தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று”

மாற்கு 1:15—“தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று”

 “குறித்த காலம் வந்துவிட்டது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது; மக்களே, மனம் திருந்துங்கள், நல்ல செய்தியில் விசுவாசம் வையுங்கள்.”—மாற்கு 1:15, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.”—மாற்கு 1:15, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

மாற்கு 1:15-ன் அர்த்தம்

 கடவுளுடைய அரசாங்கம் a “சமீபமாயிற்று,” அதாவது “நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். ஏனென்றால், அந்த அரசாங்கத்தின் எதிர்கால ராஜாவாகிய அவர் அப்போது அங்கே இருந்தார்.

 கடவுளுடைய அரசாங்கம் ஏற்கெனவே ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டதாக இயேசு இந்த வசனத்தில் சொல்லவில்லை. அது எதிர்காலத்தில்தான் வரும் என்று அவரே தன் சீஷர்களிடம் பிற்பாடு சொன்னார். (அப்போஸ்தலர் 1:6, 7) ஆனால் மேசியாவாக, அதாவது எதிர்கால ராஜாவாக, அவர் எந்த வருஷத்தில் வருவார் என்று பைபிள் முன்கூட்டியே சொல்லியிருந்ததோ அதே வருஷத்தில் அவர் வந்திருந்தார். b அதனால்தான், “குறித்த காலம் வந்துவிட்டது” என்று சொன்னார்; அதாவது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சுவிசேஷத்தை (நல்ல செய்தியை) பிரசங்கிக்கும் வேலையை அவர் ஆரம்பிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகச் சொன்னார்.—லூக்கா 4:16-21, 43.

 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியிலிருந்து பயன் அடைவதற்கு மக்கள் மனம் திருந்த வேண்டியிருந்தது. அதாவது, முன்பு செய்த பாவங்களை நினைத்து வருத்தப்படவும், கடவுளுடைய சட்டதிட்டங்களுக்கு ஏற்றபடி வாழவும் வேண்டியிருந்தது. அப்படி மனம் திருந்தியவர்கள், கடவுளுடைய அரசாங்கம் வரப்போகிறது என்ற நல்ல செய்தியில் நம்பிக்கை வைத்ததைக் காட்டினார்கள்.

மாற்கு 1:15-ன் பின்னணி

 கலிலேயா பகுதியில் ஊழியத்தை ஆரம்பித்தபோது இயேசு இந்த வார்த்தைகளைச் சென்னார். “அந்தச் சமயத்திலிருந்து” கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு பிரசங்கித்தார் என்று மத்தேயு 4:17 சொல்கிறது. இயேசு பிரசங்கித்த செய்தியின் முக்கியப் பொருளே கடவுளுடைய அரசாங்கம்தான். சொல்லப்போனால், நான்கு சுவிசேஷங்களில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி 100-க்கும் அதிகமான தடவை சொல்லப்பட்டிருக்கிறது. c அவை பெரும்பாலும் இயேசு சொன்ன வார்த்தைகள். வேறெந்த விஷயத்தையும்விட கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித்தான் இயேசு அதிகமாகப் பேசினார் என்று பைபிள் பதிவு காட்டுகிறது.

மாற்கு 1-வது அதிகாரத்தை அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்.

a கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோகத்தில் கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அரசாங்கம். பூமியில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதையெல்லாம் அந்த அரசாங்கத்தின் மூலம் அவர் செய்து முடிப்பார். (தானியேல் 2:44; மத்தேயு 6:10) கூடுதலான விவரங்களுக்கு, “கடவுளுடைய அரசாங்கம் என்பது என்ன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

b இயேசுதான் கடவுளுடைய விசேஷப் பிரதிநிதியாக, அதாவது மேசியாவாக, இருப்பார் என்று பைபிள் முன்கூட்டியே சொல்லியிருந்தது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இயேசு ஒரு ராஜாவாக ஆக வேண்டியிருந்தது. இயேசுதான் மேசியா என்று சொன்ன பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கு, “மேசியாவின் வருகையை தானியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிற விதம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

c புதிய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்படும் கிறிஸ்தவக் கிரேக்க வேதாகமத்தின் முதல் நான்கு புத்தகங்கள்தான் சுவிசேஷங்கள். இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி அவை விவரிக்கின்றன.