Skip to content

பைபிள் என்றால் என்ன?

பைபிள் என்றால் என்ன?

பைபிள் தரும் பதில்

 பைபிளுக்கு “கடவுளுடைய வார்த்தை” என்ற பெயர் இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13) ஏனென்றால், கடவுள் மக்களுக்கு சொன்ன செய்திதான் அதில் இருக்கிறது. 66 புத்தகங்கள் ஒன்றாக சேர்ந்ததுதான் பைபிள். அதை எழுதி முடிக்க கிட்டத்தட்ட 1,600 வருஷங்கள் ஆனது.

இந்தக் கட்டுரையில்...

 பைபிளைப் பற்றிய சில அடிப்படை தகவல்கள்

  •   பைபிளை எழுதியது யார்? கடவுள்தான் பைபிளுடைய நூலாசிரியர். கிட்டத்தட்ட 40 பேரைப் பயன்படுத்தி அவர் பைபிளை எழுதினார். அவர்களில் சிலர்: மோசே, ராஜாவான தாவீது, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான். a தான் சொல்ல நினைத்த விஷயங்களை, கடவுள் அந்த நபர்களுக்குத் தெரியப்படுத்தினார். அந்த விஷயங்களைத்தான் அவர்களும் எழுதி வைத்திருக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:16.

     இதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம்: ஒரு முதலாளி அவருடைய செக்ரட்டரியிடம் சொல்லி ஒரு கடிதத்தை எழுதுகிறார். அதில் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகளை அவர் சொல்லுவார். அந்தக் கடிதத்தை எழுதியது செக்ரட்டரியாக இருந்தாலும் அதிலிருக்கும் விஷயங்கள் முதலாளி சொன்னது. அதே மாதிரிதான் பைபிளை மனிதர்கள் எழுதியிருந்தாலும் கடவுள் சொன்ன விஷயங்களைத்தான் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதனால் பைபிளின் உண்மையான நூலாசிரியர் கடவுள்தான்.

  •   “பைபிள்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? பிப்ளியா என்ற கிரேக்க வார்த்தையில் இருந்துதான் “பைபிள்” என்ற ஆங்கில வார்த்தை வந்திருக்கிறது. அதன் அர்த்தம் “சின்ன புத்தகங்கள்.” காலப்போக்கில் அந்த 66 சின்ன சின்ன புத்தகங்களைத்தான் மொத்தமாக சேர்த்து பிப்ளியா, அதாவது பைபிள் என்று சொன்னார்கள்.

  •   பைபிளை எப்போது எழுதினார்கள்? கி.மு. 1513-ல் அதை எழுத ஆரம்பித்தார்கள். அதை எழுதி முடிக்க 1,600 வருஷங்களுக்குமேல் எடுத்தது. சுமார் கி.பி. 98-ல் அதை எழுதி முடித்தார்கள்.

  •   முதல் முதலில் எழுதிய பைபிள் இப்போது இருக்கிறதா? இல்லை. ஏனென்றால் ஆரம்பக் காலத்தில், பாப்பிரஸ் சுருள்களிலும் தோல் சுருள்களிலும்தான் பைபிளை எழுதினார்கள். அவை எல்லாமே மக்கி போகக்கூடிய பொருள்கள். அதனால், பைபிளை நகல் எடுக்கிறவர்கள் புது புது சுருள்களில் அதைக் கவனமாக எழுதி வைத்தார்கள். அதனால்தான் இப்போது நமக்கு பைபிள் கிடைத்திருக்கிறது.

  •   “பழைய ஏற்பாடு” மற்றும் “புதிய ஏற்பாடு” என்றால் என்ன? பைபிளை இரண்டு பாகமாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தை பொதுவாக பழைய ஏற்பாடு என்று சொல்வார்கள். அதில் இருக்கிற புத்தகங்கள் பெரும்பாலும் எபிரெய மொழியில் b எழுதப்பட்டிருக்கிறது. அதனால் அதை எபிரெய வேதாகமம் என்றும் சொல்லலாம். இரண்டாவது பாகத்தை புதிய ஏற்பாடு என்று சொல்வார்கள். அதில் இருக்கிற புத்தகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. அதனால் அதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் என்றும் சொல்லலாம். c

  •   பைபிள் என்ன மாதிரியான புத்தகம்? வரலாறு, சட்டங்கள், தீர்க்கதரிசனங்கள், கவிதை, வாழ்க்கைக்கு உதவுகிற பழமொழிகள், பாடல்கள், கடிதங்கள் இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்ததுதான் பைபிள்.—“ பைபிள் புத்தகங்களின் பட்டியல்”-ஐப் பாருங்கள்.

 பைபிளில் என்ன இருக்கிறது?

 கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்ததைப் பற்றி பைபிளுடைய ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்கள் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார். அதற்காக அவருடைய பெயர் யெகோவா என்று சொல்லி அவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.—சங்கீதம் 83:18.

 கடவுளைப் பற்றி எப்படித் தப்பு தப்பாக சொல்லி அவருடைய பெயரைக் கெடுத்திருக்கிறார்கள் என்றும் அதைத் திரும்ப அவர் எப்படி சரிசெய்ய போகிறார் என்றும் பைபிள் சொல்கிறது.

 கடவுள் இந்தப் பூமியையும் மனிதர்களையும் எதற்காகப் படைத்தார் என்பதைப் பற்றி பைபிளில் இருக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் கடவுள் எப்படி சரிசெய்ய போகிறார் என்றும் அது சொல்கிறது.

 தினசரி வாழ்க்கைக்கு உதவுகிற நிறைய ஆலோசனைகள்கூட பைபிளில் இருக்கின்றன. உதாரணத்துக்கு:

  •   மற்றவர்களோடு எப்படி ஒத்துப்போவது? “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”—மத்தேயு 7:12.

     அர்த்தம்: மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதேமாதிரி நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும்.

  •   நிறைய கவலைகள் இருக்கும்போது என்ன செய்வது? “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும்.”—மத்தேயு 6:34.

     அர்த்தம்: ‘நாளைக்கு என்ன நடக்குமோ’ என்று தேவையில்லாமல் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக அன்றன்றைக்கான கவலையை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிப்பது நல்லது.

  •   கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்யலாம்? “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது அன்பு காட்டுவதுபோல், உங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.”—எபேசியர் 5:33.

     அர்த்தம்: கணவனும் மனைவியும் ஒருவர்மேல் ஒருவர் அன்பும் மரியாதையும் காட்டினால்தான் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

 முதல் முதலில் எழுதியதுதான் பைபிளில் இப்போதும் இருக்கிறதா?

 ஆமாம். இதுவரைக்கும் கிடைத்திருக்கிற பழைய பைபிள் சுருள்களையும் இப்போது இருக்கிற பைபிளையும் நிபுணர்கள் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்ததில், பைபிளில் இருக்கிற விஷயங்களில் எதுவுமே மாறவில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால், தான் சொல்லவரும் விஷயங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் பைபிளைக் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது அதில் எதுவுமே மாறிவிடாத மாதிரி அவரால் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன? dஏசாயா 40:8.

 இன்றைக்கு ஏன் வித்தியாசமான பைபிள் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன?

 பைபிள் ரொம்ப பழங்கால மொழியில் எழுதப்பட்டதால் நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், ‘எல்லா தேசத்தினரும் கோத்திரத்தினரும் மொழியினரும்’ தெரிந்துகொள்ள வேண்டிய “நல்ல செய்தி” பைபிளில் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:6) நமக்குப் புரிகிற விதத்தில் ஒரு மொழிபெயர்ப்பு இருந்தால்தான் கடவுள் சொல்கிற நல்ல செய்தியை நம்மால் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

 பொதுவாக பைபிள் மொழிபெயர்ப்புகள் மூன்று விதங்களில் இருக்கின்றன:

  •   ஒவ்வொரு வார்த்தையாக: சில மொழிபெயர்ப்புகள், வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

  •   ஒவ்வொரு கருத்தாக: முதல் முதலில் எழுதப்பட்ட பைபிளில் என்ன இருந்ததோ அதன் அர்த்தம் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

  •   தொகுத்து எழுதுவது: ரசித்துப் படிப்பதற்கு ஏற்ற மாதிரி வசனங்கள் சொந்த வார்த்தையில் தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படி செய்யும்போது வசனங்களுடைய உண்மையான அர்த்தம் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 மனிதர்களுக்கு கடவுள் சொல்லியிருக்கும் செய்தியை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே சொல்வதைத்தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியும். அப்படியென்றால், அது வார்த்தைக்கு வார்த்தையாகவும் இருக்க வேண்டும், அதேசமயத்தில் மக்கள் இப்போது பயன்படுத்துகிற மொழியிலும்... அவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்கிற விதத்திலும்... இருக்க வேண்டும். e

 பைபிளில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று யார் முடிவு செய்தது?

 பைபிளின் நூலாசிரியர் கடவுள்தான். அதனால் அதில் என்ன இருக்க வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்திருக்கிறார். எபிரெய வேதாகமத்தைப் பாதுகாப்பதற்காக முன்பிருந்த இஸ்ரவேல் நாட்டு மக்களிடம் “கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகள் ஒப்படைக்கப்பட்டன.”—ரோமர் 3:2.

 பைபிளில் இருக்க வேண்டிய புத்தகங்கள் ஏதாவது தொலைந்துபோய்விட்டதா?

 இல்லை. முழு பைபிளுமே இன்றைக்கு நம்மிடம் இருக்கிறது. பைபிளில் சேர்க்கப்பட வேண்டிய சில புத்தகங்கள் ரொம்ப காலமாக மறைக்கப்பட்டிருந்ததாக சிலர் சொல்கிறார்கள். f ஆனால், பைபிளிலுள்ள புத்தகங்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறை பைபிளிலேயே இருக்கிறது. (2 தீமோத்தேயு 1:13) பைபிளில் இப்போது இருக்கிற 66 புத்தகங்களும் அந்த நெறிமுறைக்கு ஏற்ற மாதிரி இருக்கின்றன. ஆனால் அந்த மறைக்கப்பட்ட புத்தகங்கள், அந்த நெறிமுறைக்கு ஏற்ற மாதிரி இல்லை. g

 ஒரு வசனத்தை பைபிளில் எப்படி எடுப்பது?

  பைபிள் புத்தகங்களின் பட்டியல்

a பைபிளில் இருக்கிற எல்லா புத்தகங்களுடைய பெயரையும் அவற்றை எழுதியவர்களுடைய பெயரையும் அவை எழுதப்பட்ட வருஷத்தையும் தெரிந்துகொள்ள “பைபிள் புத்தகங்களின் பட்டியல்”-ஐப் பாருங்கள்.

b பைபிளில் ஒருசில அதிகாரங்கள் மட்டும் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. எபிரெய எழுத்துக்களை வைத்துதான் அரமேயிக் மொழியை எழுதுவார்கள்.

c பைபிளை வாசிக்கிற நிறைய பேர் “பழைய ஏற்பாடு,” “புதிய ஏற்பாடு” என்ற பெயர்களைப் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால், அந்தப் பெயர்களைப் பயன்படுத்தும்போது பழைய ஏற்பாட்டில் இருக்கும் புத்தகங்கள் ஏதோ நமக்குத் தேவையில்லை என்பதுபோலவும் அதற்குப் பதிலாகத்தான் புதிய ஏற்பாடு இருக்கிறது என்பதுபோலவும் நினைக்க வைக்கிறது. அதனால்தான் அவர்கள் “எபிரெய வேதாகமம்,” “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்” என்ற பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.

e புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் படிப்பது நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால், அது படிக்க ரொம்ப சுலபமாக இருக்கிறது. அதில் இருக்கிற விஷயங்களும் ரொம்ப துல்லியமாக இருக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு துல்லியமானதா?” என்ற ஆங்கில கட்டுரையைப் பாருங்கள்.

f இந்தப் புத்தகங்களைத்தான் தள்ளுபடி ஆகமம் என்று சொல்கிறார்கள். என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதுபோல் இந்தப் புத்தகங்கள் பைபிளின் அதிகாரபூர்வ பட்டியலில் இல்லை.

g கூடுதலாகத் தெரிந்துகொள்ள “மறைக்கப்பட்ட சுவிசேஷ புத்தகங்கள்—இயேசுவைப் பற்றி வெளிவராத உண்மைகளா?” என்ற ஆங்கில கட்டுரையைப் பாருங்கள்.