Skip to content

பைபிளில் மாற்றமோ கலப்படமோ செய்யப்பட்டிருக்கிறதா?

பைபிளில் மாற்றமோ கலப்படமோ செய்யப்பட்டிருக்கிறதா?

 இல்லை. பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. ஆயிரக்கணக்கான வருஷங்களாக பைபிள் நகல் எடுக்கப்பட்டிருந்தாலும், அதுவும் அழிந்துபோகிற பொருள்களில் நகல் எடுக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை மாறாமல் இருக்கிறது.

அப்படியென்றால், நகல்களில் பிழைகளே இல்லையா?

 பழங்காலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பைபிள் கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிறைய வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. இது, நகல் எடுக்கும்போது பிழைகள் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. ஆனால், இவை பெரும்பாலும் சின்னச் சின்னப் பிழைகள்தான். வார்த்தைகளின் அர்த்தத்தை அவை மாற்றுவதில்லை. அதேசமயத்தில், ஒருசில பெரிய வித்தியாசங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பைபிளின் செய்தியை வேண்டுமென்றே மாற்றுவதற்கு ரொம்பக் காலத்துக்கு முன்பே முயற்சி எடுக்கப்பட்டிருப்பதை இவை காட்டுகின்றன. இரண்டு உதாரணங்கள் இதோ:

  1.   சில பழைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் 1 யோவான் 5:7-ல் இந்த வார்த்தைகள் இருக்கின்றன: “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.” ஆனால், நம்பகமான கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இல்லை. அப்படியென்றால், முதல்முதலில் பைபிள் எழுதப்பட்டபோதும் இந்த வார்த்தைகள் இல்லை என்பது உறுதியாகிறது. பிற்பாடுதான் அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. a அதனால், நவீனகாலத்தைச் சேர்ந்த நம்பகமான பைபிள் மொழிபெயர்ப்புகள் அந்த வார்த்தைகளை சேர்க்கவில்லை.

  2.   கடவுளுடைய பெயர் பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் ஆயிரக்கணக்கான தடவை காணப்படுகின்றன. ஆனாலும், நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் அந்தப் பெயருக்குப் பதிலாக “கர்த்தர்” அல்லது “ஆண்டவர்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன.

இன்னும் நிறைய பிழைகள் கண்டுபிடிக்கப்படாது என்று எப்படி நிச்சயமாகச் சொல்லலாம்?

 இப்போது ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால், பிழைகளைக் கண்டுபிடிப்பது முன்பைவிட இப்போது ரொம்ப சுலபம். b இந்தப் பிரதிகளையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது என்ன தெரியவருகிறது? பைபிள் இன்றும் மாறாமல் துல்லியமாக இருக்கிறதா?

  •   (பொதுவாக, “பழைய ஏற்பாடு” என்று அழைக்கப்படும்) எபிரெய வேதாகமத்தைப் பற்றி அறிஞர் வில்லியம் எச். க்ரீன் இப்படிச் சொன்னார்: “வேறெந்தப் பழங்கால எழுத்துக்களும் இவ்வளவு துல்லியமாக நகல் எடுக்கப்படவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.”

  •   “புதிய ஏற்பாடு” என்று அழைக்கப்படும் கிறிஸ்தவக் கிரேக்க வேதாகமத்தைப் பற்றி பைபிள் அறிஞர் எஃப். எஃப். புரூஸ் இப்படி எழுதினார்: “எத்தனையோ பழங்கால இலக்கியப் படைப்புகள் இன்று இருக்கின்றன. அவை நம்பகமானவையா என்று யாருமே சந்தேகப்படுவது இல்லை. உண்மையில் பார்த்தால், அவற்றைவிட புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மைக்குத்தான் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன.”

  •   பைபிளின் மூலப்பிரதிகளைப் பாதுகாக்கும் முக்கிய அதிகாரியாக இருந்த சர் ஃபிரெட்ரிக் கென்யன் இப்படிச் சொன்னார்: “நாம் முழு பைபிளையும் கையில் எடுத்துக்கொண்டு, இதுதான் கடவுளுடைய உண்மையான வார்த்தை என்று எந்தப் பயமோ தயக்கமோ இல்லாமல் சொல்ல முடியும். இவ்வளவு நூற்றாண்டுகளாக, பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் பல தலைமுறைகளைத் தாண்டிவந்திருக்கும் புத்தகம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.”

அன்றிலிருந்து இன்றுவரை பைபிள் மாறவில்லை என்பதை நம்புவற்கு வேறென்ன காரணங்கள் இருக்கின்றன?

  •   நகல் எடுத்த யூதர்களும் சரி, கிறிஸ்தவர்களும் சரி, கடவுளுடைய மக்கள் செய்த பெரிய தவறுகளைப் பற்றிய பதிவுகளை மறைக்காமல் எழுதியிருக்கிறார்கள். c (எண்ணாகமம் 20:12; 2 சாமுவேல் 11:2-4; கலாத்தியர் 2:11-14) அதேபோல், கடவுள் பேச்சைக் கேட்காத யூத தேசத்துக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புகளையும், மனித கோட்பாடுகளை அம்பலமாக்கும் வார்த்தைகளையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். (ஓசியா 4:2; மல்கியா 2:8, 9; மத்தேயு 23:8, 9; 1 யோவான் 5:21) இவற்றையெல்லாம் துல்லியமாக நகல் எடுத்ததன் மூலம் தாங்கள் நம்பகமானவர்கள் என்பதையும், கடவுளுடைய பரிசுத்த வார்த்தையை உயர்வாக மதிக்கிறவர்கள் என்பதையும் அவர்கள் காட்டினார்கள்.

  •   தன்னுடைய சக்தியின் தூண்டுதலால் பைபிளைப் பதிவு செய்த கடவுள் அதைப் பாதுகாக்காமல் இருப்பாரா? d (ஏசாயா 40:8; 1 பேதுரு 1:24, 25) அன்று வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல, இன்று நமக்கும் பிரயோஜனமாக இருப்பதற்காகத்தானே அவர் பைபிளைக் கொடுத்திருக்கிறார்? (1 கொரிந்தியர் 10:11) சொல்லப்போனால், “அன்று எழுதப்பட்ட வேதவசனங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன; அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன. ஏனென்றால், அவை நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்கு உதவுகின்றன.”—ரோமர் 15:4.

  •   இயேசுவும் அவருடைய சீஷர்களும் எபிரெய வேதாகமத்தின் நகல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்கள்; அந்தப் பழங்கால எழுத்துக்கள் துல்லியமானவையா என்று அவர்கள் சந்தேகப்படவே இல்லை.—லூக்கா 4:16-21; அப்போஸ்தலர் 17:1-3.

a அந்த வார்த்தைகள் இந்தக் கையெழுத்துப் பிரதிகளில் இல்லை: கோடக்ஸ் சைனைட்டிகஸ், கோடெக்ஸ் அலெக்ஸாண்ட்ரினஸ், த வாடிகன் மேனுஸ்கிரிப்ட் 1209, த ஒரிஜினல் லாட்டீன் வல்கேட், த ஃபிலோக்செனியன்-ஹார்க்ளீன் சிரியாக் வர்ஷன், அல்லது சிரியாக் பெஷிட்டா.

b உதாரணத்துக்கு, புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் கிறிஸ்தவக் கிரேக்க வேதாகமத்தின் கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகள் 5,000-க்கும் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

c கடவுளுடைய பிரதிநிதிகள் தவறுகளே செய்யாதவர்கள் என்று பைபிள் சொல்வதில்லை. “பாவம் செய்யாத மனிதன் யாருமில்லையே” என்றுதான் எதார்த்தமாகச் சொல்கிறது.—1 ராஜாக்கள் 8:46.

d பைபிளை எழுதுவதற்கு கடவுள் சில மனிதர்களின் மனதைத் தூண்டினார். ஆனால், ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி அவர்களை எழுத வைக்கவில்லை.—2 தீமோத்தேயு 3:16, 17; 2 பேதுரு 1:21.