Skip to content

பைபிளை உண்மையில் யார் எழுதியதென்று தெரியுமா?

பைபிளை உண்மையில் யார் எழுதியதென்று தெரியுமா?

பைபிள் தரும் பதில்

 பைபிளை யார் எழுதியதென்று நமக்குச் சரியாகத் தெரியாது என்றுதான் பலர் சொல்கிறார்கள். ஆனால், யார் எழுதியதென்று பைபிளிலேயே பல இடங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “நெகேமியாவின் வார்த்தைகள்,” ‘ஏசாயா பார்த்த தரிசனம், “யோவேல் என்பவருக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி” போன்ற வார்த்தைகளுடன்தான் பைபிளின் சில பகுதிகள் ஆரம்பமாகின்றன.—நெகேமியா 1:1; ஏசாயா 1:1; யோவேல் 1:1.

 ஒரே உண்மையான கடவுளாகிய யெகோவாவின் பெயரில்தான் தாங்கள் எழுதியதாகவும், அவர்தான் தங்களை வழிநடத்தியதாகவும் அநேக பைபிள் எழுத்தார்கள் ஒத்துக்கொண்டார்கள். எபிரெய வேதாகமத்தை எழுதிய தீர்க்கதரிசிகள் 300-க்கும் அதிகமான தடவை “யெகோவா சொல்வது இதுதான்” என்று அறிவித்தார்கள். (ஆமோஸ் 1:3; மீகா 2:3; நாகூம் 1:12) மற்ற எழுத்தாளர்களுக்கு தேவதூதர்கள் மூலமாகக் கடவுளுடைய செய்தி கிடைத்தது.—சகரியா 1:7, 9.

 சுமார் 40 ஆண்கள், 1,600 வருடக் காலப்பகுதியில் பைபிளை எழுதினார்கள். அவர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பைபிள் புத்தகங்களை எழுதினார்கள். உண்மையில், பைபிள் என்பது 66 புத்தகங்கள் கொண்ட ஒரு குட்டி நூலகம் என்று சொல்லலாம். பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிற எபிரெய வேதாகமத்தில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிற கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் 27 புத்தகங்களும் இருக்கின்றன.