Skip to content

பூமி அழிக்கப்படுமா?

பூமி அழிக்கப்படுமா?

பைபிள் தரும் பதில்

 இல்லை. இந்தக் கிரகம் ஒருபோதும் அழிக்கப்படாது, நெருப்பினால் சுட்டெரிக்கப்படாது. இந்தப் பூமிக்குப் பதிலாக வேறொரு பூமியும் உருவாக்கப்படாது. மனிதர்கள் என்றென்றும் குடியிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இந்தப் பூமியைப் படைத்ததாக பைபிள் சொல்கிறது.

  •   “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.

  •   “[கடவுள்] இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார். அது ஒருபோதும் அசைக்கப்படாது.”—சங்கீதம் 104:5.

  •   “பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.”—பிரசங்கி 1:4.

  •   “[கடவுள்] பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார். அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.”—ஏசாயா 45:18.

மனிதர்கள் இந்தப் பூமியை நாசமாக்கிவிடுவார்களா?

 தூய்மைக்கேடு, போர் அல்லது வேறு ஏதோவொரு விதத்தில், இந்தப் பூமியை மனிதர்கள் முழுமையாக நாசப்படுத்துவதற்குக் கடவுள் விடமாட்டார். அதற்குப் பதிலாக அவர், ‘பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்குவார்.’ (வெளிப்படுத்துதல் 11:18) இதை அவர் எப்படிச் செய்வார்?

 மனித அரசாங்கங்களால் இந்தப் பூமியைப் பாதுகாக்க முடியவில்லை. அதனால், அந்த அரசாங்கங்களை எல்லாம் நீக்கிவிட்டு, கடவுள் தன்னுடைய பரலோக அரசாங்கத்தை ஏற்படுத்துவார். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) கடவுளுடைய மகன் இயேசு கிறிஸ்துதான் அந்த அரசாங்கத்தின் ராஜாவாக இருப்பார். (ஏசாயா 9:6, 7) அவர் பூமியில் இருந்தபோது, இயற்கையைக் கட்டுப்படுத்த தன்னுடைய அற்புதச் சக்தியைப் பயன்படுத்தினார். (மாற்கு 4:35-41) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆட்சி செய்யும்போது, இந்தப் பூமியையும் இயற்கை சக்திகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார். ஆரம்பத்தில் ஏதேன் தோட்டம் எப்படி இருந்ததோ, அதேபோல் இந்தப் பூமியை அவர் புதுப்பிப்பார்.—மத்தேயு 19:28; லூக்கா 23:43.

பூமி நெருப்பினால் சுட்டெரிக்கப்படும் என்றுதானே பைபிள் சொல்கிறது?

 இல்லை. பைபிள் அப்படிச் சொல்வதில்லை. “இப்போது இருக்கிற வானமும் பூமியும் . . . நெருப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன” என்று 2 பேதுரு 3:7-ல் சொல்லப்பட்டிருப்பதைத் தவறாகப் புரிந்துகொள்வதால்தான் மக்கள் அப்படி நினைக்கிறார்கள். அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு இரண்டு முக்கியமான குறிப்புகளைப் பார்க்கலாம்.

  1.   “வானம்,” “பூமி,” “நெருப்பு” போன்ற வார்த்தைகளை வேறு அர்த்தத்திலும் பைபிள் பயன்படுத்துகிறது. உதாரணத்துக்கு, “பூமி பூரித்துப்போகட்டும்!” என்று சங்கீதம் 97:1 சொல்கிறது. இங்கே “பூமி” என்ற வார்த்தை மனிதர்களைக் குறிக்கிறது.

  2.   வானம், பூமி, நெருப்பு என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை 2 பேதுரு 3:7-ன் சூழமைவு தெளிவாகக் காட்டுகிறது. நோவா காலத்தில் வந்த பெருவெள்ளத்தைப் பற்றி வசனங்கள் 5 மற்றும் 6 சொல்கின்றன. அந்தப் பெருவெள்ளத்தில் உலகமே அழிந்ததாக பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், பூமியே இல்லாமல் போய்விட்டதா? இல்லை, வன்முறை நிறைந்த மனித சமுதாயம்தான் அழிந்துபோனது. அந்த சமுதாயத்தைத்தான் “பூமி” என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 6:11) பெருவெள்ளத்தின்போது ஒரு விதத்தில் வானமும் அழிக்கப்பட்டது. அதாவது, மனிதர்களை ஆட்சி செய்தவர்களும் அழிக்கப்பட்டார்கள். இதிலிருந்து இந்தக் கிரகம் அழிக்கப்படவில்லை, கெட்ட மக்கள்தான் அழிக்கப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. நோவாவும் அவருடைய குடும்பமும் பெருவெள்ளத்தால் வந்த உலக அழிவிலிருந்து தப்பித்து, தொடர்ந்து இந்தப் பூமியில்தான் வாழ்ந்தார்கள்.—ஆதியாகமம் 8:15-18.

 பெருவெள்ளத்தைப் போல, 2 பேதுரு 3:7-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘நெருப்பும்’ கெட்ட மக்களை அழிக்குமே தவிர, இந்தப் பூமியை அழிக்காது. “நீதி குடியிருக்கிற புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று” கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். (2 பேதுரு 3:13) ‘புதிய பூமியை’ ‘புதிய வானம்’ ஆட்சி செய்யும். அதாவது ஒரு புதிய மனித சமுதாயத்தை ஒரு புதிய அரசாங்கம் ஆட்சி செய்யும். அதுதான் கடவுளுடைய அரசாங்கம். அந்த அரசாங்கம் ஆட்சி செய்யும்போது, இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறும், மக்களும் சமாதானமாக வாழ்வார்கள்!—வெளிப்படுத்துதல் 21:1-4.