Skip to content

எல்லா மதங்களும் ஒன்றுதானா? அவை கடவுளிடம் மக்களை வழிநடத்துகின்றனவா?

எல்லா மதங்களும் ஒன்றுதானா? அவை கடவுளிடம் மக்களை வழிநடத்துகின்றனவா?

பைபிள் தரும் பதில்

 இல்லை, எல்லா மதங்களும் ஒன்று கிடையாது. கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்கிற மதங்களைப் பற்றிய நிறைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அவை கடவுளுக்குப் பிடிக்காத இரண்டு விஷயங்களைச் செய்கின்றன.

ஒன்று, பொய் கடவுள்களை வணங்குவது

 பொய் கடவுள்களை வணங்குவது ‘வீணானது’ என்றும், அவை ‘ஒன்றுக்கும் உதவாதவை’ என்றும் பைபிள் சொல்கிறது. (எரேமியா 10:3-5; 16:19, 20) “என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது” என்று பூர்வ கால இஸ்ரவேலர்களுக்கு யெகோவா a கட்டளை கொடுத்திருந்தார். (யாத்திராகமம் 20:3, 23; 23:24) இஸ்ரவேலர்கள் மற்ற தெய்வங்களை வணங்கியபோது, “அவர்கள்மேல் யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.”—எண்ணாகமம் 25:3; லேவியராகமம் 20:2; நியாயாதிபதிகள் 2:13, 14.

 இன்றும்கூட ‘கடவுள்கள் என்று அழைக்கப்படுகிறவற்றை’ வணங்குவதை யெகோவா வெறுக்கிறார். (1 கொரிந்தியர் 8:5, 6; கலாத்தியர் 4:8) தன்னை வணங்க விரும்புகிறவர்கள் பொய் மதத்தைப் பின்பற்றுகிறவர்களோடு பழகுவதை விட்டுவிட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். “அவர்களைவிட்டு வெளியே வாருங்கள், அவர்களிடமிருந்து பிரிந்துபோங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளை கொடுக்கிறார். (2 கொரிந்தியர் 6:14-17) எல்லா மதங்களும் ஒன்று என்றால்... எல்லாமே கடவுளிடம்தான் வழிநடத்துகிறது என்றால்... இப்படியொரு கட்டளையைக் கடவுள் ஏன் கொடுக்கவேண்டும்?

இரண்டு, உண்மைக் கடவுளை அவர் ஏற்றுக்கொள்ளாத விதத்தில் வணங்குவது

 இஸ்ரவேலர்கள் சிலசமயங்களில், பொய் மத நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் பயன்படுத்தி யெகோவாவை வணங்கினார்கள். இப்படிப்பட்ட வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. (யாத்திராகமம் 32:8; உபாகமம் 12:2-4) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மதத் தலைவர்கள், கடவுளை வணங்கிய விதத்தை இயேசு கண்டித்தார். அவர்கள் மதப்பற்று உள்ளவர்கள்போல் வெளிவேஷம் போட்டார்கள். ஆனால், “திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயம், இரக்கம், விசுவாசம் ஆகிய மிக முக்கியமான காரியங்களை” விட்டுவிட்டார்கள்.—மத்தேயு 23:23.

 இன்றும்கூட ஒரு மதம், மக்களைக் கடவுளிடம் வழிநடத்த வேண்டுமென்றால் அதன் போதனைகள் பைபிளின் அடிப்படையில் இருக்க வேண்டும். (யோவான் 4:24; 17:17; 2 தீமோத்தேயு 3:16, 17) பைபிளுக்கு முரணான விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிற மதங்கள் உண்மையில் மக்களைக் கடவுளிடமிருந்து விலகிப்போகவே வைக்கின்றன. திரித்துவம், அழியாத ஆத்துமா, எரிநரகம் போன்ற நிறைய போதனைகள் பைபிளில் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இவை எல்லாமே பொய் தெய்வங்களை வணங்குகிறவர்களிடமிருந்து வந்தவைதான். இப்படிப்பட்ட போதனைகளின் அடிப்படையில் கடவுளை வணங்குவது “வீண்.” ஏனென்றால், இப்படிப்பட்ட வணக்கம் கடவுளுடைய கட்டளைகளின் அடிப்படையில் அல்ல, மதப் பாரம்பரியங்களின் அடிப்படையில்தான் இருக்கிறது.—மாற்கு 7:7, 8.

 மதங்களின் போலித்தனத்தைக் கடவுள் அருவருக்கிறார். (தீத்து 1:16) ஒரு மதம், மக்களைக் கடவுளிடம் நெருங்கிப் போக வைக்க வேண்டுமென்றால், அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய அவர்களுக்கு உதவ வேண்டும், சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதற்கு அல்ல. உதாரணமாக, “கடவுளை வழிபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல் தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும். கஷ்டப்படுகிற அநாதைகளையும் விதவைகளையும் கவனித்துக்கொள்வதும், இந்த உலகத்தால் கறைபடாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதும்தான் நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, களங்கமில்லாத வழிபாடாகும்” என்று பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 1:26, 27; அடிக்குறிப்பு.