எபிரெயருக்குக் கடிதம் 2:1-18

2  அதனால், நாம் கேட்ட விஷயங்களுக்கு+ வழக்கத்தைவிட அதிகமாகக் கவனம் செலுத்துவது அவசியம்; அப்போதுதான், விசுவாசத்தைவிட்டு நாம் ஒருபோதும் வழிதவறிப் போக மாட்டோம்.+  தேவதூதர்கள் மூலம் சொல்லப்பட்ட வார்த்தை+ உறுதியாக இருந்ததென்றால், அதை மீறிய குற்றத்துக்கும் அதற்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்கும் நியாயமான தண்டனை கிடைத்ததென்றால்,+  மாபெரும் மீட்பின் செய்தியை அலட்சியம் செய்துவிட்டு நம்மால் எப்படித் தப்பிக்க முடியும்?+ ஏனென்றால், அது முதன்முதலில் நம்முடைய எஜமானால் அறிவிக்கப்பட்டு,+ அதைக் கேட்டவர்களால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.  கடவுளும்கூட அடையாள அற்புதங்களாலும், வல்லமையான பல செயல்களாலும்,+ தன்னுடைய விருப்பத்தின்படி அவரவருக்குக் கொடுத்த தன்னுடைய சக்தியின் வரங்களாலும்+ அதற்குச் சாட்சி கொடுத்திருக்கிறார்.  வரப்போகும் உலகத்தைப் பற்றி நாம் பேசுகிறோம், கடவுள் அதைத் தன்னுடைய தூதர்களுடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்தவில்லை.+  இதற்குச் சாட்சியாக ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்: “மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோ, மனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோ அவன் யார்?+  தேவதூதர்களைவிட அவனைக் கொஞ்சம் தாழ்ந்தவனாக ஆக்கினீர்கள், மகிமையையும் மதிப்பையும் அவனுக்குக் கிரீடமாகச் சூட்டினீர்கள், உங்கள் கைகளால் படைத்தவற்றுக்கு அவனை அதிகாரியாக நியமித்தீர்கள்.  அதோடு, எல்லாவற்றையும் அவனுடைய காலடியில் கீழ்ப்படுத்தினீர்கள்.”+ கடவுள் எல்லாவற்றையும் தன்னுடைய மகனுக்குக் கீழ்ப்படுத்தியிருப்பதால்+ எதையுமே அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் விடவில்லை.+ அப்படியிருந்தும், எல்லாமே அவருடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதை இதுவரை நாம் பார்க்கவில்லை.+  அதற்குப் பதிலாக, இயேசு பாடுகள் பட்டு இறந்ததால்+ அவருக்கு மகிமையும் மாண்பும் கிரீடமாகச் சூட்டப்பட்டிருப்பதைத்தான் பார்க்கிறோம். அவர் கடவுளுடைய அளவற்ற கருணையால் எல்லாருக்காகவும் மரணமடையும்படி+ தேவதூதர்களைவிட கொஞ்சம் தாழ்த்தப்பட்டிருந்தார்.+ 10  எல்லாம் கடவுளுக்காக உண்டாயிருக்கிறது, எல்லாம் அவர் மூலமாகவே உண்டாயிருக்கிறது; அதனால், மகன்கள் நிறைய பேரை மகிமைப்படுத்துவதற்காக,+ மீட்பின் அதிபதியைப்+ பாடுகளால் பரிபூரணமாக்குவது சரியென்று+ அவர் நினைத்தார். 11  எப்படியென்றால், பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும்+ ஒருவரால்தான் உண்டாயிருக்கிறார்கள்;+ இதனால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களைச் சகோதரர்கள்+ என்று சொல்வதற்குப் பரிசுத்தமாக்குகிறவர் வெட்கப்படுவது இல்லை. 12  “என்னுடைய சகோதரர்களுக்கு உங்களுடைய பெயரை அறிவிப்பேன்; சபை நடுவில் உங்களைப் புகழ்ந்து பாடுவேன்”+ என்றும், 13  “நான் அவர்மேல் நம்பிக்கையாக இருப்பேன்”+ என்றும், “யெகோவா* எனக்குத் தந்த பிள்ளைகளோடு+ நான் இருக்கிறேன்” என்றும் அவர் சொல்கிறார். 14  அதனால், ‘பிள்ளைகள்’ சதையும் இரத்தமுமாக இருப்பதால், அவரும் அவர்களைப் போலவே சதையும் இரத்தமுமாக ஆனார்;+ மரணத்துக்கு வழிவகுக்கிற+ பிசாசைத்+ தன்னுடைய மரணத்தால் அழிப்பதற்கும், 15  வாழ்நாள் முழுவதும் மரண பயத்துக்கு அடிமைப்பட்டிருந்த எல்லாரையும் விடுதலை செய்வதற்கும்தான் அவர் அப்படியானார்.+ 16  அவர் உண்மையில் தேவதூதர்களுக்கு உதவி செய்ய வரவில்லை, ஆபிரகாமின் சந்ததிக்குத்தான்+ உதவி செய்ய வந்தார். 17  அதனால், எல்லா விதத்திலும் அவர் தன்னுடைய ‘சகோதரர்களை’ போல ஆக வேண்டியிருந்தது.+ இரக்கமும் உண்மையும் உள்ள தலைமைக் குருவாகக் கடவுளுக்குச் சேவை செய்து, மக்களுடைய பாவங்களுக்காகப்+ பிராயச்சித்த பலி+ கொடுப்பதற்காக* அவர்களைப் போலானார். 18  இப்படி, அவரே சோதிக்கப்பட்டபோது+ பாடுகளை அனுபவித்ததால், சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவரால் உதவி செய்ய முடியும்.+

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “பாவப் பரிகார பலியைக் கொடுப்பதற்காக; பாவப் பரிகாரம் செய்வதற்காக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா