Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

தெளிவான, நியாயமான பதில்களை பைபிளில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்

தெளிவான, நியாயமான பதில்களை பைபிளில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்
  • பிறந்த வருஷம்: 1948

  • பிறந்த நாடு: ஹங்கேரி

  • என்னைப் பற்றி: சில முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன்

என் கடந்தகால வாழ்க்கை:

நான் ஹங்கேரியில் ஒரு பழங்காலத்து ஊரில் பிறந்தேன். இரண்டாம் உலகப் போரில் அந்த ஊர் எப்படி உருக்குலைந்து போயிருந்தது என்று இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

சின்ன வயதில் என் தாத்தா பாட்டிதான் என்னை வளர்த்தார்கள். எனக்கு அவர்களை ரொம்பப் பிடிக்கும். முக்கியமாக, என் பாட்டிமேல் நான் உயிரையே வைத்திருந்தேன். கடவுள்மேல் ரொம்ப நம்பிக்கையோடு இருப்பதற்கு அவர்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார். மூன்று வயதிலிருந்தே ஒவ்வொரு நாள் சாயங்காலமும் என் பாட்டியோடு சேர்ந்து பரமண்டல ஜெபத்தைச் சொல்வேன். ஆனாலும், கிட்டத்தட்ட 30 வயதாகும்வரை எனக்கு அந்த ஜெபத்தின் அர்த்தமே தெரியாது.

என் அம்மா அப்பா நிறைய காசு சேர்த்து ஒரு நல்ல வீடு வாங்குவதற்காக ராத்திரிப் பகலாக ஓயாமல் வேலை செய்தார்கள். அதனால்தான், சின்ன வயதில் நான் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தேன். இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை நாங்கள் எல்லாரும் குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடுவதற்காக ஒன்றுகூடி வருவோம். அந்த நாளுக்காக நான் ஆசையோடு காத்திருப்பேன்.

1958-ல், என் அம்மா அப்பாவின் ஆசை நிறைவேறியது. எங்கள் மூன்று பேருக்காகவும் அவர்கள் ஒரு வீடு வாங்கினார்கள். இனிமேல் நான் என் அம்மா அப்பாவோடுதான் இருக்கப்போகிறேன் என்று நினைத்தபோது எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை! ஆனால், அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு என் அப்பா புற்றுநோயினால் இறந்துவிட்டார்.

நான் அப்படியே இடிந்துபோய்விட்டேன். நான் அடிக்கடி ஜெபத்தில், “கடவுளே, என் அப்பாவை காப்பாத்துங்க, காப்பாத்துங்கனு எத்தனை தடவை கெஞ்சிக் கேட்டேன். நீங்க ஏன் என்னோட ஜெபத்த கேட்கல? எனக்கு என் அப்பா வேணும்” என்று சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் அப்பா எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்கு நான் துடியாய்த் துடித்தேன். அவர் பரலோகத்துக்குப் போய்விட்டாரா அல்லது எங்கேயுமே இல்லாமல் போய்விட்டாரா என்று யோசித்தேன். மற்ற பிள்ளைகள் அவர்களுடைய அப்பாவோடு இருப்பதைப் பார்த்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது.

நிறைய வருஷமாக நான் கிட்டத்தட்ட எல்லா நாளுமே என் அப்பாவின் கல்லறைக்குப் போனேன். அங்கே மண்டிபோட்டு கடவுளிடம் ஜெபம் செய்தேன். “கடவுளே, அப்பா எங்க இருக்குறார்னு தயவுசெஞ்சு சொல்லுங்க” என்று கெஞ்சினேன். வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவும்படியும் கேட்டேன்.

13 வயதில் நான் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். ஏனென்றால், ரொம்பப் பிரபலமாக இருந்த ஜெர்மன் மொழி புத்தகங்களில் என் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்று நினைத்தேன். 1967-ல், கிழக்கு ஜெர்மனியிலிருந்த ஏனா நகரத்துக்கு நான் படிக்கப் போனேன். ஜெர்மன் தத்துவஞானிகளின் புத்தகங்களை நான் ரொம்ப ஆர்வமாகப் படித்தேன். முக்கியமாக, நம் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி அவர்கள் எழுதியிருந்ததையெல்லாம் படித்தேன். அந்த விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தது, ஆனால் என் கேள்விகளுக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. அதனால், பதில் கிடைக்க வேண்டுமென்று ஜெபம் செய்துகொண்டே இருந்தேன்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றிய விதம்:

1970-ல் நான் ஹங்கேரிக்குத் திரும்பிவந்தேன். அங்குதான் என் வருங்கால மனைவி ரோஸை சந்தித்தேன். அந்தச் சமயத்தில், ஹங்கேரியில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. கல்யாணமாகி கொஞ்ச நாளில் நாங்கள் ஆஸ்திரியாவுக்குக் குடிமாறிப் போனோம். ஆனால், எப்படியாவது ஆஸ்திரேலியாவிலிருந்த சிட்னிக்குப் போய் வாழ வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டோம். அங்குதான் என் மாமா இருந்தார்.

ஆஸ்திரியாவில் எனக்கு சீக்கிரத்தில் வேலை கிடைத்தது. ஒருநாள், என்னோடு வேலை பார்த்த ஒருவர், என் கேள்விகளுக்கெல்லாம் பைபிளில் பதில் இருப்பதாகச் சொன்னார். பைபிள் சம்பந்தமாக சில புத்தகங்களையும் கொடுத்தார். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் நான் கடகடவென்று படித்து முடித்தேன். இன்னும் நிறைய படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதனால், அந்தப் புத்தகங்களை வெளியிட்ட யெகோவாவின் சாட்சிகளுக்குக் கடிதம் எழுதி, வேறு புத்தகங்களையும் அனுப்பச் சொல்லிக் கேட்டேன்.

எங்களுடைய முதல் கல்யாண நாளன்று ஒரு யெகோவாவின் சாட்சி எங்கள் வீட்டுக்கு வந்தார். நான் கேட்டிருந்த புத்தகங்களை அவர் எடுத்து வந்திருந்தார். பைபிள் படிப்பைப் பற்றியும் சொன்னார். நான் உடனே சரியென்று சொல்லிவிட்டேன். நான் ரொம்ப ஆர்வமாக இருந்ததால் வாரத்துக்கு இரண்டு தடவை படித்தோம், அதுவும் ஒவ்வொரு தடவையும் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் படித்தோம்.

பைபிளிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கேட்டபோது எனக்கு ஒரே ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. கடவுளுடைய பெயர் யெகோவா என்று என்னுடைய ஹங்கேரியன் பைபிளிலேயே அவர்கள் காட்டியபோது என்னால் நம்பவே முடியவில்லை. நான் 27 வருஷங்களாக சர்ச்சுக்குப் போய்க்கொண்டிருந்தேன், ஆனால் ஒரு தடவைகூட அங்கே கடவுளுடைய பெயரைக் கேட்டதில்லை. என் கேள்விகளுக்கு தெளிவான, நியாயமான பதில்களை பைபிளில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன். உதாரணத்துக்கு, இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது, அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதுபோல்தான் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். (பிரசங்கி 9:5, 10; யோவான் 11:11-15) அதுமட்டுமல்ல, இந்த உலகமே புதிதாக மாறப்போகிறது, அங்கே “மரணம் இருக்காது” என்று பைபிள் சொல்வதையும் தெரிந்துகொண்டேன். (வெளிப்படுத்துதல் 21:3, 4) அந்தப் புது உலகத்தில் என் அப்பாவைப் பார்க்க ஆசையோடு காத்திருக்கிறேன். ஏனென்றால், இறந்தவர்கள் மறுபடியும் அங்கே “உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 24:15.

என் மனைவியும் என்னோடு சேர்ந்து பைபிள் படிப்பில் சந்தோஷமாக கலந்துகொண்டாள். இரண்டே மாதங்களில் பைபிள் படிப்புக்கான புத்தகத்தை நாங்கள் படித்து முடித்துவிட்டோம்! அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடந்த எல்லா கூட்டத்துக்கும் நாங்கள் போனோம். அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஒற்றுமையாகவும் ஒத்தாசையாகவும் இருந்ததைப் பார்த்து நாங்கள் அப்படியே அசந்துபோய்விட்டோம்!—யோவான் 13:34, 35.

1976-ல், நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடிமாறிப் போனோம். முதல் வேலையாக, அங்கு யெகோவாவின் சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடித்தோம். அவர்கள் எங்களை ரொம்ப நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். 1978-ல் நாங்களும் யெகோவாவின் சாட்சிகளானோம்.

எனக்குக் கிடைத்த பலன்கள்:

ரொம்ப காலமாக என் மனதில் இருந்த கேள்விகளுக்கு ஒருவழியாகப் பதில் கிடைத்துவிட்டது. யெகோவாவிடம் நெருக்கமான பந்தமும் கிடைத்திருக்கிறது. அவரைப்போல் ஒரு நல்ல அப்பா வேறு யாருமே இருக்க முடியாது! (யாக்கோபு 4:8) அதுமட்டுமல்ல, இறந்துபோன என் அப்பாவைப் புது உலகத்தில் மறுபடியும் பார்க்கப்போவதை நினைக்கும்போதே ரொம்ப ஆறுதலாக இருக்கிறது.—யோவான் 5:28, 29.

1989-ல், ஹங்கேரிக்கே திரும்பிப் போய்விடலாம் என்று நானும் என் மனைவியும் முடிவு செய்தோம். ஏனென்றால், அங்கிருக்கும் எங்களுடைய நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் மற்றவர்களிடமும் எங்கள் நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்ல ஆசைப்பட்டோம். நூற்றுக்கணக்கான பேருக்கு பைபிளை சொல்லிக்கொடுக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அவர்களில் 70-க்கும் அதிகமானவர்கள் யெகோவாவின் சாட்சியாக ஆகியிருக்கிறார்கள். என் அம்மாவும் அவர்களில் ஒருவர்.

என் கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வேண்டுமென்று 17 வருஷங்களாக நான் ஜெபம் செய்தேன். இப்போது 39 வருஷங்கள் ஆகிவிட்டன, இன்னமும் நான் ஜெபம் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், இப்படி ஜெபம் செய்கிறேன்: ‘யெகோவா அப்பா, சின்ன வயசிலிருந்து நான் செஞ்ச ஜெபத்துக்கெல்லாம் நீங்க பதில் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.’