Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—தைவானில்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—தைவானில்

ஐந்து வருடங்களுக்கு முன்பு ச்சூங் க்யூங்-ஜூலி தம்பதி ஆஸ்திரேலியாவில் பயனியர்களாக இருந்தார்கள். அந்தச் சகோதரர் சொல்கிறார்: “நாங்க வேலை செஞ்சிகிட்டே பயனியர் செஞ்சோம். ரொம்ப சொகுசா வாழ்ந்தோம். நாங்க இருந்த இடத்தில சீதோஷ்ணம் ரொம்ப நல்லா இருந்துச்சு. எங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்ல, நிம்மதியா வாழ்ந்தோம். நண்பர்களோடையும் குடும்பத்தாரோடையும் சந்தோஷமா இருந்தோம்.” இருந்தாலும், ஏதோவொன்று அவர்களுடைய மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய முடியும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அதற்காக அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

2009-ஆம் ஆண்டு நடந்த மாவட்ட மாநாட்டில் அவர்கள் கேட்ட ஒரு பேச்சு அவர்களுடைய மனதைத் தொட்டது. ஊழியத்தில் இன்னும் அதிகம் செய்ய முடிந்தவர்களுக்காக, பேச்சாளர் ஓர் உதாரணத்தைச் சொன்னார்: ‘சும்மா நிற்கும் காரை எந்தப் பக்கமும் திருப்ப முடியாது, கார் ஓடிக்கொண்டிருந்தால்தான் டிரைவர் அதை இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ திருப்ப முடியும். அதேபோல், நாம் நல்ல தீர்மானங்கள் எடுத்து, அதற்காக முயற்சி எடுத்தால்தான் ஊழியத்தில் அதிகம் செய்வதற்கு இயேசு நம்மை வழிநடத்துவார்.’ * இந்த வார்த்தைகளை பேச்சாளர் அவர்களுக்காகவே சொன்னது போல் நினைத்தார்கள். அதே மாநாட்டில் தைவானில் மிஷனரியாகச் சேவை செய்யும் ஒரு தம்பதியின் பேட்டியைக் கேட்டார்கள். ஊழியத்தில் அவர்களுக்குக் கிடைத்த சந்தோஷத்தைப் பற்றி அந்தத் தம்பதி சொன்னார்கள். தைவானில் ஊழியம் செய்ய இன்னும் நிறைய ஆட்கள் தேவைப்படுவதாகவும் சொன்னார்கள். இந்த வார்த்தைகளையும் அவர்களுக்காகவே சொன்னது போல் ச்சூங் க்யூங்-ஜூலி தம்பதி உணர்ந்தார்கள்.

ஜூலி சொல்கிறார்: “தைவானுக்கு போய் ஊழியம் செய்யணும்னு நாங்க ஆசப்பட்டோம். மாநாடு முடிஞ்சு வந்ததும் இதபத்தி யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம்; அங்க எப்படிப்பட்ட சவால்கள் வந்தாலும் அதை தைரியமா சமாளிக்க உதவி கேட்டோம். இருந்தாலும், அங்க போய் எப்படி வாழப்போறோங்ற பயம் இருந்துச்சு. ஆழமான தண்ணில முதல் தடவையா குதிக்கிற மாதிரி, ரொம்ப பயமா இருந்துச்சு!” பிரசங்கி 11:4-ல் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகள் அவர்களுக்கு உதவியது. எல்லாம் சாதகமாக அமையும்வரை காத்துக்கொண்டே இருந்தால் எதையும் சாதிக்க முடியாது  என்பதை அந்த வசனத்திலிருந்து அவர்கள் தெரிந்துகொண்டார்கள். ச்சூங் க்யூங் சொல்கிறார்: ‘இதுக்குமேல காத்துக்கிட்டு இருக்காம, உடனடியா நடவடிக்கை எடுக்கணும்னு முடிவு பண்ணோம்.’ அதனால், உருக்கமாக ஜெபம் செய்தார்கள். நிறைய மிஷனரிகளுடைய அனுபவங்களைப் படித்தார்கள். தைவானுக்கு ஏற்கெனவே குடிமாறி போனவர்களிடம் அங்கிருக்கும் சூழ்நிலையைப் பற்றி ஈ-மெயில் மூலம் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர்களுடைய காரை விற்றார்கள். கட்டில், நாற்காலி போன்ற பொருள்களையும் விற்றார்கள். அந்த மாநாடு முடிந்து மூன்றே மாதத்தில் அவர்கள் தைவானுக்குச் சென்றார்கள்.

ஊழியத்தில் கிடைக்கும் சந்தோஷம்

தைவானில் ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படுவதால் 100-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் (21-க்கும் 73-க்கும் இடைப்பட்ட வயதினர்) வெளிநாடுகளில் இருந்து அங்கு சென்று ஊழியம் செய்கிறார்கள். ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, பிரான்சு, ஜப்பான், கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா என பல இடங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் 50-க்கும் அதிகமானவர்கள் திருமணமாகாத சகோதரிகள். இவர்கள் எல்லோரும் வைராக்கியமாக ஊழியம் செய்வதற்குக் காரணம் என்ன? இதைப் பற்றி அவர்களிடமே கேட்கலாம்.

லாரா

லாரா என்ற திருமணமாகாத சகோதரி, மேற்கு தைவானில் சேவை செய்து வருகிறார். இவர் கனடாவில் இருந்து வந்தவர். பத்து வருடங்களுக்கு முன்பு, அவருக்கு ஊழியம் செய்வது என்றாலே பிடிக்காது. லாரா சொல்கிறார்: “நான் கடமைக்காகதான் ஊழியத்துக்கு போவேன். அதனால, ரொம்ப நேரம் ஊழியம் செய்ய மாட்டேன்.” கனடாவில் இருந்த அவருடைய நண்பர்கள், மெக்சிகோவுக்குச் சென்று ஊழியம் செய்ய நினைத்தார்கள். ஒரு மாதம் தங்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய வரும்படி லாராவையும் கூப்பிட்டார்கள். “வாழ்க்கையில முதல் முறையா நிறைய நேரம் ஊழியம் செஞ்சேன். இப்படி செஞ்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” என்கிறார் லாரா.

அதனால் அவர் இன்னும் அதிகமாக ஊழியம் செய்யத் தூண்டப்பட்டார். சீன மொழியைக் கற்றுக்கொண்டார். கனடாவிலுள்ள சீன மொழி பேசும் சபைக்கு மாறிப்போனார். பிறகு சீனாவில் இருக்கும் தைவானுக்குப் போய் சேவை செய்ய தீர்மானித்தார். செப்டம்பர் 2008-ஆம் ஆண்டிலிருந்து அங்கு சேவை செய்து வருகிறார். “தைவானுக்கு போன புதுசுல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஆனா, ஒரு வருஷத்துல எல்லாம் பழகிடுச்சு. இப்போ திரும்பி என்னை கனடாவுக்கு போக சொன்னாகூட போக மாட்டேன்.” அங்கு ஊழியம் செய்வதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்? “ஊழியம்  செய்றதுல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. என்கிட்ட பைபிள் படிக்கிறவங்க மாற்றங்கள் செய்யும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. தைவானுக்கு மாறி வந்ததுனால எனக்கு இந்த மாதிரி நிறைய அனுபவம் கிடைச்சிருக்கு.”

புதிய மொழியில் ஊழியம்

ப்ரையன்-மிஷெல்

ப்ரையன்-மிஷெல் தம்பதி (கிட்டத்தட்ட 35 வயது) 8 வருடங்களாக தைவானில் ஊழியம் செய்கிறார்கள். இவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள். ஆரம்பத்தில் மொழி தெரியாததால், ஊழியத்தில் அதிகம் செய்யாததுபோல் உணர்ந்தார்கள். ஓர் அனுபவமுள்ள மிஷனரி சகோதரர் அவர்களிடம் இப்படிச் சொன்னார்: “நீங்க செய்றது ரொம்ப முக்கியமான வேலை. இங்க இருக்கிற நிறைய பேருக்கு யெகோவாவ பத்தி எதுவுமே தெரியாது. அவங்ககிட்ட ஒரு துண்டுப்பிரதிய கொடுத்தாகூட அதுலயிருந்து அவங்க யெகோவாவ பத்தி தெரிஞ்சிக்குவாங்க.” அந்தச் சகோதரர் சொன்னது, ஊழியத்தில் இன்னும் அதிகம் செய்ய அவர்களைத் தூண்டியது. இன்னொரு சகோதரர் அவர்களிடம் இப்படிச் சொன்னார்: “ஒரு மாநாட்லயிருந்து இன்னொரு மாநாடு வரைக்கும் [ஒருவேளை மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை] நீங்க எவ்ளோ முன்னேறியிருக்கீங்கனு யோசிச்சு பாருங்க. ஒவ்வொரு நாளும் எவ்ளோ முன்னேறி இருக்கீங்கனு பாக்காதீங்க. அப்படி பார்த்தா சோர்ந்துதான் போவீங்க.” போகப் போக அவர்கள் அந்த மொழியை நன்றாகக் கற்றுக்கொண்டார்கள். இப்போது திறமையாக ஊழியம் செய்கிறார்கள்.

புது மொழியைக் கற்றுக்கொண்டு, ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடத்திற்கு மாறிப்போக நினைப்பவர்கள் என்ன செய்யலாம்? முதலில், ஊழியம் செய்ய நினைக்கும் இடத்தைப் போய் பாருங்கள். அங்கு நடக்கும் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள், சகோதர சகோதரிகளோடு பழகிப் பாருங்கள், அவர்களோடு ஊழியம் செய்யுங்கள். “நற்செய்திய மக்கள் ஆர்வமா கேட்கிறதையும் சகோதர சகோதரிகள் அன்பா இருக்குறதையும் நீங்களே பார்க்கும்போது உடனே அங்க போய் ஊழியம் செய்ய தூண்டப்படுவீங்க, அதுல இருக்குற சவால்கள் உங்களுக்கு பெருசாவே தெரியாது” என்று ப்ரையன் சொல்கிறார்.

செலவுகளைச் சமாளிக்க...

க்றிஸ்டின்-மிஷெல்

தைவானுக்கு சென்று ஊழியம் செய்யும் நிறைய பேர் அவர்களுடைய செலவுகளைச் சமாளிக்க வித்தியாசமான வேலைகளைச் செய்கிறார்கள். சிலர் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள். க்றிஸ்டின்-மிஷெல் தம்பதி மீன் வியாபாரம் செய்கிறார்கள். க்றிஸ்டின் சொல்கிறார்: “இதுக்கு முன்னாடி நான் மீன் வியாபாரம் செஞ்சதே இல்ல. ஆனா, இந்த நாட்டுல இருக்கணும்னா ஏதாவது ஒரு வேலை செஞ்சுதான் ஆகணும்.” கொஞ்ச நாட்களிலேயே க்றிஸ்டினுக்கு நல்ல வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். செலவுகளைச் சமாளிக்க இந்த வேலை அவர்களுக்கு ரொம்பவே உதவியாக இருந்தது; அதிக நேரம் ஊழியம் செய்யவும் உதவியது.

சவால்களைச் சந்தோஷமாகச் சமாளியுங்கள்

வில்லியம்-ஜெனிஃபர் தம்பதி ஏழு வருடங்களாக தைவானில் சேவை செய்கிறார்கள். இவர்களும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள். வில்லியம் சொல்கிறார்: “புதுசா ஒரு மொழிய கத்துக்கிறது, பயனியர் செய்றது, சபை பொறுப்புகள கவனிக்கிறது, குடும்பத்த பாத்துக்கிறதுனு எல்லாத்தையும் சமாளிக்கிறது சிலநேரம் கஷ்டமா இருக்கும்.” இருந்தாலும் சந்தோஷமாகச் சேவை செய்ய எது அவர்களுக்கு உதவியது? எட்ட முடிந்த இலக்குகளை வைத்தார்கள். ஒரே நாளில் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியாது. அதனால், சீன மொழியை சீக்கிரம் கற்றுக்கொள்ள முடியாததை நினைத்து அவர்கள் சோர்ந்துபோகவில்லை. படிப்படியாக முன்னேற்றம் செய்தார்கள்.

வில்லியம்-ஜெனிஃபர்

‘யெகோவாவின் சேவையில் ஒரு இலக்கை அடைய நினைப்பது நல்லதுதான். ஆனால், அதில் வரும் சவால்களைச் சந்தோஷமாகச் சமாளிக்க வேண்டும்’ என்று ஒரு பயணக் கண்காணி வில்லியமிடம் சொன்னார். இந்த விஷயத்தை வில்லியமும் அவருடைய மனைவியும் பின்பற்றினார்கள்; வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்தார்கள்; மூப்பர்கள் கொடுத்த அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டார்கள். இவை எல்லாமே திறமையாக ஊழியம் செய்ய அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் பொழுதுபோக்கிற்கும் நேரம் ஒதுக்கினார்கள். “நாங்க இருந்த இடம் ரொம்ப அழகா இருக்கும், அத ரசிக்கிறதுக்குக்கூட நேரம் ஒதுக்குனோம்” என்று அவர் சொல்கிறார்.

மேகன் என்ற திருமணமாகாத சகோதரி, அமெரிக்காவிலிருந்து வந்து தைவானில் சேவை செய்கிறார். சீன மொழியை சரளமாகப் பேச இவர் இலக்கு வைத்திருந்தார். வில்லியம்-ஜெனிஃபர் தம்பதியைப் போலவே இவர் வைத்த இலக்கை அடைவதில் வரும் சவால்களைச் சந்தோஷமாகச் சமாளித்தார். தைவானில் இருக்கும் கௌஷ்யுங் என்ற மிகப்பெரிய  துறைமுகத்திற்கு, சகோதர சகோதரிகளோடு சென்று ஊழியம் செய்தார். பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வனுவாட்டு என பல இடங்களிலிருந்து வரும் மீனவர்களிடம் மேகன் சாட்சிக் கொடுத்தார். அவர் சொல்கிறார்: “அந்த மீனவர்கள் கொஞ்ச நேரம்தான் இங்க இருப்பாங்க. அதனால நாங்க அவங்களுக்கு உடனே பைபிள் படிப்பு ஆரம்பிச்சிடுவோம். நிறைய பேர் ஆர்வமா கேட்பாங்க. நாலஞ்சு பேருக்கு சேர்த்துகூட படிப்பு நடத்தியிருக்கேன்.” சீன மொழியைக் கற்றுக்கொள்வதைப் பற்றி மேகன் இப்படிச் சொல்கிறார்: “சீக்கிரமா அந்த மொழிய கத்துக்கணும்னு நான் நினைச்சேன், அப்படி நினைக்கும்போதெல்லாம், ‘உங்களால முடிஞ்சத செய்யுங்க, மீதிய யெகோவாகிட்ட விட்டுடுங்கனு’ ஒரு சகோதரர் சொன்னது எனக்கு ஞாபகம் வரும்.”

மேகன்

எங்கு ஊழியம் செய்வது?

கேத்தி, பிரிட்டனில் வாழ்ந்தார். ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடத்துக்குப் போக நினைத்தார். அவர் திருமணமாகாத சகோதரி. அதனால், எங்குச் சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தார். அதைப் பற்றி ஜெபம் செய்தார், நிறைய கிளை அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். அவருக்குக் கிடைத்த பதில்களை வைத்து தைவானுக்குப் போகத் தீர்மானித்தார்.

2004-ல் கேத்தி (31 வயது) தைவானுக்குக் குடிமாறிச் சென்றார். “காய்கறி, பழங்கள் எல்லாம் குறைஞ்ச விலையில எங்க கிடைக்கும்னு சகோதர சகோதரிகள்கிட்ட கேட்பேன். இப்படிச் செய்றதுனால நிறைய பணத்த மிச்சப்படுத்த முடியுது” என்று கேத்தி சொல்கிறார். அவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். இப்படி வாழ அவருக்கு எது உதவியது? “இருக்கிறத வெச்சு திருப்தியா வாழ நான் அடிக்கடி யெகோவாகிட்ட ஜெபம் பண்ணுவேன். நான் ஆசைப்பட்ட எல்லாம் எனக்கு கிடைக்கலனாலும் எனக்கு என்ன தேவையோ அதை யெகோவா கொடுத்திருக்கார். இப்படி எளிமையா வாழ்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா, என்னால ஊழியத்துக்கு முதலிடம் கொடுக்க முடியுது.”

கேத்தி

கேத்திக்கு தினம் தினம் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கிறது. “இங்க நிறைய பேர் நற்செய்தியை ஆர்வமா கேட்கிறாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கேத்தி சொல்கிறார். கேத்தி பயனியராகச் சேவை செய்த இடத்தில் ஆரம்பத்தில் இரண்டு சீன மொழி சபைகள்தான் இருந்தன. ஆனால், இப்போது அங்கு ஏழு சபைகள் இருக்கின்றன. “இத்தனை புதிய சபைகள் உருவாகுறத நேர்ல பார்க்கும்போதும் அதுக்கு யெகோவா என்னையும் பயன்படுத்தியிருக்காருனு நினைக்கும்போதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று அவர் சொல்கிறார்.

“என் சேவையகூட பெரிசா நினைச்சாங்க!”

ச்சூங் க்யூங்-ஜூலி தம்பதி இப்போது என்ன செய்கிறார்கள்? சீன மொழி அதிகம் தெரியாததால் ஆரம்பத்தில் சபையில் நிறைய பொறுப்புகளை எடுத்து செய்ய முடியாது என்று ச்சூங் க்யூங் கவலைப்பட்டார். ஆனால், மூப்பர்கள் அப்படி நினைக்கவில்லை. “நான் உதவி ஊழியரா இருந்ததுனால, எங்க சபை ரெண்டா பிரிஞ்சப்போ மூப்பர்கள் எனக்கு நிறைய பொறுப்புகள கொடுத்தாங்க. அப்பதான் உண்மையாவே தேவை அதிகம் இருக்கிற இடத்துல சேவை செய்ற சந்தோஷம் எனக்கு கிடைச்சுது. என் சேவையகூட பெரிசா நினைச்சாங்க!” என்று ச்சூங் க்யூங் சொல்கிறார். இப்போது அவர் ஒரு மூப்பராக சேவை செய்கிறார். ஜூலி சொல்கிறார்: “இப்போ நாங்க திருப்தியா சந்தோஷமா இருக்கோம். எதையோ சாதிச்ச மாதிரி இருக்கு. இதுக்கு முன்னாடி நாங்க இப்படி உணர்ந்ததே இல்ல. மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னுதான் வந்தோம். ஆனா எங்களுக்குதான் உதவி கிடைச்ச மாதிரி இருக்கு. இங்க கிடச்ச நிறைய அனுபவங்கள் எங்கள பலப்படுத்தியிருக்கு. இதெல்லாத்துக்கும் நாங்க யெகோவாவுக்கு ரொம்ப நன்றி சொல்றோம்.”

ஊழியம் செய்ய இன்னும் எத்தனையோ இடங்களில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டீர்களா, அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கிறீர்களா? நீங்கள் திருமணம் ஆகாதவரா, யெகோவாவுடைய சேவையில் இன்னும் அதிகம் செய்ய ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் ஒரு குடும்பத் தலைவரா, யெகோவாவுடைய சேவையில் குடும்பமாக இன்னும் அதிகம் செய்ய நினைக்கிறீர்களா? நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவரா, கடவுளுடைய சேவையில் நிறைய அனுபவம் இருக்கிறதா, அதை இன்னும் அதிகம் பயன்படுத்த விரும்புகிறீர்களா? ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடத்திற்கு மாறிப்போவதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

^ பாரா. 3 கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ என்ற புத்தகத்திலுள்ள அதிகாரம் 16-ல், பாராக்கள் 5-6-ஐ பாருங்கள்.