Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | இளைஞர்களுக்காக...

தனிமை உணர்வை சமாளிக்க...

தனிமை உணர்வை சமாளிக்க...

இது ஏன் கஷ்டம்

“எனக்கு ரெண்டு ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னாதான் இருப்பாங்க. ஆனா, என்னை மட்டும் தனியா விட்டுடுவாங்க. அவங்க ஜாலியா, என்னெல்லாம் செஞ்சாங்கனு எல்லாரும் பேசிக்குவாங்க. அதை கேக்கும்போது எனக்கு கஷ்டமா இருக்கும். ஒரு தடவை, அந்த பொண்ணுங்கள்ல ஒருத்திக்கு ஃபோன் பண்ணியிருந்தேன். ஃபோனை அவங்க வீட்டுல இருந்த ஒருத்தர் எடுத்தாங்க. என் ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேருமே சந்தோஷமா சிரிச்சு பேசிகிட்டு இருந்தது எனக்கு ஃபோன்ல கேட்டுச்சு. அதை கேட்டதே என்னை காயப்படுத்திடுச்சு. நான் ரொம்ப தனிமையா உணர்ந்தேன்.”—மரியா. *

நீங்கள் எப்போதாவது இப்படி உணர்ந்திருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தனிமையை சமாளிக்க பைபிளில் நிறைய டிப்ஸ் இருக்கிறது. முதலில், தனிமையைப் பற்றிய ஒருசில உண்மைகளை தெரிந்துகொள்ளலாம்.

சில உண்மைகள்

எல்லாருமே ஏதோ ஒரு சமயத்தில் தனிமையாக உணருவார்கள். ஒருவரை சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்தாலும், அவர் தனிமையாக உணரலாம். ஏன்? ஏனென்றால் ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் எத்தனை பேர் உண்மையான நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

தனிமை உணர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். தனிமையைப் பற்றி 148 வித்தியாசமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதனுடைய முடிவுகள் இதை சொல்கிறது: ஒருவர் யாரோடும் பழகாமல் இருந்தால் அவருடைய ஆயுட்காலம் குறைவதற்கும் மற்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, இதனால் “15 சிகெரெட் குடிப்பதற்கு சமமான பாதிப்புகள் வரும்,” “உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளைவிட 2 மடங்கு பாதிப்புகள் ஏற்படும்.”

தனிமை உணர்வு ஆபத்தில் கொண்டுபோய் விடலாம். தனிமையாக இருப்பதால் யாரை வேண்டுமானாலும் நண்பர்களாக ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அலன் என்ற இளைஞர் இப்படி சொல்கிறார்: “நம்மோடு பழகுவதற்கு யாருமே இல்லனா, நமக்கு ஃபிரெண்ட்ஸ் கிடைக்க மாட்டாங்களானு ஏங்குவோம். ஃபிரெண்ட்ஸே இல்லாம இருக்கிறதுக்கு, யாரோ ஒருத்தர ஃபிரண்டா வைச்சுக்கலாம்னு நினைப்போம். ஆனா அது பிரச்சினையிலதான் முடியும்.”

தொழில்நுட்பம் தனிமை உணர்வை போக்காது. நட்டலீ என்ற 24 வயதுள்ள பெண் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “நான் ஒரு நாளைக்கு 100 பேருக்கு மெயில் அனுப்பினாலும் மெசேஜ் அனுப்பினாலும் தனியா இருக்கிற மாதிரிதான் உணர்வேன்.” டைலர் என்ற இன்னொரு இளைஞர் இப்படி சொல்கிறார்: “மொபைல்ல மெசேஜ் அனுப்புறது நொறுக்குத் தீனி சாப்பிடுற மாதிரி, ஆனா நேர்ல பாத்து பேசுறது ஃபுல் மீல்ஸ் சாப்பிடுற மாதிரி. நொறுக்கு தீனி ருசியா இருக்கலாம், ஆனா ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டாதான் வயிறு நிறையும்.”

நீங்கள் என்ன செய்யலாம்?

நல்லதையே நினையுங்கள். உங்கள் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ஒரு நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்களை கூப்பிடவில்லை. அந்த நிகழ்ச்சியில் அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை வெப்சைட்டில் போட்டிருக்கிறார்கள். நீங்கள் அந்த ஃபோட்டோவை பார்க்கிறீர்கள். உங்களுக்கு இப்போது எப்படி இருக்கும்? ‘வேண்டுமென்றே என்னை கூப்பிடவில்லை’ என நினைத்துக் கோபப்படுவீர்களா? அல்லது அதை நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்வீர்களா? உங்களை கூப்பிடாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதைப் பற்றி யோசித்து பாருங்கள், உங்கள் நண்பர்களை தவறாக நினைக்காதீர்கள். பொதுவாக தனிமை உணர்வு ஏற்படுவதற்கு நாம் யோசிக்கும் விதம்தான் காரணம்.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 15:15.

நீங்களாகவே எதையும் கற்பனை செய்யாதீர்கள். தனிமை உணர்வு உங்களை வாட்டும்போது, நீங்கள் இப்படி நினைக்கலாம்: ‘என்னை யாருமே எங்கேயும் கூப்பிடுறது இல்லை,’ ‘என்னை எப்பவுமே எல்லாரும் ஒதுக்கிடுறாங்க.’ இதுபோன்ற எண்ணங்கள் பெரும்பாலும் உங்களுடைய யூகங்களாக இருக்கலாம். இந்த விஷயங்களையே யோசித்துக் கொண்டிருந்தால், தனிமை என்ற புதைக்குழியில் மாட்டிக்கொள்வீர்கள். இதனால் உங்களுக்கு நிறைய பாதிப்புகள் வரும். உங்களை எல்லாரும் ஒதுக்கிவிட்டார்கள் என்று உணருவீர்கள், அதனால் யாரோடும் பழகாமல் தனியாக இருப்பீர்கள். அப்போது, உங்களுக்கு தனிமை அதிகமாகும், உங்களை எல்லாரும் ஒதுக்குகிறார்கள் என்ற உணர்வு இப்போது இன்னும் அதிகமாகும்.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 18:1.

வயதில் மூத்தவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். தாவீது, யோனத்தான் என்பவர்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. யோனத்தானை முதல்முறை சந்திக்கும்போது தாவீது ஒரு இளைஞராக இருந்தார். யோனத்தான் தாவீதைவிட 30 வயது பெரியவர். இருந்தாலும், அவர்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். (1 சாமுவேல் 18:1) உங்களுக்கும் வயதில் மூத்த நண்பர்கள் கிடைக்கலாம். கியாரா என்ற 21 வயது பெண் இப்படி சொல்கிறாள்: “பெரியவங்களோடு நட்பு வைச்சிருக்கிறத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். என்னோட ஃபிரெண்ட்ஸ் ஒருசில பேர் என்னைவிட 10-20 வயசு பெரியவங்க. அவங்க தெளிவா யோசிப்பாங்க, எந்தவொரு விஷயத்தையும் சரியா செய்வாங்க.”—பைபிள் ஆலோசனை: யோபு 12:12.

தனியாக இருக்கும் நேரத்தை நன்றாக பயன்படுத்துங்கள். உங்களோடு யாருமில்லாத சமயங்களில் தனிமை உங்களை வாட்டி வதைக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் தனிமையாக உணர வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் இயேசுவிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் எல்லாரோடும் சகஜமாக பழகினார். இருந்தாலும் ஒருசில சமயங்களில் தனியாக இருக்க விரும்பினார். (மத்தேயு 14:23; மாற்கு 1:35) நீங்களும் தனியாக இருக்கும் நேரங்களை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள், அந்த சமயங்களில் உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். இப்படி செய்யும்போது அருமையான நபராக ஆவீர்கள். அப்போது உங்களோடு நட்பு வைத்துக்கொள்ள நிறைய பேர் ஆசைப்படுவார்கள்.—நீதிமொழிகள் 13:20. (g15-E 04)

^ பாரா. 4 இந்த கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.