Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து | கவலை

கவலை

கவலை

கவலைப்படுவதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவி செய்யும்.

கவலைப்படுவது சரியா?

உண்மை

இந்த உலகத்தில், நாளை என்ன நடக்கும் என்று நம்மால் சொல்லவே முடியாது. அதனால், பல கவலைகள் நம்மை சரமாரியாக தாக்கலாம். அது யாரையும் விட்டுவைப்பதில்லை. கவலைப்படும் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே இருப்பார், நிம்மதி இல்லாமல் தவிப்பார், என்ன செய்வதென்றே தெரியாமல் படபடப்புடன் இருப்பார்.

பைபிள் என்ன சொல்கிறது

தாவீது என்ற ராஜாவுக்கும் மனதில் கவலை இருந்தது. “எத்தனை நாளைக்குத்தான் இதயத்தில் வேதனையைச் சுமக்க வேண்டும்?” என்று வருத்தப்பட்டார். (சங்கீதம் 13:2, NW) ஆனால், கவலையை அவர் எப்படி சமாளித்தார்? அவர் கடவுளிடம் ஜெபம் செய்தார். தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தார். தன்மீது கடவுள் அன்பு வைத்திருக்கிறார் என்றும் தனக்கு நிச்சயம் உதவுவார் என்றும் நம்பினார். (சங்கீதம் 13:5; 62:8) அதேபோல், நம் மனதில் இருக்கும் எல்லா கவலையையும் தன்னிடம் கொட்டிவிட வேண்டும் என்று கடவுளும் ஆசைப்படுகிறார். அதனால்தான், கடவுளைப் பற்றி பைபிளில் 1 பேதுரு 5:7 இப்படி சொல்கிறது: “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் [கடவுள் மேல்] வைத்துவிடுங்கள்.”

நம்முடைய அன்பானவர்கள்மீது நமக்கிருக்கும் கவலையை குறைக்க ஒரு வழி அவர்களுக்கு உதவி செய்வதுதான்

கவலையை சமாளிக்க நடைமுறையான சில விஷயங்களையும் நாம் செய்ய வேண்டும். பைபிள் எழுத்தாளர்களில் ஒருவரான பவுல் என்ன செய்தார் என்று பார்க்கலாம். அவர் ‘எல்லா சபைகளையும் நினைத்து கவலைப்பட்டார்.’ (2 கொரிந்தியர் 11:28) ஆனால், அதை நினைத்துக்கொண்டே அவர் சும்மா இருந்துவிடவில்லை. சபையில் இருந்த ஆட்களுக்குத் தேவையான உற்சாகத்தையும் ஆறுதலையும் தந்தார். நாமும் சிலரை நினைத்து கவலைப்படலாம். அது நல்லதுதான். ஏனென்றால், அப்போதுதான் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பவுலைப் போலவே நாமும் நினைப்போம். ‘யாரை நினைத்தும் எனக்கு கவலையே இல்லை’ என்று நாம் சொன்னால், யார்மீதும் நமக்கு அக்கறை இல்லை என்றுதான் அர்த்தம்.—நீதிமொழிகள் 17:17.

“உங்களுடைய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், மற்றவர்களுடைய விஷயங்களிலும் ஆர்வம் காட்டுங்கள்.”பிலிப்பியர் 2:4.

அளவுக்கு அதிகமாக கவலைப்படாமல் இருப்பது எப்படி?

உண்மை

மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் முன்பு செய்த தவறுகளை நினைத்து... எதிர்காலத்தை நினைத்து... பணப் பிரச்சினைகளை நினைத்து... கவலைப்படலாம். *

பைபிள் என்ன சொல்கிறது

முன்பு செய்த தவறுகளை நினைத்து கவலை: கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு, நிறைய பேர் குடிகாரர்களாக, கொள்ளையடிக்கிறவர்களாக, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களாக, திருடர்களாக இருந்தார்கள். (1 கொரிந்தியர் 6:9-11.) ஆனால், அவர்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளை நினைத்து கவலைப்படுவதற்கு பதிலாக, தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்கள். கடவுள் அவர்கள்மீது கருணை காட்டி மன்னித்துவிடுவார் என்று உறுதியாக நம்பினார்கள். இதைப் பற்றி பைபிளில் சங்கீதம் 130:4 இப்படி சொல்கிறது: “[கடவுளிடத்தில்] மன்னிப்பு உண்டு.”

நாளை என்ன நடக்கும் என்ற கவலை: “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:25, 34) அதாவது, ‘இன்றைக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்று மட்டும் யோசியுங்கள். நாளைக்கு என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், மனதில் பல விஷயங்களை போட்டு குழப்பிக் கொண்டிருந்தால், நம்மால் எதையுமே சரியாக யோசிக்க முடியாது. அவசரப்பட்டு தப்பு தப்பாக ஏதாவது முடிவெடுத்து விடுவோம். இதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: சில சமயங்களில், நாம் கவலைப்படும் அளவுக்கு எதிர்காலத்தில் எதுவும் நடந்துவிடாது. அதனால், அப்படி கவலைப்படுவது வீண்தான்!

பணத்தை பற்றிய கவலை: ஒருசமயம், ஞானி ஒருவர் கடவுளிடம் இப்படி வேண்டினார்: ‘எனக்கு செல்வமும் வேண்டாம், வறுமையும் வேண்டாம்.’ (நீதிமொழிகள் 30:8, பொது மொழிபெயர்ப்பு) அதாவது, திருப்தியாக இருந்தால் மட்டும் போதும் என்று வேண்டினார். ஏனென்றால், இருப்பதை வைத்து திருப்தியாக வாழ நினைப்பவர்களை கடவுள் ஆசீர்வதிப்பார். பைபிளில் எபிரெயர் 13:5 இப்படி சொல்கிறது: “பண ஆசையில்லாமல் வாழுங்கள்; உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்; ஏனென்றால், ‘நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்’ என்று அவர் [கடவுள்] சொல்லியிருக்கிறார்.” பணம்கூட நம்மை கைவிட்டுவிடும். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை வைத்து எளிமையான வாழ்க்கை வாழும்போது அவர் நம்மை ஒருநாளும் கைவிடமாட்டார்.

“நல்லோரைத் தேவன் கைவிடுவதை நான் பார்த்ததில்லை. நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.”சங்கீதம் 37:25, ஈஸி டு ரீட் வர்ஷன்.

கவலையில்லா வாழ்க்கை கிடைக்குமா?

மக்கள் என்ன சொல்கிறார்கள்

“கவலை நிறைந்த ஒரு புதிய காலகட்டத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைக்கிறோம்” என்று பத்திரிகையாளர் ஹாரியட் கிரீன், தி கார்டியன் பத்திரிகையில் 2008-ம் வருஷம் எழுதினார். “கவலை, அமெரிக்க நாட்டு மக்களை இதுவரை இல்லாத அளவுக்கு ஆட்டிப்படைக்கிறது” என்று பாட்ரிக் ஓகானர் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில் 2014-ம் வருஷம் எழுதினார்.

பைபிள் என்ன சொல்கிறது

“மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” (நீதிமொழிகள் 12:25) நமக்கு சந்தோஷத்தை தரும் ‘நல்ல வார்த்தை’ எது? கடவுளுடைய ஆட்சி சீக்கிரத்தில் வரப்போகிறது என்ற அந்த வார்த்தைதான்! (மத்தேயு 24:14) பிரச்சினைகளை சமாளிக்க இன்று நாம் தனியாக போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், கடவுளுடைய ஆட்சி அதையெல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்துவிடும்! நமக்கு கவலையை தரும் நோயும் சாவும்கூட இருக்காது! நம்முடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.”—வெளிப்படுத்துதல் 21:4. ▪ (g16-E No. 2)

“நம்பிக்கை அளிக்கிற கடவுள், உங்களுடைய விசுவாசத்தின் காரணமாக உங்களை எல்லாவிதச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக.” ரோமர் 15:13.

^ பாரா. 10 கவலைப்படுவதால் வரும் மனநோய்களுக்கு மருத்துவ உதவியை பெறுவது நல்லது. விழித்தெழு! எந்த சிகிச்சையையும் பரிந்துரை செய்வது கிடையாது.