Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேட்டி | யான்-டெர் ஷுவ்

கருவியல் நிபுணர் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்...

கருவியல் நிபுணர் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்...

பேராசிரியர் யான்-டெர் ஷுவ், தைவானில் உள்ள நேஷனல் பிங்டங் யுனிவர்சிட்டி ஆஃப் சைன்ஸ் அண்டு டெக்னாலஜியில், கருவியல் ஆராய்ச்சி துறை தலைவராக இருக்கிறார். ஒரு காலத்தில், ‘உயிர் தானாகவே தோன்றியது’ (பரிணாமம்) என்று இவர் நம்பினார். ஆனால், ஒரு விஞ்ஞானியாக ஆன பிறகு, அவருடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அதற்கான காரணத்தை விழித்தெழு! நிருபரிடம் மனம் திறந்து பேசுகிறார்.

உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

நான் 1966-ல் தைவானில் பிறந்தேன். அங்குதான் வளர்ந்தேன். என்னுடைய அப்பா-அம்மா தாவோ மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் சிலைகளையும் எங்களுடைய முன்னோர்களையும் வணங்கினோம். ஆனால், கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நாங்கள் நம்பியதே இல்லை.

உயிரியல் பாடத்தை படிக்கிற ஆசை உங்களுக்கு எப்படி வந்தது?

சின்ன வயதிலிருந்தே செல்ல பிராணிகளை வளர்க்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். மிருகங்கள் படும் கஷ்டத்தையும் மட்டுமல்ல, மனிதர்கள் படும் கஷ்டத்தையும் போக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆரம்பத்தில், கால்நடை மருத்துவம் படித்தேன். பிறகு, கரு எப்படி வளர்ச்சி அடைகிறது (கருவியல்) என்பதைப் பற்றியும் படித்தேன். உயிர் எப்படி தோன்றியதை என்பதை கண்டுபிடிக்க இதைப் படித்தால் போதும் என்று நினைத்தேன்.

படிக்கும்போது நீங்கள் ஏன் பரிணாமத்தை நம்பினீர்கள் என்று சொல்ல முடியுமா?

என்னுடைய பேராசிரியர்கள் அதைத்தான் சொல்லிக்கொடுத்தார்கள். அதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் சொன்னார்கள். அதனால் நானும் அதை நம்பினேன்.

பைபிளை படிக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, மக்கள் நிறைய கடவுள்களை வணங்குகிறார்கள். இருந்தாலும், ஒரே ஒரு கடவுள்தான் எல்லா கடவுளையும்விட பெரியவராக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், அவர் யார் என்று தெரியவில்லை. இரண்டாவது காரணம், பைபிள் ஒரு சிறந்த புத்தகம் என்று எனக்குத் தெரியும். அதனால், அதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள முயற்சி எடுத்தேன்.

1992-ல் பெல்ஜியம் கேத்தலிக் யுனிவர்சிட்டி ஆஃப் லூவனில் நான் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது, ஒரு கத்தோலிக்க சர்ச்சுக்கு போனேன். அங்கிருந்த ஒரு பாதிரியிடம் பைபிளை புரிந்துகொள்ள உதவி கேட்டேன். ஆனால், அவர் சொல்லித்தர முடியாது என்று சொல்லிவிட்டார்.

கடவுளைப் பற்றி எப்படி தெரிந்துகொண்டீர்கள்?

இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, நான் பெல்ஜியமில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது ரூத் என்ற பெண்ணை சந்தித்தேன். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி, போலந்து நாட்டைச் சேர்ந்தவர். கல்லூரி மாணவர்களுக்கு கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுப்பதற்காக சீன மொழியை கற்றுக்கொண்டவர். அவரைப் பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னுடைய வேண்டுதலுக்கு பதில் கிடைத்த மாதிரி இருந்தது.

பைபிள் ஒரு அறிவியல் புத்தகம் கிடையாது. ஆனால், அறிவியல் சம்பந்தமாக பைபிள் சொல்கிற எல்லா விஷயங்களும் உண்மையாக இருக்கிறது என்று ரூத் சொல்லிக்கொடுத்தார். உதாரணத்துக்கு, தாவீது என்ற பைபிள் எழுத்தாளர் இப்படி சொன்னார்: “நான் கருவாக இருந்தபோதே உங்களுடைய [கடவுளுடைய] கண்கள் என்னைப் பார்த்தன; என்னுடைய எல்லா உறுப்புகளைப் பற்றியும் உங்களுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது, அவை உருவாவதற்கு முன்பே அவற்றின் வளர்ச்சியைப் பற்றி விவரமாக எழுதப்பட்டிருந்தது.” (சங்கீதம் 139:16NW) இதை ஒரு பாடலாக தாவீது எழுதியிருந்தாலும், அவர் சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை! நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் உருவாகுவதற்கு முன்பாக, அது எப்படி உருவாக வேண்டும் என்று ‘விவரமாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.’ பைபிள் கடவுளிடம் இருந்து வந்த புத்தகம்தான் என்பதை புரிந்துகொள்ள இந்த உண்மை எனக்கு உதவி செய்தது. அதோடு, ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார், அவருடைய பெயர் யெகோவா என்பதையும் நான் புரிந்துகொண்டேன்.1 1

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நீங்கள் நம்புவதற்கு என்ன காரணம்?

ஆராய்ச்சி செய்வதன் முக்கியமான நோக்கமே, உண்மை என்ன என்று தெரிந்துகொள்வதுதான்; நாம் ஏற்கெனவே நம்பிக்கொண்டிருக்கும் விஷயங்களுக்கு ஆதாரங்களை தேடுவது அல்ல. கரு வளர்வதை பற்றி நான் படித்தது, உயிர் உருவானது சம்பந்தமாக அதுவரை நான் நம்பின விஷயத்தை மாற்றியது. எல்லாவற்றையும் படைத்த ஒருவர் இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். உதாரணத்துக்கு, கார் தயாரிக்கும் ஒரு பெரிய கம்பெனியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு காரை தயாரிப்பதற்கு முன்பாக எந்தெந்த பாகங்களை எந்த இடத்தில் வைப்பது, எப்போது வைப்பது என்றெல்லாம் யோசிப்பார்கள். ஒருவிதத்தில் கரு முட்டையின் வளர்ச்சியும் அப்படித்தான். ஒரு கார் தயாரிப்பதற்கே இவ்வளவு யோசிக்க வேண்டும் என்றால் ஒரு கருவின் பாகங்கள் எப்போது, எப்படி வளர்ச்சி அடைய வேண்டும் என்று எவ்வளவு யோசிக்க வேண்டும்!

ஒரேவொரு கருவுற்ற செல்லில் இருந்துதான் இதெல்லாம் ஆரம்பிக்கிறது, இல்லையா?

நீங்கள் சொல்வது சரிதான். கண்ணால் பார்க்க முடியாத அந்த ஒரே ஒரு செல் பிரிய ஆரம்பிக்கும். ஒன்று இரண்டாக... இரண்டு நாலாக... என எல்லா செல்களும் இரண்டு மடங்காக பிரிய ஆரம்பிக்கும்; 12-லிருந்து 24 மணிநேரத்துக்கு ஒரு முறை இது நடக்கும். இப்படி பிரிய ஆரம்பிக்கும்போது, ‘ஸ்டெம்’ செல்கள் உருவாகும்.2 2 இரத்தம், எலும்பு, நரம்பு செல்கள் என ஒரு குழந்தை உருவாவதற்கு தேவையான கிட்டத்தட்ட 200 வகையான செல்களை ஸ்டெம் செல்கள் உருவாக்கி கொடுக்கிறது.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று புரிந்துகொள்வதற்கு கருவை ஆராய்ச்சி செய்தது எனக்கு உதவியாக இருந்தது

அந்த செல்கள் எல்லாம் சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான முறையில் வளர வேண்டும். முதலில், செல்கள் திசுக்களாக வளர்ச்சி அடைகிறது; அந்த திசுக்கள் உடல் உறுப்புகளாக வளருகிறது. இந்த வளர்ச்சிகள் எல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எந்த மனிதனாவது எழுதி வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! ஆனால், கருவில் நடக்கும் இந்த எல்லா வளர்ச்சியும் டி.என்.ஏ-வில் தெளிவாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஆராயும்போது, கடவுள்தான் எல்லாவற்றையும் அழகாக செய்திருக்கிறார் என்று அடித்து சொல்வேன்!

ஒரு யெகோவாவின் சாட்சியாக மாற என்ன காரணம்?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அன்புதான் காரணம். இயேசு இப்படி சொன்னார்: “நீங்கள் . . . அன்பை ஒருவர்மீது ஒருவர் காட்டினால் . . . என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) அன்புக்கு இனம், நிறம், கலாச்சாரம் எதுவுமே தெரியாது. யெகோவாவின் சாட்சிகளிடம்தான் இப்படிப்பட்ட அன்பை நான் பார்த்திருக்கிறேன். அந்த அன்பை நானும் ருசித்திருக்கிறேன். ▪ (g16-E No. 2)

^ 2. பரிசோதனை செய்வதற்கோ அல்லது படிப்பதற்கோ இவர் மனித கருவுற்ற செல்களை பயன்படுத்துவது இல்லை.