Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

காது கேட்காததால் நான் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் இருக்கவில்லை

காது கேட்காததால் நான் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் இருக்கவில்லை

1941-ஆம் வருஷம் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது எனக்கு 12 வயது. ஆனால், 1946 வரைக்கும் பைபிள் சத்தியங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு என்ன காரணம்? என்னைப் பற்றி சொல்கிறேன், கேளுங்கள்.

சுமார் 1910-ல், என் அப்பா அம்மா, ஜார்ஜியாவிலுள்ள டிபிலிஸி என்ற ஊரிலிருந்து கனடாவுக்குக் குடிமாறினார்கள். மேற்கு கனடா, சஸ்காட்செவனில் இருக்கிற பெல்லி என்ற கிராமத்தில், ஒரு சிறிய பண்ணை வீட்டில் அவர்கள் வாழ்ந்தார்கள். நான் 1928-ல் பிறந்தேன். என்னோடு பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர், அதில் நான்தான் கடைசி. நான் பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே அப்பா இறந்துவிட்டார். நான் குழந்தையாக இருந்தபோதே அம்மாவும் இறந்துவிட்டார். பிறகு கொஞ்சக் காலத்திலேயே, என் பெரிய அக்கா லூஸியும் இறந்துவிட்டார். அப்போது அவருக்கு 17 வயதுதான்! அதனால், என்னையும் என்னோடு பிறந்தவர்களையும் என் மாமா நிக் கவனித்துக்கொண்டார்.

நான் ரொம்ப சின்னப் பையனாக இருந்தபோது, நான் ஒரு குதிரையின் வாலை பிடித்து இழுப்பதை என் குடும்பத்தில் இருந்தவர்கள் பார்த்தார்கள். குதிரை என்னை உதைத்துவிடுமோ என்ற பயத்தில், அப்படி இழுப்பதை நிறுத்தச் சொல்லி அவர்கள் சத்தமாகக் கத்தினார்கள். நான் குதிரையைப் பார்த்தபடி இருந்ததால், என் பின்னாலிருந்து அவர்கள் கத்தியது எனக்குக் கேட்கவில்லை. நல்லவேளை குதிரை என்னை எதுவும் செய்யவில்லை. எனக்குக் காது கேட்காத விஷயம் அப்போதுதான் என் குடும்பத்தில் இருந்தவர்களுக்குத் தெரிந்தது.

காது கேட்காதவர்களுக்கான பள்ளியில் என்னைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் சொன்னார். அதனால், சஸ்காட்செவனில் உள்ள சஸ்கடூன் என்ற நகரத்தில் இருந்த காது கேட்காதவர்களுக்கான பள்ளியில் என் மாமா என்னைச் சேர்த்தார். அப்போது எனக்கு வெறும் 5 வயதுதான்! அதோடு, எங்கள் வீட்டிலிருந்து அந்தப் பள்ளி ரொம்ப தூரத்தில் இருந்ததால், எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும்தான் நான் வீட்டுக்குப் போவேன். கடைசியில், நான் சைகை மொழியைக் கற்றுக்கொண்டேன், மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து சந்தோஷமாக விளையாடினேன்.

பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டேன்

1939-ல், என் 2-வது அக்கா மரியன், பில் டேனியெல்சக் என்பவரைக் கல்யாணம் செய்தார். அதற்குப் பிறகு, அவர்கள் என்னையும் என் கடைசி அக்கா ஃப்ரான்செசையும் கவனித்துக்கொண்டார்கள். அவர்கள்தான் முதல் முதலில் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். பைபிளிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை, என்னுடைய கோடை விடுமுறை சமயத்தில் எனக்குச் சொல்லித்தந்தார்கள். அதற்காக அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள். அவர்களுக்குச் சைகை மொழி தெரியாததால் எங்களால் நன்றாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிற விஷயங்களை நான் உண்மையிலேயே நேசித்தேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். பைபிள் சொல்கிற விஷயங்களுக்கும், அவர்கள் செய்கிற விஷயங்களுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று நான் புரிந்துகொண்டேன். அதனால், அவர்களோடு ஊழியத்துக்குப் போனேன். கொஞ்சக் காலத்திலேயே, ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்பட்டேன். பிறகு, செப்டம்பர் 5, 1941-ல், கிணற்றுத் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த ஒரு ஸ்டீல் தொட்டியில் பில் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அந்தத் தண்ணீர் ரொம்ப ஜில்லென்று இருந்தது!

1946-ல், ஒஹாயோ, கிளீவ்லாண்டில் நடந்த ஒரு மாநாட்டில் காது கேட்காதவர்களோடு

1946-ல் கோடை விடுமுறைக்காக நான் வீட்டுக்கு வந்தபோது, அமெரிக்கா, ஒஹாயோ, கிளீவ்லாண்டில் நடந்த ஒரு மாநாட்டுக்கு நாங்கள் போனோம். முதல் நாளன்று, நான் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, என் 2 அக்காக்களும் குறிப்புகள் எழுதி காட்டினார்கள். ஆனால் 2-வது நாளன்று, சைகை மொழி தொகுதி ஒன்று அங்கே இருந்ததையும், ஒருவர் அதை மொழிபெயர்த்துக் கொண்டிருந்ததையும் பார்த்தபோது, நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். என்னால் நிகழ்ச்சிகளை நன்றாக அனுபவிக்க முடிந்தது. கடைசியில், பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டது எனக்கு அதிக சந்தோஷத்தைத் தந்தது.

பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தேன்

அது இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்திருந்த சமயம். அப்போது, மக்கள் மத்தியில் நாட்டுப்பற்று அதிகமாக இருந்தது. பள்ளியில் என் விசுவாசத்தை விட்டுத்தரக் கூடாது என்ற முடிவோடு நான் மாநாட்டிலிருந்து வந்தேன். அதனால், கொடி வணக்கம் செலுத்துவதையும், சைகை மொழியில் தேசிய கீதம் பாடுவதையும், பண்டிகைகள் கொண்டாடுவதையும் நிறுத்தினேன். என்கூட பள்ளியில் படிக்கும் பிள்ளைகளோடு சேர்ந்து சர்ச்சுக்குப் போவதையும் நிறுத்தினேன். இதெல்லாம் என் பள்ளியில் வேலை செய்தவர்களுக்குப் பிடிக்காததால், அவர்கள் என்னைப் பயமுறுத்தப் பார்த்தார்கள். அதுமட்டுமல்ல, என் மனதை மாற்ற நிறைய பொய்களையும் சொன்னார்கள். நடந்த எல்லாவற்றையும் பள்ளி மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்ததால், அவர்களுக்குச் சாட்சி சொல்ல நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. லேரி ஆன்ட்ரெஸோஃப், நார்மென் டிட்ரிக், எமில் ஷ்னைடர் உட்பட சில மாணவர்கள் கடைசியில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எல்லாரும் இன்றும் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள்.

மற்ற ஊர்களுக்குப் போகும்போது, அங்கிருந்த காது கேட்காதவர்களுக்குச் சாட்சி கொடுக்க எப்போதும் முயற்சி செய்திருக்கிறேன். ஒரு சமயம், மான்ட்ரீல் நகரத்தில், காது கேட்காதவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு இடத்துக்குப் போனேன். அங்கே, ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருந்த எடி டாகர் என்ற இளைஞருக்குச் சாட்சி கொடுத்தேன். சாகும்வரை அவர் கியுபெக்கிலுள்ள லவால் என்ற நகரத்தில் இருக்கிற சைகை மொழி சபையில் சேவை செய்தார். போன வருஷம்தான் அவர் இறந்துபோனார். க்வான் ஆர்டனாஸ் என்பவருக்கும் சாட்சி கொடுத்தேன். பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களெல்லாம் உண்மைதானா என்பதை உறுதி செய்துகொள்ள, அன்றிருந்த பெரோயா நகர மக்களைப் போல அவரும் ஆராய்ச்சி செய்து படித்தார். (அப். 17:10, 11) கடைசியில், அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனார். சாகும்வரை, ஒன்டாரியோ, ஒட்டாவாவில் உள்ள சபையில் மூப்பராகச் சேவை செய்தார்.

1950-களின் ஆரம்பத்தில், தெரு ஊழியம் செய்தபோது

1950-ல், நான் வான்கோவர் நகரத்துக்குக் குடிமாறினேன். காது கேட்காதவர்களுக்குச் சாட்சி கொடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், காது கேட்கும் ஒரு பெண்ணுக்குச் சாட்சி கொடுத்ததை என்னால் மறக்கவே முடியாது. அவருடைய பெயர் க்ரிஸ் ஸ்பைஸர்; ஒரு நாள் அவரை நான் தெருவில் சந்தித்தேன். பத்திரிகைகளுக்கான சந்தாவை ஏற்றுக்கொண்டதோடு, தன் கணவர் கேரியையும் வீட்டில் வந்து பார்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதனால், அவர் வீட்டுக்குப் போனேன். குறிப்புகள் எழுதுவதன் மூலம் நாங்கள் பல மணி நேரம் பேசிக்கொண்டோம். அதற்குப் பிறகு, பல வருஷங்களுக்கு நான் அவர்களைப் பார்க்கவே இல்லை. ஆனால் ஒரு நாள், ஒன்டாரியோ, டோரான்டோவில் நடந்த ஒரு மாநாட்டில் அவர்கள் என்னிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டபோது, எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது! கேரி அன்று ஞானஸ்நானம் எடுத்தார். தொடர்ந்து பிரசங்கிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன். ஏனென்றால், நாம் விதைக்கும் விதை எப்போது, எங்கே முளைக்கும் என்று நமக்குத் தெரியாது.

பிறகு, மறுபடியும் சஸ்கடூனுக்குப் போனேன். அங்கே, ஜன் மற்றும் ஜோன் ரோதென்பெர்கர் என்ற காது கேட்காத இரட்டை பெண் பிள்ளைகளுடைய அம்மாவைச் சந்தித்தேன். அந்தப் பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு எடுக்கும்படி அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். நான் படித்த அதே காது கேட்காதவர்களுக்கான பள்ளியில்தான் அவர்களும் படித்தார்கள். தங்களுக்குத் தெரிந்த பைபிள் சத்தியங்களை கூடப்படிக்கிறவர்களிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். கடைசியில், அவர்களுடைய வகுப்பில் படித்த மாணவர்களில் 5 பேர் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். அவர்களில் யூனிஸ் கோலென் என்பவரும் ஒருவர். காது கேட்காதவர்களுக்கான பள்ளியில், நான் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தபோதுதான் யூனிசை முதல் முதலில் சந்தித்தேன். அந்தச் சமயத்தில், எனக்கு ஒரு மிட்டாயைக் கொடுத்துவிட்டு, ‘நாம் நண்பர்களாக இருக்கலாமா’ என்று யூனிஸ் கேட்டாள். பிறகு, அவள் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவளாக ஆனாள், என் மனைவியாக ஆனாள்!

1960 மற்றும் 1989-ல் யூனிசோடு

யூனிஸ் பைபிள் படிப்பது அவளுடைய அம்மாவுக்குத் தெரியவந்தபோது, பள்ளி முதல்வரிடம் சொல்லி எப்படியாவது அதை நிறுத்த வேண்டும் என்று அவர் முயற்சி செய்தார். பைபிள் படிப்புக்காக யூனிஸ் வைத்திருந்த புத்தகங்களைக்கூட அந்தப் பள்ளி முதல்வர் எடுத்துக்கொண்டார். இருந்தாலும், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் யூனிஸ் தீர்மானமாக இருந்தாள். ஞானஸ்நானம் எடுக்கப்போவதாக அவள் தன் அப்பா அம்மாவிடம் சொன்னபோது, “நீ யெகோவாவின் சாட்சியா ஆனா, வீட்ட விட்டு போயிடணும்!” என்று அவர்கள் சொன்னார்கள். அதனால், தன் 17 வயதில் அவள் வீட்டை விட்டு வெளியேறினாள். பிறகு, யெகோவாவின் சாட்சியாக இருந்த ஒரு குடும்பத்தோடு அவள் இருந்தாள். பைபிள் படிப்பைத் தொடர்ந்து படித்தாள், ஞானஸ்நானமும் எடுத்தாள். நாங்கள் 1960-ல் கல்யாணம் செய்துகொண்டபோது, அவளுடைய அப்பா அம்மா எங்கள் கல்யாணத்துக்கு வரவில்லை. காலங்கள் போகப் போக, பிள்ளைகளை நாங்கள் வளர்த்த விதத்தையும், எங்கள் நம்பிக்கைகளையும் பார்த்து அவர்களுக்கு எங்கள்மீது மரியாதை வந்தது.

யெகோவா என்னைப் பார்த்துக்கொண்டார்

லண்டன் பெத்தேலில் சேவை செய்கிற என் மகன் நிக்கொலெசும் அவனுடைய மனைவி டெபோராவும்

காது கேட்காத பெற்றோராக, எங்கள் பிள்ளைகளை வளர்ப்பது ரொம்ப சவாலாக இருந்தது. ஏனென்றால், எங்கள் 7 பிள்ளைகளுக்கும் நன்றாகக் காது கேட்கும். இருந்தாலும், அவர்களுக்குச் சத்தியத்தைச் சொல்லிக்கொடுக்கவும், நாங்கள் எல்லாரும் நன்றாகப் பேசிக்கொள்ளவும், அவர்களுக்கு சைகை மொழி தெரியும்படி பார்த்துக்கொண்டோம். சபையில் இருந்த சகோதர சகோதரிகள் எங்களுக்கு ரொம்பவே உதவினார்கள். உதாரணத்துக்கு, எங்கள் பையன்களில் ஒருவன் ராஜ்ய மன்றத்தில் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதாக ஒரு அப்பா எங்களுக்கு குறிப்பு எழுதினார். அதனால், அந்த விஷயத்தை எங்களால் உடனே சரி செய்ய முடிந்தது. எங்கள் 4 மகன்களான ஜேம்ஸ், ஜெரி, நிக்கொலெஸ், ஸ்டீவன் என எல்லாரும் இப்போது மூப்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் தங்கள் மனைவிகளோடும் குடும்பங்களோடும் இப்போது யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிறார்கள். நிக்கொலெசும் அவனுடைய மனைவி டெபோராவும் பிரிட்டன் கிளை அலுவலகத்திலுள்ள சைகை மொழி மொழிபெயர்ப்பு குழுவில் இருக்கிறார்கள். ஸ்டீவனும் அவனுடைய மனைவி ஷானனும் அமெரிக்க கிளை அலுவலகத்திலுள்ள சைகை மொழி மொழிபெயர்ப்பு குழுவில் இருக்கிறார்கள்.

என் மகன்கள் ஜேம்ஸ், ஜெரி மற்றும் ஸ்டீவன் தங்கள் மனைவிகளோடு சைகை மொழி தொகுதிகளில் வித்தியாசமான வழிகளில் சேவை செய்கிறார்கள்

எங்கள் 40-வது கல்யாண நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, யூனிஸ் புற்றுநோயால் இறந்துவிட்டாள். உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருந்ததால், கஷ்டப்பட்ட காலம் முழுவதும் அவள் விசுவாசத்தில் உறுதியாக இருந்தாள். அவளை மறுபடியும் பார்க்கப் போகிற அந்த நாளுக்காக நான் ஆவலாக இருக்கிறேன்.

ஃபே மற்றும் ஜேம்ஸ், ஜெரி மற்றும் ஈவ்லின், ஷானன் மற்றும் ஸ்டீவன்

பிப்ரவரி 2012-ல், நான் கீழே விழுந்ததால் என் இடுப்பு உடைந்துவிட்டது. இனிமேல் எனக்கு உதவி தேவை என்பதால், என் மகன் ஒருவனோடு இருக்கிறேன். இப்போது, நாங்கள் கால்கேரி சைகை மொழி சபைக்குப் போகிறோம். அங்கே, நான் இன்னும் ஒரு மூப்பராகச் சேவை செய்கிறேன். நான் சைகை மொழி சபையில் இருப்பது என் வாழ்க்கையிலேயே இதுதான் முதல் முறை! இத்தனை வருஷங்களாக ஆங்கில மொழி சபையில்தான் இருந்திருக்கிறேன். அப்படியென்றால், யெகோவாவோடு நல்ல பந்தத்தில் இருக்க நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பாருங்கள்! யெகோவாதான் எனக்கு உதவி செய்தார்! அப்பா இல்லாத பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதாக தான் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியிருக்கிறார். (சங். 10:14) எனக்குக் குறிப்புகள் எழுதிக்கொடுத்தவர்கள், சைகை மொழி கற்றுக்கொடுத்தவர்கள், மொழிபெயர்த்துக்கொடுத்தவர்கள் என எல்லாருக்கும் நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.

என் 79-வது வயதில், அமெரிக்க சைகை மொழி பயனியர் பள்ளியில்

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சில சமயங்களில் எனக்கு ரொம்ப ஏமாற்றமாகவும், சோர்வாகவும் இருக்கும். ஏனென்றால், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே எனக்குப் புரியாது. அதோடு, காது கேட்காதவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்று யாருக்குமே தெரியவில்லை என்றும் நான் நினைப்பேன். அந்த மாதிரியான சமயங்களில், “எஜமானே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன” என்று பேதுரு இயேசுவிடம் சொன்னதை யோசித்துப் பார்ப்பேன். (யோவா. 6:66-68) பல வருஷங்கள் சத்தியத்தில் இருந்த மற்ற சகோதர சகோதரிகளைப் போல, நானும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். அதோடு, யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் நம்பியிருக்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன். அதனால் எனக்கு நிறைய பலன்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது, என் சொந்த மொழியிலேயே நிறைய பிரசுரங்கள் கிடைக்கின்றன. அமெரிக்க சைகை மொழியில் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்வதை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன். நம் மகத்தான கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்ததால் எனக்கு உண்மையிலேயே அதிக சந்தோஷமும் பலனும் கிடைத்திருக்கிறது!