Skip to content

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—அல்பேனியாவிலும் காஸாவோவிலும்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—அல்பேனியாவிலும் காஸாவோவிலும்

 “நான் யெகோவாவுக்கு இந்த அளவுக்கு சேவை செய்வேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை!” இது இங்கிலாந்தை சேர்ந்த குவென் என்ற பெண்ணின் உணர்வு. அல்பேனியாவில் தேவை அதிகமாக இருப்பதால் இவர் அங்கே போய் சேவை செய்துகொண்டு இருக்கிறார். a

 அல்பேனியாவுக்கு குடிமாறி வந்திருக்கும் நிறைய யெகோவாவின் சாட்சிகளில் குவென்னும் ஒருவர். ‘தேசங்களின் செல்வங்களை’ சேர்ப்பதற்கு இவர்கள் எல்லாரும் கைகொடுக்கிறார்கள். (ஆகாய் 2:7) இப்படி குடிமாறி வந்து ஊழியம் செய்ய எது இவர்களை தூண்டுகிறது? அதற்காக இவர்கள் என்னென்ன மாற்றங்களை செய்தார்கள்? சவால்கள் இருந்தாலும் இவர்களுக்கு என்னென்ன சந்தோஷங்கள் கிடைத்திருக்கின்றன?

வித்தியாசப்பட்ட சூழ்நிலைமைகள், ஆனால் ஒரே குறிக்கோள்

 அல்பேனியாவுக்கு குடிமாறி வந்திருக்கிற எல்லா பிரஸ்தாபிகளுக்கும் யெகோவாமேல் நிறைய அன்பு இருக்கிறது. அவர்கள் எல்லாருக்கும் ஒரே குறிக்கோள் இருக்கிறது: மக்கள் யெகோவாவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதற்கு உதவ வேண்டும்!

 தங்கள் நாட்டை விட்டு குடிமாறி போவதற்கு முன்பு, இந்த சகோதர சகோதரிகள் சில விஷயங்களை செய்திருக்கிறார்கள். அதை பற்றி குவென் இப்படி சொல்கிறார்: “முதலில் எங்கள் ஊரிலிருந்த அல்பேனிய மொழி பேசுகிற ஒரு தொகுதியோடு சேர்ந்து சேவை செய்தேன். அதற்குபின், ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அல்பேனியாவுக்கு வந்தேன். பிறகு, அல்பேனிய மொழியை கற்றுக்கொள்வதற்காக மறுபடியும் வந்து கொஞ்சம் நாள் இங்கே தங்கினேன்.”

குவென்

 இத்தாலியை சேர்ந்த மனுவேலா என்ற பெண், 23 வயது இருக்கும்போது தன்னுடைய நாட்டில் இருக்கிற இன்னொரு பகுதிக்கு மாறி போனார். அங்கே இருக்கிற ஒரு சின்ன சபைக்கு உதவி செய்வதற்காக போனார். மனுவேலா சொல்கிறார்: “நான் அந்த இடத்தில் நான்கு வருஷம் ஊழியம் செய்தேன். பிறகு, அல்பேனியாவில் தேவை அதிகமாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதனால், அங்கே போய் கொஞ்சம் மாதங்கள் தங்கி பயனியர் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தேன்.”

மனுவேலா (நடுவில்)

 அல்பேனியா நாட்டை பற்றிய ஒரு அறிக்கையை மாநாட்டில் ஃபெடரிகா கேட்டார். அப்போது அவருக்கு ஏழு வயதுதான்! அதை பற்றி அவர் இப்படி சொல்கிறார்: “அல்பேனியாவில் இருக்கிற சகோதரர்கள் நிறைய பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதாகவும் ஆர்வமுள்ள நிறைய பேர் கூட்டங்களுக்கு வருவதாகவும் அந்த அறிக்கையில் சொன்னார்கள். அதை கேட்டதும், அல்பேனியாவுக்கு நாமும் போய் சேவை செய்யலாம் என்று அப்பா அம்மாவிடம் சொன்னேன். நான் சொல்வதை கேட்டு அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! ‘நீ இதை பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய். அவருக்கு விருப்பம் இருந்தால் இது நடக்கும்’ என்றார் அப்பா. கொஞ்ச மாதங்களுக்கு பிறகு குடும்பமாக அல்பேனியாவில் சேவை செய்வதற்கு எங்களுக்கு அழைப்பு கிடைத்தது!” பல வருஷங்கள் கடந்து போய்விட்டன. இப்போது ஃபெடரிகா, ஆர்கஸ் என்பவரை கல்யாணம் செய்துகொண்டு, தம்பதியாக அல்பேனியாவில் முழுநேர ஊழியம் செய்கிறார்கள்.

ஆர்கஸ் மற்றும் ஃபெடரிகா

 ஜான்பியாரோ என்பவர் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தன்னுடைய மனைவி குளோரியாவுடன் சேர்ந்து அல்பேனியாவுக்கு வந்து சேவை செய்கிறார். அவர் சொல்வதை கேளுங்கள்: “நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை இத்தாலியில் வளர்த்தோம். அவர்களில் மூன்று பேர் தேவை அதிகம் இருக்கிற இடத்தில் சேவை செய்வதற்காக வெளிநாட்டுக்கு போய்விட்டார்கள். ‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய முடியுமா?’ என்ற காவற்கோபுர கட்டுரையை படித்தது எங்கள் மனதை தொட்டது. அதனால், என்னுடைய பென்ஷன் தொகையை வைத்து எப்படி அல்பேனியாவில் சேவை செய்யலாம் என்று பட்ஜெட் போட்டோம்.”

ஜான்பியாரோ மற்றும் குளோரியா

நன்றாக திட்டமிட்டார்கள்

 வாழ்க்கையை ஓட்டுவதற்கு கையில் கொஞ்சமாவது பணம் இருக்க வேண்டும் என்பதுதான் எதார்த்தம்! அதனால், தேவை அதிகம் இருக்கிற இடத்துக்கு மாறி போவதற்கு முன்பு நன்றாக திட்டம் போட வேண்டியிருக்கிறது. அதற்காக சில ஏற்பாடுகளை முதலில் செய்ய வேண்டும். (லூக்கா 14:28) நாம் முன்பு பார்த்த குவென் இங்கிலாந்தில் இருந்தபோதே அதற்காக சில ஏற்பாடுகளை செய்தார். பணத்தை மிச்சப்படுத்துவதற்காக அவருடைய அக்காவோடு சேர்ந்து கொஞ்ச நாட்களுக்கு தங்கினார். இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கிற சோஃபியா மற்றும் கிரிஸ்டோஃபர், தங்களுடைய அனுபவத்தை சொல்கிறார்கள்: “எங்களுடைய காரையும் வீட்டில் இருந்த சில டேபில்-சேர் போன்றவற்றையும் விற்றோம். அல்பேனியாவில் தங்கி ஒரு வருஷமாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதற்காகத்தான் இதையெல்லாம் செய்தோம்.” ஆனால், ஒரு வருஷத்துக்கும் மேல் அவர்களால் அங்கே சந்தோஷமாக சேவை செய்ய முடிந்தது.

கிரிஸ்டோஃபர் மற்றும் சோஃபியா

 அல்பேனியாவில் சேவை செய்கிற சில பிரஸ்தாபிகள் கொஞ்சம் மாதங்களுக்கு தங்களுடைய சொந்த ஊருக்கு போய் வேலை செய்து பணத்தை சேமித்துவிட்டு, மறுபடியும் அல்பேனியாவுக்கு வந்து சேவை செய்கிறார்கள். எலிசியோவும் மிரியமும் இப்படித்தான் செய்தார்கள். எலிசியோ சொல்கிறார்: “மிரியமுடைய ஊர் இத்தாலியில் இருக்கிறது. அது ஒரு சுற்றுலாத் தலம். அங்கே குறிப்பிட்ட சீசனில் சில வேலைகள் கிடைக்கும். அதனால், நாங்கள் அங்கே போய் கோடைக்காலத்தில் மூன்று மாதங்களுக்கு வேலை செய்வோம். அங்கே சம்பாதித்த பணத்தை வைத்து மீதி இருக்கிற ஒன்பது மாதங்கள் அல்பேனியாவில் சேவை செய்வோம். இப்படித்தான் நாங்கள் ஐந்து வருஷங்கள் செய்தோம்.”

மிரியம் மற்றும் எலிசியோ

சவால்களை சமாளித்தல்

 தேவை அதிகமுள்ள இடத்துக்கு குடிமாறி போகிறவர்கள் அங்கே போன பிறகு, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி தங்களையே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளூரில் இருக்கிற சகோதரர்கள் கொடுக்கிற ஆலோசனை அவர்களுக்கு ரொம்ப ரொம்ப உதவுகிறது; அவர்களை பார்த்தும் இவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். நாம் முன்பு பார்த்த சோஃபியா இதை பற்றி சொல்கிறார்: “எங்கள் ஊரில் இருப்பதைவிட அல்பேனியாவில் குளிர்காலம் பயங்கர குளிராக இருக்கும். அதை தாங்கவே முடியாது. இங்கே இருக்கிற சகோதரிகள் டிரஸ் பண்ணுகிற விதத்தை பார்த்து, எப்படி டிரஸ் பண்ண வேண்டும் என்று நான் கற்றுக்கொண்டேன்.” ஜேகோஷ் மற்றும் அவருடைய மனைவி சோனா, போலந்தில் இருந்து வந்திருக்கிறார்கள். காஸாவோவில் இருக்கிற ப்ரிஸ்ரேன் என்ற ஊரில் சேவை செய்வதற்காக வந்திருக்கிறார்கள். b இது ரொம்ப அழகான ஊர். ஜேகோஷ் இப்படி சொல்கிறார்: “இங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் ரொம்ப மனத்தாழ்மையாக நடந்துகொள்கிறார்கள். அன்பாகவும் பொறுமையாகவும் இருக்கிறார்கள்! இங்கே பேசப்படுகிற மொழியை மட்டுமல்ல நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு எங்களுக்கு உதவி செய்கிறார்கள். எந்தெந்த கடைகளில் கம்மியான விலையில் பொருள்கள் கிடைக்கும் என்பதை காட்டினார்கள். மார்க்கெட்டில் எப்படி சாமான்களை வாங்க வேண்டும் என்றும் சொல்லி கொடுத்தார்கள்.”

அவர்களுக்கு கிடைத்த சந்தோஷம்

 வெளிநாட்டுக்கு குடிமாறி போய் சேவை செய்கிற சகோதரர்கள், உள்ளூரில் இருக்கிற சகோதரர்களோடு ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொள்கிறார்கள்; அவர்களை நன்றாக புரிந்துகொள்கிறார்கள். இதை பற்றி சோனா சொல்வதை பாருங்கள்: “யெகோவா காட்டும் அன்பு, மக்களை எப்படி மாற்றுகிறது என்பதை நான் கண்ணார பார்த்தேன். மக்கள் யெகோவாவை பற்றி கற்றுக்கொண்டு தங்களுடைய நம்பிக்கைகளையும் வாழ்கிற விதத்தையும் முழுமையாக மாற்றியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது என்னுடைய விசுவாசம் அதிகமாகிறது. இந்த சபையில் நாங்களும் உதவியாக இருக்கிறோம் என்று நினைக்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் இப்போது எங்களுக்கு நண்பர்களாக ஆகிவிட்டார்கள். இவர்களோடு சேர்ந்து சேவை செய்வது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.” (மாற்கு 10:29, 30) குளோரியா சொல்கிறார்: “இந்த ஊரில் நம்மை எதிர்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து நம்முடைய சகோதரிகளுக்கு நிறைய எதிர்ப்பு வந்தது. அவர்களை போட்டு ரொம்பவே கஷ்டப்படுத்தினார்கள். ஆனாலும், நிறைய சகோதரிகள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். அவர்களுக்கு யெகோவாமேல் அவ்வளவு அன்பு! அதை பார்த்தபோது என் மனம் அப்படியே உருகியது!”

ஜேகோஷ் மற்றும் சோனா

 இப்படி குடிமாறி வந்தவர்கள் நிறைய முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டதாக சொல்கிறார்கள். ஒருவேளை தங்களுடைய ஊரிலேயே இருந்திருந்தால்கூட அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள முடிந்திருக்காது என்று நினைக்கிறார்கள். உதாரணத்துக்கு, சில விஷயங்களை செய்வதற்கு அவர்களுக்கு ரொம்ப பயமாகவும் பதட்டமாகவும் இருக்குமாம். ஆனால், அவற்றையெல்லாம் இப்போது யெகோவாவுக்காக செய்கிறார்கள். அது அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பதாக சொல்கிறார்கள். ஸ்டெஃபானோ என்ற சகோதரர் சொல்கிறார்: “எங்கள் ஊரில் நாங்கள் பெரும்பாலும் இன்டர்காம் வழியாகத்தான் ஊழியம் செய்வோம். அதனால், ரொம்ப சுருக்கமாக பேச வேண்டியிருக்கும். ஆனால், அல்பேனியாவில் மக்கள் நிறைய பேசுகிறார்கள். அதுவும் காபி குடித்துக்கொண்டே பேசுவது அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். பொதுவாக, எனக்கு கூச்ச சுபாவம்! அதனால், ஆரம்பத்தில் ரொம்ப சங்கடமாக இருந்தது. என்ன பேசுவது என்றே தெரியாது. ஆனால் போகப்போக மக்கள்மேல் அன்பை வளர்த்துக்கொண்டேன். இப்போது, அவர்களிடம் நன்றாக பேசுகிறேன். என்னுடைய ஊழியம் நன்றாக இருக்கிறது. எனக்கு திருப்தியாகவும் இருக்கிறது.”

அலிடா மற்றும் ஸ்டெஃபானோ

 லியாவும் அவருடைய கணவர் வில்லியமும் அமெரிக்காவில் இருந்து அல்பேனியாவுக்கு குடிமாறி வந்தார்கள். லியா சொல்கிறார்: “அல்பேனியாவில் சேவை செய்வது நாங்கள் யோசிக்கும் விதத்தையும் வாழும் விதத்தையும் மாற்றிவிட்டது. நாங்கள் இப்போது உபசரிக்க கற்றுக்கொண்டோம். எல்லாரிடமும் மரியாதையாகவும் நட்பாகவும் பழக கற்றுக்கொண்டோம். மனம்விட்டு பேசவும், புதுப்புது விதங்களில் ஊழியம் செய்யவும், பைபிளில் இருந்து மனதை தொடும் விதத்தில் பேசவும் கற்றுக்கொண்டோம்.” வில்லியம் சொல்கிறார்: “பொதுவாக அல்பேனியாவுக்கு வருகிறவர்கள் இங்கே இருக்கும் அழகான கடற்கரைகளை ரசிப்பார்கள். எனக்கும்கூட கரடு முரடான அல்பேனியன் ஆல்ப்ஸ் மலைகள்மீது ஏறி போவது பிடிக்கும். ஆனால் இவையெல்லாவற்றையும்விட, இங்கே இருக்கிற மக்களைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கே நிறைய கிராமங்கள் இருக்கின்றன. விசேஷ ஊழியம் செய்தபோது அங்கே போயிருக்கிறோம். இருந்தாலும் அப்போது அதிக நேரம் ஊழியம் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது, கொஞ்சம் பேரிடம்தான் பேசியிருப்போம், அதற்கே ஒரு நாள் ஆகிவிடுகிறது!“

வில்லியம் மற்றும் லியா

 தேவை அதிகம் இருக்கிற இடத்தில் சேவை செய்கிறவர்களுக்கு உண்மையிலேயே எது சந்தோஷத்தை தருகிறது? மக்கள் நல்ல செய்தியை கேட்பதுதான்! (1 தெசலோனிக்கேயர் 2:19, 20) லாரா என்ற பெண், இளம் வயதிலேயே அல்பேனியாவுக்கு குடிமாறி வந்தார். அந்தச் சமயத்தில் அவருக்கு கல்யாணம்கூட ஆகவில்லை. அவர் சொல்வதை கேட்கலாம்: “நான் ஃபியர் என்ற ஊரில் கொஞ்ச வருஷங்களுக்கு சேவை செய்தேன். இரண்டரை வருஷத்தில், பைபிள் படித்துக்கொண்டிருந்த 120 பேர் மற்றவர்களுக்கு பிரசங்கிக்கும் அளவுக்கு முன்னேறினார்கள். அவர்களில் 16 பேரோடு சேர்ந்து நான் பைபிள் படித்தேன்!” சான்ட்ரா என்ற இன்னொரு சகோதரி இப்படி சொல்கிறார்: “மார்க்கெட்டில் வேலை செய்த ஒரு பெண்ணிடம் நான் சாட்சி கொடுத்தேன். அவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு, தன்னுடைய சொந்த கிராமத்துக்கே குடிமாறி போனார். அவரிடம் சமீபத்தில் பேசியபோது, 15 பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டு இருக்கிறதாக சொன்னார்கள்!”

லாரா

சான்ட்ரா

உழைப்பிற்கு யெகோவா கொடுத்த பலன்

 ரொம்ப வருஷங்களுக்கு முன்பு அல்பேனியாவுக்கு குடிமாறி வந்த நிறைய பேர், இன்றுவரை அங்கேயே தங்கி சந்தோஷமாக ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் வந்த புதிதில் போட்ட விதைகள் முளைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். (பிரசங்கி 11:6) நாம் முன்பு பார்த்த கிரிஸ்டோஃபர் இப்படி சொல்கிறார்: “இங்கே வந்த புதிதில், ஒருவரோடு சேர்ந்து பைபிள் பிடித்தேன். அவரை நான் மறுபடியும் சந்தித்தேன். முதல்முதலில் அவரை சந்தித்தபோது பேசிய விஷயங்களை எல்லாம் அவர் கொஞ்சம்கூட மறக்காமல் இப்போதும் சொன்னார். அதை கேட்டு ஆச்சரியப்பட்டேன். இப்போது அவரும் அவருடைய மனைவியும் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவுக்கு சேவை செய்கிறார்கள்.” முன்பு பார்த்த ஃபெடரிகா சொல்கிறார்: “ஒரு சபையில் ஒரு சகோதரி என்னிடம் வந்து, ‘என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டார். பிறகு, 9 வருஷங்களுக்கு முன்பு நான் அவருக்கு சாட்சி கொடுத்ததாக அவரே சொன்னார். நான் அந்த ஊரில் இருந்து குடிமாறிய பிறகு அவர் பைபிள் படித்திருக்கிறார், ஞானஸ்நானமும் எடுத்திருக்கிறார். அல்பேனியாவுக்கு வந்த புதிதில் செய்த ஊழியத்துக்கு அவ்வளவாக பலன் கிடைக்கவில்லை என்றுதான் இத்தனை வருஷங்கள் நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்று புரிகிறது!”

 அல்பேனியாவுக்கு அல்லது காஸாவோவுக்கு குடிமாறி வந்திருக்கும் சகோதர சகோதரிகள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை பார்த்திருக்கிறார்கள். பல வருஷங்கள் அல்பேனியாவில் சேவை செய்த பிறகு, எலிசியோ தன்னுடைய அனுபவத்தை சொல்கிறார்: “இந்த உலகம் எதை நிலையானது என்று நினைக்கிறதோ, அதை தேடி போனால்தான் மனிதர்களால் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது நிறைய பேரின் கருத்து. ஆனால், அப்படிப் போகிறவர்கள் கடைசியில் ஏமாந்துதான் போவார்கள். ஏனென்றால், அது வெறும் ஒரு மாயைதான்! அதற்கு பதிலாக, யெகோவாவுடைய நியமங்கள் நமக்கு உண்மையிலேயே நிலையான வாழ்க்கையை கொடுக்கிறது, வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும் கொடுக்கிறது. தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வதால் இந்த உண்மையை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. என்னுடைய வாழ்க்கையை உண்மையிலேயே பிரயோஜனமாக செலவு செய்கிறேன் என்ற திருப்தியும் எனக்கு இருக்கிறது. என்னை சுற்றி என்னை போன்ற குறிக்கோள்கள் இருக்கிற நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.” சான்ட்ரா சொல்கிறார்: “மிஷனரியாக சேவை செய்ய வேண்டும் என்று நான் ரொம்ப நாள் ஆசைப்பட்டேன். அது இங்கே வந்த பிறகு நிறைவேறியிருக்கிறது. அல்பேனியாவுக்கு குடிமாறி வந்ததை நினைத்து நான் துளிகூட வருத்தப்படுவதில்லை; ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.”

a அல்பேனியாவில் நம்முடைய பிரசங்க வேலை எப்படி நடந்தது என்று தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2010-ஐ பாருங்கள்.

b அல்பேனியாவின் வடகிழக்கு பகுதியில் காஸாவோ இருக்கிறது. இந்த பகுதியில் இருக்கிற மக்கள் அல்பேனிய மொழியை பேசுவார்கள். ஆனால், அவர்களுடைய பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும். காஸாவோ பகுதியில் வாழும் மக்களுக்கு நல்ல செய்தியை சொல்வதற்காக நிறைய சாட்சிகள் அல்பேனியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள். 2020-ல், இங்கு எட்டு சபைகளும் மூன்று தொகுதிகளும் இரண்டு முன்தொகுதிகளும் இருந்தன; 256 பிரஸ்தாபிகள் இருந்தார்கள்.