Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எலியாஸ் ஹட்டர்—அவருடைய அற்புதமான எபிரெய பைபிள்கள்

எலியாஸ் ஹட்டர்—அவருடைய அற்புதமான எபிரெய பைபிள்கள்

பைபிளை எழுத பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழியை உங்களால் வாசிக்க முடியுமா? ‘இல்லை’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். எபிரெய மொழியில் எழுதப்பட்ட பைபிளைப் பார்க்கக்கூட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த எலியாஸ் ஹட்டர் என்ற அறிஞர் இரண்டு எபிரெய பைபிள்களை வெளியிட்டார். அவரைப் பற்றியும் அவர் வெளியிட்ட பைபிள்களைப் பற்றியும் தெரிந்துகொண்டால் பைபிளின்மீது உங்களுக்கு இருக்கும் மதிப்பு இன்னும் அதிகமாகும்.

1553-ல் ஜெர்மனியில் இருக்கும் கோர்லிட்ச் என்ற ஒரு சின்ன நகரத்தில் எலியாஸ் ஹட்டர் பிறந்தார். ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லை கோடு பக்கத்தில் இந்த கோர்லிட்ச் நகரம் இருக்கிறது. ஏனா என்ற நகரத்தில் இருக்கும் லூத்தரன் பல்கலைக்கழகத்தில் கிழக்கத்திய மொழிகளை ஹட்டர் கற்றுக்கொண்டார். அவருக்கு 24 வயது இருக்கும்போதே எபிரெய மொழியின் பேராசிரியராக லீப்ஜிக் நகரத்தில் வேலை செய்தார். அவர் கல்வித் துறையில் புதிய புரட்சிகளைப் படைத்தார். நூரெம்பர்கில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அதில் படித்த மாணவர்களால் நான்கே வருஷத்தில் நான்கு மொழிகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அதாவது எபிரெயு, கிரேக்கு, லத்தீன் மற்றும் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அந்தச் சமயத்தில் இருந்த வேறெந்த பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும் இந்த வசதியில்லை.

‘இந்தப் பதிப்பின் தனிச்சிறப்பு’

1587-ல் வெளிவந்த ஹட்டரின் எபிரெய பைபிளின் தலைப்பு பக்கம்

பழைய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்படும் பகுதியை, ஹட்டர் எபிரெய மொழியில் 1587-ல் வெளியிட்டார். அதற்கு, டெரெக் ஹா கோடேஷ் என்று பெயர் சூட்டினார். இந்தப் பெயர் ஏசாயா 35:8-ன் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அதன் அர்த்தம், “பரிசுத்தமான வழி.” இந்த பைபிளின் அழகான அச்சுவடிவத்தைப் பார்த்தவர்கள், “இந்தப் பதிப்பிலுள்ள ஒவ்வொரு அம்சமும் அதன் மேன்மையைச் சிறப்பித்துக் காட்டுகிறது” என்று வர்ணித்தார்கள். இந்த பைபிளை உண்மையிலேயே அத்தனை மதிப்புள்ளதாக ஆக்கியது எது? எபிரெய மொழியைக் கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு இது மிகச் சிறந்த கருவியாக இருந்தது. அதுதான் இந்த பைபிளை மிகவும் மதிப்புள்ள படைப்பாக ஆக்கியது.

புதிதாக எபிரெய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஒருவருக்கு என்ன இரண்டு சவால்கள் இருந்தன என்பதைப் புரிந்துகொண்டால் ஹட்டரின் மொழிபெயர்ப்பு ஏன் அவ்வளவு பிரயோஜனமானது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த இரண்டு சவால்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒன்று, எபிரெய எழுத்துக்கள் பார்ப்பதற்கே ரொம்ப வித்தியாசமாகவும் புதிதாகவும் இருந்தன. இரண்டாவது, ஒரு வார்த்தையின் வேர்ச்சொல் எது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. அதற்கு காரணம், அந்த வேர்ச்சொல்லின் முன்பும் பின்பும் சில வார்த்தைகள் சேர்ந்து வந்தன. உதாரணத்துக்கு, “உயிர்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையை இப்படி எழுதுவார்கள்: נפשׁ (இந்த வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு: நெஃபெஷ்) எசேக்கியேல் 18:4-ல், இந்த வார்த்தைக்கு முன்பு ה () என்ற இன்னொரு வார்த்தை சேர்ந்து வந்திருக்கிறது. அதனால், הנפשׁ (ஹன்நெஃபெஷ்) என்று ஆகிவிடுகிறது. எபிரெய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஒருவருக்கு இந்த வார்த்தை பார்ப்பதற்கு புதிதாகவும் வித்தியாசமாகவும் தெரியும்.

தன் மாணவர்கள் புரிந்துகொள்வதற்காக, ஹட்டர் ஒரு புதுமையான அச்சு முறையை உருவாக்கினார். அதில் எபிரெய எழுத்துக்களை இரண்டு விதமாக அமைத்தார். ஒன்று, தடித்த எழுத்து (solid form). மற்றொன்று மெல்லிய எழுத்து (outline form). ஒவ்வொரு வேர்ச்சொல்லையும் தடித்த எழுத்தில் அச்சடித்தார். அதன் முன்பும் பின்பும் சேர்ந்து வரும் சொற்களை மெல்லிய எழுத்தில் அச்சடித்தார். இந்த முறையில் அச்சடித்ததால், எபிரெய வேர்ச்சொல்லை எளிதாக மாணவர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது; எபிரெய மொழியையும் சுலபமாக கற்றுக்கொள்ள முடிந்தது. புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் என்ற பைபிளின் அடிக்குறிப்பில் * இதே முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்ட வேர்ச்சொல் தடித்த எழுத்திலும், அதற்கு முன்பும் பின்பும் சேர்ந்து வரும் மற்ற எழுத்துக்கள் சாதாரண வடிவத்திலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பக்கத்தில் இருக்கும் படத்தில், எசேக்கியேல் 18:4-ல் ஹட்டர் பயன்படுத்திய அச்சுவடிவம் தனித்து காட்டப்பட்டிக்கிறது. துணைக்குறிப்பு பைபிளில் அதே வசனத்துக்கான அடிக்குறிப்பும் இந்தப் படத்தில் தனித்து காட்டப்பட்டிக்கிறது. ஹட்டர் பயன்படுத்திய முறையைத்தான் துணைக்குறிப்பு பைபிளின் அடிக்குறிப்பில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எபிரெய மொழியில் “புதிய ஏற்பாடு”

புதிய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்படுகிற பகுதியையும் ஹட்டர் அச்சடித்தார். அதில் வசனங்கள் 12 மொழிகளில் கொடுக்கப்பட்டிருந்தன. 1599-ல் நூரெம்பர்கில் வெளியிடப்பட்டதால், இது நூரெம்பர்க் பாலிக்ளாட் (Nuremberg Polyglot) என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எபிரெய மொழிபெயர்ப்பையும் அதில் சேர்க்க வேண்டும் என்று ஹட்டர் நினைத்தார். ஆனால், “அதற்காக என் சொத்தை எல்லாம் கொடுத்தாலும்,” அப்படியொரு மொழிபெயர்ப்பைக் கண்டுபிடிக்க முடியாது என்று அவரே சொன்னார். * அதனால், அவரே புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியிலிருந்து எபிரெய மொழிக்கு மொழிபெயர்க்க முடிவு செய்தார். மற்ற வேலைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு முழு மூச்சோடு இந்த மொழிபெயர்ப்பு வேலையில் ஹட்டர் இறங்கினார். ஒரே வருஷத்தில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்தார்.

ஹட்டர் மொழிபெயர்த்த கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் எப்படியிருந்தது? “அன்றிருந்த கிறிஸ்தவர்களிலேயே, அவர் புரிந்துகொண்ட அளவுக்கு எபிரெய மொழியை வேறு யாரும் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவருடைய மொழிபெயர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. இன்றும் இதை நாம் தாராளமாக பயன்படுத்தலாம். அந்தளவு இது நம்பகமாக இருக்கிறது. ரொம்ப ரொம்ப பொருத்தமான வார்த்தைகள் அவருக்கு கிடைத்திருக்கின்றன என்பதை அதைப் படிக்கப் படிக்க நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த எபிரெய அறிஞர் பிரான்ஸ் டிலிட்ச் சொல்கிறார்.

எக்காலத்துக்கும் பிரயோஜனமான பைபிள்

எலியாஸ் ஹட்டர் பெரிய பணக்காரர் ஆவதற்கு அவருடைய மொழிபெயர்ப்பு வேலைகள் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஏனென்றால், அவருடைய மொழிபெயர்ப்பை யாரும் அவ்வளவாக வாங்கவில்லை. இருந்தாலும், அவருடைய மொழிபெயர்ப்பு மிக முக்கியமானதாக இருந்தது; பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணத்துக்கு, எபிரெய மொழியில் அவர் தயாரித்த புதிய ஏற்பாட்டை, வில்லியம் ராபர்ட்ஸன் என்பவர் 1661-ல் புதுப்பித்து அதை திரும்பவும் அச்சடித்தார். 1798-ல், ரிச்சர்டு கேடிக் என்பவர் அந்த பைபிளை திரும்பவும் அச்சடித்தார். மூல கிரேக்க மொழியில் கைரியாஸ் (ஆண்டவர்), தியாஸ் (தேவன்) போன்ற பட்டப்பெயர்கள் வரும்போது அதை “யெகோவா” (יהוה, JHVH) என்று ஹட்டர் மொழிபெயர்த்திருக்கிறார். கிரேக்க வேதாகமத்தில், எபிரெய வேதாகமம் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் இடங்களில் எங்கெல்லாம் யெகோவாவின் பெயர் வரும் என்று ஹட்டர் நினைத்தாரோ அங்கெல்லாம் அந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார். இது உண்மையிலேயே ரொம்ப பெரிய விஷயம். ஏனென்றால், இன்றிருக்கும் நிறைய புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் இல்லை. ஆனால், ஹட்டரின் மொழிபெயர்ப்பில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

அடுத்தமுறை நீங்கள், யெகோவா என்ற கடவுளுடைய பெயரை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பார்க்கும்போது அல்லது, துணைக்குறிப்பு பைபிளின் அடிக்குறிப்பில் பார்க்கும்போது, ஹட்டர் செய்த மாபெரும் மொழிபெயர்ப்பு வேலைகளையும், அவருடைய அற்புதமான எபிரெய பைபிள்களையும் மறக்காமல் யோசித்துப் பாருங்கள்.

^ பாரா. 7 துணைக்குறிப்பு பைபிளில் எசேக்கியேல் 18:4-ல் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அடிக்குறிப்பைப் பாருங்கள். அதோடு, பிற்சேர்க்கை 3B-ஐயும் பாருங்கள்.

^ பாரா. 9 மற்ற சில அறிஞர்களும் புதிய ஏற்பாட்டை எபிரெய மொழியில் மொழிபெயர்த்திருந்தார்கள். 1360-ல் பைஸன்டிய துறவியான சைமன் ஆட்டூமனோஸ் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். 1565-ல், ஆஸ்வால்ட் ஷ்ரெகன்ஃபூக்ஸ் என்ற ஜெர்மானிய அறிஞர் மொழிபெயர்த்திருந்தார். ஆனால், இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாம் வெளியிடப்படவே இல்லை. இவை இப்போது அழிந்துபோய்விட்டன.