Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயரை மறுபடியும் சேர்த்த இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள்

புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயரை மறுபடியும் சேர்த்த இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள்

 ஜெபம் செய்ய கற்றுக்கொள்ளும்போது பொதுவாக நிறைய பேர் கற்றுக்கொள்கிற முதல் ஜெபமே பரமண்டல ஜெபம்தான். இதை இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். இந்த ஜெபம் புதிய ஏற்பாட்டில் இருக்கிறது. “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று அந்த ஜெபம் ஆரம்பிக்கும். (மத்தேயு 6:9) இங்கே கடவுளுடைய பெயர் என்று சொல்லியிருந்தாலும் “யெகோவா” அல்லது “யாவே” என்ற அவருடைய பெயர், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற புதிய ஏற்பாடு பைபிள்களில் அவ்வளவாக இல்லை. ஆனால், இந்த பைபிள்களில் பொய் கடவுள்களுடைய பெயர்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சீயுஸ், ஹெர்மஸ், அர்த்தமி போன்ற கடவுள்களுடைய பெயர்கள் இருக்கின்றன. பொய் கடவுள்களுடைய பெயரே பைபிளில் இருக்கிறது என்றால், பைபிளை எழுதியவருடைய, அதாவது உண்மை கடவுளுடைய, பெயரும் அதில் இருக்க வேண்டும், இல்லையா?—அப்போஸ்தலர் 14:12; 19:35; 2 தீமோத்தேயு 3:16.

புதிய ஏற்பாட்டில் நிறைய பொய் கடவுள்களுடைய பெயர்கள் இருக்கிறது, அப்படியென்றால் உண்மை கடவுளின் பெயரும் இருக்க வேண்டும்தானே?

 ஆங்கில பைபிள் மொழிபெயர்ப்பாளர்களான லான்சிலாட் ஷாட்வெல்லும் ஃப்ரெட்ரிக் பார்க்கரும் கடவுளுடைய பெயர் மறுபடியும் புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், அது ஏன் “மறுபடியும்” சேர்க்கப்பட வேண்டியிருந்தது? ஏனென்றால் ஆரம்பத்தில் கடவுளுடைய பெயர் அதில் இருந்தது என்றும், பிறகுதான் அது நீக்கப்பட்டது என்றும் அவர்கள் நம்பினார்கள். எதை வைத்து அந்த முடிவுக்கு வந்தார்கள்?

 ஆரம்பத்தில் எபிரெய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் கையெழுத்து பிரதிகளில், கடவுளுடைய பெயர் ஆயிரக்கணக்கான தடவை இருக்கிறது என்று ஷாட்வெல்லுக்கும் பார்க்கருக்கும் தெரிந்திருந்தது. அப்படியென்றால், ‘புதிய ஏற்பாட்டின் கையெழுத்து பிரதிகளிலும் கடவுளுடைய முழு பெயர் இருக்க வேண்டும்தானே!’ என்று அவர்கள் யோசித்தார்கள். a அதுமட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் இருக்கிற சில வார்த்தைகள் புதிய ஏற்பாட்டின் கையெழுத்து பிரதிகளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, “யெகோவாவின் தூதர்” மாதிரியான வார்த்தைகள். புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் நகல் எடுத்தவர்கள் “யெகோவா” என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, கைரியாஸ் போன்ற கிரேக்க வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதை ஷாட்வெல் கவனித்தார். அதற்கு, “கர்த்தர்” என்று அர்த்தம் (ஆங்கிலத்தில் “லார்ட்”).—2 ராஜாக்கள் 1:3, 15; அப்போஸ்தலர் 12:23.

எபிரெய மொழியில் கடவுளுடைய பெயர்

 ஷாட்வெல்லும் பார்க்கரும் ஆங்கில மொழியில் அவர்களுடைய பைபிளை வெளியிடுவதற்கு முன்பே மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கில புதிய ஏற்பாடு பைபிளில் கடவுளுடைய பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், ஒருசில இடங்களில்தான்! b 1863-ல் பார்க்கர் வெளியிட்ட எ லிட்ரல் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த நியு டெஸ்டமென்ட் பைபிளில் கடவுளுடைய பெயர் நிறைய தடவை பயன்படுத்தப்பட்டிருந்தது. வேறு எந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளரும் இந்தளவுக்கு அதிகமாக கடவுளுடைய பெயரை புதிய ஏற்பாட்டில் அதற்கு முன்பு பயன்படுத்தியதில்லை. யார் இந்த லான்சிலாட் ஷாட்வெல் மற்றும் ஃப்ரெட்ரிக் பார்க்கர்?

லான்சிலாட் ஷாட்வெல்

 லான்சிலாட் (1808-1861) ஒரு வழக்கறிஞராக இருந்தார். இவருடைய அப்பா, சர் லான்சிலாட் ஷாட்வெல் இங்கிலாந்தின் முக்கிய அமைச்சராக இருந்தார். லான்சிலாட், சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் அங்கத்தினராக இருந்தார். அவர் திரித்துவத்தை நம்பினாலும் கடவுளுடைய பெயருக்கு மதிப்பு கொடுத்தார். “யெகோவாவின் பெயர் ரொம்ப மகிமையுள்ளது” என்று அவர் சொன்னார். அவர் மொழிபெயர்த்த மத்தேயு மற்றும் மாற்கு எழுதிய சுவிசேஷ புத்தகங்களில் “யெகோவா” என்ற பெயரை 28 தடவை பயன்படுத்தினார்; அதில் வந்த குறிப்புகளில் 465 தடவை பயன்படுத்தினார்.

 எபிரெய மொழியிலிருந்த பழைய ஏற்பாட்டில் இருந்துதான் ஷாட்வெல் கடவுளுடைய பெயரை தெரிந்திருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தவர்கள், கடவுளுடைய பெயரை எடுத்துவிட்டு கைரியாஸ் என்ற கிரேக்க வார்த்தையை போட்டார்கள். அவர்களை பற்றி சொல்லும்போது, “அந்த மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய வேலையை நேர்மையாக செய்யவில்லை” என்று சொன்னார்.

The Gospel according to Matthew rendered into English with notes, by L. Shadwell (1859), provided by the Bodleian Libraries. Licensed under CC BY-NC-SA 2.0 UK. Modified: Text highlighted

ஷாட்வெல் மொழிபெயர்த்த பைபிளில் மத்தேயு 1:20

 ஷாட்வெல் தன்னுடைய மொழிபெயர்ப்பில் “யெகோவா” என்ற பெயரை மத்தேயு 1:20-ல் முதல் தடவையாக பயன்படுத்தினார். அந்த வசனத்தின் குறிப்பில் இப்படி சொன்னார்: “இந்த வசனத்திலும் புதிய ஏற்பாட்டின் மற்ற பகுதிகளிலும் வருகிற [கைரியாஸ் என்ற] வார்த்தை யெகோவாவை குறிக்கிறது. அதுதான் கடவுளுடைய பெயர். ஆங்கில மொழிபெயர்ப்பு பைபிள்களில் இந்த பெயரை மறுபடியும் பயன்படுத்துவது ரொம்ப முக்கியம்.” அதோடு, அவர் இப்படியும் சொன்னார்: “இப்படி செய்தால்தான் நாம் கடவுளுக்கு மதிப்பு கொடுக்கிறோம். ஏனென்றால், தன்னுடைய பெயர் யெகோவா என்று அவரே சொல்லியிருக்கிறார். அவரை பற்றி பேசும்போது அவருடைய பெயரை பயன்படுத்துவதைவிட வேறு எது சிறந்ததாக இருக்கும்!” பிறகு அவர் இப்படி சொன்னார்: “நம்முடைய ஈ.வி. பைபிளில் [ஆத்தரைஸ்டு அல்லது கிங் ஜேம்ஸ் வெர்ஷன் பைபிளில்] யெகோவா என்ற பெயர் ஒருசில இடத்தில்தான் இருக்கிறது. . . . கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதற்கு பதிலாக ‘லார்ட்’ [தமிழில் ‘கர்த்தர்’] என்ற வார்த்தைதான் அதில் இருக்கிறது.” கடவுளுடைய பெயருக்கு “லார்ட் . . . என்ற பட்டப்பெயர் கொஞ்சம்கூட இணையாகாது” என்று ஷாட்வெல் சொன்னார். அதுமட்டுமல்ல, தன்னுடைய வீட்டில்கூட எல்லாரும் தன்னை ‘லார்ட்’ என்றுதான் கூப்பிடுவார்கள் என்றும் சொன்னார்.

“தன்னுடைய பெயர் யெகோவா என்று [கடவுளே] சொல்லியிருக்கிறார். அவரை பற்றி பேசும்போது அவருடைய பெயரை பயன்படுத்துவதைவிட வேறு எது சிறந்ததாக இருக்கும்!“—லான்சிலாட் ஷாட்வெல்

 மத்தேயு புத்தகத்தின் மொழிபெயர்ப்பை 1859-ல் ஷாட்வெல் வெளியிட்டார். மத்தேயு-மாற்கு இரண்டையும் சேர்த்து 1861-ல் வெளியிட்டார். அதோடு, அவருடைய வேலை முடிவுக்கு வந்தது. ஜனவரி 11, 1861-ல் அவருக்கு 52 வயது இருந்தபோது இறந்துபோனார். ஆனால், அவர் எடுத்த முயற்சி எதுவுமே வீணாகவில்லை.

ஃப்ரெட்ரிக் பார்க்கர்

 ஷாட்வெல் மொழிபெயர்த்த மத்தேயு சுவிசேஷம் ஃப்ரெட்ரிக் பார்க்கர் (1804-1888) என்ற பணக்கார வியாபாரியின் கண்ணில் பட்டது. இவர் லண்டனை சேர்ந்தவர். இவருக்கு கிட்டத்தட்ட 20 வயது இருந்தபோது புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஷாட்வெல் போல் இல்லாமல், பார்க்கர் திரித்துவ போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. சர்ச்சில் இருக்கிற எல்லாரும் “சத்தியத்தை ஏற்றுக்கொண்டு . . . ஒரே சர்வவல்லமையுள்ள [கடவுளான] யெகோவாவை வணங்கினால் [நன்றாக இருக்கும்]” என்று பார்க்கர் எழுதினார். புதிய ஏற்பாட்டின் கையெழுத்து பிரதிகளில் இயேசுவுக்கும் கடவுளுக்கும் கைரியாஸ் என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது, இருவருக்கும் இடையே இருக்கிற வித்தியாசத்தை தெளிவாக காட்டுவதில்லை என்று அவர் உணர்ந்தார். அப்போதுதான், ஷாட்வெல்லின் மொழிபெயர்ப்பில் கைரியாஸ் என்ற வார்த்தைக்கு பதிலாக, சில இடங்களில் “யெகோவா” என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து பார்க்கர் ரொம்ப ஆச்சரியப்பட்டார்.

 பார்க்கரால் எப்படி இந்த விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது? அவர் கிரேக்க மொழியை படித்தார். கிரேக்க இலக்கணத்தை பற்றி நிறைய புத்தகங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். அதுமட்டுமல்ல, ஆங்கிலோ-பிப்ளிகல் இன்ஸ்டிடியூட்டில் ஒரு அங்கத்தினராகவும் இருந்தார். ஆங்கில மொழியில் சிறந்த பைபிள்களை வெளியிடுவதற்காக பைபிள் கையெழுத்து பிரதிகளின் ஆராய்ச்சியை அந்த இன்ஸ்டிடியூட் உற்சாகப்படுத்தியது. தான் முதல்முதலில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டை பார்க்கர் 1842-ல் வெளியிட ஆரம்பித்தார். இதை நிறைய பகுதிகளாகவும் பதிப்புகளாகவும் வெளியிட்டார். c

பார்க்கர் (ஹைன்ஃபெட்டர்) மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு

கடவுளுடைய பெயரை மறுபடியும் சேர்ப்பதற்கு பார்க்கர் எடுத்த முயற்சிகள்

 “கைரியாஸ் என்ற வார்த்தை எப்போது இயேசுவை குறிக்கிறது, எப்போது கடவுளை குறிக்கிறது?” “கைரியாஸ் என்ற வார்த்தையை ஏன் ஒரு பட்டப்பெயராக பயன்படுத்தாமல் ஒரு பெயராகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்?” இந்த மாதிரியான கேள்விகளை பற்றி பார்க்கர் சில வருஷங்களாகவே எழுதியிருக்கிறார்.

 1859-ல் ஷாட்வெல் வெளியிட்ட மத்தேயு புத்தகத்தின் மொழிபெயர்ப்பில் கைரியாஸ் பற்றிய குறிப்பை பார்க்கர் படித்த பிறகு, சில இடங்களில் கைரியாஸ் என்ற வார்த்தை “யெகோவா என்றுதான் மொழிபெயர்க்கப்பட வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார். அதனால், அவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டில் சில திருத்தங்களை செய்தார். கிரேக்க மொழியின் இலக்கணத்தையும், வசனங்களின் சூழமைவையும் வைத்து எங்கெல்லாம் “யெகோவா” என்ற பெயர் வருமோ அங்கெல்லாம் அதை மறுபடியும் சேர்த்தார். அதனால், 1863-ல் அவர் வெளியிட்ட எ லிட்ரல் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த நியு டெஸ்டமென்டில் கடவுளுடைய பெயர் 187 தடவை இருந்தது. அதை ஒரே தொகுதியாக அவர் வெளியிட்டார். நமக்கு தெரிந்தவரை, கிரேக்க வேதாகமம் முழுவதும் கடவுளுடைய பெயரை பயன்படுத்திய முதல் ஆங்கில பைபிள் இதுதான்! d

1864-ல் பார்க்கர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டின் தலைப்பு பக்கம்

 1864-ல் பார்க்கர் ஏ கொல்லேஷன் ஆஃப் என் இங்கிலிஷ் வெர்ஷன் ஆஃப் தி நியூ டெஸ்டமெண்ட் . . . வித் தி ஆத்தரைஸ்டு இங்கிலிஷ் வெர்ஷன் என்ற பைபிளை வெளியிட்டார். அதில் ஆத்தரைஸ்டு வெர்ஷனுடைய புதிய ஏற்பாட்டையும் தான் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டையும் சேர்த்திருந்தார். அதற்கு காரணம், இரண்டு பைபிளுக்கும் இருந்த வித்தியாசத்தை காட்டுவதற்காகத்தான். e

 புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதை மறுபடியும் பயன்படுத்துவது எந்தளவுக்கு முக்கியம் என்பதை காட்டுவதற்காக பார்க்கர் ஆத்தரைஸ்டு வெர்ஷன் பைபிளிலிருந்த சில வசனங்களை எடுத்து பேசினார். அதில் ஒன்றுதான் ரோமர் 10:13. அது இப்படி சொல்கிறது: “ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” (தமிழ் O.V.) ‘இந்த வசனங்களை ஆத்தரைஸ்டு வெர்ஷனில் படித்தபோது இங்கே சொல்லியிருப்பது யெகோவாவைதான்,  அவருடைய மகனும் நம்முடைய எஜமானுமான இயேசு கிறிஸ்துவை அல்ல என்பதை [எத்தனை] பேர் யோசித்து பார்த்தீர்கள்?’ என்று பார்க்கர் கேட்டார்.

கிங் ஜேம்ஸ் வெர்ஷனிலும் (மேலே) பார்க்கரின் 1864 மொழிபெயர்ப்பிலும் (கீழே) ரோமர் 10:13

 தான் எழுதிய துண்டுப் பிரசுரங்களையும் ஆராய்ச்சி குறிப்புகளையும் மற்ற விஷயங்களையும் வெளியிடவும் விளம்பரப்படுத்தவும் பார்க்கர் நிறைய பணத்தை செலவு செய்தார். அன்று அது ரொம்ப பெரிய ஒரு தொகையாக இருந்தது. சொல்லப்போனால், ஒரே வருஷத்தில் அவர் 800 பவுண்டுகளை செலவு செய்தார். இன்றைய மதிப்புக்கு அது 1,00,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் (1,32,000 அமெரிக்க டாலர்கள்). அதுமட்டுமல்ல, தனக்கு தெரிந்தவர்களுக்கும் உயர் பதவியில் இருந்த குருமார்களுக்கும் தன்னுடைய பிரசுரங்களை படிப்பதற்காக இலவசமாக அனுப்பி வைத்தார்.

 பார்க்கர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் அவருடைய மற்ற பிரசுரங்களும் ரொம்ப குறைவாகத்தான் அச்சிடப்பட்டன. அவருடைய வேலையை நிறைய அறிஞர்கள் விமர்சித்தார்கள். ஆங்கில புதிய ஏற்பாட்டில் கடவுளுடைய பெயரை மறுபடியும் சேர்ப்பதற்காக அவரும் ஷாட்வெல்லும் மற்றவர்களும் கஷ்டப்பட்டு எடுத்த முயற்சியை அவர்கள் யாருமே மதிக்கவில்லை.

 நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள இந்த பத்து நிமிட வீடியோவை பாருங்கள்: வார்விக் மியூசியத்திற்கு ஒரு சுற்றுலா: “பைபிளும் பரிசுத்த பெயரும்.”

a ”யெகோவா“ என்ற பெயருடைய சுருக்கம் “யா.” இது வெளிப்படுத்துதல் 19:1, 3, 4 மற்றும் 6-ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “அல்லேலூயா” என்பதன் அர்த்தம் “மக்களே, ‘யா’வைப் புகழுங்கள்!”

b ஷாட்வெல் புதிய ஏற்பாட்டை முழுமையாக மொழிபெயர்த்து முடிக்கவில்லை. மற்ற மொழிபெயர்பாளர்கள்: ஃபிலிப் டாட்ரிட்ஜ், எட்வர்ட் ஹார்ட்வுட், வில்லியம் நியூக்கம், எட்கர் டெய்லர் மற்றும் கில்பர்ட் வேக்ஃபில்ட்.

c பைபிள் ஆராய்ச்சிகளையும் தன்னுடைய தொழிலையும் பிரித்து வைப்பதற்காக, மத சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பைபிள் மொழிபெயர்ப்புகளிலும் ஹெர்மன் ஹைன்ஃபெட்டர் என்ற பெயரை பார்க்கர் பயன்படுத்தினார். இந்த பெயர், பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பின் இணைப்பில் நிறைய தடவை இருக்கிறது.

d 1864-ல், ஆன் இங்கிலிஷ் வெர்ஷன் ஆஃப் தி நியூ டெஸ்டமெண்ட் பைபிளை பார்க்கர் வெளியிட்டார். அதில் 186 தடவை கடவுளுடைய பெயர் வந்தது.

e பார்க்கரின் மொழிபெயர்ப்பு வெளிவருவதற்கு முன்பு, புதிய ஏற்பாட்டின் எபிரெய மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயரை பல வசனங்களில் சேர்க்கப்பட்டிருந்தன. 1795-ல் ஜொஹென் ஜேக்கப் டால்ஸ் ஜெர்மன் மொழிபெயர்ப்பு பைபிளை வெளியிட்டார். அதில், மத்தேயு முதல் யூதா புத்தகம் வரை கடவுளுடைய பெயர் 90-க்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டிருந்தது.