Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீவிரவாதம் என்றாவது ஒழியுமா?

தீவிரவாதம் என்றாவது ஒழியுமா?

 தீவிரவாத தாக்குதல் நடக்கும்போது நம் மனதுக்குள் நிறைய கேள்விகள் வரலாம்: ‘கடவுளுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா? ஏன் இந்த கெட்ட விஷயங்கள் நடக்கின்றன? தீவிரவாதம் a என்றைக்காவது ஒழியுமா? என்னுடைய பயத்தை எப்படி சமாளிக்கலாம்?’ இவற்றுக்கெல்லாம் பைபிள் திருப்தியான பதில் தருகிறது.

தீவிரவாத செயல்களை பார்க்கும்போது கடவுளுக்கு எப்படி இருக்கிறது?

 கடவுள் வன்முறையையும் தீவிரவாதத்தையும் வெறுக்கிறார். (சங்கீதம் 11:5; நீதிமொழிகள் 6:16, 17) கடவுளுடைய பிரதிநிதியாக இயேசு இந்த பூமிக்கு வந்தபோது, தன்னுடைய சீஷர்கள் ஒருசமயம் வன்முறையை கையில் எடுத்தார்கள். அவர்கள் அப்படி செய்ததை இயேசு கண்டித்தார். (மத்தேயு 26:50-52) சிலர், கடவுளுடைய பெயரில் வன்முறையில் இறங்குகிறார்கள். ஆனால், கடவுள் இதையெல்லாம் அங்கீகரிப்பது இல்லை. அவர்கள் செய்கிற ஜெபத்தைக்கூட அவர் கேட்பதில்லை.—ஏசாயா 1:15.

 கஷ்டப்படுகிறவர்களையும் தீவிரவாத சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்கும்போது கடவுள் ரொம்ப வேதனைப்படுகிறார். அப்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவர்மேலும் கடவுள் ரொம்ப அக்கறையாக இருக்கிறார். (சங்கீதம் 31:7; 1 பேதுரு 5:7) வன்முறையை கண்டிப்பாக கடவுள் ஒழித்துக்கட்டுவார் என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 60:18.

தீவிரவாதத்தின் காரணம்

 தீவிரவாதத்தின் அடிப்படை காரணத்தை பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.” (பிரசங்கி 8:9) சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் ரொம்ப கொடூரமான முறைகளை பயன்படுத்தி மற்றவர்களை அடக்கி ஒடுக்கியிருக்கிறார்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள், திரும்ப போராடுவதற்கு தீவிரவாதத்தை கையில் எடுக்கிறார்கள்.—பிரசங்கி 7:7.

தீவிரவாதத்துக்கு முடிவு

 பயத்தை உண்டாக்குகிற சூழ்நிலைகளையும் வன்முறையையும் ஒழித்துக்கட்டுவதாக கடவுள் சொல்லியிருக்கிறார். பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். (ஏசாயா 32:18; மீகா 4:3, 4) அவர் இதையெல்லாம் செய்யப்போகிறார்:

  •   தீவிரவாதத்தின் முக்கிய காரணத்தை இல்லாமல் செய்துவிடுவார். கடவுள் மனித அரசாங்கங்களை நீக்கிவிட்டு தன்னுடைய அரசாங்கத்தை கொண்டுவருவார். அது உலகம் முழுவதும் ஆட்சி செய்யும். அந்த அரசாங்கத்தின் ராஜாவான இயேசு, எல்லாரையும் சரிசமமாக நடத்துவார். வன்முறையையும் அடக்குமுறையையும் ஒழித்துக்கட்டுவார். (சங்கீதம் 72:2, 14) அந்த சமயத்தில் யாருமே தீவிரவாதத்தை கையில் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால், மக்கள் எல்லாரும் “அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.

  •   தீவிரவாதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வார். தீவிரவாதத்தால் ஏற்பட்ட ஆறாத காயங்களை கடவுள் சரி செய்வார். அது உடலளவில் இருந்தாலும் சரி, மனதளவில் இருந்தாலும் சரி! (ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:3, 4) இறந்துபோனவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டு வருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். சமாதானமான பூமியில் அவர்களை மறுபடியும் வாழ வைப்பார்.—யோவான் 5:28, 29.

 கடவுள் சீக்கிரமாக செயலில் இறங்குவார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், ‘கடவுள் ஏன் இவ்வளவு காலம் தீவிரவாதத்தை விட்டுவைத்திருக்கிறார்?’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதற்கு பதில் தெரிந்துகொள்ள, கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்? என்ற வீடியோவை பாருங்கள்.

a பொதுமக்களை கொடூரமாக தாக்குவது அல்லது தாக்கப்போவதாக மிரட்டுவது, இதைத்தான் “தீவிரவாதம்” என்று சொல்வோம். அரசியல், மத அல்லது சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் மக்களின் மனதில் பயத்தை விதைப்பதற்காகவும் தீவிரவாதத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு சம்பவத்தை தீவிரவாத செயலாக ஒரு சிலர் பார்க்கலாம், வேறுசிலர் அப்படி பார்க்காமல் இருக்கலாம்.