Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“எனக்கு நானே குழி வெட்டிக்கொண்டு இருந்தேன்”

“எனக்கு நானே குழி வெட்டிக்கொண்டு இருந்தேன்”
  • பிறந்த வருஷம்: 1978

  • பிறந்த நாடு: எல் சால்வடார்

  • என்னைப் பற்றி: பயங்கரமான ரவுடி குடும்பலைச் சேர்ந்தவன்

என் கடந்தகால வாழ்க்கை

 நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்த கொஞ்சக் காலத்தில், “நீ உண்மையிலேயே கடவுள பத்தி தெரிஞ்சுக்கணும்னா யெகோவாவின் சாட்சிகளோட படிக்குறத விட்டுடாத” என்று ஒருவர் சொன்னார். இதைக் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்று சொல்வதற்கு முன்னால், என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.

 எல் சால்வடாரில் இருக்கும் கெசால்டெப்பெக்கெ என்ற ஊரில் நான் பிறந்தேன். என் அப்பா அம்மாவுக்கு 15 பிள்ளைகள், அதில் நான் ஆறாவது. சட்டத்துக்குக் கீழ்ப்படியும் நேர்மையான நல்ல பிள்ளையாக என்னை வளர்க்க என் அப்பா அம்மா முயற்சி செய்தார்கள். அதோடு, லியோனார்டோ என்பவரும் இன்னும் இரண்டு யெகோவாவின் சாட்சிகளும் அவ்வப்போது வந்து எங்களுக்கு பைபிளைச் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் சொன்னதையெல்லாம் நான் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அடுத்தடுத்து பல தவறான முடிவுகளை எடுத்தேன். 14 வயதில், என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து குடிக்க ஆரம்பித்தேன், போதைப்பொருளையும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். அவர்கள் ஒவ்வொருவராக ஸ்கூலை விட்டுவிட்டு, ஒரு ரவுடி கும்பலில் போய்ச் சேர்ந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டேன். நாங்கள் தெருவே கதி என்றிருந்தோம். மதுபானம், போதைப்பொருள் போன்ற கெட்ட பழக்கங்களுக்குப் பணம் தேவைப்பட்டதால் மற்றவர்களை மிரட்டிப் பணம் பறித்தோம், திருடினோம்.

 அந்த ரவுடி கும்பலே என் குடும்பமாகிவிட்டது. அவர்களுக்கு விசுவாசமாக இருக்க நான் கடமைப்பட்டிருப்பதாக நினைத்தேன். ஒருநாள், பயங்கர போதையில் இருந்த என்னுடைய ஃப்ரெண்ட் பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டை போட்டு அவரை அடித்துவிட்டான். அவர் எப்படியோ இவனை மடக்கிப்பிடித்து, போலீஸைக் கூப்பிட்டார். எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. அவர் என் ஃப்ரெண்டை விட்டுவிட வேண்டும் என்பதற்காக, அவருடைய காரை ஒரு கனமான தடியால் அடித்து நொறுக்க ஆரம்பித்தேன். அதை நிறுத்தச் சொல்லி அவர் கெஞ்சியபோதும், நான் கேட்கவே இல்லை. ஒவ்வொரு கண்ணாடியாக அடித்து நொறுக்கி காரைச் சின்னாபின்னமாக்கினேன்.

 எனக்கு 18 வயது இருக்கும்போது, எங்கள் கும்பலுக்கும் போலீஸுக்கும் மோதல் ஏற்பட்டது. நாங்களே தயாரித்த ஒரு வெடிகுண்டை நான் எறியப்போகும் சமயத்தில், அது என் கையிலேயே வெடித்துவிட்டது. எப்படியென்று எனக்கே தெரியவில்லை. என் கை சிதறிப்போனதைப் பார்த்ததுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அதன் பிறகு நான் மயங்கி விழுந்துவிட்டேன். ஆஸ்பத்திரியில் மயக்கம் தெளிந்தபோதுதான், என்னுடைய வலது கை துண்டிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அதுமட்டுமல்ல, என்னுடைய வலது காது கேட்கவில்லை, வலது கண்ணும் கிட்டத்தட்ட குருடாகியிருந்தது.

 இத்தனை நடந்த பிறகும், ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் நேராக என்னுடைய கும்பலிடம் போனேன். ஆனால், கொஞ்ச நாளில் போலீஸ் என்னைக் கைது செய்து, ஜெயிலில் போட்டார்கள். அங்கே என் ரவுடி கும்பலோடு இன்னும் நெருக்கமாகிவிட்டேன். காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு மாரிஹுவானாவை புகைப்பதிலிருந்து, ராத்திரி தூங்கப்போவதுவரை எல்லாவற்றையும் நாங்கள் சேர்ந்துதான் செய்தோம்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றிய விதம்

 நான் ஜெயிலில் இருந்தபோது, லியோனார்டோ என்னைச் சந்தித்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, என் வலது கையில் நான் பச்சை குத்தியிருந்ததைக் காட்டி, “இந்த மூணு அடையாளங்களுக்கும் என்ன அர்த்தம்னு தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாம என்ன! செக்ஸ், போதைப்பொருள், ராக்-அண்ட்-ரோல் இசை” என்று நான் சொன்னேன். அதற்கு அவர், “என்னை பொறுத்தவரைக்கும் இதோட அர்த்தம் ஆஸ்பத்திரி, ஜெயில், சாவு. நீ ஏற்கெனவே ஆஸ்பத்திரியில இருந்த. இப்ப ஜெயலில்ல இருக்க. அடுத்தது என்னனு உனக்கே தெரியும்” என்று சொன்னார்.

 அதைக் கேட்டு நான் ஆடிப்போய்விட்டேன். அவர் சொன்னது சரிதான். என்னுடைய வாழ்க்கைமுறையால் எனக்கு நானே குழி வெட்டிக்கொண்டு இருந்தேன். ஆனால், எனக்கு பைபிளைச் சொல்லிக்கொடுப்பதாக லியோனார்டோ சொன்னார். நான் ஒத்துக்கொண்டேன். பைபிளிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் என் வாழ்க்கையை மாற்றுவதற்கு என்னைத் தூண்டின. உதாரணத்துக்கு, “கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கநெறிகளை கெடுத்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:33, அடிக்குறிப்பு) அதனால், முதல்வேளையாக நான் புதிய நண்பர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன். என்னுடைய கும்பலுடைய கூட்டங்களுக்குப் போகாமல், ஜெயிலுக்குள் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். அங்கே ஆன்ட்ரெஸ் என்ற கைதியைப் பார்த்தேன். அவர் ஜெயிலுக்குள்ளேயே ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக ஆகியிருந்தார். அவரோடு சேர்ந்து காலையில் டிபன் சாப்பிட என்னைக் கூப்பிட்டார். அன்றிலிருந்து, காலையில் மாரிஹுவானா புகைப்பதை நிறுத்திவிட்டேன். அதற்குப் பதிலாக, ஆன்ட்ரெஸும் நானும் தினமும் காலையில் ஒரு பைபிள் வசனத்தைப் பற்றிக் கலந்துபேசினோம்.

 என்னுடைய கும்பலில் இருந்தவர்கள் என்னிடம் மாற்றங்களைப் பார்த்தார்கள். ஒருநாள், அந்தக் கும்பலின் தலைவர்களில் ஒருவர் என்னிடம் பேச வேண்டுமென்று சொன்னார். நான் மாற நினைப்பதைப் பற்றிச் சொன்னால் என்ன செய்வாரோ என்று பயமாக இருந்தது. ஏனென்றால், ரவுடி கும்பலிலிருந்து விலகுவது நடக்காத காரியம். ஆனால் அவர், “நீ இப்பெல்லாம் நம்ம கூட்டத்துக்கு வராம யெகோவாவின் சாட்சிகளோட கூட்டத்துக்கு போயிட்டு இருக்குறத நாங்க பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். நீ என்ன செய்யலாம்னு நினைச்சிருக்க?” என்று கேட்டார். பைபிளைத் தொடர்ந்து படித்து என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புவதாக நான் சொன்னேன். நான் உண்மையிலேயே ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆக விரும்புவதைக் காட்டினால், கும்பலில் இருப்பவர்கள் என்னை எதுவும் செய்ய மாட்டார்கள் என்று அவர் சொன்னார். அதைக் கேட்டபோது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, “நீ உண்மையிலேயே கடவுள பத்தி தெரிஞ்சுக்கணும்னா யெகோவாவின் சாட்சிகளோட படிக்குறத விட்டுடாத. கெட்ட விஷயங்கள எல்லாம் இனிமே நீ செய்யாத. வாழ்த்துக்கள்! நீ சரியான வழியிலதான் போயிட்டு இருக்க. யெகோவாவின் சாட்சிகளால உனக்கு கண்டிப்பா உதவ முடியும். நான் அமெரிக்காவுல அவங்களோட பைபிள படிச்சேன். என் குடும்பத்துல இருக்குற சிலர்கூட யெகோவாவின் சாட்சிகள்தான். பயப்படாத. அவங்களோட படிக்குறத விட்டுடாத” என்று சொன்னார். அப்போதுகூட எனக்கு ஒருபக்கம் பயமாகத்தான் இருந்தது, ஆனாலும் இன்னொரு பக்கம் ஒரே சந்தோஷமாக இருந்தது. மனசுக்குள் யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். கூண்டிலிருந்து விடுதலையான பறவைபோல் உணர்ந்தேன். “சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னதன் அர்த்தம் அப்போது புரிந்தது.​—யோவான் 8:​32.

 என்னுடைய பழைய நண்பர்கள் சிலர், வேண்டுமென்றே எனக்குப் போதைப்பொருளைக் கொடுத்துப் பார்த்தார்கள். சிலசமயம், என்னால் ஆசையை அடக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், அடிக்கடி ஊக்கமாக ஜெபம் செய்த பிறகு, ஒருவழியாக என்னுடைய கெட்ட பழக்கங்களை விட்டொழித்தேன்.​—சங்கீதம் 51:10, 11.

 ஜெயிலிலிருந்து விடுதலையான பிறகு நான் பழையபடி மாறிவிடுவேன் என்று நிறைய பேர் நினைத்தார்கள், ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, நான் அடிக்கடி சிறைச்சாலைக்குப் போய், அங்கிருந்த கைதிகளிடம் பைபிள் விஷயங்களைப் பற்றிப் பேசினேன். நான் உண்மையிலேயே மாறிவிட்டதை என்னுடைய பழைய நண்பர்கள் ஒருவழியாகப் புரிந்துகொண்டார்கள். ஆனால், என்னுடைய பழைய எதிரிகள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

 ஒருநாள் நானும் இன்னொரு சகோதரரும் ஊழியத்துக்குப் போயிருந்தோம். திடீரென்று, என்னைத் தீர்த்துக்கட்ட நினைத்த அந்த எதிரிகள், கைகளில் ஆயுதங்களோடு எங்களைச் சுற்றிவளைத்தார்கள். நான் கும்பலைவிட்டு விலகிய விஷயத்தை என்னுடன் இருந்த சகோதரர் மரியாதையாகவும், அதேசமயத்தில் தைரியமாகவும் அவர்களிடம் எடுத்துச் சொன்னார். நான் அமைதியாகவே இருக்க முயற்சி செய்தேன். அந்த ஆட்கள் என்னை அடித்துவிட்டு, மறுபடியும் அந்த ஏரியாவில் கால்வைக்கக் கூடாதென்று மிரட்டிவிட்டு அனுப்பிவிட்டார்கள். பைபிள் உண்மையிலேயே என் வாழ்க்கையை அடியோடு மாற்றியிருந்தது. நான் பழைய ஆளாக இருந்திருந்தால், பழிக்குப்பழி வாங்க முயற்சி செய்திருப்பேன். ஆனால், இப்போது பைபிளில் இருக்கும் இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறேன்: “உங்களில் யாரும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் மத்தியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லாருக்கும் நன்மை செய்ய எப்போதும் முயற்சி செய்யுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:15.

 நான் யெகோவாவின் சாட்சியாக மாறிய சமயத்திலிருந்து, நேர்மையாக வாழ முயற்சி செய்திருக்கிறேன். அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனாலும், யெகோவாவின் உதவியோடும், பைபிளின் அறிவுரைகளோடும், புதிய நண்பர்களின் ஆதரவோடும் என்னால் அப்படி வாழ முடிந்திருக்கிறது. நான் ஒருபோதும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டேன்.​—2 பேதுரு 2:​22.

எனக்குக் கிடைத்த நன்மைகள்

 முன்பு, நான் பயங்கர கோபக்காரனாக இருந்தேன், எதற்கெடுத்தாலும் குத்து, வெட்டு என்றிருந்தேன். நான் மட்டும் பைபிளைப் படிக்காமல் போயிருந்தால் இன்று உயிரோடு இருந்திருக்கவே மாட்டேன்! பைபிள் என்னை அடியோடு மாற்றிவிட்டது. என்னுடைய கெட்ட பழக்கங்களை நான் விட்டுவிட்டேன். என்னுடைய முன்னாள் எதிரிகளோடு சமாதானமாக இருக்கக் கற்றுக்கொண்டேன். (லூக்கா 6:27) இப்போது, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள உதவும் நண்பர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். (நீதிமொழிகள் 13:20) கடவுளுக்குச் சேவை செய்வதால், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை வாழ்கிறேன். நான் செய்த கெட்ட காரியங்களையெல்லாம் அவர் மன்னிக்க தயாராக இருந்தார். இப்போது நான் சந்தோஷமாக வாழ்கிறேன்.—ஏசாயா 1:18.

 2006-ல், கல்யாணம் ஆகாதவர்களுக்கு நடத்தப்படும் ஒரு விசேஷப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டேன். சில வருஷங்களுக்குப் பிறகு, கல்யாணம் செய்துகொண்டேன். எங்களுக்கு இப்போது ஒரு மகள் இருக்கிறாள். எனக்கு உதவி செய்த பைபிள் ஆலோசனைகளை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க இப்போது நிறைய நேரம் செலவழிக்கிறேன். சபையில் ஒரு மூப்பராகவும் சேவை செய்கிறேன். சின்ன வயதில் நான் செய்த தவறுகளைச் செய்யாமல் இருக்க சபையிலிருக்கும் இளைஞர்களுக்கு உதவி செய்கிறேன். இப்போது எனக்கு நானே குழி வெட்டிக்கொள்வதற்குப் பதிலாக, பைபிளில் கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கும் முடிவில்லாத வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள உழைக்கிறேன்.