Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?

 ‘எஜமானின் இரவு விருந்து’ என்றும், “ஆண்டவரின் திருவிருந்து” என்றும், இயேசுவின் மரண நினைவுநாள் என்றும் அழைக்கப்படுகிற கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிற விஷயத்தில் நாங்கள் பைபிளை அச்சுப்பிசகாமல் பின்பற்றுகிறோம். (1 கொரிந்தியர் 11:20; பொது மொழிபெயர்ப்பு) ஆனால், இந்த அனுசரிப்பு சம்பந்தமாக மற்ற சர்ச் பிரிவினருக்கு இருக்கிற நிறைய நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் பைபிள் அடிப்படையில் இல்லை.

எதற்காக அனுசரிக்க வேண்டும்?

 இயேசுவை நினைத்துப் பார்க்க... நம்மை மீட்க தன் உயிரையே பலிகொடுத்த அவருக்கு நன்றிகாட்ட... எஜமானின் இரவு விருந்தை நாம் அனுசரிக்க வேண்டும். (மத்தேயு 20:28; 1 கொரிந்தியர் 11:24) இது கிருபையோ பாவ மன்னிப்போ கிடைப்பதற்காகச் செய்யப்படுகிற ஒரு மதச் சடங்கு அல்ல. a இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம்தான் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பு கிடைக்கும், ஏதோவொரு மதச் சடங்கைச் செய்வதன் மூலம் கிடைக்காது என்று பைபிள் கற்பிக்கிறது.—ரோமர் 3:25; 1 யோவான் 2:1, 2.

எத்தனை முறை அனுசரிக்க வேண்டும்?

 எஜமானின் இரவு விருந்தை அனுசரிக்கச் சொல்லி இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தபோதிலும், எத்தனை முறை அனுசரிக்க வேண்டுமென்று திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை. (லூக்கா 22:19) சிலர் அதை மாதாமாதம் அனுசரிக்க வேண்டுமென நினைக்கிறார்கள்; மற்றவர்கள் அதை வாராவாரம் அல்லது தினந்தோறும் அல்லது ஒரே நாளில் பலமுறை அல்லது ஒரு நபரின் விருப்பத்திற்கு ஏற்ப எவ்வளவு முறை வேண்டுமானாலும் அனுசரிக்கிறார்கள். ஆனால், இது சம்பந்தமாக பின்வரும் சில விஷயங்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 இயேசு, யூதர்களுடைய பஸ்கா பண்டிகை நாளன்றுதான் எஜமானின் இரவு விருந்தை ஆரம்பித்து வைத்தார், அதே நாளில் பிற்பாடு அவர் இறந்துபோனார். (மத்தேயு 26:1, 2) இது ஏதோ தற்செயலாக நடந்த சம்பவமல்ல. இயேசுவின் உயிர்பலியை பஸ்கா ஆட்டுக்குட்டியின் பலியோடு பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது. (1 கொரிந்தியர் 5:7, 8) பஸ்கா பண்டிகை வருஷத்திற்கு ஒரு முறைதான் கொண்டாடப்பட்டது. (யாத்திராகமம் 12:1-6; லேவியராகமம் 23:5) அதேபோல, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரண நினைவுநாளை வருஷத்திற்கு ஒரு முறைதான் அனுசரித்தார்கள்; b எனவே, யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அதே மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.

தேதி, நேரம்

 இயேசு ஆரம்பித்த அனுசரிப்பின் மாதிரியை வைத்து, அதை எத்தனை முறை அனுசரிக்க வேண்டும் என்றுமட்டுமல்ல, அதற்கான தேதியையும் நேரத்தையும்கூட தெரிந்துகொள்ளலாம். பைபிளின் சந்திர நாள்காட்டியின்படி கி.பி. 33, நிசான் 14 அன்று, சூரிய மறைவுக்குப் பிறகு, இயேசு அந்த அனுசரிப்பை ஆரம்பித்து வைத்தார். (மத்தேயு 26:18-20, 26) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருஷமும் அதே தேதியில் இயேசுவின் மரண நினைவுநாளை அனுசரித்து வந்தார்கள்; c அந்த வழக்கத்தை நாங்கள் இன்றுவரை பின்பற்றி வருகிறோம்.

 கி.பி. 33, நிசான் 14 ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது உண்மைதான், ஆனால் ஒவ்வொரு வருஷமும் அந்தத் தேதி வேறு வேறு கிழமைகளில் வரலாம். நேரத்தைக் கணக்கிட இயேசுவின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்திதான் ஒவ்வொரு வருஷமும் நிசான் 14 எப்போது வருகிறது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம்; இன்றைய யூத காலண்டருக்காக பயன்படுத்தப்படுகிற முறையைப் பயன்படுத்துவதில்லை. d

ரொட்டியும் திராட்சமதுவும்

 இயேசு இந்தப் புதிய அனுசரிப்புக்காக, பஸ்கா விருந்தில் மீந்துபோன புளிப்பில்லாத ரொட்டியையும் சிவப்பான திராட்சமதுவையும் பயன்படுத்தினார். (மத்தேயு 26:26-28) அவர் பயன்படுத்தியது போலவே நாங்களும் புளிப்பில்லாத... எதுவும் சேர்க்கப்படாத... ரொட்டியைப் பயன்படுத்துகிறோம்; எதுவும் சேர்க்கப்படாத சிவப்புநிற திராட்சமதுவைப் பயன்படுத்துகிறோம்; திராட்சரசத்தையோ (ஜூஸையோ) இனிப்பு அல்லது போதையேற்றும் பொருள்கள் அல்லது நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட திராட்சமதுவையோ (ஒயினையோ) பயன்படுத்துவதில்லை.

 சில சர்ச்சுகளில் புளிப்பு அல்லது ஈஸ்ட் சேர்க்கப்பட்ட ரொட்டியைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் பைபிளில் புளிப்பு என்பது பாவத்திற்கும் களங்கத்திற்கும் அடையாளமாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. (லூக்கா 12:1; 1 கொரிந்தியர் 5:6-8; கலாத்தியர் 5:7-9) அதனால் கிறிஸ்துவின் பாவமில்லாத உடலுக்கு, புளிப்போ வேறு ஏதாவதோ சேர்க்கப்படாத ரொட்டிதான் பொருத்தமான அடையாளமாக இருக்க முடியும். (1 பேதுரு 2:22) சில சர்ச் பிரிவினர் பைபிளில் சொல்லப்படாத இன்னொரு வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள், அதாவது திராட்சமதுவுக்கு (ஒயினுக்கு) பதிலாக, புளிக்க வைக்கப்படாத திராட்சரசத்தை (ஜூஸை) பயன்படுத்துகிறார்கள். மதுபானங்களை எடுத்துக்கொள்ளக் கூடாதென்ற தங்களுடைய சர்ச்சின் சட்டத்தைப் பின்பற்றுவதால் அப்படிச் செய்கிறார்கள், உண்மையில் அந்தச் சட்டம் பைபிளுக்கு முரணானதாக இருக்கிறது.—1 தீமோத்தேயு 5:23.

அடையாளச் சின்னங்கள், நிஜமான உடலும் இரத்தமும் அல்ல

 இயேசுவின் மரண நினைவுநாள் அன்று பயன்படுத்தப்படுகிற புளிப்பில்லாத ரொட்டியும் சிவப்புநிற திராட்சமதுவும் கிறிஸ்துவுடைய உடல் மற்றும் இரத்தத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. சிலர் நினைக்கிறபடி அவை அற்புதமான விதத்தில் அவருடைய உடலாகவும் இரத்தமாகவும் மாறிவிடுவதில்லை அல்லது அவருடைய உடலோடும் இரத்தத்தோடும் கலந்துவிடுவதில்லை. இந்த விஷயத்தை பைபிள் வசனங்கள் எப்படி உறுதிப்படுத்துகின்றன என்று கவனியுங்கள்.

  •   தன்னுடைய இரத்தத்தைக் குடிக்கும்படி ஒருவேளை இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தால், இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டுமென்ற கடவுளுடைய சட்டத்தை மீறும்படி, அவரே சொல்வதுபோல் ஆகியிருக்கும். (ஆதியாகமம் 9:4; அப்போஸ்தலர் 15:28, 29) ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை; இரத்தத்தின் புனிதத்தைக் காத்துக்கொள்வது சம்பந்தமான கடவுளுடைய சட்டத்தை மீறும்படி இயேசு ஒருபோதும் மற்றவர்களுக்குச் சொல்லித் தந்திருக்க மாட்டார்.—யோவான் 8:28, 29.

  •   இயேசு அப்போது சாகாமல் உயிரோடு இருந்ததால், அப்போஸ்தலர்கள் அவருடைய இரத்தத்தைக் குடித்திருக்க முடியாது; அவருடைய இரத்தம் அந்தச் சமயத்தில் சிந்தப்பட்டிருக்கவில்லை.—மத்தேயு 26:28.

  •   இயேசுவின் பலி “ஒரே தடவை” கொடுக்கப்பட்டது. (எபிரெயர் 9:25, 26) ஆனால், ரொட்டியும் திராட்சமதுவும் ஒவ்வொரு இராப் போஜனத்தின்போதும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறதென்றால், அதில் பங்குகொள்கிறவர்கள் அந்தப் பலியைத் திரும்பத் திரும்பக் கொடுத்துக்கொண்டிருப்பதுபோல் இருக்கும்.

  •   “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்றுதான் இயேசு சொன்னார், “என்னை பலியாகச் செலுத்திக்கொண்டிருங்கள்” என்று சொல்லவில்லை.—1 கொரிந்தியர் 11:24.

 ரொட்டியும் திராட்சமதுவும் இயேசுவின் நிஜமான உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறதென்று நம்புகிறவர்கள், சில பைபிள் வசனங்களை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு, நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில், “இது என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்று இயேசு சொல்வதுபோல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (மத்தேயு 26:28) ஆனால், இயேசு சொன்ன வார்த்தைகளை இப்படியெல்லாம்கூட மொழிபெயர்க்கலாம்: “இது என்னுடைய இரத்தத்தைக் குறிக்கிறது,” “இது என்னுடைய இரத்தத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது,” “இது என்னுடைய இரத்தத்தை அடையாளப்படுத்துகிறது.” e இயேசு அடிக்கடி செய்ததுபோல இந்தச் சமயத்திலும் உருவக அணியைப் பயன்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார்.—மத்தேயு 13:34, 35.

யார் அதைச் சாப்பிட்டுக் குடிப்பார்கள்?

 எஜமானின் இரவு விருந்தை அனுசரிக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருசிலர் மட்டுமே அந்த ரொட்டியைச் சாப்பிட்டு, திராட்சமதுவைக் குடிக்கிறார்கள். ஏன் அப்படி?

 யெகோவா தேவனுக்கும் பூர்வ இஸ்ரவேலருக்கும் இடையே செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை, இயேசுவின் இரத்தம் மாற்றீடு செய்து, ‘புதிய ஒப்பந்தத்தை’ நிலைநாட்டியது. (எபிரெயர் 8:10-13) இந்தப் புதிய ஒப்பந்தத்தில் இருக்கிறவர்கள் மட்டுமே அந்த ரொட்டியைச் சாப்பிட்டு திராட்சமதுவைக் குடிப்பார்கள். இந்தப் புதிய ஒப்பந்தத்தில் எல்லா கிறிஸ்தவர்களுமே உட்படுவதில்லை, விசேஷமான விதத்தில் “கடவுளால் அழைக்கப்பட்டவர்கள்” மட்டுமே அதில் உட்பட்டிருக்கிறார்கள். (எபிரெயர் 9:15; லூக்கா 22:20) அவர்கள்தான் இயேசுவோடுகூட பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள்; அந்தப் பாக்கியம் 1,44,000 பேருக்கு மட்டுமே கிடைக்குமென்று பைபிள் சொல்கிறது.—லூக்கா 22:28-30; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3.

 பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்வதற்காக அழைக்கப்பட்ட ‘சிறு மந்தைக்கு’ நேர்மாறாக, பூமியில் “திரள் கூட்டமான மக்கள்” முடிவில்லாத வாழ்வைப் பெறப்போகிறார்கள்; அந்தத் திரள் கூட்டத்தின் பாகமாய் ஆகப்போகிற நம்பிக்கை எங்களில் பெரும்பாலோருக்கு இருக்கிறது. (லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 7:9, 10) அந்த நம்பிக்கையுடையவர்கள் நினைவுநாள் சின்னங்களில் பங்குகொள்வதில்லை; ஆனாலும், மனிதகுலத்துக்காக இயேசு கொடுத்த உயிர்பலிக்கு மனமார்ந்த நன்றியைக் காட்ட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம்.—1 யோவான் 2:2.

a மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங்ஸின் சைக்ளோப்பீடியா தொகுப்பு IX, பக்கம் 212-ல் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “புதிய ஏற்பாட்டில், புனிதச்சடங்கு என்ற வார்த்தையே கிடையாது; அதோடு, μυστήριον [my·steʹri·on] என்ற கிரேக்க வார்த்தை ஞானஸ்நானத்தையோ, கர்த்தருடைய இராப் போஜனத்தையோ, வேறு எந்தவொரு சடங்கையோ குறிப்பதற்குப் பயன்படுத்தப்படவில்லை.”

b த நியு ஷாஃப்-ஹெர்ஸாக் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிஸிஜியஸ் நாலேஜ், தொகுப்பு IV, பக்கங்கள் 43-​44-ஐயும், மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங்ஸின் சைக்ளோப்பீடியா தொகுப்பு VIII, பக்கம் 836-ஐயும் பாருங்கள்.

c த நியு கேம்ப்ரிட்ஜ் ஹிஸ்டரி ஆஃப் த பைபிள், தொகுப்பு 1, பக்கம் 841-ஐப் பாருங்கள்.

d அமாவாசை என்றைக்கு வருகிறதோ, அதை அடிப்படையாக வைத்துதான் இன்றைய யூத காலண்டர் நிசான் மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்கிறது; ஆனால், முதல் நூற்றாண்டில் இந்த முறை பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அமாவாசைக்குப்பின் எப்போது முதல் பிறை எருசலேமில் காணப்பட்டதோ அப்போதுதான் அந்த மாதம் தொடங்கியதாகக் கணக்கிடப்பட்டது; இது ஒருவேளை அமாவாசைக்குப்பின் ஓரிரு நாள் கழித்து வரலாம். இன்றைய யூதர்கள் பஸ்காவை அனுசரிக்கிற நாளும், யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் நினைவுநாளை அனுசரிக்கிற நாளும் சிலசமயம் வேறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

e பாருங்கள்: ஜேம்ஸ் மொஃபட்டின், எ நியு ட்ரான்ஸ்லேஷன் ஆஃப் த பைபிள்; சார்ல்ஸ் பி. வில்லியம்ஸின், த நியு டெஸ்டமென்ட்—எ ட்ரான்ஸ்லேஷன் இன் த லேங்குவேஜ் ஆஃப் த பீப்பில்; ஹக் ஜே. ஷோன்ஃபீல்டின், த ஒரிஜினல் நியு டெஸ்டமென்ட்.