Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?

தவறான கருத்துகள்

 தவறான கருத்து: யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்கள் கிடையாது என்பதால்தான் அவர்கள் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை.

 உண்மை: இயேசு கிறிஸ்துதான் எங்கள் மீட்பர் என்று நாங்கள் நம்புகிறோம், ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு’ எங்களால் முடிந்தளவு முயற்சி செய்கிறோம்.—1 பேதுரு 2:21; லூக்கா 2:11.

 தவறான கருத்து: இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று நீங்கள் நம்புவதில்லை.

 உண்மை: இயேசுவின் உயிர்த்தெழுதலில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை போதனையாக அதை நாங்கள் கருதுகிறோம், எங்களுடைய ஊழியத்திலும் அதைத்தான் சிறப்பித்துக் காட்டுகிறோம்.—1 கொரிந்தியர் 15:3, 4, 12-15.

 தவறான கருத்து: ஈஸ்டர் கொண்டாட்டத்தின் சந்தோஷம் உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்காததைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.

 உண்மை: எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் நேசிக்கிறோம். அவர்களைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிப்பதற்கும் முடிந்தளவு முயற்சி செய்கிறோம்.—தீத்து 2:4.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?

  •   ஈஸ்டர் பைபிள் அடிப்படையிலான கொண்டாட்டம் கிடையாது.

  •   இயேசு தன்னுடைய மரணநாளை அனுசரிக்கும்படிதான் சீஷர்களுக்குக் கட்டளையிட்டாரே தவிர, தான் உயிர்த்தெழுந்த நாளை அல்ல. அவருடைய மரணநாளை பைபிளின் சந்திர நாள்காட்டியின்படி வருஷா வருஷம் நாங்கள் தவறாமல் அனுசரிக்கிறோம்.—லூக்கா 22:19, 20.

  •   ஈஸ்டர் கொண்டாட்ட சம்பிரதாயங்கள் பூர்வ கருவள சடங்காச்சாரங்களிலிருந்து வந்திருக்கிறது. அதனால், அவற்றைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். தன்னை “மட்டும்தான் வணங்க வேண்டும்” என்று அவர் எதிர்பார்க்கிறார்; அவருக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிற வணக்கமுறை அவருடைய மனதைப் புண்படுத்துகிறது.—யாத்திராகமம் 20:5; 1 ராஜாக்கள் 18:21.

 ஈஸ்டர் கொண்டாடாமல் இருப்பதற்கான எங்களுடைய தீர்மானம் முழுக்கமுழுக்க பைபிள் அடிப்படையிலானது என நாங்கள் நம்புகிறோம்; வெறும் மனித பாரம்பரியங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக “ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்” பயன்படுத்தும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 3:21; மத்தேயு 15:3) ஈஸ்டர் பற்றி மற்றவர்கள் எங்களிடம் கேள்வி கேட்கும்போது எங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி அவர்களிடம் சொல்கிறோம்; அதேசமயத்தில், என்ன செய்ய வேண்டுமெனத் தீர்மானிக்கிற உரிமை அவரவருக்கு இருக்கிறது என்பதை நாங்கள் மதிக்கிறோம்.—1 பேதுரு 3:15.