Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு

உங்கள் பிள்ளைகளின் மனதில் ஒழுக்கநெறிகளைப் பதியவையுங்கள்

உங்கள் பிள்ளைகளின் மனதில் ஒழுக்கநெறிகளைப் பதியவையுங்கள்

மெக்ஸிகோவில் வசிக்கும் லோய்டா a என்ற தாய் சொல்கிறார்: “பருவ வயது பிள்ளைகளுக்குப் பள்ளியிலேயே ‘காண்டம்’ (Condom) கிடைக்கிறது; அதனால், பாதுகாப்பான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள்.”

ஜப்பானில் உள்ள நொபுகோ என்ற தாய் சொல்கிறார்: “‘நீயும் உன் கேர்ள்ஃபிரெண்டும் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்’ என்று நான் என் மகனிடம் கேட்டேன். அதற்கு அவன், ‘எனக்குத் தெரியவில்லை’ என்று சொன்னான்.”

உங்கள் மகனோ மகளோ நடை பழகிய சமயத்தைச் சற்று யோசித்துப் பாருங்கள்; அப்போது, ஆபத்தான பொருள்கள் எதுவும் அவர்களுடைய கைக்கு எட்டாதவாறு நீங்கள் அவர்களைப் பாதுகாத்திருப்பீர்கள். ஒருவேளை, மின் இணைப்புப் பலகைகளை அவர்கள் தொடமுடியாதபடி செய்திருப்பீர்கள், கூர்மையான பொருட்கள் அவர்கள் கண்களில் படாதவாறு மறைத்து வைத்திருப்பீர்கள், படிக்கட்டுகளில் தடுப்புப் போட்டிருப்பீர்கள். உங்கள் பிள்ளை பத்திரமாக இருப்பதற்காகவே இதையெல்லாம் செய்திருப்பீர்கள்.

உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகளையும்கூட இவ்வளவு சுலபமாகப் பாதுகாக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், இப்போது அவர்களைப் பற்றி உங்களுக்கு நிறையக் கவலை இருக்கும். ‘என் மகன் ஆபாசப் படங்களைப் பார்க்கிறானா?’ ‘என் மகள் தன்னுடைய அந்தரங்கத்தைப் படம்பிடித்து செல்போனில் அனுப்புகிறாளா?’ என்றெல்லாம் நினைத்து நீங்கள் கவலைப்படலாம்; இதைவிட பீதியூட்டுகிற விதத்தில், ‘என் டீன்-ஏஜ் பிள்ளை செக்ஸில் ஈடுபட்டிருக்குமோ?’ என்ற கேள்வியும் உங்கள் மனதில் வரலாம்.

அளவுக்குமீறி கட்டுப்படுத்துவது தீர்வா?

சில பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை 24 மணிநேரமும் கழுகைப் போலக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி பெற்றோர் கண்காணித்துக்கொண்டே இருந்தாலும், அவர்களுடைய கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பிள்ளைகள் தப்பு செய்கிறார்கள்; இந்த விஷயம் பின்புதான் பெற்றோருக்குத் தெரியவருகிறது. பெற்றோர் எதைத் தடுக்க நினைக்கிறார்களோ அதை அவர்களுக்குத் தெரியாமல் செய்வதில் பிள்ளைகள் கில்லாடிகளாகிவிடுகிறார்கள்.

எனவே, அளவுக்குமீறி கட்டுப்படுத்துவது தீர்வாகாது. யெகோவா தேவனும்கூட தம்முடைய படைப்புகள் தமக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பதற்காக அவர்களை அளவுக்குமீறி கட்டுப்படுத்துவதில்லை; அப்படியென்றால், பெற்றோராக நீங்களும் அவ்வாறு செய்யக்கூடாது. (உபாகமம் 30:19) எனவே, உங்களுடைய டீன்-ஏஜ் பிள்ளைகள் ஒழுக்க ரீதியில் ஞானமாக நடந்துகொள்ள நீங்கள் எப்படி உதவலாம்?நீதிமொழிகள் 27:11.

நீங்கள் எடுக்க வேண்டிய முதல்படி, உங்கள் பிள்ளைகளுடன் இதைப் பற்றி தொடர்ந்து பேசுவதே; அதுவும், சிறுவயதிலேயே அப்படிப் பேச ஆரம்பிப்பது முக்கியம். b (நீதிமொழிகள் 22:6) பிற்பாடு, அவர்கள் பருவ வயதில் நுழையும்போதும், இந்த விஷயத்தைப் பற்றி அடிக்கடி பேச வேண்டும். நீங்கள் பெற்றோராக இருப்பதால், செக்ஸ் பற்றிய நம்பகமான தகவலை பிள்ளைகள் உங்களிடமிருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். பிரிட்டனைச் சேர்ந்த அலீஷியா சொல்கிறாள்: “பிள்ளைகள் செக்ஸ் பற்றி அவர்களுடைய நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும் என நிறையப் பேர் நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் அப்படி நினைப்பதில்லை. அதைப் பற்றி அப்பாம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் விரும்புகிறோம். அவர்கள் சொல்வதை நம்பத் தயாராயிருக்கிறோம்.”

ஒழுக்க நெறிகள் ஏன் தேவை?

பிள்ளைகள் வளர வளர, செக்ஸ் பற்றி கூடுதலான விஷயங்களைத் தெரிந்துகொள்வது முக்கியம்; குழந்தை எப்படி உருவாகிறது... பிறக்கிறது... போன்ற விஷயங்களை மட்டுமே தெரிந்துகொண்டால் போதாது. அதோடு, ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய அவர்களுடைய பகுத்தறியும் திறன்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்க’ வேண்டும். (எபிரெயர் 5:14) வேறு வார்த்தைகளில் சொன்னால் அவர்களுக்கு நல்ல ஒழுக்க நெறிகள் தேவை; அதாவது, ஒழுக்க ரீதியில் எது சரியான நடத்தையோ அதை அவர்கள் உறுதியாய் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்கிசைவாக வாழவும் வேண்டும். உங்களுடைய டீன்-ஏஜ் பிள்ளையின் மனதில் ஒழுக்க நெறிகளை நீங்கள் எப்படிப் பதியவைக்கலாம்?

முதலில் ஒழுக்க விஷயத்தில் நீங்கள் கடைப்பிடிக்கிற நெறிகளைப் பற்றிச் சிந்தியுங்கள். உதாரணமாக, பாலியல் முறைகேடு, அதாவது திருமணமாகாத இரண்டு பேர் உடலுறவுகொள்வது, தவறு என்று நீங்கள் உறுதியாய் நம்பலாம். (1 தெசலோனிக்கேயர் 4:3) இந்த விஷயத்தில் நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பது உங்களுடைய பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்கலாம்; அதை ஆதரிக்கிற பைபிள் வசனங்களையும்கூட அவர்கள் சொல்லலாம். திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது சரியா தவறா என்று கேட்டால் தவறு என அவர்கள் சட்டென்று பதிலளிக்கலாம்.

ஆனால், அது மட்டும் போதாது. சில இளைஞர்கள் செக்ஸ் பற்றி தங்களுடைய பெற்றோர் சொல்வது சரியென வாயளவில் ஒத்துக்கொள்ளலாம் என்பதாக செக்ஸ் ஸ்மார்ட் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. “ஆனால் மனதளவில் அவர்கள் முடிவெடுக்கத் தடுமாறுகிறார்கள். எனவே, திடீரென ஓர் இக்கட்டான சூழ்நிலையை அவர்கள் எதிர்ப்படும்போது என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்கள்” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது. அதனால்தான் நல்ல நெறிகள் அவசியம். உங்கள் பருவ வயது பிள்ளைகள் நல்ல நெறிகளை வகுத்துக்கொள்ள நீங்கள் எப்படி உதவலாம்?

உங்களுடைய ஒழுக்க நெறிகளை அவர்களிடம் தெளிவாகச் சொல்லுங்கள்.

திருமணம் செய்தவர்கள் மட்டும்தான் செக்ஸில் ஈடுபட வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், அதைப் பற்றி உங்களுடைய பருவ வயது பிள்ளையிடம் தெளிவாகச் சொல்லுங்கள், அடிக்கடி சொல்லுங்கள். “டீன்-ஏஜிலுள்ள பிள்ளைகள் உடலுறவு கொள்ளக் கூடாது என்பதை பெற்றோர் தங்களுடைய டீன்-ஏஜ் பிள்ளைகளிடம் தெளிவாகத் தெரியப்படுத்தும்போது, அந்தப் பிள்ளைகள் அவசரப்பட்டு செக்ஸில் ஈடுபடுகிற வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது” என ஓர் ஆராய்ச்சி காட்டுவதாக பியான்ட் த பிக் டாக் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

நாம் முன்பு பார்த்தபடி, உங்களுடைய ஒழுக்க நெறிகளைப் பற்றிப் பிள்ளைகளிடம் பேசினாலே போதும், அவர்கள் கண்டிப்பாக அதைக் கடைப்பிடிப்பார்கள் என சொல்லிவிட முடியாது. என்றாலும், உங்களுடைய குடும்பத்தார் இன்னின்ன ஒழுக்க நெறிகளைத்தான் பின்பற்ற வேண்டும் என நீங்கள் தெள்ளத்தெளிவாகச் சொன்னால், அதை அடிப்படையாக வைத்து பிள்ளைகள் தங்களுடைய நெறிகளை வகுத்துக்கொள்வார்கள். நிறைய இளைஞர்கள் தங்களுடைய பெற்றோரின் நெறிகளை டீன்-ஏஜ் பருவத்தில் பின்பற்றாததுபோலத் தெரிந்தாலும் காலப்போக்கில் அவற்றைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள் என்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

இப்படிச் செய்துபாருங்கள்: சமீபத்திய செய்திகளில் அடிபட்ட ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டு பேச்சை ஆரம்பியுங்கள், அப்போது உங்களுடைய ஒழுக்க நெறிகளை அவர்களிடம் தெரிவியுங்கள். உதாரணமாக, செக்ஸ் சம்பந்தமான குற்றச்செயலைப் பற்றிய ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். “பெண்களை சில ஆண்கள் இந்தளவு கொடூரமாக நடத்துவதைப் பார்த்தால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வருகிறது என நீ நினைக்கிறாய்?” என்று கேட்கலாம்.

செக்ஸ் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லுங்கள்.

செக்ஸ் சம்பந்தமான எச்சரிப்புகளைக் கொடுப்பது அவசியம்தான். (1 கொரிந்தியர் 6:18; யாக்கோபு 1:14, 15) என்றாலும், செக்ஸ் என்பது சாத்தானின் கண்ணி என்று மட்டுமே பைபிள் சொல்வதில்லை; உண்மையில் அது கடவுள் தந்த பரிசு என்பதாகவே சொல்கிறது. (நீதிமொழிகள் 5:18, 19; உன்னதப்பாட்டு 1:2) உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையிடம் செக்ஸில் உள்ள ஆபத்துக்களைப் பற்றி மட்டுமே சொன்னால், அவர்களுக்கு அதைப் பற்றிய தவறான எண்ணம் ஏற்படும், அது பைபிளுக்கு முரணானது என்ற எண்ணமும் வந்துவிடும். “பாலியல் ஒழுக்கக்கேட்டைப் பற்றியே என் அப்பா, அம்மா எப்பவும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்; அதனால், செக்ஸ் என்றாலே தப்பு என்ற தவறான எண்ணம் எனக்கு வந்துவிட்டது” என்று பிரான்சில் வசிக்கும் கொரின்னா என்ற இளைஞி சொல்கிறாள்.

எனவே, உங்கள் பிள்ளைகளிடம் செக்ஸ் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லுங்கள். மெக்சிகோவைச் சேர்ந்த நாடியா என்ற தாய் சொல்கிறார்: “செக்ஸ் என்பது ஒரு அழகான விஷயம், இயற்கையான விஷயம். மனிதர்கள் அனுபவிப்பதற்காக யெகோவா தேவன் அதைக் கொடுத்திருக்கிறார். ஆனால், கல்யாணமானவர்கள் மட்டுமே அதில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டும்தான் சந்தோஷம் கிடைக்கும், இல்லையென்றால் துக்கம்தான் மிஞ்சும்; இந்தக் கருத்தை என்னுடைய டீன்-ஏஜ் பிள்ளைகளுக்குப் புரியவைக்க நான் எப்போதுமே முயற்சி செய்தேன்.”

இப்படிச் செய்துபாருங்கள்: செக்ஸ் பற்றி உங்கள் பிள்ளையிடம் அடுத்த முறை பேசும்போது, அதைப் பற்றிய நல்ல விஷயங்களைச் சொல்லி முடியுங்கள். ‘செக்ஸ் என்பது கடவுள் தந்த அருமையான பரிசு, உன்னுடைய கல்யாணத்திற்குப் பிறகு நீயும் அதை அனுபவிக்கலாம்’ என்று சொல்லத் தயங்காதீர்கள். அதே சமயத்தில், ‘உனக்கு கல்யாணமாகும்வரை, கடவுள் தந்திருக்கிற ஒழுக்க நெறிகளின்படி நீ வாழ்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றும் சொல்லுங்கள்.

பின்விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்க உதவுங்கள்.

பொதுவாக, டீன்-ஏஜர்கள் எந்தவொரு விஷயத்திலும் நல்ல தீர்மானம் எடுப்பதற்கு, முதலில் தங்கள் முன் என்னென்ன தெரிவுகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிய வேண்டும்; பின்பு, ஒவ்வொரு தெரிவிலுமுள்ள நல்லது கெட்டதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். சரி எது, தப்பு எது என்பதை அவர்கள் தெரிந்துவைத்திருந்தால் போதுமென்று நினைக்காதீர்கள். ஆஸ்திரேலியாவிலுள்ள எம்மா என்ற கிறிஸ்தவப் பெண் சொல்கிறார்: “இளம் வயதில் நான் செய்த தப்பயெல்லாம் யோசித்துப் பார்த்ததில் ஒன்றைப் புரிந்துகொண்டேன்; அதாவது, கடவுளுடைய நெறிமுறைகளை தெரிந்துவைத்திருக்கிறோம் என்பதால் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லிவிட முடியாது. அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவதால் வரும் நன்மைகளையும் மீறுவதால் வரும் தீமைகளையும் புரிந்துவைத்திருப்பது ரொம்பவே முக்கியம்.”

இந்த விஷயத்தில் பைபிள் உங்களுக்குக் கைகொடுக்கும்; ஏனென்றால், பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அநேக கட்டளைகளில், அவற்றை மீறுவதால் வரும் தீமைகளும் வலியுறுத்திக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக, பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டால், “பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்” என்று நீதிமொழிகள் 5:8, 9 (பொது மொழிபெயர்ப்பு) இளைஞர்களை எச்சரிக்கிறது. திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்கிறவர்கள்... நடத்தைகெட்டவர்கள் என்ற பெயரைச் சம்பாதித்துவிடுவார்கள், கடவுளோடு உள்ள பந்தத்தை இழந்துவிடுவார்கள், சுயமரியாதையையும் தொலைத்துவிடுவார்கள். அதே சமயம், நன்நடத்தை, கடவுள்-பயம், சுயமரியாதை... உள்ள ஒருவர் இப்படிப்பட்டவரைத் திருமணம் செய்துகொள்ள முன்வராமல் போகலாம். கடவுளுடைய சட்டங்களை மீறுவதால் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் வருகிற ஆபத்துக்களை உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் சிந்தித்துப் பார்த்தால், அந்தச் சட்டங்களின்படி வாழ வேண்டுமென்பதில் திடத்தீர்மானமாய் இருப்பார்கள். c

இப்படிச் செய்துபாருங்கள்: கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றுவதே ஞானமானது என்பதை உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகளுக்குப் புரியவைக்க உதாரணங்களைப் பயன்படுத்துங்கள். நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “நெருப்பு வைத்து நல்லதும் செய்யலாம், கெட்டதும் செய்யலாம்; அதாவது சமையலும் செய்யலாம், காட்டையும் கொளுத்தலாம். ஆனால், இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உனக்குப் புரிகிறதா? இதற்கு நீ சொல்லும் பதிலை, செக்ஸ் பற்றிக் கடவுள் கொடுத்திருக்கும் கட்டளைகளோடு பொருத்திப் பார்க்க முடிகிறதா?” பாலியல் முறைகேட்டால் வருகிற தீய விளைவுகளை உங்கள் டீன்-ஏஜ் பிள்ளை புரிந்துகொள்ள நீதிமொழிகள் 5:3-14-ஐப் பயன்படுத்துங்கள்.

ஜப்பானிலுள்ள 18 வயது டாகாவோ சொல்கிறார்: “சரியானதைத்தான் செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும்; இருந்தாலும் என் மனதுக்குள்ளே தலைதூக்குகிற கெட்ட ஆசைகளை அடக்க நான் சதா போராடிக்கொண்டே இருக்கிறேன்.” மனதுக்குள் இப்படிப் போராடும் இளைஞர்கள் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை; ஏனென்றால், அவர்களுக்கு மட்டுமல்ல, விசுவாசத்தில் தலைசிறந்த விளங்கிய அப்போஸ்தலன் பவுலுக்கும்கூட அப்படிப்பட்ட போராட்டம் இருந்தது. “நன்மை செய்ய விரும்புகிற எனக்குள் தீமை இருக்கிறது” என்று அவர் சொன்னார்.—ரோமர் 7:21.

இப்படிப் போராடுவது ஒருபோதும் தவறில்லை என்பதை டீன்-ஏஜர்கள் மனதில்கொள்ள வேண்டும். ஏனென்றால், வருங்காலத்தில் அவர்கள் எப்படிப்பட்ட நபராக இருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க அது அவர்களைத் தூண்டும். ‘என் வாழ்க்கையை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறேனா? நன்நடத்தையும் கடவுள்-பயமும் உள்ளவன்(ள்) என்று பெயரெடுக்க விரும்புகிறேனா? அல்லது ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறவன்(ள்) என்று பெயரெடுக்க விரும்புகிறேனா?’ என்ற கேள்விகளைச் சிந்தித்துப் பார்ப்பது சரியான வழியில் நடக்க அவர்களுக்கு உதவும். உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் தங்களுக்கென ஒழுக்க நெறிகளை வகுத்திருந்தால், இந்தக் கேள்விகளுக்கு ஞானமான விதத்தில் பதிலளிக்க முடியும். (w11-E 02/01)

a இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b பிள்ளைகளிடம் செக்ஸ் பற்றிய பேச்சை எப்படி ஆரம்பிப்பது, அவர்களுடைய வயதுக்கு ஏற்ற விஷயங்களை எப்படிச் சொல்வது என்பதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்ள ஏப்ரல்-ஜூன் 2011 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 20-22-ஐப் பாருங்கள்.

c கூடுதல் தகவலுக்கு “இளைஞர் கேட்கின்றனர் . . . செக்ஸ் எங்களுடைய நெருக்கத்தை அதிகரிக்குமா?” என்ற கட்டுரையை ஏப்ரல் 2010 ஆங்கில விழித்தெழு!-வில் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .

  • என்னுடைய டீன்-ஏஜ் மகன்(ள்) ஒழுக்க நெறிகளை உறுதியாகப் பின்பற்றுகிறான்(ள்) என்பதற்கு என்ன அறிகுறிகள் தெரிகின்றன?

  • என்னுடைய டீன்-ஏஜ் பிள்ளையிடம் செக்ஸ் பற்றிப் பேசும்போது, அது சாத்தானின் கண்ணி என்று மட்டுமே சொல்லாமல் உண்மையில் அது கடவுள் தந்த பரிசு என்றும் சொல்கிறேனா?