Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

ஆதியாகமம் 1:1—“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”

ஆதியாகமம் 1:1—“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”

 “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.”—ஆதியாகமம் 1:1, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”—ஆதியாகமம் 1:1, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

ஆதியாகமம் 1:1-ன் அர்த்தம்

 பைபிளிலிருக்கும் இந்த முதல் வசனத்தில், இரண்டு முக்கியமான உண்மைகள் இருக்கின்றன. ஒன்று, ‘வானத்துக்கும் பூமிக்கும்’ ஆரம்பம் இருக்கிறது. இரண்டு, கடவுள்தான் அதைப் படைத்தார்.—வெளிப்படுத்துதல் 4:11.

 கடவுள் இந்தப் பூமியை எப்போது படைத்தார் என்றும் எப்படி படைத்தார் என்றும் பைபிள் சொல்வதில்லை. ஆனால், அவருடைய “அபாரமான ஆற்றலினாலும் பிரமிக்க வைக்கிற பலத்தினாலும்” படைத்தார் என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 40:26.

 “படைத்தார்” என்ற வார்த்தைக்கான எபிரெய வினைச்சொல், கடவுள் மட்டுமே செய்யகூடிய ஒரு விஷயத்தைக் குறிக்கிறது. a யெகோவா b மட்டும்தான் படைப்பாளர் என்று பைபிள் சொல்கிறது—ஏசாயா 42:5; 45:18.

ஆதியாகமம் 1:1-ன் பின்னணி

 ஆதியாகமம் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்கள் படைப்பைப் பற்றி சொல்கின்றன. அந்தப் புத்தகத்தின் முதல் வசனம் இதை அறிமுகப்படுத்துகிறது. ஆதியாகமம் 1:1-லிருந்து 2:4-வரை உள்ள வசனங்களில், பூமியும் அதில் இருக்கும் எல்லா உயிரனங்களும் முதல் மனித ஜோடியும் படைக்கப்பட்டதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்து வரும் வசனங்களில், முதல் மனித ஜோடி படைக்கப்பட்டதைப் பற்றி விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.—ஆதியாகமம் 2:7-25.

 ஆறு ‘நாட்களுக்கு’ கடவுள் படைப்பு வேலைகளைச் செய்தார் என்று ஆதியாகமம் புத்தகம் சொல்கிறது. இது 24 மணிநேரத்தைக் கொண்ட நாளைக் குறிக்கவில்லை. ஆனால், நீண்ட காலப்பகுதியைக் குறிக்கிறது. சொல்லப்போனால், “நாள்” என்ற வார்த்தை வெவ்வேறு கால அளவுகளையும் குறிக்கலாம். உதாரணத்துக்கு, ஆதியாகமம் 2:4-லில் இருக்கும் ‘நாள்’ மற்றும் ‘காலம்’ ஆகிய வார்த்தைகள் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால்தான், ஆறு நாட்களுக்கு கடவுள் செய்த எல்லா படைப்பு வேலைகளையும் ஒட்டுமொத்தமாக ஒரே “நாளில்” செய்ததாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, “நாள்” என்பது 24 மணிநேரத்தை கொண்ட ஒரு நாளை அல்ல, அது ஒரு காலப்பகுதியைக் குறிக்கிறது என்று தெரிகிறது.

ஆதியாகமம் 1:1-ஐப் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: சில ஆயிர வருஷங்களுக்கு முன்புதான் கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

 உண்மை: இந்தப் பிரபஞ்சம் எப்போது படைக்கப்பட்டது என்று பைபிள் சொல்வதில்லை. பல கோடி வருஷங்களுக்கு முன்பு படைக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் இந்தக் கருத்துக்கு ஆதியாகமம் 1:1 எந்த முரண்பாடான கருத்தையும் சொல்லவில்லை. c

 தவறான கருத்து: கடவுள் ஒரு திரித்துவம் என்று ஆதியாகமம் 1:1 சொல்கிறது. ஏனென்றால், இந்த வசனத்தில் “கடவுள்” என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை பன்மையில் இருக்கிறது.

 உண்மை: ஏலோஹிம் என்ற எபிரெய வார்த்தையில் இருந்துதான் கடவுள் என்ற பதவி பெயரை மொழிபெயர்த்திருக்கிறார்க்ள். மகத்துவம் அல்லது உயர்ந்த ஸ்தானத்தைக் குறிப்பதற்காகதான் இந்த எபிரெய வார்த்தை பன்மையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிறைய நபர்களைக் குறிப்பதற்காக அல்ல. ஆதியாகமம் 1:1-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏலோஹிம் என்ற வார்த்தை “எப்போதும் ஒருமையைக் குறிக்கும் வினைச்சொல்லாகதான் இருக்கிறது” என்று நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா சொல்கிறது. அதோடு, “உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறவர்களை மரியாதையோடு அழைப்பதற்காகதான் இந்த வார்த்தை பன்மையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர இது எந்த எண்ணிக்கையையும் குறிக்கவில்லை” என்றும் அது சொல்கிறது.—இரண்டாவது பதிப்பு, பகுதி 6, பக்கம் 272.

ஆதியாகமம் 1-வது அதிகாரத்தை அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்.

a இந்த வார்த்தையைப் பற்றி HCSB ஸ்டடி பைபிள் இப்படிச் சொல்கிறது: “‘படைப்பது’ என்ற வார்த்தைக்கான எபிரெய வினைச்சொல் பேரா. இந்த வினைச்சொல் [செய்வினை], ஒருபோதும் மனிதன் செய்யும் ஒரு செயலைக் குறிப்பதில்லை. அப்படியென்றால், பேரா என்ற வார்த்தை, கடவுள் மட்டும் செய்கிற ஒரு வேலையைதான் குறிக்கிறது.”—பக்கம் 7.

b யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.

c “ஆரம்பத்தில்” என்ற வார்த்தைக்கான எபிரெய வார்த்தையைப் பற்றி, தி எக்ஸ்பொசிட்டர்ஸ் பைபிள் கமென்ட்ரி இப்படிச் சொல்கிறது: “இந்த வார்த்தை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியைக் குறிக்கவில்லை.”—திருத்தப்பட்ட பதிப்பு, பகுதி I, பக்கம் 51.