Skip to content

மறுஜென்மத்தைப் பற்றி பைபிள் கற்பிக்கிறதா?

மறுஜென்மத்தைப் பற்றி பைபிள் கற்பிக்கிறதா?

பைபிள் தரும் பதில்

 இல்லை, கற்பிப்பதில்லை. பைபிளில், “மறுஜென்மம்” என்ற வார்த்தையும் கிடையாது, அந்தக் கருத்தும் கிடையாது. மறுஜென்ம நம்பிக்கை ‘ஆத்துமா அழியாது’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. a பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஆத்துமா’ என்ற வார்த்தை முழு நபரையுமே குறிக்கிறது, அதனால் ஆத்துமா சாகும் என்றுதான் பைபிள் கற்பிக்கிறது. (ஆதியாகமம் 2:7, அடிக்குறிப்பு; எசேக்கியேல் 18:4, தமிழ் O.V.) சாகும்போது ஒரு நபர் உயிரற்றவராகிவிடுகிறார்.—ஆதியாகமம் 3:19; பிரசங்கி 9:5, 6.

மறுஜென்மத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம்?

 உயிர்த்தெழுதல் என்கிற பைபிள் போதனை, ஆத்துமா அழியாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த போதனை அல்ல. இறந்துபோனவர்கள், உயிர்த்தெழுதலின்போது கடவுளுடைய வல்லமையால் உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள். (மத்தேயு 22:23, 29; அப்போஸ்தலர் 24:15) ஆம், இறந்துபோகாமல் என்றென்றும் வாழக்கூடிய அருமையான நம்பிக்கையுடன் புதிய பூமியில் திரும்பவும் உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.

மறுஜென்மத்தையும் பைபிளையும் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: தீர்க்கதரிசியான எலியா மறுஜென்மத்தில் யோவான் ஸ்நானகராகப் பிறந்தார் என்று பைபிள் சொல்கிறது.

 உண்மை: “நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புகிறேன்” என்று கடவுள் முன்கூட்டியே சொல்லியிருந்தார்; அந்தத் தீர்க்கதரிசனத்தை யோவான் ஸ்நானகர் நிறைவேற்றியதாக இயேசுவும் குறிப்பிட்டார். (மல்கியா 4:5, 6; மத்தேயு 11:13, 14) அதற்காக, எலியாதான் யோவான் ஸ்நானகராகப் பிறந்தார் என்று அர்த்தமாகிவிடாது. தான் எலியா அல்ல என்பதை யோவானே சொன்னார். (யோவான் 1:21) உண்மையில், எலியா செய்ததைப் போன்ற வேலையைத்தான் யோவானும் செய்தார். ஆம், கடவுளுடைய செய்தியை அறிவித்து, எல்லாரையும் மனம் திருந்தச் சொன்னார். (1 ராஜாக்கள் 18:36, 37; மத்தேயு 3:1, 2) அதோடு, “எலியாவுக்கு இருந்த அதே ஆர்வத்துடிப்போடும் வல்லமையோடும்” செயல்பட்டார்.—லூக்கா 1:13-17.

 தவறான கருத்து: மறுஜென்மத்தைதான் பைபிள், ‘மறுபடியும் பிறப்பது’ என்று குறிப்பிடுகிறது.

 உண்மை: ஒரு நபர் உயிரோடு இருக்கும்போது நடக்கிற ஆன்மீகப் பிறப்புதான் “மறுபடியும் பிறப்பது” என்பதை பைபிள் காட்டுகிறது. (யோவான் 1:12, 13) இப்படி மறுபடியும் பிறப்பது, கடந்தகால செயல்களின் விளைவு கிடையாது, இது கடவுளுடைய ஆசீர்வாதமாக இருக்கிறது; இந்த ஆசீர்வாதத்தைப் பெறுகிறவர்களுக்கு ஒரு விசேஷ எதிர்கால நம்பிக்கை இருக்கிறது.—யோவான் 3:3; 1 பேதுரு 1:3, 4.

a ஆத்துமா அழியாது, மறுஜென்மம் போன்ற நம்பிக்கைகள் பூர்வ பாபிலோனில் ஆரம்பமாயின. பிற்பாடு, இந்திய தத்துவ ஞானிகள் கர்மம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார்கள். பிரிட்டானிக்கா என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் உவர்ல்ட் ரிலிஜன்ஸ் சொல்கிறபடி, கர்மம் என்பது “காரண காரியம் என்கிற சட்டமாகும்; மனிதன் இந்தப் பிறவியில் என்ன செய்கிறானோ அதற்கான பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பான் என்று அந்தச் சட்டம் சொல்கிறது.”—பக்கம் 913.