Skip to content

பிசாசு இருப்பது நிஜமா?

பிசாசு இருப்பது நிஜமா?

பைபிள் தரும் பதில்

 ஆம், பிசாசு இருப்பது நிஜம்தான். “இந்த உலகத்தை ஆளுகிறவன்” அவன்தான்; ஆரம்பத்தில் அவன் ஒரு தேவதூதனாக இருந்தான், ஆனால் பிற்பாடு பொல்லாதவனாக மாறி, கடவுளுக்கு விரோதமாகக் கலகம் செய்தான். (யோவான் 14:30; எபேசியர் 6:11, 12) பின்வரும் பெயர்கள் மற்றும் விவரிப்புகளின் மூலம் பிசாசின் குணாதிசயத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது.

  •   சாத்தான்; இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.”—யோபு 1:6.

  •   பிசாசு; இதன் அர்த்தம் “இல்லாததையும் பொல்லாததையும் பேசுபவன்.”—வெளிப்படுத்துதல் 12:9.

  •   பாம்பு; “ஏமாற்றுக்காரன்” என்ற அர்த்தத்தைத் தருவதற்காக பைபிள் சில சமயம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.—2 கொரிந்தியர் 11:3.

  •   சோதனைக்காரன்.—மத்தேயு 4:3.

  •   பொய்யன்.—யோவான் 8:44.

தீமையான ஒரு குணமல்ல

 நமக்குள் இருக்கிற தீமையான ஒரு குணம்தான் பிசாசாகிய சாத்தான் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கிற ஓர் உரையாடலை பைபிள் பதிவுசெய்திருக்கிறது. கடவுள் பரிபூரணமானவர், அதனால் தனக்குள் இருக்கிற ஒரு தீமைக் குணத்தோடு பேசிக்கொண்டிருந்தார் என்று நினைப்பது நினைப்பது முற்றிலும் தவறாக இருக்கும். (உபாகமம் 32:4; யோபு 2:1-6) மற்றொரு உதாரணம்: பாவமே இல்லாத இயேசுவை சாத்தான் சோதித்தான் என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 4:8-10; 1 யோவான் 3:5) இப்படி, பிசாசு என்ற ஒருவன் இருப்பது நிஜம் என்பதையும், அவன் வெறுமனே தீமையான ஒரு குணமல்ல என்பதையும் பைபிள் தெளிவாகக் காட்டுகிறது.

 பிசாசு இருப்பது நிஜமென்று நிறையப் பேர் இன்று நம்புவதில்லை, இதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? வேண்டியதில்லை; ஏனென்றால், சாத்தான் தன்னுடைய குறிக்கோள்களை எட்ட ஏமாற்று வழிகளைப் பயன்படுத்துகிறான் என்று பைபிள் சொல்கிறது. (2 தெசலோனிக்கேயர் 2:9, 10) சாத்தான் என்ற ஒருவன் இருப்பதையே ஜனங்கள் நம்பாதபடிக்கு அவர்களுடைய மனக்கண்களை அவன் குருடாக்கி வைத்திருக்கிறான், அவனுடைய மாபெரும் தந்திர வேலைகளில் இதுவும் ஒன்று!—2 கொரிந்தியர் 4:4.

பிசாசைப் பற்றி மேலும்பல தவறான கருத்துகள்

  தவறான கருத்து: லூஸிஃபர் என்பது பிசாசுக்கு இருக்கிற இன்னொரு பெயர்.

 உண்மை: “லூஸிஃபர்” என்று சில பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தைக்கு ‘நட்சத்திரமாக மினுமினுத்தவன்’ என்று அர்த்தம். (ஏசாயா 14:12) இந்த வார்த்தை பாபிலோனின் ராஜ வம்சத்தை, அதாவது அடுத்தடுத்து வந்த பாபிலோன் ராஜாக்களை, குறிக்கிறது என்பதை அந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது; அகங்கரமாக நடந்த அந்த ராஜாக்களைக் கடவுள் தலைகுனியச் செய்தார். (ஏசாயா 14:4, 13-20) பாபிலோனின் ராஜ வம்சம் வீழ்ச்சியடைந்த பிறகு, அதைக் கேலி செய்வதற்காக ‘நட்சத்திரமாக மினுமினுத்தவன்’ என்ற பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டது.

  தவறான கருத்து: மக்களை நியாயந்தீர்க்கும் வேலையில் சாத்தான் கடவுளுடைய உதவியாளாக இருக்கிறான்.

 உண்மை: பிசாசு என்பவன் கடவுளுடைய எதிரி, அவருக்காக வேலை செய்பவன் அல்ல. கடவுளுக்குச் சேவை செய்கிறவர்களை பிசாசாகிய சாத்தான் எதிர்க்கிறான், அவர்கள்மேல் பொய்க் குற்றம் சாட்டுகிறான்.—1 பேதுரு 5:8; வெளிப்படுத்துதல் 12:10.