Skip to content

பிசாசைக் கடவுள் படைத்தாரா?

பிசாசைக் கடவுள் படைத்தாரா?

பைபிள் தரும் பதில்

 பிசாசைக் கடவுள் படைக்கவில்லை என்பதை பைபிள் வசனங்கள் காட்டுகின்றன. அவரால் படைக்கப்பட்ட ஒருவன் தன்னைத்தானே பிசாசாக மாற்றிக்கொண்டான். கடவுளைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவருடைய செயல்கள் குறை இல்லாதவை. அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை. அவர் நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர். அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.” (உபாகமம் 32:3-5) அப்படியானால், பிசாசாகிய சாத்தான் ஒருசமயத்தில் குறையற்றவனாக, நீதியுள்ளவனாக, அதாவது கடவுளுடைய தேவதூதர்களில் ஒருவனாக, இருந்தான் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

 “சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை” என்று இயேசு யோவான் 8:44-ல் சொன்னார்; அதாவது, ஒருசமயம் அவன் சத்தியத்தின்படி நடந்தான், குற்றமற்றவனாக இருந்தான் என்பதை அவர் சொல்லாமல் சொன்னார்.

 யெகோவா படைத்த புத்திக்கூர்மையுள்ள மற்ற படைப்புகளைப் போலவே, நல்லது கெட்டதைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் சாத்தானாக மாறிய அந்தத் தேவதூதனுக்கும் இருந்தது. கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்ததன் மூலமும், முதல் மனிதத் தம்பதியைத் தன் பக்கம் சேருவதற்குத் தூண்டிவிட்டதன் மூலமும் அவன் தன்னைத் தானே சாத்தானாக ஆக்கிக்கொண்டான். சாத்தான் என்பதற்கு “எதிர்ப்பவன்” என்று அர்த்தம்.—ஆதியாகமம் 3:1-5; வெளிப்படுத்துதல் 12:9.