Skip to content

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா?

பைபிள் தரும் பதில்

 ஆம், இருக்கிறார்; அதற்கு பைபிள் ஆணித்தரமான அத்தாட்சியை அளிக்கிறது. அதோடுகூட, மத சம்பந்தமான குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல், நம்முடைய ‘சிந்திக்கும் திறனையும்,’ ‘புத்திக்கூர்மையையும்’ பயன்படுத்தி கடவுள்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உற்சாகப்படுத்துகிறது. (ரோமர் 12:1; 1 யோவான் 5:20, அடிக்குறிப்பு) பைபிள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த நியாயவிவாதங்களைச் சிந்தித்துப் பாருங்கள்:

  •   சீராக இயங்கிக்கொண்டிருக்கிற இந்தப் பிரபஞ்சமும் அதிலுள்ள உயிரினங்களும் படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. பைபிள் இப்படிச் சொல்கிறது: “உண்மைதான், ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.” (எபிரெயர் 3:4) இது ஓர் எளிமையான நியாயவிவாதமாக இருந்தாலும், மேதைகள் பலர் இதை மிக வலிமையான விவாதம் என்று சொல்கிறார்கள். a

  •   வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றியும், நோக்கத்தைப் பற்றியும் புரிந்துகொள்வதற்கான ஆசை மனிதர்களாகிய நமக்கு இயல்பிலேயே இருக்கிறது; இந்த வகையான பசி, வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டாலும் தீராத ஒருவகை பசி. இதைத்தான் “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசி” என்று பைபிள் குறிப்பிடுகிறது. அந்தப் பசியில் கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்க வேண்டுமென்ற ஆசையும் உட்பட்டிருக்கிறது. (மத்தேயு 5:3; வெளிப்படுத்துதல் 4:11) இந்த ஆன்மீகப்பசி, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி அளிப்பது மட்டுமல்லாமல், அந்தப் பசியைத் தீர்க்க அன்பான படைப்பாளராகிய அவர் விரும்புகிறார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.—மத்தேயு 4:4.

  •   பைபிளிலுள்ள விலாவாரியான தீர்க்கதரிசனங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், மிகமிகத் துல்லியமாக நிறைவேறின. அந்தத் தீர்க்கதரிசனங்களில் உள்ள திருத்தமான, நுணுக்கமான தகவல்கள், மனுஷனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியிடமிருந்துதான் அந்தத் தீர்க்கதரிசனங்கள் வந்திருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கின்றன.—2 பேதுரு 1:21.

  •   பைபிள் எழுத்தாளர்களுக்குத் தெரிந்திருந்த நிறைய அறிவியல் விஷயங்கள் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உதாரணத்துக்கு, ஒரு யானை, காட்டுப்பன்றி, அல்லது எருதுதான் பூமியைத் தாங்கிப் பிடித்திருந்ததாக பூர்வகாலங்களில் நிறைய பேர் நம்பினார்கள். அதற்கு நேர்மாறாக, கடவுள் இந்த “பூமியை அந்தரத்தில் தொங்கவிட்டார்” என்று பைபிள் எழுத்தாளர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். (யோபு 26:7) அதுபோலவே, பூமியின் வடிவத்தை “உருண்டை” என்று மிகச் சரியாக மற்றொரு பைபிள் எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார். (ஏசாயா 40:22) பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிள் எழுத்தாளர்களால் எப்படி இவ்வளவு சரியாக அந்த விஷயங்களைப் பதிவு செய்ய முடிந்தது? அதற்கு மிகமிக நியாயமான விளக்கம், அவர்கள் அந்த விஷயங்களைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள் என்பதுதான் என்கிறார்கள் பலர்.

  •   ஒருவருடைய மனதில் வருகிற கஷ்டமான கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் கிடைக்காவிட்டால், அவர் நாத்திகராகக்கூட ஆகிவிடலாம்; அப்படிப்பட்ட நிறைய கேள்விகளுக்கு பைபிள் பதிலளிக்கிறது. உதாரணத்துக்கு, கடவுள் அன்பானவர், சர்வவல்லமையுள்ளவர் என்றால், இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு துன்பமும் தீமையும் இருக்கிறது? மதம் ஏன் மக்களுக்கு நல்லது செய்வதற்குப் பதிலாகப் பெரும்பாலும் கெட்டதையே செய்கிறது?—தீத்து 1:16.

a உதாரணத்துக்கு, மறைந்த வானவியல் நிபுணர் ஆலன் சன்டேஜ் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி இப்படிச் சொன்னார்: “இப்பேர்ப்பட்ட ஒழுங்கும் சீரும், கன்னாபின்னான்னு சிதறிக் கிடந்த காரியங்களிலிருந்து திடீர்னு உருவாச்சுனு சொல்றத என்னால நம்பவே முடியாது. இதையெல்லாம் ஒழுங்கமைக்க கண்டிப்பா ஏதோவொரு நியதி இருக்கணும். கடவுள் இருக்காருங்கறது எனக்குப் புரியா புதிரா இருந்தாலும், இந்தப் பிரபஞ்சம் வெறுமையா இல்லாம, அற்புதமான உயிரினங்களால நிறைஞ்சு இருக்கறதுக்கான ஒரே விளக்கம் அவர்தான்.”