Skip to content

“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்பதன் அர்த்தம் என்ன?

“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்பதன் அர்த்தம் என்ன?

பைபிள் தரும் பதில்

 “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்ற கட்டளையை பைபிளில் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. (யாத்திராகமம் 20:12; உபாகமம் 5:16; மத்தேயு 15:4; எபேசியர் 6:​2, 3) மதிப்புக் கொடுப்பதில் நான்கு முக்கியமான விஷயங்கள் உட்பட்டிருக்கின்றன.

  1.   அவர்களுக்கு நன்றியோடு இருங்கள். உங்கள் அப்பாவும் அம்மாவும் உங்களுக்காக செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்களை வழிநடத்துவதற்காகவும் நன்றியோடு இருங்கள். இதன் மூலம், நீங்கள் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறீர்கள் என்பதைக் காட்டலாம். (நீதிமொழிகள் 7:​1, 2; 23:26) உங்கள் பெற்றோரை ‘கிரீடமாக’ கருத வேண்டும் என்று, அதாவது அவர்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும் என்று, பைபிள் சொல்கிறது.​—நீதிமொழிகள் 17:6.

  2.   அவர்களுக்கு இருக்கிற அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள். இதுதான் நம் எஜமானுக்குப் பிரியமானது” என்று கொலோசெயர் 3:20 சொல்கிறது. இயேசுவும்கூட சிறுவனாக இருந்தபோது, தன்னுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.​—லூக்கா 2:51.

  3.   அவர்களை மரியாதையோடு நடத்துங்கள். (லேவியராகமம் 19:3; எபிரெயர் 12:9) நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பது இதில் உட்பட்டிருக்கிறது. சில சமயங்களில், பிள்ளைகளின் மதிப்பைச் சம்பாதிக்கும் விதத்தில் பெற்றோர் நடந்துகொள்வது கிடையாதுதான். ஆனாலும், பெற்றோரிடம் மரியாதைக்குறைவாக பேசுவதையும் மரியாதை இல்லாமல் நடந்துகொள்வதையும் தவிர்ப்பதன் மூலம், பிள்ளைகள் பெற்றோருக்கு மதிப்பு கொடுக்கலாம். (நீதிமொழிகள் 30:17) தன்னுடைய அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுவது மிகப் பெரிய குற்றம் என்று பைபிள் சொல்கிறது.​—மத்தேயு 15:4.

  4.   அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் அப்பா அம்மாவுக்கு வயதாகும்போது, அவர்களுக்குச் சில நடைமுறையான உதவிகள் தேவைப்படலாம். அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்வதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கலாம். (1 தீமோத்தேயு 5:​4, 8) உதாரணத்துக்கு, தான் இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு, இயேசு தன்னுடைய அம்மாவைக் கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்தார்.​—யோவான் 19:​25-27.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுப்பதைப் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்றால், உங்கள் திருமண வாழ்க்கையைக் கட்டுப்படுத்த அவர்களை அனுமதிக்க வேண்டும்.

 உண்மை: மற்ற குடும்ப உறவுகளைவிட தங்கள் மணத்துணைக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்று பைபிள் கற்பிக்கிறது. ஆதியாகமம் 2:24 இப்படிச் சொல்கிறது: “மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்.” (மத்தேயு 19:​4, 5) தங்கள் அப்பா அம்மா அல்லது மாமனார் மாமியார் கொடுக்கிற ஆலோசனைகளிலிருந்து கணவனும் மனைவியும் நன்மையடைய முடியும் என்பது உண்மைதான். (நீதிமொழிகள் 23:22) இருந்தாலும், தங்கள் திருமண வாழ்க்கையில் சொந்தக்காரர்கள் எந்தளவு தலையிடலாம் என்பதைக் கணவனும் மனைவியும்தான் முடிவு செய்ய வேண்டும்.​—மத்தேயு 19:6.

 தவறான கருத்து: உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது.

 உண்மை: குடும்பத்தில் கடவுள் பெற்றோருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருந்தாலும், அவர்களுடைய அதிகாரத்துக்கு வரம்புகள் இருக்கின்றன. மனிதர்களுடைய அதிகாரம் எப்போதும் கடவுளுடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டுதான் இருக்கிறது. ஒரு சமயம், கடவுளுக்குக் கீழ்ப்படியக் கூடாதென நீதிமன்றம் ஒன்று இயேசுவின் சீஷர்களுக்குக் கட்டளையிட்டபோது, “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 5:​27-29) அதேபோல, பிள்ளைகளும் “எஜமான் விரும்புகிறபடி” தங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிகிறார்கள், அதாவது, கடவுளுடைய சட்டங்களுக்கு விரோதமாக இல்லாதவரை அவர்கள் எல்லா விஷயங்களிலும் தங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிகிறார்கள்.​—எபேசியர் 6:1.

 தவறான கருத்து: உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்றால், அவர்களுடைய மத நம்பிக்கைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

 உண்மை: நமக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிற விஷயங்கள் உண்மைதானா என்று சோதித்துப் பார்க்கும்படி பைபிள் நமக்கு அறிவுரை கொடுக்கிறது. (அப்போஸ்தலர் 17:11; 1 யோவான் 4:1) அப்படிச் செய்யும்போது, ஒருவர் தன் பெற்றோருடைய மத நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசப்பட்ட மத நம்பிக்கை ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஆபிரகாம், ரூத், அப்போஸ்தலன் பவுல் போன்ற கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் நிறைய பேர் தங்கள் பெற்றோருடைய மதத்தைப் பின்பற்றவில்லை என்று பைபிள் சொல்கிறது.​—யோசுவா 24:​2, 14, 15; ரூத் 1:​15, 16; கலாத்தியர் 1:​14-16, 22-24.

 தவறான கருத்து: உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்றால், முன்னோர்களை வணங்க வேண்டும்; அந்த வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்.

 உண்மை: “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 4:8) தங்கள் முன்னோர்களை வணங்கும் ஒருவரை கடவுள் வெறுக்கிறார். அதோடு, “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பைபிள் சொல்கிறது. அவர்களுக்காகச் செய்யப்படும் எந்தவொரு சடங்கைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது; உயிரோடு இருப்பவர்களுக்கு இறந்தவர்கள் எந்தவொரு நல்லதும் செய்ய முடியாது, கெட்டதும் செய்ய முடியாது.​—பிரசங்கி 9:​5, 10; ஏசாயா 8:19.