Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

பிள்ளைகளும் சோஷியல் மீடியாவும்—பகுதி 2: சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக பயன்படுத்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

பிள்ளைகளும் சோஷியல் மீடியாவும்—பகுதி 2: சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக பயன்படுத்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

 சோஷியல் மீடியாவில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன என்று தெரிந்துகொண்ட பிறகு, நிறைய அப்பா அம்மா அதை பயன்படுத்த தங்களுடைய பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. ஆனால், சோஷியல் மீடியாவை பயன்படுத்த உங்கள் பிள்ளைக்கு அனுமதி கொடுக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், அதிலிருக்கும் ஆபத்துகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும் இன்டர்நெட்டை ஞானமாக பயன்படுத்துவதற்கும் நீங்கள் எப்படி அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம்?

இந்த கட்டுரையில்...

 உங்கள் டீனேஜ் பிள்ளை எதை முக்கியமாக நினைக்கிறான்?

 நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை: பொதுவாக, சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறவர்கள் அதற்கு அடிமையாகிவிடலாம். அதனால், உங்கள் டீனேஜ் பிள்ளை அதற்கு அடிமையாகிவிடாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் அதை பயன்படுத்த கற்றுக்கொள்வதற்கு அவனுக்கு உங்கள் உதவி தேவைப்படலாம்.

 பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”—பிலிப்பியர் 1:10.

 யோசித்து பாருங்கள்: தூக்கம், ஸ்கூல், குடும்பம் போன்றவற்றை பாதிக்கிற அளவுக்கு உங்கள் பிள்ளை சோஷியல் மீடியாவை பயன்படுத்திக்கொண்டே இருக்கிறானா? டீனேஜ் பிள்ளைகள் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 9 மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், சோஷியல் மீடியாவை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் ஒரு நாளுக்கு 7 மணிநேரத்துக்கும் குறைவாகத்தான் தூங்க முடியும்.

 நீங்கள் என்ன செய்யலாம்: உங்கள் டீனேஜ் பிள்ளைக்கு வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம் என்று பேசுங்கள். சோஷியல் மீடியாவில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் செலவு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அதை கடைப்பிடிப்பது ஏன் ரொம்ப நல்லது என்று அவனுக்கு புரிய வையுங்கள். நியாயமான சில சட்டங்களையும் போடுங்கள். உதாரணத்துக்கு, ராத்திரியில் படுக்கையில் இருக்கும்போது ஃபோனை பயன்படுத்த கூடாது என்று சொல்லுங்கள். பிள்ளை சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதுதான் உங்களுடைய குறிக்கோள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவன் வளர்ந்து பெரியவன் ஆன பிறகும்கூட அது அவனுக்கு பிரயோஜனமாக இருக்கும்.—1 கொரிந்தியர் 9:25.

 உங்கள் டீனேஜ் பிள்ளையின் மன ஆரோக்கியம் எப்படி பாதிக்கப்படும்?

 நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை: தங்களையே அழகாக காட்டிக்கொள்வதற்காக ‘எடிட்’ செய்து போடப்படுகிற ஃபோட்டோக்களையும் நண்பர்களுடைய ஜாலியான ‘ரீல்ஸ்களையும்’ பார்க்கும்போது, இளம் பிள்ளைகள் தாங்கள் மட்டும் தனியாக இருப்பது போல் உணரலாம். அவர்கள் கவலையாக, சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடலாம்.

 பைபிள் ஆலோசனை: ‘பொறாமையை . . . விட்டுவிடுங்கள்.’—1 பேதுரு 2:1.

 யோசித்து பாருங்கள்: சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதால் உங்கள் டீனேஜ் பிள்ளை தேவையில்லாமல் மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு பார்க்கிறானா? மற்றவர்கள் ரொம்ப அழகாக இருக்கிறார்கள், உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கிறார்கள் என்று யோசித்து கவலைப்படுகிறானா? மற்ற எல்லாருடைய வாழ்க்கையும் ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பது போலவும் தன்னுடைய வாழ்க்கை ‘போர்’ அடிப்பது போலவும் அவன் யோசிக்கிறானா?

 நீங்கள் என்ன செய்யலாம்: மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது எவ்வளவு ஆபத்தானது என்று உங்கள் டீனேஜ் பிள்ளையிடம் பேசுங்கள். இந்த விஷயத்தில் பெண் பிள்ளைகள் ரொம்ப பாதிக்கப்படலாம். ஏனென்றால், மற்றவர்களோடு இருக்கும் உறவையும் தங்களுடைய தோற்றத்தையும் அவர்கள் ரொம்ப முக்கியமாக நினைப்பார்கள். அதோடு, கொஞ்ச நாளுக்கு ஒருதடவை சோஷியல் மீடியாவில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள். அந்த சமயத்தில், அதை சுத்தமாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய சொல்லுங்கள். ஜேக்கப் என்ற ஒரு இளைஞர் என்ன சொல்கிறார் என்றால், “என் ஃபோனில் இருந்த சோஷியல் மீடியா ஆப்பை கொஞ்ச நாளுக்கு நான் எடுத்துவிட்டேன். இதனால், எது ரொம்ப முக்கியம் என்று யோசித்துப்பார்த்து சரி செய்துகொள்ள முடிந்தது. என்னையும் மற்றவர்களையும் நான் பார்க்கிற விதத்தையும்கூட மாற்றிக்கொள்ள முடிந்தது.”

 உங்கள் டீனேஜ் பிள்ளை ஆன்லைனில் என்ன செய்வான்?

 நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை: சோஷியல் மீடியாவில் இருப்பது ஒரு பெரிய கூட்டத்துக்கு முன்பு வாழ்வது போல்! அதில் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்துகொள்வதும் சண்டை போட்டுக்கொள்வதும் சர்வ சாதாரணம்.

 பைபிள் ஆலோசனை: “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும் . . . நீக்கிப்போடுங்கள். ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.”—எபேசியர் 4:31, 32.

 யோசித்து பாருங்கள்: சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதால் உங்கள் டீனேஜ் பிள்ளை மற்றவர்களை பற்றி தவறாக பேசுகிறானா? மற்றவர்களோடு பிரச்சினை பண்ணுகிறானா? எரிச்சலில் கோபப்பட்டு பேசுகிறானா?

 நீங்கள் என்ன செய்யலாம்: மற்றவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்வதற்கும் நல்ல பழக்கங்களை காட்டுவதற்கும் உங்கள் பிள்ளைக்கு உதவி செய்யுங்கள். டிஜிட்டல் கிட்ஸ் என்ற புத்தகம் இப்படி சொல்கிறது: “ஆன்லைனிலும் சரி நேரில் ஒருவரிடம் பழகும்போதும் சரி, மற்றவர்களை மோசமாக கொடூரமாக நடத்துவது ரொம்ப ரொம்ப தவறு என்பதை பிள்ளைக்கு புரிய வைக்க வேண்டிய பொறுப்பு அப்பா அம்மாவுக்கு இருக்கிறது.”

 சோஷியல் மீடியாவை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா அப்பா அம்மாவும் தங்களுடைய பிள்ளைகள் சோஷியல் மீடியாவை பயன்படுத்த அனுமதிப்பதும் இல்லை. ஒருவேளை, உங்கள் பிள்ளை அதை பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைத்தால், சில விஷயங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் அதை பயன்படுத்துவானா, மற்றவர்களோடு நல்ல நட்பை வளர்த்துக்கொள்வானா, தவறான விஷயங்கள் வரும்போது அதை தவிர்ப்பானா என்றெல்லாம் யோசித்துப்பாருங்கள்.