Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

பிள்ளைகளும் சோஷியல் மீடியாவும்—பகுதி 1: என்னுடைய பிள்ளை சோஷியல் மீடியாவை பயன்படுத்த வேண்டுமா?

பிள்ளைகளும் சோஷியல் மீடியாவும்—பகுதி 1: என்னுடைய பிள்ளை சோஷியல் மீடியாவை பயன்படுத்த வேண்டுமா?

 97 சதவீத டீனேஜ் பிள்ளைகள் சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதாக ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது. உங்கள் பிள்ளைகளும் சோஷியல் மீடியாவை பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா? அப்படியிருந்தால், சில விஷயங்களை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கட்டுரையில்...

 உங்கள் பிள்ளை நேரத்தை எப்படி பயன்படுத்துவான்?

 “உங்கள் கவனத்தை திருடுகிற விதத்திலும், உங்களை ஆன்லைனிலேயே வைத்திருக்கிற மாதிரியும், ஃபோனை அடிக்கடி பார்க்க தூண்டுகிற மாதிரியும்தான் சோஷியல் மீடியாக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன” என்று ஹெல்ப்கைட் வெப்சைட் சொல்கிறது.

 ”சோஷியல் மீடியாவை கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று நினைப்பேன். ஆனால், அதிலேயே மணிக்கணக்காக உட்கார்ந்து விடுவேன். ஃபோனை கீழே வைத்துவிட்டு உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றவே தோன்றாது.”—லின், 20 வயது.

 உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: சோஷியல் மீடியாவை இவ்வளவு நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்று நான் கட்டுப்பாடு போட்டால், அதற்கு கீழ்ப்படிக்கிற அளவுக்கு என் பிள்ளைக்கு சுயக்கட்டுப்பாடு இருக்கிறதா? சோஷியல் மீடியாவை இவ்வளவு நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்று அவனாகவே ஒரு முடிவு எடுத்து, அதை செயல்படுத்தும் அளவுக்கு அவனுக்கு பக்குவம் இருக்கிறதா?

 பைபிள் ஆலோசனை: “நீங்கள் . . . ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:15, 16.

எந்த வரம்பும் இல்லாமல் சோஷியல் மீடியாவை பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி கொடுப்பது, எந்த பயிற்சியும் இல்லாமல் ஒரு குதிரையை ஓட்ட கொடுப்பது மாதிரி!

 உங்கள் பிள்ளை நட்பை எப்படி பார்ப்பான்?

 நிறைய நண்பர்கள் இருக்கிற மாதிரியான ஒரு உணர்வை கொடுக்கத்தான் சோஷியல் மீடியா தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், சோஷியல் மீடியா மூலம் உருவாகும் உறவுகள் உண்மையான நட்பாக ஆகிவிடாது.

 “சோஷியல் மீடியாவில் லைக்ஸோ ஃபாலோவர்சோ அதிகமாக கிடைத்தால், நிறைய பேருக்கு தங்கள்மேல் அக்கறை இருக்கிறது என்று பிள்ளைகள் நினைத்துக்கொள்கிறார்கள். அதுவும், முன்பின் தெரியாதவர்களுக்குக்கூட தங்கள்மேல் அக்கறை இருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது!”—பட்ரீசியா, 17 வயது.

 உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: சோஷியல் மீடியாவில் அதிக லைக்ஸோ ஃபாலோவர்சோ கிடைப்பது முக்கியம் இல்லை என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு என் பிள்ளைக்கு பக்குவம் இருக்கிறதா? என் பிள்ளையால் நேரில் ஒருவரிடம் பழகி நண்பராக முடிகிறதா?

 பைபிள் ஆலோசனை: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

 உங்கள் பிள்ளையின் மனசு எப்படி பாதிக்கப்படும்?

 சோஷியல் மீடியாவை அதிகமாக பயன்படுத்துவதால் தனிமை உணர்வு, கவலை, மன அழுத்தம் போன்றவை வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

 “நீங்கள் இல்லாமல் உங்கள் நண்பர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கும்போது ரொம்ப வெறுப்பாக இருக்கும்.”—செரெனா, 19 வயது.

 உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடைய பிள்ளை சோஷியல் மீடியாவில் பார்க்கிற விஷயங்கள் அவனை பாதிக்குமா? அவன் தன்னையே முக்கியமானவனாக நினைக்க ஆரம்பித்துவிடுவானா? மற்றவர்களோடு போட்டி போடுகிற பழக்கம் அவனுக்கு வந்துவிடுமா?

 பைபிள் ஆலோசனை: “வறட்டு கௌரவம் பார்க்காமலும், ஒருவருக்கொருவர் போட்டி போடாமலும், ஒருவர்மேல் ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருப்போமாக.”—கலாத்தியர் 5:26.

 உங்கள் பிள்ளை சோஷியல் மீடியாவில் எதையெல்லாம் பார்ப்பான்?

 சோஷியல் மீடியா மூலமாக நிறைய ஆபத்துகளில் மாட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைனில் ஒருவரை ஒருவர் கேலி செய்வதற்கும் செக்ஸ் படங்களையோ மெசேஜ்களையோ அனுப்புவதற்கும் ஆபாச படங்களை பார்ப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரி விஷயங்களை உங்கள் பிள்ளைகள் செய்யவில்லை என்றாலும், அவை அவர்களுடைய கண்ணில்பட வாய்ப்பு இருக்கிறது.

 “சோஷியல் மீடியாவில் இருக்கிற சில விஷயங்கள் ஆரம்பத்தில் நல்லது போல் தெரிந்தாலும், நிறைய தவறான விஷயங்களும் அதில் வருகிறது. அசிங்கமான வார்த்தைகளும் மோசமான பாடல்களும் அதில் எக்கச்சக்கமாக இருக்கிறது.”—லின்டா, 23 வயது.

 உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடைய பிள்ளை இன்டர்நெட்டை ஞானமாக பயன்படுத்துவானா? அந்த பக்குவம் அவனுக்கு இருக்கிறதா? அசிங்கமான விஷயம் வரும்போது அதை பார்க்காமல் இருக்கும் அளவுக்கு அவனுக்கு மன உறுதி இருக்கிறதா?

 பைபிள் ஆலோசனை: “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது. . . . அதேபோல், வெட்கக்கேடான நடத்தை, முட்டாள்தனமான பேச்சு, ஆபாசமான கேலிப் பேச்சு ஆகியவை உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.”—எபேசியர் 5:3, 4.

 சோஷியல் மீடியா கண்டிப்பாக தேவையா?

 சோஷியல் மீடியா இருந்தால்தான் நம்மால் வாழ முடியும் என்று கிடையாது. அது இல்லாமல்கூட நம்மால் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். நிறைய இளம் பிள்ளைகள் சோஷியல் மீடியா இல்லாமலேயே சந்தோஷமாக இருக்கிறார்கள். முன்பு சோஷியல் மீடியாவை பயன்படுத்தியவர்கள்கூட இப்போது அதை பயன்படுத்தாமல் திருப்தியாக இருக்கிறார்கள்.

 “சோஷியல் மீடியாவை பயன்படுத்தியதால் என்னுடைய அக்கா எவ்வளவு பாதிக்கப்பட்டால் என்பதை பார்த்த பிறகு, அதை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதிலிருந்து நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். வாழ்க்கையை புதுவிதமாக பார்க்கிறேன்.”—நேதன், 17 வயது.

 பாடம்: சோஷியல் மீடியாவை பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பு, இவற்றை செய்யும் அளவுக்கு அவர்களுக்கு பக்குவம் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்: அவர்கள் நேரத்தை நன்றாக பயன்படுத்துவார்கள்? நல்ல நட்பை வைத்துக்கொள்வார்களா? தவறான விஷயங்கள் வரும்போது அதை தவிர்ப்பார்களா?

 பைபிள் ஆலோசனை: “சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.