Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

பிள்ளைகளும் ஸ்மார்ட்ஃபோன்களும்—பகுதி 2: ஸ்மார்ட்ஃபோனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள்

பிள்ளைகளும் ஸ்மார்ட்ஃபோன்களும்—பகுதி 2: ஸ்மார்ட்ஃபோனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள்

 ஸ்மார்ட்ஃபோன் ஒரு கூர்மையான கத்தி மாதிரி. அதனால் நமக்கு நல்லதும் வரும் கெட்டதும் வரும். அது நாம் பயன்படுத்துகிற விதத்தைப் பொருத்து இருக்கிறது. ஃபோனை சரியாக பயன்படுத்த எப்படி நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம்? ஒருநாளைக்கு அவர்கள் எவ்வளவு நேரம் ஃபோனை பார்ப்பதற்கு அனுமதிப்பீர்கள்? a

 உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?

  •   ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவதில் நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. “பிள்ளைகளும் ஸ்மார்ட்ஃபோன்களும்—பகுதி 1: என் பிள்ளைக்கு ஸ்மார்ட்ஃபோன் தேவையா?“ என்ற கட்டுரை இன்டர்நெட்டில் இருக்கும் நல்லதையும் கெட்டதையும் ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பார்க்க முடியும் என்று சொன்னது.

     ”மோசமான ஆட்களோட பழகவும் கெட்ட விஷயங்கள கத்துக்கவும் ஸ்மார்ட்ஃபோன் மூலமாதான் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்குது. இத நாம அடிக்கடி மறந்துடுறோம்.“—ப்ரென்டா

  •   பிள்ளைகளுக்கு உதவி தேவை. பிள்ளைகள் ஸ்மார்ட்ஃபோனில் புகுந்து விளையாடுகிறார்கள். ஆனால் பெரியவர்கள் அது என்னவென்று தெரிந்துகொள்ளவே ரொம்பத் திணறுகிறார்கள். அதற்காக பெற்றோருக்கு டெக்னாலஜியை பற்றி ஒன்றுமே தெரியாது என்று அர்த்தம் கிடையாது. ஸ்மார்ட்ஃபோனை எப்போது எப்படி பயன்படுத்தலாம் என்று பிள்ளைகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றும் அர்த்தம் கிடையாது.

     பிள்ளைகள் ஸ்மார்ட்ஃபோனில் புகுந்து விளையாடுவது உண்மைதான். அதற்காக திறமையையும் அனுபவத்தையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். என்னதான் பிள்ளைகள் டெக்னாலஜியில் கில்லாடிகளாக இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோனை சரியாக பயன்படுத்த பெற்றோருடைய உதவி அவர்களுக்குத் தேவை.

     ”பிள்ளைகளுக்கு முதல்ல கார் ஓட்ட சொல்லிக்கொடுக்காம, காரோட சாவியை கொடுத்து, டிரைவர் சீட்ல உக்கார வச்சு, வண்டியையும் ஸ்டார்ட் பண்ணி, ‘பத்திரமா போய்ட்டு வாடா செல்லம்’னு சொல்லுறதும், ஸ்மார்ட்ஃபோன எப்படி பயன்படுத்துறதுன்னு சொல்லிக்கொடுக்காம அவங்க கையில ஃபோன கொடுக்குறதும் ஒன்னுதான்.“—செத்

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •   உங்கள் பிள்ளையின் ஃபோன் செட்டிங்கை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் தெரிந்து வைத்துக்கொண்டால்தான் உங்களுடைய பிள்ளை ஃபோனை சரியாக பயன்படுத்துவதற்கு உங்களால் சொல்லிக்கொடுக்க முடியும். உதாரணத்துக்கு:

     உங்கள் பிள்ளை ஃபோனை எவ்வளவு நேரம் பார்க்கலாம், எதைப் பார்க்கலாம் என்று செட் செய்ய உங்கள் பிள்ளையின் ஃபோனில் என்னென்ன செட்டிங் இருக்கிறது?

     தப்பான விஷயங்களை பார்க்காமல் இருக்க நீங்கள் செய்யும் செட்டிங்கை உங்கள் பிள்ளையால் மாற்ற முடியாது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

     எந்தளவு உங்கள் பிள்ளையுடைய ஃபோனைப் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்தளவு உங்கள் பிள்ளைக்கு அந்த ஃபோனை நன்றாக பயன்படுத்த உங்களால் சொல்லித்தர முடியும்.

     பைபிள் ஆலோசனை: “ஞானமுள்ளவன் பலமுள்ளவன். ஒருவன் தன் அறிவினால் அதிக பலம் அடைகிறான்.”—நீதிமொழிகள் 24:5.

  •   வரம்புகளை வையுங்கள். எதை அனுமதிப்பீர்கள், எதை அனுமதிக்க மாட்டீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். உதாரணத்துக்கு:

     சாப்பிட உட்காரும்போதோ, நண்பர்களையும் சொந்தக்காரர்களையும் பார்க்கப் போகும்போதோ ஃபோனை பயன்படுத்த உங்கள் பிள்ளைகளை அனுமதிப்பீர்களா?

     உங்கள் பிள்ளை தனியாக ராத்திரி முழுக்க ஃபோனை பயன்படுத்த நீங்கள் அனுமதிப்பீர்களா?

     என்னென்ன ஆப்-ஐ நீங்கள் அனுமதிப்பீர்கள்?

     எவ்வளவு நேரம் அவர்கள் ஃபோனைப் பார்க்கலாம்?

     ஒருநாளைக்கு இவ்வளவு நேரம் தான் ஃபோனை பார்க்க வேண்டும் என்று உங்களால் சொல்ல முடியுமா?

     கட்டுப்பாடுகளைப் பற்றி பிள்ளையிடம் சொல்லுங்கள். அதை மீறினால் தண்டனை கொடுக்கவும் நீங்கள் தயாராக இருங்கள்.

     பைபிள் ஆலோசனை: “பிள்ளையைத் தண்டிக்காமல் இருக்காதே.”—நீதிமொழிகள் 23:13.

  •   கண்காணியுங்கள். பிள்ளையின் பாஸ்வேர்டை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுடைய ஃபோனில் என்னென்ன மெசேஜ்கள், ஃபோட்டோக்கள், ஆப்ஸ் இருக்கிறது, என்னென்ன வெப்சைட்டுகளை பார்த்திருக்கிறார்கள் என்று அவ்வப்போது நீங்கள் பாருங்கள்.

     ”எப்ப வேணாலும் உன்னோட ஃபோனை வாங்கி பாப்போம்னு எங்க பொண்ணுகிட்ட சொன்னோம். அவளோட ஃபோன அவ சரியா பயன்படுத்தலனு தெரிஞ்சா கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாகும்.”—லோரேன்

     உங்கள் பிள்ளை ஃபோனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள பெற்றோராக உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.

     பைபிள் ஆலோசனை: “சிறுபிள்ளையைக்கூட அவனுடைய செயலை வைத்தே எடைபோட முடியும். அவனுடைய நடத்தை சுத்தமாகவும் சரியாகவும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்.”—நீதிமொழிகள் 20:11.

  •   நல்லதைச் சொல்லிக்கொடுங்கள். சரியானதை செய்ய உங்கள் பிள்ளைக்கு உதவி செய்யுங்கள். ஏன் இது முக்கியம்? உங்கள் பிள்ளைகள் உங்களுக்குத் தெரியாமல் எதையாவது செய்ய வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால். நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அதை அவர்கள் எப்படியாவது செய்ய நினைப்பார்கள். b

     அதனால், பிள்ளைகளுடைய செயல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு என்பதை சொல்லிக்கொடுங்கள். நேர்மை, சுயக்கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஒழுக்கமாக வளருகிற பிள்ளைகள் ஃபோனை சரியாக பயன்படுத்துவார்கள்.

     பைபிள் ஆலோசனை: ‘முதிர்ச்சியுள்ளவர்கள் சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருப்பார்கள்.’—எபிரெயர் 5:14.

a இந்த கட்டுரையில் வரும் ஸ்மார்ட்ஃபோன் என்ற வார்த்தை இன்டர்நெட் வசதி இருக்கிற எல்லா ஃபோன்களையும் குறிக்கிறது. அது ஒரு மினி கம்ப்யூட்டராகக்கூட இருக்கலாம்.

b சில இளம் பிள்ளைகள் ”கோஸ்ட் ஆப்-ஐ“ பயன்படுத்தலாம். அது பார்க்க ஒன்றுமில்லாத சாதாரண கால்குலேட்டர் மாதிரி இருக்கலாம். அப்பா-அம்மாவிடம் இருந்து சில விஷயங்களை ஒளித்து வைப்பதற்காக பிள்ளைகள் இந்த ஆப்-ஐ பயன்படுத்துகிறார்கள்.