Skip to content

குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

கல்யாணத்துக்கு முன்பு நாங்கள் சேர்ந்து வாழலாமா?

கல்யாணத்துக்கு முன்பு நாங்கள் சேர்ந்து வாழலாமா?

 நிறையப் பேர் கல்யாணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஒத்துப்போகிறதா என்று பார்ப்பதற்காக சிலர் அப்படிச் சேர்ந்து வாழ்கிறார்கள். அதனால் தங்கள் கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், கல்யாணத்துக்கு முன்பு சேர்ந்து வாழ்வது உண்மையிலேயே ஒரு நல்ல ஐடியாவா?

இந்தக் கட்டுரையில்

 பைபிள் என்ன சொல்கிறது?

  •   கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வதை பைபிள் கண்டனம் செய்கிறது. உதாரணத்துக்கு, “பாலியல் முறைகேட்டுக்கு விலகியிருக்க வேண்டும்” என்று அது சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:3; 1 கொரிந்தியர் 6:18) அப்படியென்றால், கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழக் கூடாது. பிற்பாடு கல்யாணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருப்பவர்கள்கூட அப்படிச் செய்யக் கூடாது. a பைபிள் ஆலோசனைகளின்படி நாம் நடந்துகொண்டால், கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாவது மற்றும் வேறுசில மோசமான பிரச்சினைகளிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

  •   கல்யாண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் கடவுள்தான். அதை ஆரம்பித்து வைத்தபோது அவர் இப்படிச் சொன்னார்: “மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) திருமண உறவைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சியோடு ஒரு ஆணும் பெண்ணும் இருக்கும்போது அந்தக் குடும்பம் அன்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

 கல்யாணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்வது கல்யாண வாழ்க்கைக்கு உங்களைத் தயார்படுத்துமா?

 தயார்படுத்தும் என்று சிலர் சொல்கிறார்கள். வீட்டு வேலைகளை ஒன்றாகச் சேர்ந்து செய்யும்போதும், ஒருவருக்கொருவர் இருக்கும் பழக்கவழக்கங்களைக் கவனிக்கும்போதும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆணும் பெண்ணும் கடமையுணர்ச்சியோடு இருக்கும்போதுதான் அவர்களுடைய கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

 நல்லது, கெட்டது என எது நடந்தாலும் இணைபிரியாமல் இருக்க ஒரு ஆணும் பெண்ணும் என்ன செய்யலாம்? “எப்போது வேண்டுமானாலும் இந்த உறவை முடித்துக்கொள்ளலாம்” என்ற எண்ணத்தோடு கல்யாணத்துக்கு முன்பே கொஞ்ச நாள் சேர்ந்து வாழ்வதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, கடமையுணர்ச்சியோடு இருக்கும்போதும் பிரச்சினைகளை ஒன்றாகச் சேர்ந்து சமாளிக்கும்போதும் அவர்கள் என்றென்றைக்கும் இணைபிரியாமல் சந்தோஷமாக வாழலாம்.

 மனதில் வைக்க: கல்யாணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்கிறவர்கள் உண்மையில் கல்யாணத்துக்காகத் தயாராவதில்லை, பிரிந்துபோவதற்குத்தான் தயாராகிறார்கள்.

 பைபிள் ஆலோசனை: “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.

 கல்யாணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்வது பணத்தை மிச்சப்படுத்த உங்களுக்கு உதவுமா?

 உதவும் என்று சிலர் சொல்கிறார்கள். அமெரிக்காவில் பத்தில் கிட்டத்தட்ட நான்கு பேர் கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதற்குக் காரணம் பணத்தை மிச்சப்படுத்துவதற்குத்தான் என்று ப்யூ ஆராய்ச்சி மையத்தின் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கொஞ்சக் காலம் சேர்ந்து வாழ்ந்த பிறகும் பணப் பிரச்சினையால்தான் தங்களால் கல்யாணம் செய்துகொள்ள முடியவில்லை என்று அந்த ஆய்வில் நிறையப் பேர் சொன்னார்கள்.

 கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதால் முக்கியமாகப் பெண்களுக்கு இன்னும் பெரிய பிரச்சினைகள் வருகின்றன. உதாரணத்துக்கு, கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்களுக்கு ஒருவேளை குழந்தைகள் பிறந்திருந்தால், அவர்கள் பிரிந்துபோன பிறகு அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பொதுவாக அந்தப் பெண்களுக்குத்தான் வருகிறது.

 மனதில் வைக்க: கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் நன்மைகள் இருப்பதாகச் சிலர் சொல்லிக்கொண்டாலும், அதனால் வரும் பிரச்சினைகள்தான் ரொம்ப ரொம்ப அதிகம்.

 பைபிள் ஆலோசனை: “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன்.”—ஏசாயா 48:17.

 கல்யாணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்வது தப்பான ஒரு நபரைக் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க உதவுமா?

 உதவும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், கல்யாண வாழ்க்கையைக் கட்டிக்காக்கப் போராடுதல் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறபடி, “கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறவர்கள் ஒருவேளை பிரிந்துபோக நினைத்தாலும் அது அவ்வளவு ஈஸியாக இருக்காது என்பதை அவர்கள் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை.” ஏன் அது ஈஸியாக இருக்காது? ஏனென்றால், அவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு செல்லப்பிராணியை வளர்த்துவரலாம்... ஒன்றுசேர்ந்து ஒரு வீட்டையோ காரையோ குத்தகைக்கு எடுத்திருக்கலாம்... இல்லையென்றால், எதிர்பாராத விதமாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கப்போவது அவர்களுக்குத் தெரியவரலாம். அதனால், அவர்களுக்குக் கொஞ்சம்கூட ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்தாலும் வேறு வழியில்லாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். b வேறு வார்த்தைகளில், ‘அவர்களுக்குக் கொஞ்சம்கூட ஒத்துப்போகவில்லை என்று தெரிந்தாலும், பிரிந்துபோவதால் சிக்கல் அதிகமாகும் என்று நினைத்துக்கொண்டு கல்யாணமே செய்துகொள்கிறார்கள்’ என்று கல்யாண வாழ்க்கையைக் கட்டிக்காக்கப் போராடுதல் புத்தகம் சொல்கிறது.

 மனதில் வைக்க: கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது ஒரு நல்ல துணையைக் கண்டுபிடிக்க உதவுவதற்குப் பதிலாக, பொருத்தமில்லாத ஒருவரைவிட்டுப் பிரிய முடியாதபடி செய்துவிடுகிறது.

 பைபிள் ஆலோசனை: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”—நீதிமொழிகள் 22:3.

 வேறு ஏதாவது நல்ல வழி இருக்கிறதா?

 கல்யாண விஷயத்தில் பைபிள் கொடுக்கும் அறிவுரைகளின்படி நடக்க முயற்சி செய்யுங்கள். அப்போது, கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதால் வரும் பிரச்சினைகளை உங்களால் தவிர்க்க முடியும், சந்தோஷமான ஒரு கல்யாண வாழ்க்கையை அனுபவிக்கவும் முடியும். நீங்கள் கல்யாணம் செய்துகொள்ள நினைப்பவரை, கல்யாணத்துக்கு முன்பே நன்றாகத் தெரிந்துகொள்ள நிறைய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு எவ்வளவு கவர்ச்சியாகத் தெரிகிறார் என்பதைவிட, அவருடைய மனதும் உங்களுடைய மனதும் ஒத்துப்போகிறதா என்பதுதான் ரொம்ப முக்கியம். அதாவது, உங்களுடைய நம்பிக்கைகளும் நீங்கள் உயர்வாக நினைக்கிற விஷயங்களும் ஒரே மாதிரி இருக்கின்றனவா என்பதுதான் முக்கியம்.

 சந்தோஷமான, நிலையான திருமண பந்தத்துக்குள் அடியெடுத்து வைக்க பைபிள் தரும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும். c உதாரணத்துக்கு, அந்த ஆலோசனைகள் . . .

 இந்த விஷயங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில் “திருமணமும் குடும்பமும்” என்ற பகுதியைப் பாருங்கள்.

 பைபிள் ஆலோசனை: ‘வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை கற்றுக்கொடுப்பதற்கு . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.’—2 தீமோத்தேயு 3:16.

b குடும்ப உறவுகள் என்ற ஆங்கில இதழில் வெளியிடப்பட்ட ஸ்காட் எம். ஸ்டான்லி, கலீனா கிளைன் ரோட்ஸ் மற்றும் ஹோவர்ட் ஜே. மார்க்மேன் எழுதிய “ஸ்லைடிங் வெர்சஸ் டிசைடிங்: இனர்ஷியா அண்ட் தி ப்ரீமேரிட்டல் கோஹபிடேசன் எஃபெக்ட்” என்ற கட்டுரையிலிருந்து.

c சில கலாச்சாரங்களில், பெற்றோர்கள்தான் தங்களுடைய பிள்ளைகளுக்குத் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எப்படிப்பட்ட குணங்களுள்ள ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் அவர்களுக்கு உதவும்.