Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 8

துக்கத்தில் மூழ்கிவிடாமல் இருப்பது எப்படி?

துக்கத்தில் மூழ்கிவிடாமல் இருப்பது எப்படி?

“உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி என்றாலும், தற்போது சிறிது காலம் பலவிதமான சோதனைகளால் நீங்கள் துக்கப்பட வேண்டியிருக்கிறது.”—1 பேதுரு 1:6

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சோக சம்பவங்கள் நடக்கும்போது நீங்கள் அப்படியே இடிந்து போய்விடலாம். (பிரசங்கி 9:11) ஆனால், கடவுள் நம்மை ஒருநாளும் கைவிட மாட்டார், நிச்சயம் உதவி செய்வார். பின்வரும் பைபிள் ஆலோசனைகளின்படி நடந்தால் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையையும் உங்களால் சமாளிக்க முடியும்.

1 யெகோவாவை நம்பியிருங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) நம்முடைய பிரச்சினைகளுக்குக் கடவுள் காரணமில்லை என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. (யாக்கோபு 1:13) கடவுளிடம் நெருங்கிப் போகப் போக அவர் நம்மைக் கைவிடவே மாட்டார். (ஏசாயா 41:10) ‘உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றிவிடுங்கள்.’—சங்கீதம் 62:8.

பைபிளை தினமும் வாசித்து அதை ஆழமாகப் படிக்கும்போது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். அப்போது, ‘எல்லா உபத்திரவங்களிலும் கடவுள் ஆறுதலாக’ இருக்கிறார் என்பதை உங்கள் வாழ்க்கையில் ருசித்துப் பார்ப்பீர்கள். (2 கொரிந்தியர் 1:3, 4; ரோமர் 15:4) ‘எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானத்தை’ உங்களுக்குத் தருவதாகக் கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறார்.—பிலிப்பியர் 4:6, 7, 13.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • மன அமைதிக்காகவும் தெளிவாக யோசிப்பதற்காகவும் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்

  • பிரச்சினைக்கு என்னென்ன தீர்வு இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள், பிறகு ஒரு நல்ல முடிவெடுங்கள்

2 உங்களையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.” (நீதிமொழிகள் 18:15) குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன தேவை, அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களிடம் பேசுங்கள், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். —நீதிமொழிகள் 20:5.

உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவர் இறந்துவிட்டால் அந்தச் சோகத்தை அடக்கி வைக்காதீர்கள். இயேசுகூட ஒருசமயம் ‘கண்ணீர் விட்டு’ அழுதார் என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 11:35; பிரசங்கி 3:4) போதுமான ஓய்வும் தூக்கமும்கூட ரொம்ப முக்கியம். (மாற்கு 6:31) சோகத்தில் மூழ்கிவிடாமல் இருக்க இது உங்களுக்கு உதவும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • குடும்பத்தாரோடு எப்போதும் கலகலப்பாக இருங்கள். அப்போதுதான், பிரச்சினை வந்தால் உங்களிடம் மனம்விட்டு பேசுவார்கள்

  • இதுபோன்ற சூழ்நிலையை எதிர்ப்பட்டவர்களிடம் பேசிப் பாருங்கள்

3 உதவி பெற தயங்காதீர்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “உண்மையான நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; துன்ப காலத்தில் உடன்பிறந்தவன்போல் உதவுவான்.” (நீதிமொழிகள் 17:17, NW) நல்ல நண்பர்கள் உங்களுக்கு உதவ விரும்புவார்கள். ஆனால் எப்படி உதவுவதென அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். எனவே, உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் வெளிப்படையாகச் சொல்லுங்கள். (நீதிமொழிகள் 12:25) பைபிளைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அதிலிருந்து நல்ல நல்ல ஆலோசனைகளைத் தருவார்கள். அதனால், அவர்களுடைய உதவியைப் பெற தயங்காதீர்கள்.—யாக்கோபு 5:14.

கடவுள் மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களோடு நெருங்கிப் பழகுங்கள்; அவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். சோர்ந்துபோய் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்; அது உங்களுக்கு ஆறுதல் தரும். யெகோவாவைப் பற்றியும் எதிர்காலத்தில் அவர் செய்யப்போகும் அற்புதமான காரியங்களைப் பற்றியும் அவர்களிடம் பேசுங்கள். உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உங்கள் நேரம் சக்தியையெல்லாம் தாராளமாகச் செலவிடுங்கள். உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக, உங்கள்மீது அன்பு காட்டுகிறவர்களிடம் நெருங்கி பழகுங்கள்.—நீதிமொழிகள் 18:1; 1 கொரிந்தியர் 15:58.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • நெருங்கிய நண்பரிடம் பேசுங்கள், அவர் கொடுக்கும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

  • உங்களுக்கு என்ன தேவை என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்