Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காலத்தால் அழியாத ஆலோசனைகள்!

மனதார மன்னியுங்கள்

மனதார மன்னியுங்கள்

பைபிள் தரும் ஆலோசனை: “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால் . . . தாராளமாக மன்னியுங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.

இதன் அர்த்தம் என்ன? தவறு செய்வது கடன் வாங்குவதற்கு சமம், தவறை மன்னிப்பது கடனை திருப்பி கேட்காமல் அப்படியே விட்டுவிடுவதற்கு சமம் என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 18:21-35) கிரேக்க மொழியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு “கொடுத்த பணத்தை திருப்பி கேட்காமல் அப்படியே விட்டுவிடுவது” என்ற அர்த்தமும் இருக்கிறது என்று ஒரு பைபிள் டிக்ஷனரி சொல்கிறது. அப்படியென்றால், நாம் ஒருவரை மன்னிக்கும்போது அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அதற்காக, அவர் செய்த எல்லாவற்றையும் சரியென்று ஒத்துக்கொள்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நம் பக்கம் நியாயம் இருந்தாலும், நம்முடைய மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவர்மேல் கோபப்படாமல், ‘பரவாயில்லை, இதை இப்படியே விட்டுவிடலாம்’ என்று நினைப்பதுதான் மன்னிப்பு.

இந்த காலத்துக்கு ஒத்துவருமா? தப்பே செய்யாதவர்கள் என்று யாரும் இல்லை. அதனால், எல்லாருக்குமே மன்னிப்பு தேவை. (ரோமர் 3:23) இன்றைக்கு நாம் யாரையாவது மன்னித்தால்தான் நாளைக்கு நம்மை யாராவது மன்னிப்பார்கள். மற்றவர்களை மன்னிப்பதால் இன்னும் சில நன்மைகளும் இருக்கிறது.

நாம் மற்றவர்களை மன்னிக்காமல் கோபமாகவே இருந்தால், நம்மால் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க முடியாது, எந்தவொரு வேலையையும் ஒழுங்காக செய்யமுடியாது. அதுமட்டுமில்லை, ஒருவரை நாம் வெறுக்கும்போது, அவர்மீது கோபமாகவே இருக்கும்போது, நமக்கு சீக்கிரமாக மாரடைப்பு வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தி இந்து செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை சொல்கிறது.

நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, பிரச்சினைகளை சுலபமாக தீர்த்துக்கொள்ள முடியும், அவர்களோடு நல்ல நண்பராகவும் இருக்க முடியும். அதை பார்த்து கடவுளும் ரொம்ப சந்தோஷப்படுவார். ஏனென்றால், கடவுள் எல்லாரையும் மனதார மன்னிக்கிறார், நாமும் அப்படி மன்னிக்க வேண்டும் என்று சொல்கிறார்.—மாற்கு 11:25; எபேசியர் 4:32; 5:1. (w15-E 10/01)