Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு

உங்கள் துணைக்கு மதிப்புமரியாதை காட்டுங்கள்

உங்கள் துணைக்கு மதிப்புமரியாதை காட்டுங்கள்

னோஜ் * சொல்கிறார்: “என் மனைவி அஞ்சலிக்கு மனசு கஷ்டமா இருந்தா அழுதுகிட்டே இருப்பா. என்ன ஆச்சுனு கேட்டா, எரிஞ்சு எரிஞ்சு விழுவா. இல்லேனா, எதைக் கேட்டாலும் வாயே திறக்காம உம்முனு இருப்பா. என்ன செய்யறதுனே எனக்குப் புரியாது, அதனால நான் என் வேலையை பார்த்துட்டு போயிடுவேன்.”

அஞ்சலி சொல்கிறாள்: “அவரு வீட்டுக்கு வந்தப்ப, நான் அழுதிட்டிருந்தேன். நான் ஏன் அழுறேன்னு முழுசா சொல்லிக்கூட முடிக்கல, அதுக்குள்ள ‘இந்த அல்ப விஷயத்துக்குப் போய் இன்னும் நீ அழுதுகிட்டு இருக்கியா, போ போய் வேலைய பாரு’னு சொன்னார். எனக்கு இன்னும் அழுகை அழுகையா வந்துச்சு.”

‘இது எங்க வீட்டுக் கதை மாதிரியே இருக்கு!’ என்று நினைக்கிறீர்களா? மனோஜும் அஞ்சலியும் மனம்விட்டுப் பேச நினைக்கிறார்கள்; ஆனால், அவர்கள் பேசப் பேச சலிப்பும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது. ஏன்?

தன் மனதிலுள்ளதை ஒரு ஆண் வெளிப்படுத்தும் விதத்திற்கும் பெண் வெளிப்படுத்தும் விதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களுடைய எதிர்பார்ப்புகளும் வித்தியாசப்படுகின்றன. ஒரு பெண் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல நினைக்கலாம், அடிக்கடி சொல்ல நினைக்கலாம். ஆனால், ஆண்கள் பொதுவாக எந்தப் பிரச்சினையையும் உடனுக்குடன் பேசித் தீர்த்து சமாதானமாகிவிடப் பார்ப்பார்கள், சிக்கலான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பார்கள். அப்படியானால், இதுபோன்ற வித்தியாசங்கள் உங்கள் இருவரையும் பிரிக்கும் வேலியாக இல்லாமல் இணைக்கும் பாலமாக மாற என்ன செய்யலாம்? உங்கள் துணையோடு நன்றாக உரையாட என்ன செய்யலாம்? துணையை மதிப்புமரியாதையோடு நடத்துவதுதான் இதற்குத் தீர்வு.

பொதுவாக, மரியாதையுள்ள நபர் மற்றவர்களை உயர்வாகப் பார்ப்பார், அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வார். நீங்களும்கூட உங்களைவிட அதிகாரமும் அனுபவமும் உள்ளவர்களை மதிக்கச் சிறுவயதிலிருந்தே பழகியிருப்பீர்கள். என்றாலும், திருமண உறவில், கிட்டத்தட்ட உங்களுக்குச் சமமாக இருக்கும் உங்கள் துணைக்கு மதிப்புகாட்டுவதுதான் சவாலாக இருக்கிறது. சந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு மணமாகி எட்டு வருடங்கள் கடந்துவிட்டது. “என் கணவர் சந்தோஷ், என்னைத் தவிர இந்த ஊரு உலகத்துல யாரு பேசினாலும் பொறுமையா கேப்பாரு, அவங்கள புரிஞ்சுக்குவாரு. என்கிட்டேயும் அதேமாதிரி நடந்துக்கனும்னுதான் நான் எதிர்பார்க்கிறேன்.” ஒருவேளை, உங்கள் நண்பர்கள், ஏன் முன்பின் தெரியாதவர்கள் பேசும்போதுகூட நீங்கள் பொறுமையாய்க் கேட்கலாம், மரியாதையோடு பேசலாம். ஆனால், ஒரே வீட்டிற்குள் உங்களுடன் இருக்கும் துணையிடமும் அதேபோல் நடந்துகொள்கிறீர்களா?

கணவனோ மனைவியோ ஒருவரையொருவர் மதிக்காதபோது வீட்டில் இறுக்கமான சூழ்நிலை ஏற்படுகிறது, சண்டை சச்சரவு தொடர்கதையாகிறது. “சண்டை நடக்கும் வீட்டில் விருந்துண்பதைவிட, மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்” என்று ஞானமுள்ள அரசர் ஒருவர் எழுதினார். (நீதிமொழிகள் 17:1, பொது மொழிபெயர்ப்பு) கணவர் தன் மனைவியை மதிப்புமரியாதையோடு நடத்த வேண்டுமென பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:7) அதேபோல், “மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்” என்றும் சொல்கிறது.—எபேசியர் 5:33.

உங்கள் துணையிடம் நீங்கள் எப்படி மதிப்புமரியாதையோடு பேசலாம்? பைபிள் தரும் நடைமுறையான சில ஆலோசனைகளைக் கவனிப்போமா?

உங்கள் துணை பேசும்போது...

சவால்:

நிறையப் பேர், மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பதைவிட தாங்கள் பேசவே விரும்புகிறார்கள். நீங்களும் அப்படித்தானா? ஒரு ‘காரியத்தைக் கேட்குமுன் பதிலுரைப்பவனை’ முட்டாள் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:13, திருத்திய மொழிபெயர்ப்பு) எனவே, உங்கள் துணை சொல்வதை முதலில் கேளுங்கள், பின்பு பேசுங்கள். இது ஏன் முக்கியம்? மணவாழ்வில் 26 வருடங்களைக் கழித்த சாரா சொல்கிறார்: “என்னோட பிரச்சினைகளை என் கணவர்கிட்ட சொல்லும்போது, அப்பவே அவர் அதை தீர்த்துவைக்கனும்னு எதிர்பார்க்க மாட்டேன். அதுமட்டுமல்ல, நான் சொல்றதை எல்லாம் அவர் ஏத்துக்கனும், அந்தப் பிரச்சினை ஏன் வந்ததுனு கண்டுபிடிக்கனும்னுகூட எதிர்பார்க்க மாட்டேன். ஆனா, நான் சொல்றத அவர் காதுகொடுத்து கேட்டு என் உணர்ச்சிகளை புரிஞ்சுகிட்டா போதும்னுதான் நினைப்பேன்.”

மறுபட்சத்தில், சில ஆண்களும் பெண்களும், தங்கள் மனதிலுள்ளதை வெளிப்படையாகப் பேசத் தயங்குவார்கள்; அவர்களுடைய மனதிலுள்ளதைச் சொல்லும்படி துணை வற்புறுத்தினால் சலித்துக்கொள்வார்கள். சமீபத்தில் திருமணமான லில்லி, தன் கணவன் வெளிப்படையாகப் பேசத் தயங்குவார் என்பதைப் புரிந்துகொண்டாள். “நான் பொறுமையா இருக்க வேண்டியிருக்கு. அவரா சொல்றவரை காத்துகிட்டிருக்க வேண்டியிருக்கு” என்கிறாள்.

தீர்வு:

உங்களுக்குள் ஒத்துப்போகாத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டியிருந்தால், இருவரும் சாந்தமாக, ஆறஅமர உட்கார்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து விஷயத்தை எடுங்கள். அதைப் பற்றிப் பேச உங்கள் துணை தயங்கினால்? “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” என்பதை நினைவில் வையுங்கள். (நீதிமொழிகள் 20:5) ஒரு கிணற்றிலிருந்து அவசர அவசரமாகத் தண்ணீர் இறைத்தீர்கள் என்றால், நிறையத் தண்ணீர் சிந்திவிடும், கொஞ்சம்தான் மிஞ்சும். அதேபோல், பேசச்சொல்லி உங்கள் துணையை வற்புறுத்தினால், அவர் பேசுவதைக் குறைத்துக்கொள்வார், தன் வாய்க்கு இன்னும் பெரிய பூட்டைத்தான் போட்டுக்கொள்வார். அதனால், அவர் மனதிலுள்ளதை உங்களால் மொண்டெடுக்க முடியாமல் போகலாம். எனவே, புண்படுத்தாமல்... மரியாதையாக... கேள்வி கேளுங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல், பட்டென்று தன் மனதில் உள்ளதை அவர் சொல்லாவிட்டால் பொறுமையாக இருங்கள்.

உங்கள் துணை பேசும்போது, ‘கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருங்கள்.’ (யாக்கோபு 1:19) நன்கு செவிகொடுத்துக் கேட்கும் நபர், தன் காதுகளை மட்டுமல்ல, இதயத்தையும் திறந்துவைப்பார். உங்கள் துணை பேசும்போது, அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் கேட்கும் விதத்தை வைத்தே, அவரை மதிக்கிறீர்களா அல்லது அவமதிக்கிறீர்களா என்பதைப் புரிந்துகொள்வார்.

காதுகொடுத்துக் கேட்பது எப்படி என்று இயேசு கற்றுக்கொடுத்தார். உதாரணமாக, நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவன் உதவிகேட்டு அவரிடம் வந்தான். அவனுடைய நோயை இயேசு உடனடியாகக் குணமாக்கிவிடவில்லை. முதலில், அவனுடைய வேண்டுகோளை அவர் காதுகொடுத்துக் கேட்டார். பின்பு, அவனுடைய இடத்தில் தம்மை வைத்துப் பார்த்து மனதுருகினார். கடைசியாக, அவனைக் குணப்படுத்தினார். (மாற்கு 1:40-42) உங்கள் துணை பேசும்போதும் இதே மாதிரி நடந்துகொள்ளுங்கள். உங்கள் துணைக்குத் தேவை, உடனடி தீர்வு அல்ல; உங்களுடைய இதயப்பூர்வமான அனுதாபம்தான். எனவே, காதுகொடுத்துக் கேளுங்கள். அவருடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்த்து அந்த வலியை உணருங்கள். அதற்குப் பின்பே, ஆம் அதற்குப் பின்பு மட்டுமே, அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். இப்படிச் செய்தால், உங்கள் துணைக்கு நீங்கள் மதிப்புமரியாதை காட்டுவீர்கள்.

இப்படிச் செய்து பாருங்கள்: அடுத்த முறை உங்கள் துணை உங்களோடு பேசும்போது, உடனடியாகப் பதில் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தை அடக்குங்கள். உங்கள் துணை பேசி முடிக்கும் வரை... அவர் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளும் வரை... பொறுமையாய் இருங்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் அவரிடம், “இப்பெல்லாம் நீ/நீங்க பேசறதை நான் உண்மையிலேயே காதுகொடுத்து கேட்கிறேனா?” என்று கேளுங்கள்.

நீங்கள் பேசும்போது...

சவால்:

“துணையை பத்தி மத்தவங்ககிட்ட மோசமாக பேசறது, அவங்கள அவமானப்படுத்தறது, கிண்டல் செய்யறது எல்லாம் சகஜம்தான்னு டி.வி.யில் வர காமெடி நிகழ்ச்சிகள்ல காட்டுறாங்க” என மேலே குறிப்பிட்ட சந்தியா சொல்கிறார். மரியாதையில்லாத பேச்சு சரளமாகப் புழங்குகிற வீடுகளில் சிலர் வளர்ந்திருப்பார்கள். அவர்கள் பின்பு திருமணம் செய்யும்போது, அதே பாணியை தங்கள் குடும்பத்திலும் பின்பற்றுகிறார்கள். “நான் வளர்ந்த இடத்தில... கேலி பண்றது, கத்திக்கூச்சல் போடுறது, பட்டப்பெயர் வெச்சு கூப்பிடுறது எல்லாம் ரொம்ப சகஜம்” என்று கனடாவில் வசிக்கும் ஐரின் சொல்கிறார்.

தீர்வு:

உங்கள் துணையைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, இந்த ஆலோசனையை நினைவில் வையுங்கள்: “கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுங்கள்.” (எபேசியர் 4:29) உங்கள் துணையைப் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்டு மற்றவர்களுக்கு அவர்மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட வேண்டும்.

உங்கள் துணையோடு தனித்திருக்கும் நேரத்திலும்கூட, கேலிகிண்டல் செய்வதை, பட்டப்பெயர் வைத்து அழைப்பதைத் தவிருங்கள். பூர்வ இஸ்ரவேலில் வாழ்ந்த தாவீது ராஜாவின் மனைவி மீகாள், ஒருசமயம் தன் கணவன்மீது கோபம் கொண்டாள். அவரிடம் குத்தலாகப் பேசினாள்; “மூடனைப்போல் நடந்துக் கொண்டீர்” என்றும் சொன்னாள். அவளுடைய வார்த்தைகள் தாவீதைக் காயப்படுத்தின; யெகோவா தேவனுக்கும் அவள்மீது கோபம் வந்தது. (2 சாமுவேல் 6:20-23, ஈஸி டு ரீட் வர்ஷன்.) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? உங்கள் துணையிடம் பேசும்போது, இனிய வார்த்தைகளைக் கோர்த்து பேசுங்கள். (கொலோசெயர் 4:6) சந்தோஷை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர் மணவாழ்வில் அடியெடுத்து வைத்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுகூட தனக்கும் தன் மனைவிக்கும் சில விஷயங்களில் கருத்துவேறுபாடு வருகிறது என்பதை ஒத்துக்கொள்கிறார். சில சமயங்களில், அவர் ஏதாவது சொல்வதுதான் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கிவிடுவதாகச் சொல்கிறார். “வாக்குவாதம் பண்ணினால் அதுல ஜெயிச்சிட முடியும், ஆனா, மணவாழ்க்கையில தோத்திடுவோம் என்பதைப் புரிஞ்சுகிட்டேன். எங்களோட உறவுல எந்த விரிசலும் வராம பாத்துக்கறதுதான் முக்கியம், அதுதான் உண்மையான சந்தோஷம்னு புரிஞ்சுகிட்டேன்” என்கிறார் அவர்.

பூர்வகாலத்தில் வாழ்ந்த ஒரு வயதான விதவை தன்னுடைய மருமகள்களிடம், ‘உங்கள் கணவர்களுடைய வீட்டில் அமைதி கிடைக்கட்டும்’ என்று வாழ்த்தினார். (ரூத் 1:9, NW) கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மதிப்பு காட்டும்போது, அவர்களுடைய வீட்டில் ‘அமைதி’ தவழும்.

இப்படிச் செய்து பாருங்கள்: நீங்கள் இருவரும் நேரம் ஒதுக்கி, “நீங்கள் பேசும்போது...” என்ற உபதலைப்பில் பார்த்த ஆலோசனைகளை எப்படிப் பின்பற்றலாம் எனக் கலந்துபேசுங்கள். “நான் உங்களைப் பத்தி மத்தவங்ககிட்ட பேசும்போது, உங்களுக்கு மதிப்பு கொடுக்கற மாதிரி பேசறேனா, இல்ல மட்டம்தட்டிப் பேசறேனா? இந்த விஷயத்தில நான் என்ன மாற்றம் செய்யனும்னு நினைக்கிறீங்க?” என்று உங்கள் கணவரிடம்/மனைவியிடம் கேளுங்கள். இதைக் குறித்து துணை தன் எண்ணத்தைச் சொல்லும்போது உண்மையிலேயே காதுகொடுத்து கேளுங்கள். துணை சொல்கிற ஆலோசனைகளைப் பின்பற்றப் பாருங்கள்.

அவரை அவராகவே ஏற்றுக்கொள்ளுங்கள்

சவால்:

கணவனும் மனைவியும் “ஒரே உடல்” என பைபிள் சொல்வதைப் புதுமணத் தம்பதிகள் சிலர் தவறாகப் புரிந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு ஒரே அபிப்பிராயம் அல்லது சுபாவம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். (மத்தேயு 19:5) ஆனால், யதார்த்த வாழ்க்கையில் அப்படியில்லை என்பதைப் போகப் போகப் புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால், சில மாதங்களுக்குப் பின்பு, அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் முளைக்கலாம், அவை வாக்குவாதங்களாக வளரலாம். சந்தியா சொல்கிறார்: “ஏதாவது ஒன்னுன்னா நான் ரொம்ப கவலைப்படுவேன். ஆனால், சந்தோஷ் அவ்வளவா அலட்டிக்க மாட்டார். இதுதான் எங்களுக்குள்ள இருக்கிற பெரிய வித்தியாசம். சிலசமயம் நான் கவலையில நொந்து நூலாயிட்டு இருக்கிறப்ப அவர் எப்பவும்போல இருந்தாருன்னா, ஏன் இப்படி அக்கறையே இல்லாம இருக்கிறாருனு எனக்கு கோபம்கோபமா வரும்.”

தீர்வு:

உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கலாம்; ஆனாலும், அவரை அவராகவே ஏற்றுக்கொள்ளுங்கள். இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் கண்கள் செயல்படும் விதமும் காதுகள் செயல்படும் விதமும் வித்தியாசப்படலாம். ஆனால், இவை இரண்டும் ஒத்துழைத்தால்தான் உங்களால் பத்திரமாக சாலையைக் கடக்க முடியும். அனிதா என்பவருக்குத் திருமணமாகி கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் சொல்கிறார்: “எனக்கும் என் கணவருக்கும் வேறவேற கருத்து இருந்தாலும், பைபிளுக்கு எதிரா இல்லாத வரைக்கும் அது தப்பில்லனு விட்டுடுவோம். நாங்க ரெண்டுபேரும் கணவன்-மனைவிதானே, ‘ஜெராக்ஸ் காப்பி’ இல்லையே.”

ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் துணை வேறொரு அபிப்பிராயம் சொன்னாலோ அல்லது வேறு விதமாக நடந்துகொண்டாலோ உங்கள் கருத்தைப் பற்றி மட்டுமே யோசிக்காதீர்கள். அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் அல்லது செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளப் பாருங்கள். (பிலிப்பியர் 2:4) அனிதாவின் கணவர் அஜேஷ் சொல்கிறார்: “சில சமயத்தில என் மனைவியோட கருத்துக்கள என்னால ஏத்துக்கவோ புரிஞ்சுக்கவோ முடியாதுதான். அப்பெல்லாம், என்னோட அபிப்பிராயத்தைவிட அவதான் எனக்கு ரொம்ப முக்கியம்னு எனக்குள்ள சொல்லிப்பேன். அவ சந்தோஷந்தான் என் சந்தோஷம்.”

இப்படிச் செய்து பாருங்கள்: எந்தெந்த விதங்களில் உங்கள் துணையின் கருத்து அல்லது விஷயங்களை அவர்/ள் கையாளும் விதம் உங்களுடையதைவிட சிறப்பாக இருக்கிறது என்பதைப் பட்டியலிடுங்கள்.—பிலிப்பியர் 2:3.

மதிப்புமரியாதைதான் நீடித்த... நிம்மதியான... ரம்மியமான... மணவாழ்வுக்கு ஒரு சாவி. “மதிப்புகாட்டுவது திருமண வாழ்க்கையில திருப்தியையும் பாதுகாப்பையும் தரும். அப்படிச் செஞ்சோம்னா கண்டிப்பா பலன் கிடைக்கும்” என்று சந்தியா சொல்கிறார். (w11-E 08/01)

^ பாரா. 3 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

  • எனக்கும் என் துணைக்கும் இருக்கிற வித்தியாசங்கள் எங்களுடைய குடும்ப வாழ்க்கையை எப்படி மெருகூட்டியிருக்கிறது?

  • துணையின் விருப்பங்கள் பைபிள் நெறிமுறைகளுக்கு எதிராக இல்லாதவரை வளைந்துகொடுப்பது ஏன் நல்லது?