Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறுவயதில் நான் எடுத்தத் தீர்மானம்

சிறுவயதில் நான் எடுத்தத் தீர்மானம்

1985-ஆம் ஆண்டு. அப்போது எனக்கு பத்து வயதுதான். அமெரிக்கா, ஒஹாயோவிலுள்ள கொலம்பஸில் படித்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் கம்போடியன் மாணவர்கள் சிலர் என் பள்ளியில் சேர்ந்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு சில ஆங்கில வார்த்தைகள் தெரிந்திருந்தது. அவன் சில படங்களைக் காட்டி, ஆட்களைச் சித்திரவதை செய்வது, கொலை செய்வது, உயிருக்கு பயந்து ஆட்கள் ஓடுவது போன்ற பயங்கரமான கதைகளைச் சொல்வான். ராத்திரியில் இதைப் பற்றிய ஞாபகம் வந்தால், உடனே அழ ஆரம்பித்துவிடுவேன். பூஞ்சோலை பூமி பற்றியும் உயிர்த்தெழுதல் பற்றியும் அவர்களிடம் சொல்லத் துடித்தேன்; ஆனால், என்னுடைய பாஷை அவர்களுக்குப் புரியவில்லை. யெகோவாவைப் பற்றி அவர்களிடம் சொல்வதற்காக அந்தச் சின்ன வயதிலேயே கம்போடியன் மொழியைக் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தேன். இது என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

கம்போடியன் மொழியைக் கற்றுக்கொள்வது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால், அந்த ஆசையே வேண்டாமென இரண்டு முறை முடிவு செய்தேன். ஆனாலும், யெகோவா என்னை விட்டுவிடவில்லை; என் அப்பா அம்மா மூலமாக உற்சாகப்படுத்தினார். போகப் போக, ஆசிரியர்களும் மாணவர்களும் கை நிறைய சம்பாதிப்பதைப் பற்றிய எண்ணத்தை எனக்குள் திணித்தார்கள். நானோ, பகுதி நேர வேலையைப் பார்த்துக்கொண்டு பயனியர் ஊழியம் செய்ய விரும்பியதால், உயர்நிலை பள்ளியில் அதற்கேற்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்தேன். வகுப்புகள் முடிந்ததும், சில பயனியர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தேன். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு அதை இலவசமாக கற்றுக்கொடுத்தேன். இது என் பிற்கால வாழ்க்கைக்கு பெரிதும் கைகொடுத்தது.

16 வயதில், அமெரிக்காவில் கலிபோர்னியாவிலுள்ள லாங் பீச்சில் கம்போடியன் மொழி தொகுதி இருப்பது பற்றி கேள்விப்பட்டேன். அங்கு சென்று அவர்களைப் பார்த்தேன்; கம்போடியன் மொழியில் வாசிப்பதற்கும் கற்றுக்கொண்டேன். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் பயனியர் ஆனேன்; அக்கம்பக்கத்திலிருந்த கம்போடியன் ஆட்களிடம் பிரசங்கித்து வந்தேன். 18 வயதில், கம்போடியாவுக்குக் குடிமாறுவதைப் பற்றி யோசித்தேன். அங்கு வாழ்வது பாதுகாப்பற்றதாக இருந்தாலும், அங்குள்ள ஒரு கோடி மக்களில் நிறையபேர் பைபிள் சத்தியத்தைப் பற்றி கேள்விப்படாததால் அப்படி யோசித்தேன். அப்போது வெறும் 13 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரேவொரு சபைதான் அங்கு இருந்தது. கம்போடியாவுக்கு முதல்முறை சென்றபோது எனக்கு 19 வயது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அங்கேயே குடிமாறிச் செல்லத் தீர்மானித்தேன். பகுதி நேர வேலையாக ஆங்கிலத்தை மொழிபெயர்க்கவும், கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தேன்; இது ஊழியத்திற்கு பெரிதும் உதவியது. சில வருடங்களுக்குப்பின், என்னைப் போல இலக்குகள் வைத்திருந்த ஒரு பெண்ணை மணந்தேன். யெகோவாவுக்கு அர்ப்பணிக்க அநேக கம்போடியன் மக்களுக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்.

யெகோவா என் “உள்ளத்து விருப்பங்களை” பூர்த்தி செய்திருக்கிறார். (சங். 37:4, பொது மொழிபெயர்ப்பு) எந்த வேலையையும்விட சீடராக்கும் வேலையே மிகுந்த திருப்தி தரும் வேலை. நான் கம்போடியாவுக்கு வந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. 13 யெகோவாவின் சாட்சிகள் இருந்த இடத்தில், இப்போது 12 சபைகள் இருக்கின்றன; நான்கு ஒதுக்குப்புற தொகுதிகளும் இருக்கின்றன!—ஜேஸன் ப்ளாக்வெல்.

சிறுவயதில்